Thursday, February 23, 2017

பக்தர்கள் ஓடி ஓடி வழிபடும் பன்னிரு சிவாலயங்கள்

மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் தொடங்குகிறது. பக்தர்கள் ஓடி ஓடி வழிபடும் 12 சிவ ஆலயங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.


திருமலை
சிவாலய ஓட்டத்தினர், திருமலை எனும் திருத்தலத்தில் உள்ள ஈசனை முதலில் வழிபடுகிறார்கள். மூலவர், சூலபாணி என்று போற்றப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டு இவரை 'முஞ்சிறை திருமலைத்தேவர்' என்று அழைக்கிறது.

திக்குறிச்சி
தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இத்தலம், இரண்டாவது வழிபாட்டுத் தலம். சிவாலயங்களில் முக்கியத்துவம் பெறும் நந்தி, இந்தக் கோயிலில் இல்லை. மூலவர், திக்குறிச்சி மகாதேவர். நாற்சதுரமண்டபக் கருவறையில் அருள்கிறார், இந்த ஈசன்.

திற்பரப்பு
முக்கண்ணனை தரிசிக்க ஓடும் ஓட்டத்தில் மூன்றாவது கோயில், திற்பரப்பு. மூலவர் உக்கிரமான தோற்றத்தோடு விளங்குவதால் ஜடாதரர் என்றும் வீர பத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். மேற்கு நோக்கிய ஆலயத்தில் நந்திதேவர் வடக்கு நோக்கித் திரும்பி அமைந்துள்ளார்.

திருநந்திக்கரை
திருநந்திக்கரை நான்காவதாக வரும் ஆலயம். மூலவர், நந்திகேஸ்வரர். மார்த்தாண்டத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

பொன்மனை
குலசேகரத்திலிருந்து சுருளக்கோடு செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்மனை பரமன் ஆலயம். தீம்பிலேஸ்வரர் என அழைக்கப்படும் மூலவர், தீங்குகளை விரட்ட வல்லவர். முகப்பு மண்டபத்தில், நந்தி படுத்த நிலையில் காணப்படுவது வித்தியாசமானது.

பன்னிப்பாக்கம்
சிவாலய ஓட்டத்தில் ஆறாவது சிவத்தலம் பன்னிப்பாக்கம். கிராத மூர்த்தியாக விளங்கும் இறைவன், தீராத வினைகளைத் தீர்த்து நற்கதி வழங்குகிறார். பைரவருக்கு இந்தக் கோயிலில் தனி சந்நதி அமைந்துள்ளது.

கல்குளம்
ஏழாவதாக தரிசிக்கப்படும் இந்த ஆலயம் தனிச்சிறப்பு கொண்டது. ஓட்டத்தில் இடம்பெறும் 12 சிவாலயங்களில் இங்கு மட்டும்தான் இறைவிக்கு தனி சந்நதி அமைந்துள்ளது. இறைவன் நீலகண்ட சுவாமியாகவும், அம்பிகை ஆனந்த வல்லியாகவும் காட்சி தருகிறாள்.

மேலாங்கோடு
எட்டாவதாக உள்ள ஆலயம் இது பசுமையான வயல்வெளிக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் ஈசன், காலகாலராக திருக்காட்சி தருகிறார்.

திருவிடைக்கோடு
சிவாலய ஓட்டத்தில் ஒன்பதாவது ஆலயம் திருவிடைக்கோடு. இடைக்காடர் எனும் சித்தரின் பெயரால் இத்தலம் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். மூலவர், மகாதேவர் என்று வணங்கப்படுகிறார்.

திருவிதாங்கோடு
பத்தாவது தரிசனத் தலம், திருவிதாங்கோடு. பரிதிபாணி என்றழைக்கப்படுகிறார் இந்தக் கோயில் ஈசன். இதன் தென் பகுதியில் கேரள பாணியில் அமைந்த ஆலயத்தில், மகா விஷ்ணுவை தரிசிக்கலாம்.

திருப்பன்றிக்கோடு
திருப்பன்றிக்கோடு பக்தவத்சலர் ஆலயம், பதினோராவது திருத்தலமாக விளங்குகிறது. விஷ்ணு தலம்போல பெயர் அமைந்திருந்தாலும் பக்தர்கள் இத் தல இறைவனை, திருப்பன்றிக்கோடு மகாதேவர் என்றே அழைக்கின்றனர்.

திருநட்டாலம்
சிவாலய ஓட்டம் நிறைவு பெறும் தலம், திருநட்டாலம். கிழக்கு நோக்கியுள்ள ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரராக அருட்காட்சி வழங்குகிறார், ஈசன். எதிர்புறத்தில் உள்ள ஆலயத்தில், மகாவிஷ்ணு, சங்கரநாராயணராக அருள்கிறார். நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது இந்த தலம்.


மேலும் சிவாலய ஓட்டம் (கதை) பற்றி படிக்க :

2016 மகாசிவராத்திரி பற்றி படிக்க : http://arrowsankar.blogspot.in/2016/03/2016.html

2017 மகாசிவராத்திரி பற்றி படிக்க : http://arrowsankar.blogspot.in/2017/02/2017.html

 print this in PDF Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms