Wednesday, October 18, 2017

ஷோடஸ(பதினாறு) மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்



பதினாறு என்றாலே பதினாறு சம்பத்துக்களை கூறும் வழி.இந்த சம்பதுக்களை அடைய அருளும்

       ஷோடஸ(பதினாறு) மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரம்.


மஹாலக்ஷ்மி என்றாலேயே சுத்தம், செல்வம், சந்தோஷம், நிம்மதி என்று மனதை மகிழ்விக்கும் அனைத்து அம்சங்களுக்கும் உரியவள் என்றுதான் பொருள். இந்த மஹாலக்ஷ்மி பல ரூபங்களில் வழிபடப்படுகிறாள். மஹாலக்ஷ்மியாகவும், அஷ்ட லக்ஷ்மியாகவும், ஷோடஸ லக்ஷ்மியாகவும் பலவாறு போற்றி வணங்கப்படுகிறாள். வாழ்வில் சந்தோஷத்துக்குத் தேவையான பதினாறு குணநலன்களை நமக்கு அளிப்பவர்கள் இந்த ஷோடஸ மஹாலக்ஷ்மிகள் என்று பெரியவர்கள் அறிவித்திருக்கிறார்கள். 

இங்கே அந்த ஷோடஸ மஹாலக்ஷ்மிகளின் 16 துதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் இரண்டே வரிகள் கொண்ட சமஸ்கிருத ஸ்லோகங்கள். ஒவ்வொரு ஸ்லோகத்துக்கு முன்னாலும் பொது குறிப்பு ஒன்றும், ஸ்லோகத்துக்குப் பின்னால் அந்த ஸ்லோகத்தின் பொதுப் பொருளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

தனலட்சுமி 

சகல உயிர்களிடத்தும் நிறைவாக இருப்பவள் தனலட்சுமி. எனவே நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் இருக்க வேண்டும். போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா 
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிர்களிடத்திலும் நிறைந்திருக்கும் தனலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

வித்யாலட்சுமி

எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் அறிவின் உருவில் இருப்பதால் நாம் நம் அறிவை நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும். பிறரிடம் அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் வித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் புத்தி ரூபமாகப் பொருந்தி யிருக்கிறாளோ, அந்த வித்யாலட்சுமிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

தான்யலட்சுமி

தேவியானவள் பசியைப் போக்கும் தானிய உருவில் இருப்பதால் நாம், நம் பசியைத் தீர்த்துக் கொள்வதோடு நில்லாமல் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து தான்ய லட்சுமியின் அருளை கட்டாயம் பெறலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்த்திதா 
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து தானியங்களிலும் துலங்கி, உலகோர் பசிப்பிணி போக்கும் தான்யலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

வீரலட்சுமி

உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும், பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும். செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் வீரலட்சுமியை வணங்கினால் மனம் திடப்படும்.

யாதேவீ ஸர்வபூதேஷு த்ருதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் தைரிய வடிவினளாய்த் திகழும் வீரலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


சௌபாக்ய லட்சுமி

தேவி எங்கும், எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு, மற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்து ஸௌபாக்கிய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு துஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் மகிழ்ச்சி எனும் குணமாக நிறைந்திருக்கும் ஸௌபாக்கிய லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம். நமஸ்காரம்.

ஸந்தான லட்சுமி

எல்லா உயிர்களிடத்தும் தாய் உருக் கொண்டிருக்கும் ஸந்தானலட்சுமியின் அருளைப் பெற எல்லாக் குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண்டும். தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பார்கள். தாயன்போடு ஸந்தான லட்சுமியைத் துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

யாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிர்களிடத்திலும் தாய் குணமாகப் பொருந்தியிருக்கும் ஸந்தான லட்சுமியே நமஸ்காரம்,  நமஸ்காரம்,  நமஸ்காரம்.

காருண்யலட்சுமி

சகல ஜீவன்களிடத்தும் கருணையோடு பழகவேண்டும். உயிர்வதை கூடாது. மற்ற உயிர்களை அழிக்கவோ துன்புறுத்தவோ நமக்கு உரிமை இல்லை. ஜீவ காருண்ய மனத்தோடு வாழ்ந்தால் காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் கருணை வடிவில் இலங்கும்  காருண்ய லட்சுமித் தாயே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

மகாலட்சுமி

நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் நம் உள்ளத்தில் திடமாகக் குடிகொண்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் மகாலட்சுமி பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை நமக்கு வழங்குவாள். இதை விடுத்து பிறரிடம் எதையாவது பெற வேண்டும் என்ற எண்ணத்துடனிருந்தால் மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில் தான் நம் வாழ்க்கை அமையும். இறைக்கின்ற கிணறு சுரக்கும் என்பது பழமொழி, நாம் பிறருக்கு மனமாற பொருட்களைக் கொடுத்தால் அது பல மடங்குகளாக நம்மிடமே திரும்ப வரும்.

யாதேவீ ஸர்வபூதேஷு லட்சுமிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் செல்வ வடிவில் இணைந்திருக்கும் வைபவ லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


சக்திலட்சுமி

தேவியானவள் எல்லா உயிர்களுக்கும் தானே சக்தி வடிவமாக இருக்கிறாள். எனவே எந்த வேலையையும் என்னால் முடியாது என்று சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் சக்தி லட்சுமி நமக்கு என்றும் துணையிருப்பாள், சக்தியைக் கொடுப்பாள்.

யாதேவீ ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிடத்தும் சக்தி வடிவில் பொருந்தியிருக்கும் சக்தி லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம். நமஸ்காரம்.


சாந்தி லட்சுமி

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதில்தான் இருக்கிறது என்பதைப் பரிபூரணமாக உணரவேண்டும். அப்படி உணர்ந்தால் நிம்மதியாக, அமைதியாக, சாந்தியாக நம்மால் நிச்சயமாக வாழமுடியும்.

யாதேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் சாந்தி ரூபமாகத் திகழும் ஆதிலட்சுமி வடிவான சாந்தி லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

 சாயா லட்சுமி

நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையைச் செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்திற்குத் திருப்ப வேண்டும். இதற்குப் பேரருள் புரியும் சாயா லட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

யாதேவீ ஸர்வபூதேஷு சாயாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் பிரதி பிம்ப வடிவினளாகப் பொலியும் சாயா லட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


த்ருஷ்ணா லட்சுமி

எப்பொழுதும் நாம் பக்தி எண்ணத்துடனேயே இருக்கவேண்டும். பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் த்ருஷ்ணா லட்சுமியைத் துதித்து நலமடையலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் ஆசை உருவில் விளங்கும் த்ருஷ்ணா லட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம். நமஸ்காரம்.


க்ஷமா லட்சுமி

எல்லா உயிர்களிடத்தும் பொறுமை உருவில் இருக்கும் க்ஷமா லட்சுமியை தியானிப்போம். பொறுமை கடலினும் பெரிது, பொறுத்தார் பூமி ஆள்வார், பொறுமையுடனிருந்தால் கஜலட்சுமியின்  வடிவான க்ஷமாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷமா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

அனைத்து உயிரினங்களிலும் பொறுமை குணமாகத் திகழும் கஜலட்சுமியின் வடிவான க்ஷமா லட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

கீர்த்தி லட்சுமி

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி செய்தால், புகழ் தானாக வரும். மேலும் கீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

யாதேவீ ஸர்வபூதேஷு கீர்த்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

எல்லா உயிரினங்களிலும் கீர்த்தி எனும் புகழ் வடிவினளாகத் திகழும் கீர்த்தி லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

விஜயலட்சுமி

விடாத முயற்சியும், உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். விஜய லட்சுமி எப்பொழுதும் நம்முடனிருப்பாள்.

யாதேவீ ஸர்வபூதேஷு விஜயரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

எல்லா உயிரினங்களிலும் வெற்றி வடிவில் விளங்கும் விஜயலட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

ஆரோக்கிய லட்சுமி

நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது. உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கோபம், பொறாமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஆரோக்கிய லட்சுமியை வணங்கி அவள் அருள் பெற்று  ஒளிவீசும் தேகத்துடன் வளமுடன் வாழ்வோம்.

யாதேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய அம்சமாக உறையும் ஆரோக்கிய லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும். ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் கீழே விழுந்து நமஸ்கரிப்பது சம்பிரதாயம். அனைத்து நலன்களையும் இந்தப் பதினாறு லட்சுமிகளும் இனிதே அருளட்டும்.

-Arrow Sankar
Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms