வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Monday, October 20, 2014

தீபாவளி-தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம்



தீபாவளி பற்றி எழுத நினைத்த போது தினமணியில் 2012 தீபாவளி தீபாவளி மலரில் வந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது.அதில் தீப வழிப்பாட்டை பற்றி இலக்கியங்களில் உள்ள பாடல்கள் மூலம் மேற்கோள் காட்டியிருந்தது அதனை இங்கே பதிவிட்டுள்ளேன். அனைவருக்கும் பயனாக இருக்கும். மற்றும் மக்களின் அனைத்து பண்டிகைகளுக்கும் தனித்துவமும் அதன் மூலம் மனித இனம் ஒற்றுமையாக செயல்ப்படவும் நன்றாக இருக்கும்.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்கி வருகிறது. எனினும், தமிழகத்தில் தீபாவளிக்கு எதிரான பிரசாரம் அவ்வப்போது தலை தூக்குவதுண்டு; வடவர் பண்டிகையான தீபாவளிக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற குரல்கள் அபசுரமாக எழுவதுண்டு.
அவ்வாறு கூறுவோர், தமிழ் இலக்கியத்தில் தீபாவளி குறித்த பதிவுகள் இல்லை என்று கூறுகின்றனர். அவர்கள் வசதியாக ஒன்றை மறந்து விடுகின்றனர். தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் விழா குறித்தும் கூட தமிழ் இலக்கியத்தில் உறுதியான பதிவுகள் இல்லை.
மாறாக, நமது பழந்தமிழ் இலக்கியங்களில் இந்திரவிழா, கார்த்திகை விளக்கு, ஐப்பசி ஓணம் போன்ற பண்டிகைகள் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. காலந்தோறும் மாறித் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் மானிட சமுதாயத்தின் சிறப்பாகவே பண்டிகை மாற்றங்களைக் கருத வேண்டும் என்பது மானுடவியலாளர்களின் கருத்து.
இந்நிலையில், தமிழ் இலக்கியத்தில் திருமால் வழிபாடு, விளக்கு வழிபாடு தொடர்பாக இடம்பெற்றுள்ள சில பதிவுகளை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

ஒளி வழிபாட்டின் துவக்கம்:

தீப வழிபாடு தமிழருக்குப் புதிதல்ல. கௌமாரத்தில் தீப வழிபாடு பேரிடம் வகிக்கிறது. தொல்காப்பியம் முருகனை சேயோன்என்று பாடுகிறது. திருமுருகாற்றுப்படை என்ற தனிநூலே முருகன் பெருமை பேச எழுந்துள்ளது.
சிவனின் நெற்றிக்கண்ணில் உதித்த பாலகனான முருகனை கிருத்திகை நாளில் விளக்கேற்றித் துதிப்பது தமிழர் மரபு. அதன் தொடச்சியாகவே வடலூர் வள்ளலார் சோதி வழிபாட்டை சென்ற நூற்றாண்டில் பிரபலப்படுத்தினார்.
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில், விளக்கு வழிபாட்டைக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.
இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
(நெடுநல்வாடை: 42-43)
இன்றும் தமிழகத்தில் கார்த்திகை தீப வழிபாடு, கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரமும் முழுமதியும் கூடிய நன்னாளில் நடந்து வருகிறது. சங்கம் மருவிய கால இலக்கியமான கண்ணங்கூத்தனாரின் கார் நாற்பது, கார்த்திகை மாத தீப வழிபாட்டுக்கு ஆதாரமாக உள்ளது.
நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் நாள் விளக்கு
(கார்நாற்பது -26)
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியும் கார்த்திகை விளக்கு குறித்து, கார்த்திகை விளக்கு இட்டன்ன கடிகமழ் குவளை பைந்தனர் என்று பாடுகிறது.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர், திருமயிலையில் இறந்த பூம்பாவை என்ற பெண்ணை உயிர்ப்பிக்கப் பாடிய பூம்பாவைப் பதிகமும் கார்த்திகை விளக்கீடு குறித்துப் பேசுகிறது.
கார்த்திகை நாள்விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்!
(திருஞானசம்பந்தர் பூம்பாவை திருப்பதிகம்- திருமுறை: 2-47)

தீபாவளியாக மாறியதா?

தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீப வழிபாடே தீபாவளியாக மாற்றம் பெற்றது என்ற கருத்து உள்ளது. மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோது தற்போதைய தீபாவளியின் வடிவம் உருவானதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் அதற்கு முன்னரே தமிழகத்தில் தீபாவளியின் வடிவம் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன.
பழமையான சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூறில், அமாவாசை நாளில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் குறித்து இடம்பெற்றுள்ளது. அக்காலத்தில் இவ்வழிபாட்டுக்கு தீபாவளிஎன்ற பெயர் இல்லையெனினும், அதையொத்த பண்டிகை கொண்டாடப்பட்டிருப்பது இப்பாடலில் உறுதியாகிறது.
மழைகால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம!
(அகநானூறு – 141ம் பாடல்)
என்று நக்கீரர் பாடுகிறார்.
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்என்பது அமாவாசை நாளையே குறிக்கிறது. இந்தச் செய்யுளில் வரும் பழவிறல் மூதூர் திருவண்ணாமலையைக் குறிப்பதாகவும் கூறுவர். திருவண்ணாமலை தீப வழிபாட்டுக்கு சிறப்புப் பெற்றது. இங்கு ஈசன் சோதி வடிவமாகத் தரிசனம் தருவதாக ஐதீகம்.
கார்த்திகை தீபம் நிகழும் கார்த்திகை மாத பெüர்ணமிக்கும், தீபாவளிப் பண்டிகை வரும் ஐப்பசி மாத அமாவாசைக்கும் இடையே 15 நாட்கள் மட்டுமே வித்யாசம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்.

சமண இலக்கியத்தில் தீபாவளி:

பழமையான சமண இலக்கியமான கல்பசூத்திரம்என்ற பிராகிருத மொழியில் எழுதப்பட்ட நூலில் தீப வழிபாடு குறித்த செய்தி வருகிறது. இதை எழுதியவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்யார் பத்ரபாகு என்ற சமண முனிவர்.
மகாவீரர் என்ற தீப ஒளி மறைந்துவிட்டதால் தீப விளக்கை ஏற்றி வைப்போம் என்று, காசி, கோசல மக்களும், பதினாறு கண அரச மக்களும் தங்கள் வீடுகளின் முன்பு தீபம் ஏற்றி வைத்தனர்என்று எழுதி இருக்கிறார் பத்ரபாகு.
இலக்கியத்தில் தீபாவளிஎன்ற சொல் முதல்முதலாகப் பிரயோகிக்கப்படுவது, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஆச்சார்ய ஜினசேன முனிவரால் இயற்றப்பட்ட ஹரிவம்ச புராணம்என்ற சமண இலக்கியத்தில் தான். அதில் வரும் தீபாவளி காயாஎன்ற வார்த்தையின் பொருள் ஞான ஒளி உடலைவிட்டு நீங்குகிறதுஎன்பதே. இதிலிருந்து உருவானதே தீபாவளி என்ற வார்த்தை என்பது சமண இலக்கிய ஆய்வாளர்களின் கருத்து.
பழந்தமிழகத்தில் சமண மதத்தின் செல்வாக்கு பரவியிருந்ததற்கு ஆதாரப்பூர்வமான பல சான்றுகள் உள்ளன. சிலப்பதிகார நாயகன் கோவலன் கூட சமண சமயத்தவன் தான். எனினும், அக்காலத்தில் மதவேற்றுமையால் மக்கள் பிளவுபட்டிருக்கவில்லை என்பதற்கு சிலப்பதிகாரமே சாட்சியாகத் திகழ்கிறது. சமணர் இல்லங்களில் அனுசரிக்கப்பட்ட வழிபாடு பிற சைவ, வைணவர் இல்லங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.

பழந்தமிழகத்தில் மால் வழிபாடு:

பழந்தமிழகத்தில் மாலவன் வழிபாடு இருந்தமைக்கு பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. மாயோன் மேய காடுறை உலகமும் என்பது தொல்காப்பிய நூற்பா (தொல்- அகம்-5).
திருமால் வழிபடப்படும் நிலப்பகுதியாக முல்லையை தொல்காப்பியர் காட்டுகிறார்.
முதற்பெருங் காப்பியமான சிலப்பதிகாரத்தில் வரும் ஆய்ச்சியர் குரவையில் மாயவனின் அவதார மகிமையைப் பாடி மகிழும் மக்களைக் காண்கிறோம்.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரனும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர்கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!
(சிலப்பதிகாரம்- 17- ஆய்ச்சியர் குரவை- படர்க்கைப் பரவல்)
என்று குரவையிட்டுப் பாடும் ஆய்ச்சியர் மூலம் அக்காலத்தில் நிலவிய மாலவன் வழிபாட்டை அறிகிறோம். திருமால் வழிபாடு வடக்கிலிருந்து வந்து பரவியதல்ல என்பதை பரிபாடலும் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.
ஆகவே, பழந்தமிழகத்திலேயே மாலவன் வழிபாடும் விளக்கு வழிபாடும் இருந்தமைக்கு இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. சைவ, வைணவத்தில் மட்டுமல்லாது சமணத்திலும் தீப வழிபாடு இருந்துள்ளது உறுதியாகத் தெரிகிறது.
சமண மதத்தினர் அனுசரித்த மகாவீரர் மோட்ச தினமும் பழந்தமிழர் அனுசரித்த கார்த்திகை தீபமும் இணைந்து இன்று நாம் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு அடிகோலியிருக்க வாய்ப்புள்ளது. காரணம் எதுவாயினும், சமுதாயத்தைப் பிணைக்கும் சக்தியாக தீபாவளி பண்டிகை விளங்குவது நமக்கெல்லாம் பெருமை அளிப்பது தானே?
நன்றி : - தினமணி தீபாவளி மலர்- 2012


-Arrowsankar

Saturday, October 11, 2014

2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு


ஆரம்பக் காலத்தில் மனிதன் வாழ்வை மேம்படுத்த பல கருவிகளைக் கண்டுபிடித்தான். பிற்காலத்தில் பல ஆய்வுகளை நிகழ்த்தி பலவற்றைக் கண்டுபிடித்தான். அத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்படும் உலகின் உயர்ந்த பரிசே நோபல் பரிசு.
                1866-ஆம் ஆண்டு ஆல்பிரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர் டைனமைட்டிக்என்ற வெடிமருந்தைக் கண்டுபிடித்தார். இக்கண்டு பிடிப்பு மூலம் அவர் அளவற்ற செல்வம் சேர்த்தார். 1896-ல் அவர் இறந்த பின்னர் அவருடைய உயிலை வாசிக்கும் போது 150 கோடிரூபாய் சொத்தை நோபல் பரிசுக்காக எழுதி வைத்திருந்தார்.
                1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 500-க்கும் அதிகமான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. 1968-ம் ஆண்டு வரை இயற்பியல், வேதியியல்,மருத்துவம், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளுக்காக வழங்கப்பட்டன. 1968-ல் ஸ்வீடன் நாட்டு மத்திய வங்கி பொருளாதாரத்திற்கென நோபல் பரிசை வழங்குவதாக அறிவித்தது.1969-ம் ஆண்டு முதல் பொருளாதாரத் துறைக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
                நோபல் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்க ஆண்டு தோறும் 5 பேர் கொண்ட பொறுப்பாளர் குழு அமைக்கப்படுகிறது. அக்குழுவின் தலைவரை ஸ்வீடன் அரசு நியமிக்கிறது.
நோபல்பரிசு மெடல்
நோபல் பரிசு கமிட்டி ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், வேதியியல், இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை தேர்ந்து எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டில் வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன.

உலக அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களை தேர்வு செய்வதற்கான சிபாரிசு பட்டியலில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், காங்கோ நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டெனிஸ் முக்வேஜே உள்ளிட்ட 278 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. எனினும், இந்த முழுமையான பட்டியல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான 60 வயது கைலாஷ் சத்யார்த்திக்கும், 17 வயது பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கும் கூட்டாக வழங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இது பற்றிய அறிவிப்பை நோபல் பரிசு கமிட்டியின் தலைவர் தோர்போஜெர்ன் ஜக்லாண்ட் நார்வேயில் உள்ள ஆஸ்லோ நகரில் வெளியிட்டார்.

நோபல் பரிசு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகை 6 கோடி 60 லட்ச ரூபாய் (1.1 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டால், இந்த பரிசுத் தொகை பகிர்ந்து அளிக்கப்படும். எனவே அமைதிக்காக நோபல் பரிசு கைலாஷ் சத்யார்த்திக்கும், மலாலாவுக்கும் பகிர்ந்து வழங்கப்படும்.

இந்த பரிசு வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி ஆஸ்லோ நகரில் நடைபெறும் விழாவில் இருவருக்கும் வழங்கப்படும்.

கைலாஷ் சத்யார்த்தி வாழ்க்கை குறிப்பு

கைலாஷ் சத்யார்த்தி 1954–ம் ஆண்டு ஜனவரி மாதம் 11–ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் விதிஷா நகரில் பிறந்தார். எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணியாற்றி வந்த இவர் குழந்தைகளுக்கு சேவையாற்றுவதற்காக பதவியை துறந்தார்.
1980–ம் ஆண்டு ருக்மார்க் (தற்போது குட்வீவ்) என்னும் அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு குழந்தை தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை நுகர்வோர் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை மேற்கொண்டது. இது பற்றி அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது.
அதன் பின்னர் 1983–ம் ஆண்டு குழந்தை பருவத்தை காக்கும் இயக்கம் (பச்பன் பச்சோ அந்தோலன்) என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை கைலாஷ் சத்யார்த்தி தொடங்கினார். குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தது, அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து கல்வி பயில ஏற்பாடு செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய பணியாகும்.
80 ஆயிரம் குழந்தைகள் மீட்பு
இந்தியாவில் இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை இதுபோல் மீட்டு அவர்களை கல்வி கற்க வைத்த பெருமையும் கைலாஷ் சத்யார்த்திக்கு உண்டு. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து உலக நாடுகளில் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை தீவிரமாக நடத்தி வருகிறார்.
சத்யார்த்தி குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக ஏராளமான போராட்டங்களை அமைதியான முறையில் நிகழ்த்தி உள்ளார். பணத் தேவைக்காக அவர்களின் குழந்தை பருவம், கல்வி போன்றவை சுரண்டப்படுவதை தனது போராட்டங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
குழந்தைகளுக்கு கல்வி இலவசமாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், குழந்தைகள் கடத்தப்படுவதற்கு எதிராகவும், குழந்தை பருவத்தை காக்கும் இயக்கம் தீவிரமாக போராடி வருகிறது.
சர்வதேச விருதுகள்
இவருடைய சேவைக்காக 2007–ல் இத்தாலிய பாராளுமன்ற விருது, 2009–ல் அமெரிக்காவின், தற்காப்போருக்கான ஜனநாயக விருது, ராபர்ட் எப்.கென்னடி சர்வதேச மனித உரிமைகள் விருது (அமெரிக்கா), பிரெட்ரிக் எபெர்ட் சர்வதேச மனித உரிமைகள் விருது (ஜெர்மனி) உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகள் கிடைத்துள்ளன.
மலாலா வாழ்க்கை குறிப்பு

நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொள்ளும் இன்னொருவரான மலாலா பாகிஸ்தானின் சுவாத் மாவட்டத்தில் உள்ள மின்கோரா நகரில் 1997–ம் ஆண்டு ஜூலை 12–ந் தேதி பிறந்தார். இவருடைய தந்தை ஜியாவுதீன்தாயார் தோர் பேகை. இவருக்கு 2 தம்பிகளும் உண்டு.
மலாலா தனது 11–வது வயது முதல் பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வருபவர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு மின்கோரா நகரில் அவர் வசித்தபோது தலீபான் தீவிரவாதிகள் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை தடுக்கிறார்கள் என்று பி.பி.சி. வானொலியின் உருது சேவை நிகழ்ச்சிக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். ஒரு சிறுமி தனது நாட்டின் தீவிரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
துப்பாக்கி சூடு
இதனால் ஆத்திரமடைந்த தலீபான் தீவிரவாதிகள் 2012–ம் ஆண்டு அக்டோபர் 9–ந் தேதி பள்ளிக் கூடத்துக்கு மலாலா பஸ்சில் சென்றபோது அவரை துப்பாக்கியால் சுட்டனர். தலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவர் இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்த மலாலா தற்போது இங்கிலாந்தில் இருந்தவாறே மலாலா அறக்கட்டளை என்னும் ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் பாகிஸ்தான், நைஜீரியா, ஜோர்டான், சிரியா, கென்யா நாடுகளில் வாழும் பெண்குழந்தைகளின் கல்விக்காக சேவை செய்து வருகிறார். தற்போது இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகரில் வசித்து வருகிறார்.
குறைந்த வயதில் நோபல் பரிசு
17 வயதில் நோபல் பரிசு பெற்று இருப்பதன் மூலம், மிகக் குறைந்த வயதில் இப்பரிசை பெற்றவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறி வசித்த விஞ்ஞானி லாரன்ஸ பிராக் தனது 25–வது வயதில் இயற்பியலுக்கான நோபல் பரிசை 1915–ல் தனது தந்தையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வாழ்த்து செய்தி:
வான்மீகீயூர் சங்கர் - வான்மீகீ பிரார்த்தனை மன்றம்  & எரோ சங்கர் ப்ளாக் :
மீண்டும் ஒரு கவுரவம் குழந்தைகள் உரிமைக்காக குரல் கொடுத்த இந்தியர் கைலாஷ் சத்யார்த்திக்கு 2014–ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு கிடைத்துள்ளது. இந்தியர் கைலாஷ் சத்யார்த்திக்கும், பெண் கல்விக்காக ஓங்கி குரல் எழுப்பிய பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும் வான்மீகீ பிரார்த்தனை மன்றம் சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் :-
குழந்தைகள் உரிமைக்காக குரல் கொடுத்த இந்தியர் கைலாஷ் சத்யார்த்திக்கும், பெண் கல்விக்காக ஓங்கி குரல் எழுப்பிய பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும் 2014–ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது, நம்மை எல்லாம் ஆனந்தக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒரு இந்தியர் நோபல் பரிசை வென்றதை கவுரவத்திற்குரிய விஷயமாகக் கருதி உள்ளம் பூரிப்பதுடன் பரிசை வென்ற கைலாஷ் சத்யார்த்திக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:
நடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்காக இந்தியர் கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானின் மலாலாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடிவரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற இவர்கள் இருவரை தவிர சிறந்தவர்கள் வேறு எவரும் இல்லை என்றே கருதுகிறேன். நோபல் பரிசு பெற்றுள்ள சத்யார்த்தி, மலாலா ஆகிய இருவரும் தங்களின் துறையில் மேலும் பல சேவைகளை செய்து, உலகம் முழுவதும் பெண் குழந்தைகள் தெய்வங்களாக போற்றப்படும் நிலையை உருவாக்க பாடுபட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நோபல் பரிசு பெற்றுள்ள சத்யார்த்தி
இந்த நவீன யுகத்திலும் துயரப்பட்டு வரும் லட்சக்கணக்கான குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்ட நோபல் பரிசு கமிட்டிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.
நான் மகாத்மா காந்தி இறந்ததற்கு பிறகு பிறந்தவர். இந்த பரிசு எனக்கு முன்னதாக மகாத்மாவுக்கு கிடைத்து இருந்தால் அதை விட இன்னும் நான் பெருமை அடைந்து இருப்பேன். இது நிஜமாகவே எனக்கு கிடைத்த கவுரவம் தான். இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்.

இது வரை நோபல்பரிசு பெற்ற இந்தியர்கள்

1913இரவீந்திரநாத் தாகூர்இலக்கியம்இந்தியர்
1930ச. வெ. இராமன்இயற்பியல்இந்தியர்
1968ஹர் கோவிந்த் கொரானாமருந்தியல்இந்திய வம்சாவளியில் பிறந்த அயல்நாட்டவர்
1979அன்னை தெரேசாஅமைதிஇந்தியர்
1983சுப்பிரமணியன் சந்திரசேகர்இயற்பியல்இந்தியாலில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர்
1998அமர்த்தியா சென்பொருளியல்இந்தியர்
2001வீ.எஸ். நய்ப்பால் இலக்கியம்இந்திய வம்சாவளியில் பிறந்த அயல்நாட்டவர்
2009வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்வேதியியல்இந்தியாலில் பிறந்து அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் குடியுரிமை பெற்றவர்

-Arrowsankar

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms