உலக காச நோய் தினம் (மார்ச் 24)என்று ஒரு நாளினை குறித்து வருடந்தோறும் அதனைப் பற்றிய விழிப்புணர்வினையும், சிசிச்சை முறைகளையும் தவிர்ப்பு முறைகளையும், மருத்துவ முன்னேற்றங்களையும் நாம் விடாது பல ஊடகங்கள், செய்தி தாள்கள், முகாம்கள் மூலமாக செய்து வருகின்றோம். இதன் பொருள் என்ன?
* இந்த நோயின் தாக்குதலுக்கு எளிதில் பலர் ஆளாகுகின்றனர்.
* நோய் தாக்குதல் இருப்பது தெரியாமலே நோயினை முற்ற விட்டு விடுகின்றனர்.
* சுகாதார பாதுகாப்பு முறைகளை இன்னமும் முழுமையாய் அனைவரும் கற்றுக் கொள்ளவில்லை.
* மருத்துவ முன்னேற்றத்தினை நன்கு அறிந்து அதன் பயனை அனைவரும் முழுமையாய் பெற வேண்டும்.
* தவிர்ப்பு முறைகளை நன்கு அறிய வேண்டும் என்பதே ஆகும்.
டிபி எனப்படும் காசநோய் என்றால் என்ன?
இது ஒரு தொற்று நோய். ஆரம்ப நிலையில் நல்ல சிகிச்சை அளிக்காவிடில் மிக அதிக பாதிப்பினை உடலுக்கு ஏற்படுத்தும். ஆனால் சிகிச்சையின் மூலம் இந்நோய்க்கு முழு நிவாரணம் பெற முடியும். இந்த நோய் தாக்கும் பாக்டீரியாவின் பெயர் பையோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் என்பது ஆகும். நுரையீரலிலும், தொண்டையிலும் ஏற்படும் இத்தாக்குதலே அவரது சளி, எச்சில் மூலமாக காற்றில் அடுத்தவரை பாதிக்கச் செய்யும். ஆனால் டிபியின் தாக்குதல் சிறுநீரகம், மூளை, எலும்பு இவற்றிலும் கூட ஏற்படலாம்.
நுரையீரல் தொண்டையில் தாக்குதல் ஏற்பட்டவர் இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் வெளியாகும் துளிகள் காற்றின் வழியாக கிருமிகளை சுமந்து செல்கின்றது. இதனை அடுத்தவர் சுவாசிக்கும் பொழுது அவரையும் இந்நோய் பாதிக்கின்றது. சிறிது காலம் சென்றே நோயின் பாதிப்பினை அவர் உணருவார். பாதிப்பு இல்லாமலும் பலரும் இருப்பர். காரணம்.
* அதிக நேரம் நோய் வாய் பட்டவரோடு இல்லாது இருத்தல்.
* ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருத்தல் ஆகியவை ஆகும்.
பாதிப்புடையவரை தொடுவதால் இந்நோய் பரவாது என்பதையும் அறிய வேண்டும்.
காச நோயின் அறிகுறிகள் என்ன?
* மூன்று வாரம் அல்லது அதற்கும் மேற்பட்ட இருமல்.
* எடை குறைவு-மிக அதிக எடை குறைவு
* பசியின்மை
* ஜுரம், அதிக ஜுரம்
* இரவில் வியர்வை
* மிக அதிக சோர்வு
* சக்தியின்மை
ஆகியவை ஆகும்.
பொதுவில் அறிகுறிகள் தாக்கப்பட்ட இடத்திற்கேற்ப இருக்கும். நுரையீரலில் பாதிப்பு இருந்தால் இருமல் அறிகுறியாக இருக்கும். நிணநீர் சுரப்பிகளில் பாதிப்பு இருந்தால் தொண்டையில் வீக்கம் தெரியும். மூட்டுகளில் காரணமின்றி வலி இருத்தல், எலும்பில் டிபி பாதிப்பு இருக்கின்றதா என பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதிக தலைவலி இருந்தாலும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சிகிச்சை நல்ல பலன் அளிக்கும் என்பதனைப் போல் சிகிச்சை இன்மை ஆபத்தான விளைவுகளையும் அளிக்கும் என்பதனை உணர்த்துவதும் ‘உலக காச நோய் தினத்தின்’ நோக்கம் ஆகும். சிலருக்கு சாதாரண மருத்துவ பரிசோதனையில் நெஞ்சு எக்ஸ்ரே எடுக்கும் பொழுதே இப்பாதிப்பு கண்டு பிடிக்கப்படுகின்றது.
இந்நோயினால் ஏற்படும் பிற பாதிப்புகள்
* பாதிக்கப்பட்டவரின் இடங்களில் இருந்து வரும் நபர்களுக்கு நோயின் பாதிப்பு வெளியில் தெரியாமல் இருக்கலாம்.
* சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக எளிதில் பாதிப்பு ஏற்படலாம்.
* நீரிழிவு நோய், சிறு நீரக நோய் உடையோருக்கு காச நோய் எளிதில் தாக்கலாம்.
* எய்ட்ஸ் பாதிப்பு உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக எளிதில் பாதிக்கப்படுவர்.
* புற்று நோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் என சில வகை நோய்களை ஏற்கனவே உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக காசநோய் பாதிப்பினை பெறலாம்.
* காச நோய் கிருமி ஒருவருக்கு இருந்து அதன் வீரியம் குறைவாய் இருந்தால் சிகிச்சை மிக மிக எளிது. 6-9 மாதத்திற்குள் பூரண நலம் பெறலாம்.
* இன்று உலகில் 9 மில்லியன் மக்கள் வருடந்தோறும் காசநோயினால் பாதிக்கப்படு கின்றார்கள் என்று சொல்கின்றது.
* மனித இறப்பிற்கு முக்கியமான மூன்று காரணங்களில் காசநோயும் ஒன்றாகும். 15-45 வயதுள்ள பெண்கள் இதில் அதிகம் இடம் பெறுகின்றனர்.
* டிபி கிருமி உடலில் இருந்தும் அநேகர் பாதிப்பு வெளிப்பாடு இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் இந்த பாதிப்பு வெளிப்பாடு எந்நேரத்திலும் நிகழலாம். உலகில் முன்றில் ஒரு பங்கு மக்கள் இப்பாதிப்பிற்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* பி.சி.ஜி. தடுப்பு ஊசி 70-80 சதவீதம் வரை சிறப்பாக வேலை செய்வதால் சிறு குழந்தைகளுக்கு இதனை அவசியம் மருத்துவர்கள் உபயோகிக்கின்றனர்.
* பொதுவில் டிபி வீரிய நிலை பாதிப்பு உடையவர்கள் சில வாரங்கள் அலுவலகம், பள்ளி செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துவர். ஆனால் சிகிச்சை என்பது பல மாதங்கள் தொடரும். மருத்துவர் நீங்கள் பூரண நிவாரணம் பெற்றுவிட்டீர்கள் என்று கூறிய பிறகு பாதிக்கப்பட்டவர் இயல்பு வாழ்க்கையினை மேற்கொள்ளலாம்.
* டிபி வீரிய நிலையில் இருக்கும் பொழுது பாதிக்கப்பட்டவரின் குடும்ப நபர்கள் மிகுந்த கவனத்துடன் அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நோயாளி அருகில் செல்லும் பொழுது ‘மாஸ்க்’, ‘கையுரை’ அணிவது நல்லது. அதே போன்று நோயாளியும் இருமல், தும்பல் வரும் பொழுது மூக்கு, வாயினை மென்மையாய் டிஷ்யூ பேப்பரினை பொத்தி பின் அதனை குப்பை கவரில் போட்டு விட வேண்டும்.
* டிபி சிகிச்சை சிறந்த பலனை அளிக்கின்றது. ஆயினும் முறையான மருந்தினை முறையான காலம் வரை முறையாய் எடுக்க வேண்டியது மிக அவசியம். பலருக்கு இருக்கும் விடா பிரச்சினைகளுக்கு காரணம் முறைபடி மருந்தினை உட்கொள்ளாததே ஆகும். இதன் காரணமாக சிகிச்சை தீவிர சிகிச்சை ஆகலாம்.
* மற்றொரு வகை டிபி அரிதானது. இவ்வகையில் கிருமி ரத்தத்தின் வழியாக உடலில் பல்வேறு உறுப்புகளை ஒரே நேரத்தில் பாதிக்கும். இவ்வகை மிகவும் அபாயகரமானது.
* வறுமை கோட்டில் வாழும் பெண்கள் பலருக்கு குழந்தையின்மை ஏற்படுவதற்கு ஒரு காரணம் பிறப்புறுப்பில் டிபி தாக்குதல் நிகழ்வதுதான்.
(காச நோயிலிருந்து சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரம் பெறலாம்)
* சுகாதாரத்தினை கூட்டுவதே மிகப்பெரிய தீர்வினைக் கொடுக்கும்.
* பொது இடங்களில் எச்சில் துப்புவது, மூக்கினை சிந்துவது இவை மிக அநாகரிகமானது மட்டுமல்ல. சுகாதார சீரழிவு என்பதனை இனியாவது மக்கள் உணர வேண்டும்.
* காச நோயின் வயது சுமார் 15,000 வருடங்கள் ஆகும். கி.மு. 2400-3000 வருட ‘மம்மீஸ்’ ஆய்வுகளில் அவர்கள் முதுகெலும்பில் இக்கிருமி தாக்குதல் இருந்ததாம். கி.மு.460ல் கூட காசநோய் எடை குறைவோடு கூடிய நோய் என்ற குறிப்பு கிடைத்துள்ளது.
* நல்ல சிகிச்சை முறையினை மருத்துவம் காணும் வரை இந்நோயினால் தாக்கப்பட்டவர்கள் 5 வருடத்திற்குள்ளாகவே இறந்துள்ளனர். உலகெங்கிலும் இதற்கான கவனம் அதிகம் கொடுக்கப்பட்டதன் விளைவே இன்று மக்கள் இந்நோயிலிருந்து எளிதில் விடுபட முடிகின்றது. அனைவருமே இந்நோய் கிருமிகளை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி உடையோர் தவிக்கின்றனர்.
* கடும் முயற்சிகள் எடுத்தும் இந்நோயினை கட்டுப்படுத்த கூடுதல் உழைப்பு தேவைபடுகின்றது.
* ஆறு மாதம் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்த உடன் அநேகர் இதனை செய்வதில்லை. பின்னால் இவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இவர்கள் மூலம் நோய் பரவவும் செய்கின்றது.
* அரசாங்கம் இதற்கான மருந்துகளை எளிதாய் கொடுத்தாலும் சில அடிப்படை தேவைகளை செய்து கொள்ளும் வசதி பலருக்கு இருப்பதில்லை.
* 4-5 மாத்திரைகளை முறையாய் தினம் எடுத்துக் கொள்ளும் ஒழுங்கு முறை பலருக்குத் தெரிவதில்லை.
* முறையான பரிசோதனை செய்து கொள்ளத் தவறுகின்றனர்.
* பலர் தனக்கு டிபி உள்ளது என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்று அஞ்சுகின்றனர்.
* பலர் தனக்கு நோய் இருந்து விடுமோ என்ற பயத்திலேயே பரி சோதனைக்கு வருவதில்லை.
* மேற் கூறியவைகளை தவிர்த்தால் காச நோயற்ற சமூகத்தினை நம்மால் உருவாக்க முடியும்.
1 கருத்துரைகள்:
நோயின் விழிர்புணர்வை வளர்ப்போம்
Post a Comment