புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து அனுஷ்டிக்கப்படும்நோன்பாகும். இது தட்சணாயண் காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும்.ஆகவே புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுஷ்டிக்கப்படும் விரதம் சாரதா நவராத்திரி நோன்பாகும்.
மகா பேரழிவுக் காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது.
(இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = ஆக்கல்)
நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான்.
ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசை யன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூஜை தொடங்கவேண்டும். நறுமணமுள்ள சந்தனம், பூ, இவைகளுடன் மாதுளை, பலா, வாழை, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம்,வடை, பாயாஸம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும்.
புனுகு, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தணம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும்.
சுவாஷினி பூஜை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட சிறுமிகளே பூஜைக்கு உரியவர்கள் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூஜிக்கப்படவேண்டும். பூஜிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.சிறுமி களுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.
நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.
ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழக்கம். பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.
விரதம் கைக்கொள்ளுவோர் (அனுஷ்டிப்போர்) அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று உபவாச விரதம் இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.
விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பலகாரங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாரணையைப் பூர்த்தி செய்யலாம்.
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத் (திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீடுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள்.
விரதம் அனுஷ்டிக்கப்படும் போது பாராயணம் அல்லது பாட வேண்டிய பாடல்கள்
1. அபிராமி அந்தாதி
2. இலட்சுமி தோத்திரம் (கனகதார தோத்திரம்)
4. சரஸ்வதி அந்தாதி
5. நவமங்களி ஸ்தோத்திரம்
6. ஸ்ரீ துர்கா அஸ்டோத்திரம்
நவராத்திரி விரதம் மேற்கொள்ளுவோம்! வாழ்வில் வளம் பெறுவோம் !
நவராத்திரிப் பண்டிகை வங்காளம், மைசூர் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மைசூர் போன்ற நகரங்களில் “தசரா”என்ற பெயரில் அரசாங்கத்தின் ஆதரவுடன் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்படும். இந்தப் பண்டிகையின்போது தமிழகத்தில் பலரும் பொம்மைக் கொலு வைப்பது வழக்கம்.
நவராத்திரிப் பண்டிகையில் குடும்பத்தில் உள்ள ஆண்கள். பெண்கள், குழந்தைகள் என அனைவருமே பங்கு கொள்ளூம் வாய்ப்பு உள்ளது.
மைசூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற சமஸ்தானங்களில் நவராத்திரி பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டு வந்தன. பொதுவாகக் கலைகள் எங்கு கொண்டாடப்பட்டதோ அங்கெல்லாம் நவராத்திரிக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பதன் நோக்கம்
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.
0 கருத்துரைகள்:
Post a Comment