கால நிகழ்வுகளை உடனே தெரிவிப்பது ஊடகத்தின் கடமையாகும்
இதோ இன்றைய பதிவு
சென்னையில் நில அதிர்வு
April 11, 2012
சென்னை: இந்தோனேஷியா, வடக்கு சுமத்ரா கடலில் பிற்பகல் 2 மணி, 8 நிமிடத்திற்கு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.5, வடக்கு இந்திய கடலில் மாலை 2 மணி, 31 நிமிடத்திற்கு ரிக்டர் அளவில் 8.7, வடமேற்கு சுமத்ரா கடலில் மாலை 4 மணி, 13 நிமிடத்திற்கு ரிக்டர் அளவில் 8.01 பதிவாகியது. மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், தமிழகம் முழுவதும் பிற்பகல் 2.15 மணி முதல் நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில், 10 மாடி உயரத்திற்கு மிகாமல் கட்டடங்களில் பணி புரிந்த சோழிங்கநல்லூர், கிண்டி, நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், எழிலகம், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அதிகளவில் நில அதிர்வுகளை உணர்ந்தனர். மேஜை, நாற்காலிகள் ஆடியதைத் தொடர்ந்து அலறியடித்து சாலைக்கு ஓடி வந்தனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அடுக்கு மாடி வீடுகளில் வசித்த பொதுமக்கள், சாப்பிடுவதை விட்டு விட்டு குழந்தைகளுடன் சாலையில் குவிந்தனர். அடுக்கு மாடிகளில் வீடுகளிலிருந்த பொருட்கள், பாத்திரங்கள் உருண்டதாக தகவல் தெரிவித்தனர்.
பள்ளிக்கு விடுமுறை : நில அதிர்வை அடுத்து, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, பெற்றோர் படையெடுத்தனர். அங்கு, தங்கள் குழந்தைகளை அழைப்பதற்காக குவிந்தனர். இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பல இடங்களில் பள்ளியிலிருந்து குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்ததை காண முடிந்தது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், பள்ளிகளிலும், சமுதாயக்கூடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை : எண்ணூர், காசிமேடு, திருவொற்றியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் வசிக்கும் மீனவர் சங்க நிர்வாகிகளை போலீசார் அழைத்து, நில அதிர்வு ஏற்பட்டது குறித்து விரிவாக எடுத்துக் கூறினர். மேலும், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து, பாதுகாப்பாக இருக்கின்றனரா? கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவக் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.
மெரீனா கடற்கரை : சென்னை மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நேற்று பிற்பகலில் ஏராளமானோர் குவிந்திருந்தனர். இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும், கடற்கரையிலிருந்து காற்று வாங்க வந்தவர்கள், உடனடியாக கடற்கரையை விட்டு வெளியேறினர். மேலும், அங்கு பொது மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் போலீஸ் குவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி, கடற்கரையிலிருந்த பொதுமக்களை வெளியேற்றினர். கடற்கரையோரப் பகுதியிலிருந்த வாகனங்களையும் எடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.
தாக்கம் ஒரு வாரம் நீடிக்கும் : சென்னை வானிலை நிலநடுக்கப் பிரிவு இயக்குனர் கோபால் கூறுகையில், "நேற்று மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், இந்தோனேஷியா, வடக்கு சுமத்ரா கடலில் பிற்பகல் 2 மணி, 8 நிமிடத்திற்கு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.5, வடக்கு இந்திய கடலில் மாலை 2 மணி, 31 நிமிடத்திற்கு ரிக்டர் அளவில் 8.7, வடமேற்கு சுமத்ரா கடலில் மாலை 4 மணி, 13 நிமிடத்திற்கு ரிக்டர் அளவில் 8.01 பதிவாகியது.
இதனால், தமிழகம் முழுவதும் இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் அதிகளவு உணரப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை குறித்து, தனித் துறை தான் அறிவிக்கும். இந்த நில அதிர்வு ஒரு வாரம் நீடிக்கும்' என்றார்.
நன்றி: தினமலர், தினதந்தி நாளிதழ்கள்
0 கருத்துரைகள்:
Post a Comment