Monday, April 30, 2012

மே தின வரலாறு


மே தினம்
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே 1 உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.
மே தின வரலாறு
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

ரஷ்யாவில் மே தினம்

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்காகோ பேரெழுச்சி

மே 3, 1886 அன்று மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் கறுப்பு தினம்

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

அனைத்து நாடுகளிலும் மே தினம்

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

இந்தியாவில் மே தினம்

இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.


உழைப்பாளர் சிலை 


நம்மில் பலர் சென்னை  மெரீனா கடற்கரையில்  உள்ள உழைப்பாளர் சிலையை (தொழிலாளர் சிலை)யை பார்த்திருப்பீர்கள், சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்து இருப்பீர்கள்.
இந்த காலத்தால் அழியாத சிலையை செய்தது யார் ?
அவர் பெயர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி, வங்கத்தை சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு ஓவியர் ஆனால் சிலை வடிப்பதிலும் ஆர்வம கொண்டவர். மேலும் இவர் ஒரு எழுத்தாளர், புல்லாங்குழல் இசை வித்தகர், மல்யுத்த வீரர், வேட்டைக்காரர் என்று பன்முகத் தன்மை கொண்டவர்.
4 தொழிலாளர்கள் ஒரு கடினமான பாறாங்கல்லை உந்தி தள்ளுவது போன்ற இந்த சிலை வெண்கலத்தால் உருவாக்கப்பட்டது. உழைப்பாளர்களின் கோவணத் துண்டோடு கூடிய இறுகிய உடல், உழைப்பின் களைப்பு, விடாமுயற்சி, ஒற்றுமை, மனோபலம் மேலும் உழைப்பின் உன்னதத்தை நம் பார்வைக்கு இம்மியளவும் பிசகாமல் எடுத்துக் காட்டியிருக்கிறார் ராய். சுதந்திர இந்தியாவின் கரடு முரடான பாதையில் நாம் எதிர் கொள்ள வேண்டிய கடமையை(உழைப்பை) உருவகப் படுத்துவதாக  இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அது நமக்கு இருக்க வேண்டிய மன வலிமையையும், ஒற்றுமையை எடுத்தியம்புவதாக அமைந்த ருக்கிறது.
D.P.ராய், ஹிரன்மாய் ராய் சௌத்ரியிடம் சிலை வடிப்பதை கற்றார், அபாநிந்த்ரநாத் தாகூர் என்பவரிடம் WATER COLOUR முறையில் ஓவியத்தை கற்றார் பின் மேற்கத்திய பாணியில் ஆர்வம கொண்டு அவ்வழியில் தன் பணியை தொடர்ந்தார். சிலை வடிப்பதில் IMPRESSIONISM வகையின் கீழ் வரும் AUGUSTIN RODIN போன்றவர்களின் பால் ஈர்ப்பு கொண்டு நவீன மேற்கத்திய சிலை வடிப்பாளர்களின் வழியில் ராய் தன் பணியை தொடர்ந்தார். ராயின் முக்கிய அம்சமாக கருதப்படுவது செதுக்குவதை காட்டிலும் வார்த்து எடுத்தலே ஆகும். இவரின் பல படைப்புகள் உலக சிறப்பு வாய்ந்ததாகும், சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலைபாட்னாவில் உள்ள மார்ட்டிர்ஸ் மெமோரியல்(வெள்ளையனே  வெளியேறு இயக்கத்தின் போது தேசியக் கொடியை ஏற்ற முற்பட்டு உயிர் துறந்த 7 இளைஞர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது), விவேகானந்தர் சிலை, தண்டி யாத்திரையை  சித்தரிப்பது போன்ற கியாரா மூர்த்தி சிலை என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இவர் தன் முதல் ஓவியக் கண்காட்சி 1933-34ல் கொல்கத்தாவில் நடத்தினார், 1937ல் ஆங்கிலேய அரசாங்கத்தால் MBE பெற்றார், 1953ல் லலித் கலா அகாதமியின் முதல் தலைவராகவும் பின்னர் 1955ல் UNESCOவின் ART SEMINARக்கு  தலைவரவாகவும், இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 1958ல் பத்மா பூசன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார். ராய் சென்னை ஓவியக் கல்லூரியின் தலைவராகவும் இருந்தார் அச்சமயம் தான் உழைப்பாளர் சிலை வடித்தார் என்பது கேள்வி, இது தவிர கடற்கரையின் மறுமுனையில் இருக்கும் காந்தியின் சிலையும் இவரால் வடிக்கப்பட்டதே.

1 கருத்துரைகள்:

Venkat Narayanan AR said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Excellent short history on May Day making us realise its importance and greatness. Gr8 Work done. Marvellous!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms