Wednesday, October 31, 2012

நீலம் எனும் அசுரன்



நீலம் எனும் அசுரன் 

சென்னை, அக் 31, 2012


வங்க கடலில் உருவான நீலம் புயல் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. 

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், உள்பட 20 மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக வேதாரண்யத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கிறார்கள். 

தஞ்சையில் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பஸ் நிலையம் - மார்க்கெட் பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

தஞ்சை மாவட்டத்தில் மழையால் 12 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் அழுகும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழை தண்ணீரை வடிய வைக்கும் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏரி- குளம்- வாய்க்கால் உடைப்பை சீரமைக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் இன்று 4- வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. மணப்பாறை, துறையூர், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, ஜீயபுரம், லால்குடி பகுதிகளில் பெய்த இடைவிடாத மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பலத்த காற்று வீசியதால் வாழைகள் சாய்ந்தன. மேலும் சாலைகளில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். 

கடலோர மாவட்டமான புதுக்கோட்டையில் 5-வது நாளாக மழை நீடித்து வருகிறது. கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம், முத்துக்குடா, புதுப்பட்டினம், மீமிசல் ஆகிய பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டது. நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடலில் ராட்சத அலைகள் உருவானது. நள்ளிரவு முதல் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. 6-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, தோகைமலை, குளித்தலை, லாலாப்பேட்டை உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இடைவிடாது மழை கொட்டி வருகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பா ளையம், திருமானூர், ஜெயங் கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய கன மழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்கிறது. 

பெரம்பலூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது. தற்போதும் மழை தொடர்ந்து தூறிக் கொண்டே இருக்கிறது. மழை விடிய, விடிய பெய்தது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. 

இந்த மழையின் காரணமாக ஏற்காடு நகரமே நேற்று மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. மலைப்பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டுக் கொண்டு மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது. மலைப்பாதையில் ஏதாவது மண் சரிவு ஏற்படுகிறதா? என்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் மழை விடாமல் கொட்டி வருகிறது. கொல்லிமலை பகுதியிலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது. நிலச்சரிவு ஏற்படுகிறதா? என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் விடிய, விடிய சாரல் மழை பெய்தது. மழை காரணமாக ஓசூர் பகுதியில் ரோஜா மலர்கள், மற்றும் கொய்மலர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று காலை மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசாக மழை தூறி வருகிறது. பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

வங்க கடலில் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் நிலை கொண்ட 'நீலம்' புயல் தமிழக கடற்கரையை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது. இதனால் கடந்த 3 நாட்களாக மிரட்டிய இந்த புயல் இன்று மாலை கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே மகாபலிபுரத்தில் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

புயல் கரையை கடக்கும்போது சூறாவளி காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வந்தது. இதனால் காலையில் மணிக்கு 55 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசியது. 

சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. புயல் தாக்கம் குறைந்ததும் மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்தது.   

இதற்கிடையே, இன்று மாலையில் புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், முன்கூட்டியே கரையை கடந்தது. 4 மணியளவில் மகாபலிபுரத்தில் புயல் கரையை கடக்க ஆரம்பித்தது. அப்போது பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. 
இதையொட்டி கடற்கரை பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. மாமல்லபுரத்தில் கரையைக் கடந்த புயல் விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டம் வழியாக சென்று வலுவிழக்கும். இதனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் ,தினத்தந்தி 

1 கருத்துரைகள்:

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நீங்க ரொம்பத்தான் நியுஸ் படிக்கீறிங்கோ

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms