சாதிக்க துடிக்கும் பெண்களுக்கும் சாதனை
படைத்த பெண்களுக்கும் முன்னதாக ARROW SANKAR'S BLOG சார்பாக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
கடந்த வருடம் ARROW SANKAR
BLOG-ல் பதிவான மகளிர் தின சிறப்பு கட்டுரையை (மகளிர் தினம் தோன்றியது எப்படி?எதனால்?) மீண்டும் படிக்க
மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம்
விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும்
நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு
பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது. இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான்
வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பெண்களை போற்றும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் பெண்கள் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
சில போராட்ட சாதனை பெண்களை
பற்றி காண்போம்
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் அருகில் உள்ள ஒரு
கிராமத்திற்குள் கடந்த 2-11-2000
அன்று புகுந்த அசாம் ஆயுதப்படை
பிரிவினர் அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டு கொன்றனர்.
இந்த அநியாய பலிக்கு காரணமான
மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற
கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இரோம் சானு ஷர்மிளா என்ற இளம்பெண் 4-11-2000 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
தனது 28வது வயதில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளிநீர்கூட பருகாமல் கடந்த 13 ஆண்டுகளாக பட்டினி
கிடந்து, காந்திய வழியில் போராடி உலகின் கவனத்தை இவர்
ஈர்த்து வருகிறார்.
தற்கொலைக்கு முயன்றதாக குற்றம்சாட்டி
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை கைது செய்த மணிப்பூர் மாநில போலீசார் விசாரணைக்
காவலின் கீழ் இம்பாலில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, பலவந்தமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மூக்கின் வழியாக திரவ உணவுகளை
செலுத்தி வருவதால் கடந்த 13 ஆண்டுகளாக அவர் உயிர் வாழ்ந்து வருகிறார்.
இந்தியாவில் உள்ள பல்வேறு
மக்கள் உரிமை இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இவரது போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், உண்ணாவிரதத்தை
கைவிடும்படி வலியுறுத்திய பலரது கோரிக்கையை ஏற்க ஷர்மிளா மறுத்துவிட்டார்.
மனித உரிமை போராளிகளுக்கான
குவாஞ்சு விருது, மயிலம்மா விருது, 51 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் கூடிய ரவீந்திரநாத்
தாகூர் விருது உள்ளிட்ட பல விருதுகள் ஷர்மிளாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், தனது கோரிக்கையை ஏற்று ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு
நீக்கும்வரை எந்த விருதையும் ஏற்றுக்கொள்வதில்லை என்ற முடிவில் ஷர்மிளா உறுதியாக
உள்ளார்.
இம்பால் முதல்வகுப்பு
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த தற்கொலை முயற்சி வழக்கில், இரோம் ஷர்மிளாவை கடந்த ஆண்டு விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
விடுதலை பெற்ற இரோம் ஷர்மிளா, நேராக ஜவஹர்லால் நேரு மருத்துவமனைக்கு அருகில் உள்ள ''ஷர்மிளா கம்பா லுப் ஷங்க்ளேன்'' என்ற அவரது
அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவருடைய உடல் நிலை மிகவும்
மோசமடைந்ததால், மணிப்பூர் போலீசார் மீண்டும் கைது செய்து
நேரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
தற்கொலை முயற்சிக்கு
அதிகபட்சமாக ஓராண்டு சிறை தண்டனை வழங்க முடியும். ஆனால், மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து
செய்யும் வரை உண்ணாவிரதத்தை கைவிடுவதில்லை என்ற கொள்கை உறுதியுடன் கடந்த 13 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் கைது செய்யப்பட்டுவதும், ஓராண்டுக்கு பின்னர் விடுதலை செய்யப்படுவதுமாய் மனித உரிமையை பாதுகாக்கப் போராடும் இரோம் ஷர்மிளாவின்
பிறந்த நாளான மார்ச் மாதம் 14-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்பத்திரியிலேயே
கழிந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுக்கு எதிராக
போராடியவர்களை எல்லாம் வலை விரித்து பிடித்து பாராளுமன்ற தேர்தலில் களம் இறக்கும்
முயற்சியில் ஈடுபட்டும் வரும் ஆம் ஆத்மி கட்சியினர் இவருக்கு உள்ள செல்வாக்கை
ஓட்டுகளாக்க விரும்பி சமீபத்தில் அவரை சந்தித்து முயற்சி செய்தபோது அந்த அழைப்பை
மறுத்து விட்ட இரோம் ஷர்மிளா, ’ஒரு குடிமகனின் குரல் எடுபடாத நாட்டில், அரசியல்வாதியின் குரல் மட்டும் எடுபடுமா... என்ன?
நம்மை அடிமைபடுத்தி ஆட்சி
செய்த ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட அகிம்சை வழியை தேர்ந்தெடுத்த மகாத்மா
காந்தி அரசியல் கட்சியில் சேர்ந்தா தனது போராட்டத்தை ஆரம்பித்தார்?’ என்று கூறுகிறார்.
உலக மகளிர் தினத்தையொட்டி
இரும்பு மங்கையான இரோம் ஷர்மிளாவை கவுரவிக்கும் வகையில் வரும் 8-ம் தேதி பாராட்டு விழா நடத்த அசாம் மற்றும் மணிப்பூர் மாநில மகளிர்
கூட்டமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுக்கு, ‘சர்வதேச வீரப்பெண்மணி’ விருதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி
மிச்செல் வழங்கினார்.
உலக அளவில் துணிச்சலான செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு, ஆண்டுதோறும் சர்வதேச வீரப்பெண்மணி என்ற விருதை அமெரிக்க அரசின்
வெளியுறவுத்துறை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு, இந்த விருதுக்காக இந்தியாவில் தலைநகர் டெல்லியை சேர்ந்த லட்சுமி என்ற 25 வயதுப் பெண் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.
லட்சுமிக்கு 16 வயதாக இருந்தபோது, காதலிக்க மறுத்ததால் 32 வயது வாலிபர் ஒருவர் (லட்சுமியின் தோழியின்
சகோதரர்) அவர் மீது திராவகம் வீசினார். இதனால் அவருடைய முகம் உருக்குலைந்து
போனாலும் மனம் தளராத அவர், இதுபோன்ற திராவகம் வீச்சு சம்பவத்துக்கு
முடிவு கட்ட இயக்கம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார்.
அவருடைய இந்த துணிச்சலான சேவையை பாராட்டும் விதத்தில்
மதிப்புமிக்க இந்த விருதுக்கு லட்சுமி தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.
வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத்துறை கலையரங்கில் திரளான பார்வையாளர்கள் கலந்துகொண்ட
விழாவில், ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல், லட்சுமிக்கு சர்வதேச வீரப்பெண்மணி விருதை வழங்கினார். ஜனாதிபதி ஒபாமா
உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
விருதைப் பெற்றுக் கொண்ட லட்சுமி, தன் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவத்தை நினைவு கூறும் வகையில் அவர் எழுதிய
கவிதை வரிகளை மேடையில் படித்தார். ‘‘நீ எனது முகத்தில் திராவகத்தை வீசவில்லை; எனது கனவுகள் மீது அதை வீசிவிட்டாய்; உன் இதயத்தில் நேசம்
இல்லை; அதில் திராவகம் தான் இருக்கிறது’’ என்ற அந்த கவிதை வரிகளை லட்சுமி படித்தது அனைவரையும் துயரத்தில் உருக
வைத்தது.
லட்சுமியுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பிஜி
உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சில பெண்களும் விருதுகளைப் பெற்றனர்.
விருதைப் பெற்றபின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த லட்சுமி, ‘‘திராவகம் வீச்சு போன்ற கொடுமைகளுக்கு எதிராக குரல்
கொடுக்க இந்தியப் பெண்கள் தயங்கி வருகிறார்கள். இதுபோன்ற விருதுகள் இந்தியப்
பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்’’
என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘எனக்கு
அளிக்கப்பட்ட இந்த விருதுக்குப்பிறகு, லட்சுமியால் இதை
சாதிக்க முடிந்த போது என்னாலும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியும் என்ற
முடிவுக்கு இந்தியப் பெண்களால் வரமுடியும்’’ என்றார். டெல்லியில்
கொடூரமான முறையில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி
‘நிர்பயா’வுக்கு இந்த விருது வழங்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
குமரி மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு பறக்கும் படை வட்டாட்சியராகப் பணிபுரிந்து வருபவர் சுகிபிரமிளா. இவர் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலராக சுமார் 15 மாதம் பணிபுரிந்தார்.
அப்போது கேரளத்துக்கு கடத்த முயன்ற
107 டன் ரேஷன் அரிசி,
20 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும்
1500 கிலோ வெடிபொருள்கள் ஆகியவற்றை அதிரடியாகப் பறிமுதல் செய்தார்.
இவரது துணிச்சலான நடவடிக்கைகளைப் பாராட்டி இவருக்கு கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், வட்டாட்சியர் சுகிபிரமிளாவுக்கு விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இந்நிலையில், தனக்கு கிடைத்த பரிசுத் தொகையிலிருந்து தலா ரூ.1 லட்சத்தை தனது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாகச் செயல்பட்ட வருவாய் ஆய்வாளர் ஜோதிஸ்குமார்,
ஜீப் ஒட்டுநர் ஜான்பிரைட் ஆகியோருக்கு வட்டாட்சியர் சுகிபிரமிளா வழங்கினார்.
அன்புடன்