Thursday, November 13, 2014

சோழர்களின் ‘குடவோலை’ தேர்தல்!


உத்திரமேரூர்இது பிற்காலச் சோழர் காலத்தில் ஒரு சிறிய ஊராக விளங்கியது. இவ்வூரில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோவிலின் கற்சுவரில் ஒரு பெரிய கல்வெட்டுக் காணப்படுகின்றது. இது உத்திரமேரூர்க் கல்வெட்டு எனப்படுகிறது. இக்கல்வெட்டு முதலாம் பராந்தகனின் பதினான்காம் ஆட்சியாண்டில் (கி.பி. 920இல்) அவனது ஆணைப்படி செதுக்கப்பட்டது ஆகும் ) இக்கல்வெட்டு, பிற்காலச் சோழர் காலத்தில் உத்திரமேரூரில் இருந்த ஊர்ச் சபைக்கு நடந்த தேர்தல் முறையைப் பற்றிய விரிவான செய்திகளைத் தருகின்றது.

உத்திரமேரூர் ஊர்ச் சபையில் உறுப்பினர்களாவதற்குத் தகுதி உடையோர், தகுதி இல்லாதோர் பற்றியும், தகுதி உடையோரில் தேவையான உறுப்பினர்களைக் குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கும் முறை, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைப் பல்வேறு வாரியங்களுக்கு நியமிக்கும் முறை, அவர்களின் பதவிக்காலம் போன்றவை பற்றியும் உத்திரமேரூர்க் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

உறுப்பினராகத் தகுதி உடையோர்
குறைந்தது கால் வேலி நிலம் உடையவராக இருத்தல் வேண்டும். தமது சொந்த நிலத்தில் வீடு கட்டிக் குடி இருப்பவராக இருத்தல் வேண்டும். முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவராகவும், எழுபது வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். செயல் திறன் வாய்ந்தவராகவும், கல்வி அறிவு உடையவராகவும், நல்லொழுக்கம் உடையவராகவும், நேர்வழியில் பொருள் ஈட்டி வாழ்ந்து வருபவராகவும் இருத்தல் வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறாதவராக இருத்தல் வேண்டும்.

உறுப்பினராகத் தகுதி இல்லாதோர்

ஏற்கெனவே வாரிய உறுப்பினராக இருந்து கணக்குக் காட்டாதோர், அவர்களுடைய உறவினர்கள், பெரும்பாதகங்கள் புரிந்தோர், கூடா நட்புறவால் கெட்டுப் போனோர், பிறர் பொருளைக் கவர்ந்தோர், கையூட்டு வாங்கியோர், ஊருக்குத் துரோகம் செய்தோர், குற்றம் புரிந்து கழுதை மேல் ஏறினோர், கள்ளக் கையெழுத்து இட்டோர் ஆகியோர் உறுப்பினராகும் தகுதி இல்லாதோர் ஆவர்.

சோழர்களின் குடவோலைதேர்தல்!
படம் : நன்றி :pic2blog


உத்திரமேரூர் முப்பது குடும்புகளைக் கொண்டிருந்தது. தற்காலத்தில் உள்ளாட்சி அமைப்பில் ஓர் ஊரினை அல்லது நகரினைப் பல பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் வட்டம் (Ward) என்று நாம் குறிப்பிடுகிறோம். அதைத்தான் பிற்காலச் சோழர் காலத்தில் குடும்பு என வழங்கினர்.
ஒவ்வொரு குடும்பிற்கும் ஓர் உறுப்பினர் வீதம் மொத்தம் முப்பது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் நாளன்று ஒவ்வொரு குடும்பையும் சார்ந்தவர்கள், தங்கள் குடும்பில் உறுப்பினராவதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்களின் பெயர்களைத் தனித்தனி ஓலைகளில் எழுதி அவற்றை ஒன்று சேர்த்துக் கட்டுவர். பின்பு அதன் மேல் இது இந்தக் குடும்பைச் சார்ந்ததுஎன்பது விளங்க, அந்தக் குடும்பின் பெயர் எழுதிய வாயோலை ஒன்றைப் பூட்டி அந்த ஓலைக்கட்டை ஒரு குடத்தில் இடுவர். இவ்வாறே முப்பது குடும்பினரும் தங்கள் குடும்புகளுக்கு உரிய ஓலைக்கட்டுகளை அக்குடத்தில் இடுவர். பின்பு ஊர் மக்கள் கூடியிருக்கும் சபையின் நடுவில் ஊர்ப் பெரியவர் ஒருவர் அக்குடத்தை எல்லோரும் காணுமாறு தூக்கி வைத்துக் கொண்டு நிற்பார்; நடப்பது இதுவெனச் சிறிதும் அறியாத ஒரு சிறுவனைக் கொண்டு, அக்குடத்திலிருந்து ஓர் ஓலைக்கட்டை எடுக்கச் சொல்லி, அதில் உள்ள ஓலைகளை மற்றொரு குடத்தில் இட்டுக் குலுக்கி, அச்சிறுவனைக் கொண்டே அதிலிருந்து ஓர் ஓலையை மட்டும் எடுக்கச் செய்வார். மத்தியஸ்தன் என்னும் அலுவலர் ஒருவர் அவ்வோலையை ஐந்து விரலும் அகல விரியுமாறு உள்ளங்கையிலே வாங்கி அதில் உள்ள பெயரை உரக்கப் படிப்பார். சபையினுள்ளே இருக்கும் ஆண் மக்கள் எல்லோரும் அதை வாங்கிப் படிப்பர். அந்த ஓலையில் உள்ள பெயருடையவர் அந்தக் குடும்பிற்கு உரிய உறுப்பினராக அறிவிக்கப்படுவார். இவ்வாறே மற்றக் குடும்புகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது உறுப்பினர்களில் கல்வியிலும் வயதிலும் முதிர்ந்த பன்னிருவரைச் சம்வத்சர வாரியத்திற்கும், மற்றவர்களில் பன்னிரண்டு பேரைத் தோட்ட வாரியத்திற்கும், எஞ்சியுள்ள ஆறு பேரை ஏரி வாரியத்திற்கும் நியமித்தனர்.

உத்திரமேரூரைச் சுற்றிப் பன்னிரண்டு சேரிகள் இருந்தன. அச்சேரிகளிலிருந்து சேரிக்கு ஓர் உறுப்பினர் வீதம் மேலும் பன்னிரண்டு உறுப்பினர்களை இதே போலக் குடவோலை முறையில் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் ஆறு பேரைப் பஞ்சவார வாரியத்திற்கும், ஆறு பேரைப் பொன் வாரியத்திற்கும் நியமித்தனர்.
இவ்வாறு நடைபெற்ற உத்திரமேரூர்ச் சபைத் தேர்தலின்போது, மத்திய அரசைச் சார்ந்த அரசு அலுவலரான சோமாசிப் பெருமான்என்பவன் உடனிருந்தான் என்றும், அவன் சபைத் தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தான் என்றும் உத்திரமேரூர்க் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.

இவ்வாறு ஊர்ச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிய உறுப்பினர்கள் திருவடியார்எனப்பட்டனர். அவர்களைக் கொண்ட ஊர்ச்சபை மகாசபைஎனப்பட்டது. வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓர் ஆண்டாகும்.

சபை கூடும் இடமும் காலமும்

வாரிய உறுப்பினர்களைக் கொண்ட மகாசபை ஊரின் மன்றத்திலோ (மன்றம் பொது இடம்), குளக்கரையிலோ, மரத்தின் அடியிலோ, கோயில் மண்டபத்திலோ கூடியது. சபை கூடும் நேரத்தையும், இடத்தையும் முரசடித்தும், பறையடித்தும் அறிவித்தனர். பகல் நேரத்திலே சபை கூடியது. இரவில் கூடினால் விளக்கு எரியச் செலவாகும் என்று கருதிப் பகலில் கூடினர்.

சபைக்குரிய பணியாளர்களும் அவர்களின் கடமைகளும்

சபை உறுப்பினர்கள் இட்ட பணிகளை நிறைவேற்ற மத்தியஸ்தன், காரணத்தான், பாடிகாப்பான், தண்டுவான் போன்றோர் இருந்தனர். மத்தியஸ்தன் கூட்ட முடிவுகளை எழுதுபவன். காரணத்தான் கணக்கு எழுதுபவன். பாடிகாப்பான் ஊரில் கலகம், திருட்டு நிகழாது காப்பவன். தண்டுவான் தண்டனைகளை நிறைவேற்றுபவன். இவர்கள் சபையிடம் ஊதியம் பெற்றுப் பணிபுரிந்தனர்.

குறைகள்
பிற்காலச் சோழர் காலத்தில் ஊராட்சிச் சபைத் தேர்தலில் உறுப்பினராகப் போட்டியிடப் பெண்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை. பாமர மக்கள் உறுப்பினராக இடம்பெற வாய்ப்புத் தரப்படவில்லை. இவற்றைக் குறைகள் என்றே கூறவேண்டும்.

உத்திரமேரூரில் இருந்த ஊராட்சி முறையானது, பிற்காலச் சோழர் ஆட்சியின்போது சோழ நாட்டில் இருந்த எல்லா ஊர்களிலும் அப்படியே அல்லது சிற்சில மாற்றங்களுடன் நிலவியது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

வருவாய்
வருவாயின்றிப் பேரரசைக் காப்பது என்பது முடியாததாகும். ஆதலால் அரசன் பலவிதமான வரிகளைக் குடிமக்களிடமிருந்து வசூலித்தான். சோழப் பேரரசின் வருவாயில் பெரும்பகுதி நிலவரி மூலமாகக் கிடைத்தது. அந்த நிலவரி காணிக்கடன் என வழங்கப்பட்டது. முதலாம் இராசராசன் காலத்தில் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு வரியாக வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. நிலவரி வழங்கத் தவறியோரின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்பட்டன.

நிலவரி அல்லாத பிற வரிகள் குடிமை என்று கூறப்பட்டன. இவ்வரிகளும் அரசின் வருவாயைப் பெருக்கின. சுங்கவரியும் அவற்றுள் ஒன்றாகும். ஊர்க்கழஞ்சு என்ற வரி ஊரில் பொதுவாக வைக்கப் பெற்றிருந்த ஓர் எடையைப் பற்றிய வரி ஆகும். மீன் பாட்டம் என்பது மீன் பிடிக்கும் உரிமைக்கான வரி. தசபந்தம் என்பது குளம் முதலிய நீர் நிலைக்கான வரி, முத்தாவணம் என்பது அந்நாளில் உள்ள விற்பனை வரி. வேலிக்காசு என்பது ஒரு வேலி நிலத்துக்கு இவ்வளவு என்று வசூலிக்கப்பட்ட வரி. மேலும் நாடாட்சி, ஊராட்சி, வட்டி நாழி, பிடா நாழி அல்லது புதா நாழி, வண்ணாரப் பாறை, குசக்காணம், நீர்க்கூலி, தறிப்புடவை, தரகு அல்லது தரகு பாட்டம் போன்ற எண்ணற்ற வரிகளைக் குடி மக்களிடமிருந்து வசூலித்து நாட்டை நிருவாகம் செய்து வந்தனர் சோழ மன்னர்கள்.

படை

எல்லாப் படைகளுக்கும் தலைவனாக மன்னன் செயல்பட்டு வந்தான். சோழரிடம் ஆற்றல் மிக்க தரைப்படையும், கப்பற்படையும் இருந்தன. இப்படைகளின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பெயர்கள் வழங்கி வந்தன. யானைப்படைகளும், குதிரைப்படைகளும் சோழரின் அணிவகுப்புகளில் சிறப்பிடம் பெற்றன. காலாட்படையில் சிறப்பிடம் பெற்றது கைக்கோளப்படைஆகும். இப்படை கைக்கோளர் எனப்படும் நெசவாளர்களைக் கொண்ட படை ஆகும். இப்படைப் பிரிவே சோழர் படையின் முதன்மைப் படையாகத் தொடக்க காலம் முதல் இருந்து வந்துள்ளது. கைக்கோளப்படை அல்லாமல் வில்லையும், வாளையும் கொண்ட படைகளும் இருந்தன.

முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் ஆகியோர் காலத்தில் மூன்று கை மகாசேனை என்று ஒரு படையும் திரட்டப்பட்டிருந்ததாகத் தெரிகின்றது. சோழ நாடு முழுவதிலும் ஆங்காங்குப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. படைகள் தங்கியிருந்த தண்டுகளுக்குக் கடகங்கள் என்று பெயர். எந்தெந்த ஊர்களில் படைகள் தங்கியிருந்தனவோ அந்தந்த ஊர்களில் இருந்த கோயில்களின் பாதுகாப்பும், கோபுரங்களின் பாதுகாப்பும் அப்படைகளின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஆனால் படைகள் திரட்டப்பட்ட விதமும், அவற்றுக்குப் பயிற்சியளிக்கப்பட்ட முறையும் அறிந்து கொள்ள முடியவில்லை.

சோழ மன்னர் போர்ப்படைகளில் சுமார் 60000 யானைகளும், பல்லாயிரக்கணக்கான குதிரைகளும் இருந்தன.

 நீதி

நீதி வழங்கும் பொறுப்பானது ஊர்ச்சபையினரிடமும், குலப் பெரிய தனக்காரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வழக்குகளை விசாரிக்கவும், தீர்ப்பு வழங்கவும் விதிகளும், முறைகளும் வகுக்கப்பட்டிருந்தன. காரணத்தான் துணையுடன் நீதி மன்றங்கள் செயல்பட்டன.
உடலைப் பற்றிய குற்றங்கள் என்றும், உடமைகளைப் பற்றிய குற்றங்கள் என்றும் இப்போது செய்யப்பட்டுள்ள பாகுபாடுகள் சோழர் காலத்தில் காணப்படவில்லை. குற்றங்களைப் பெரும்பாலும் ஊர் நீதிமன்றங்களே விசாரித்துத் தீர்ப்புக் கூறின. குற்றங்களுக்குத் தண்டனையாகக் குற்றவாளியின் உடைமைகளைப் பறிமுதல் செய்வதைத்தான் அவை முறையாகக் கொண்டிருந்தன. திருட்டு, பொய்க் கையொப்பம், விபசாரம் ஆகியவை கொடுங்குற்றங்களாகக் கருதப்பட்டன. இக்குற்றங்களைப் புரிந்து தண்டனை பெற்றவர்கள் ஊராட்சி அவைகளில் உறுப்பினராக அமரும் தகுதியை இழந்து விடுவார்கள்.

தெரிந்தோ தெரியாமலோ செய்த சில குற்றங்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதில்லை. குற்றவாளிகள் கோயில்களுக்கோ அன்றி மடங்களுக்கோ இவ்வளவு தானம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

சோழர்களின் மத்திய அரசாங்கம்

மத்திய அரசு என்பது பிற்காலச் சோழர் காலத்தில் வலிமையுடன் விளங்கியது. அது மன்னனின் நேரடிப் பார்வையில் இயங்கியது. மன்னனாக யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்குப் பல நெறிகள் பின்பற்றப்பட்டன. நாடாளும் மன்னனின் கடமைகள், செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சோழப் பேரரசு, பிற்காலச் சோழர் ஆட்சியில் நிருவாக வசதிக்காகப் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

மன்னன்

சோழப் பேரரசில் மன்னர் ஆட்சி நிலவி வந்தது. மன்னனின் மூத்த மைந்தன் முடிசூட வேண்டுமென்ற வழக்கம் சோழப் பேரரசில் நிலவியது. தகுதியுடையவர் அரியணையில் அமர வேண்டுமென்ற அடிப்படையில் சில சமயம் இம்முறை கைவிடப்பட்டதுண்டு. வாரிசு உரிமைப் போரைத் தவிர்ப்பதற்காக அல்லது அரசியல் அனுபவம் பெறுவதற்காக மன்னன் தனது மைந்தர்களுள் ஒருவனை இளவரசனாக நியமித்து அவனை நிருவாகத் துறையில் ஈடுபடச் செய்தான். மன்னனுக்கு நேரடி வாரிசு இல்லாதபோது, வாரிசு அல்லாத ஒருவன் வேந்தனாக நியமிக்கப்பட்டான். இதற்கு முதலாம் குலோத்துங்கன் சான்றாவான். சில நேரங்களில் மன்னன் மறைந்தபோது, அவனுடைய மகன் சிறுவனாக இருந்தால், அம்மன்னனுடைய உடன் பிறந்த சகோதரர்கள் ஆளும் உரிமை பெற்றனர்.

சோழப் பேரரசின் நிருவாகத் தலைமைப் பதவியை மன்னனே வகித்து வந்தான். மன்னன் கடவுளாக மதிக்கப்பட்டான். மேலும் மன்னன் ஆடம்பர வாழ்வில் ஈடுபட்டிருந்தான்.

மன்னன் தலைநகரத்தில் இருந்து நாட்டை ஆட்சி செய்து வந்தான். தஞ்சை, பழையாறை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய ஊர்கள் தலைநகரங்களாக விளங்கின. மேலும் நிருவாகத்தைச் செம்மையாகவும், நேர்த்தியாகவும் செய்ய வேண்டும் என்பதற்காகத் திருவாரூர், சிதம்பரம், காஞ்சிபுரம் முதலிய ஊர்களைத் துணைத் தலைநகரங்களாகக் கொண்டிருந்தனர்.

இராஜகுருஎன்ற அதிகாரி சமய நிறுவனங்களை நிருவகிக்கும் பணியில் மன்னருக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.

மக்களின் குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்து மன்னனின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இக்குறைகளை மத்திய அரசோ, உள்ளாட்சி நிறுவனங்களோ தீர்த்து வைத்தன. மன்னன் சில சமயங்களில் பேரரசின் பல பாகங்களுக்கும் சென்று, அங்குள்ள குடிமக்களை நேரில் கண்டு, அவர்களின் குறைகளைக் கேட்டறிவான். மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அரசன் வாய்மொழியான ஆணையைப் பிறப்பிப்பான். அதற்குத் திருவாய்க் கேள்விஎன்று பெயர்.

சட்டங்களை இயற்றுவதற்கு என ஒரு தனி அமைப்பு ஏதும் இல்லை. சோழ நாட்டில் உள்ள ஊர்கள்தோறும் சபைகள் அமைக்கப்பட்டிருந்தன. அச்சபைகள் கொண்டுவந்த தீர்மானங்களை மத்திய அரசு செயல்படுத்தக் கடமைப்பட்டிருந்தது. வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது ஊர்ச் சபையின் பணியாகும். ஊர்ச் சபையால் நீதி வழங்க இயலாத நிலை ஏற்பட்டால் மட்டும்தான் மத்திய அரசு வழக்குகளைத் தீர்த்து வைக்கும்.
மன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்கென நிரந்தரமான அமைச்சரவை ஒன்று இல்லை எனலாம். நிருவாகப் பணியைப் பொறுத்தவரையில் மன்னனுக்கு அரசு அலுவலர்கள் ஆலோசனை அளித்து வந்தார்கள். படைத்துறையையும், நிருவாகத்துறையையும் சார்ந்த உயர்ந்த அலுவலர்கள் அதிகாரிகள் என அழைக்கப்பட்டனர்.

ஊராட்சி

சங்க காலத்திலும், அதனைத் தொடர்ந்து பல்லவர் காலத்திலும் நிலவிவந்த ஊராட்சி முறை பிற்காலச் சோழர் காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கியது. பிற்காலச் சோழர் ஆட்சியில் மத்திய அரசு பாதுகாப்பு, உள்நாட்டு அமைதி, குடிமக்கள் முன்னேற்றம், கோயில் பணி, பண்பாட்டு வளர்ச்சி போன்றவற்றில் கவனம் செலுத்தியது. பிற நிருவாகங்கள் ஊர்ச் சபைகளின் பொறுப்பில் விடப்பட்டிருந்தன. இரு ஊர்ச் சபைகளுக்கு இடையே பூசல்கள் ஏற்பட்டபோது மட்டுமே மத்திய அரசு ஊர் நிர்வாகத்தில் தலையிட்டது.

வாரியங்கள்

பிற்காலச் சோழர் காலத்தில் ஊராட்சி நடத்திவந்த சபைகளின் கடமைகள் மிகப் பலவாக இருந்தன. அவற்றை நிறைவேற்றுவதற்குத் தனித்தனிக் கழகங்கள் அமைக்கப்பட்டன. அக்கழகங்கள் வாரியம் என்று அழைக்கப்பட்டன. சம்வத்சர வாரியம், ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம் எனப் பல வாரியங்கள் இருந்தன.

சம்வத்சர வாரியம்

அறங்களை ஏற்று நடத்தல், அற நிலையங்களைக் கண்காணித்தல், ஊர் மக்கள் கொண்டு வந்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறுதல் போன்றவை சம்வத்சர வாரியத்தின் கடமைகள் ஆகும்.

ஏரி வாரியம்

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளைப் பாதுகாத்தலும், விளைநிலங்களுக்கு வேண்டிய நீரை முறையாகப் பாய்ச்சுதலும் ஏரிவாரித்தின் கடமைகள் ஆகும்.

தோட்ட வாரியம்

விளைநிலங்கள், புறம்போக்கு நிலங்கள், தோட்டங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்வது தோட்ட வாரியத்தின் கடமை ஆகும்.

பஞ்சவார வாரியம்

ஊரார் செலுத்த வேண்டிய நில வரியையும், பிற வரிகளையும் வசூலித்து அரசுக்கு ஆண்டுதோறும் அனுப்பிவைக்க வேண்டியது பஞ்சவார வாரியத்தின் கடமை ஆகும்.

பொன் வாரியம்

பொன்னை உரை காண்பதும், பொன் நாணயங்களை ஆராய்வதும் பொன் வாரியத்தின் கடமைகள் ஆகும். இவ்வாரியங்களே அல்லாமல் தடிவழி வாரியம், கழனி வாரியம், கணக்கு வாரியம் என்பன போன்ற வேறுபல வாரியங்களும் இருந்தன.

மேலே குறிப்பிட்ட வாரியங்களுக்கான உறுப்பினர்கள் பிற்காலச் சோழர் காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் குடவோலை என்னும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.








நன்றி : சங்கமித்ரா


-Arrowsankar

8 கருத்துரைகள்:

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Thank u for the wonderful article
I shared it in facebook

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Thank u Sir.Please share

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சூப்பர் மேட்டர் சார், சோழர்கள் மிக்க திறமையானவர்கள் என்பது நிருபணமாகிறது

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிகமிக அவசியமான பதிவு .சோழர்கள் நிர்வாகத்திலும் அரசியலிலும் சிறந்தவர்களாக இருந்தனர் என்பதினை இந்த பதிவு பறை சாற்றும்.நன்றி திரு .சங்கர் அவர்களே

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Very informative

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

thank U

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

good article sir

-Anand

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

thank U

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms