Friday, April 5, 2013

விஜய வருட ராசிப்பலன்கள்

மேஷம் 
சுயமரியாதை மிகுந்தவர் நீங்கள். உங்களுக்கு 2-வது ராசியில் விஜய வருடம் பிறப்பதால், பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் கூடும். உங்களின் பூர்வ புண்யாதிபதியின் சாரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்களின் அந்தஸ்து உயரும். அரசு காரியங்கள் இனிதே நிறைவேறும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு நல்ல வேலையும் அமையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

27.5.13 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான குரு பகவான் 2-வது வீட்டில் தொடர்வதால், குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். பழைய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். 28.5.13 முதல் வருடம் முடியும் வரை 3-ஆம் வீட்டுக்கு குரு செல்வதால், காரியத் தடைகள் அதிகரிக்கும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். எனினும் தந்தைவழியில் உதவிகளும், சொத்துகளும் கிடைக்கும்.

வருடம் பிறக்கும்போது சுக்கிரனும் செவ்வாயும் வலுவடைந் திருப்பதால் வீடு- மனை வாங்குவது, விற்பது லாபமாகும். இந்த ஆண்டில் சொந்த வீடு அமையும். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். இந்த ஆண்டு முழுவதும் கேது உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மின்சாரம், நெருப்பு ஆகியவற்றைக் கவனமாகக் கையாளவும். இந்த ஆண்டு முழுக்க சனியும் ராகுவும் உங்கள் ராசிக்கு 7-ல் தொடர்வதால், தம்பதிக்கு இடையே கருத்துமோதல்கள் வரும். வெளியாட்களை வீட்டு விஷயங்களில் அனுமதிக்க வேண்டாம். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய், தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். ஆனி மாதத்தில் தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவர். சிலருக்கு புது வேலை அமையும்.

12.8.13 முதல் 7.9.13 வரை சுக்கிரன் மறைவதால், இந்த காலகட்டத்தில் சிறு விபத்துகள் நிகழலாம். வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆபரணங்கள், முக்கிய ஆவணங்கள் களவுபோகாமல் பார்த்துக்கொள்ளவும். 19.8.13 முதல் 10.10.13 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீசமாகி, சனியின் பார்வையைப் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் உடல்நிலை பாதிக்கும். சகோதரர்களுடன் கருத்துமோதல், பண விஷயங்களில் ஏமாற்றம் ஏற்படும். வி.ஐ.பி-களை பகைக்க வேண்டாம். 30.11.13 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல் தொடர்வதால், வீடு- மனை வாங்குவது, விற்பதில் கவனம் தேவை.

வியாபாரத்தில் போட்டிகள் உண்டு. சந்தை நிலவரத்தை அறிந்து புதிய முதலீடுகள் செய்யுங்கள். அதிக வட்டிக்கு வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவதோ, புதிய துறைகளில் ஈடுபடுவதோ வேண்டாம். பங்குதாரர்களால் பிரச்னைகள் எழும். கெமிக்கல், பெட்ரோ- கெமிக்கல், உரம் மற்றும் மருந்து வகைகளால் ஆதாயம் உண்டு. ஆனி, ஆவணி மாதங்களில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். தை, மாசியில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும்.
உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். விரும்பத் தகாத இடமாற்றமும் வரக்கூடும். மேலதிகாரிகளை பகைக்க வேண்டாம். தை மாதத்தில் பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். கண்டகச் சனி தொடர்வதால், உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே எனும் ஆதங்கம் எழும். எனினும், சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு ஆதாயம் உண்டு. சுக்கிரன் சாதகமாகப் பார்ப்பதால், கலைத் துறையினர் யதார்த்த படைப்புகளால் புகழ் பெறுவர்.
கன்னிப் பெண்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்தவும். படித்த துறையில் வேலை கிடைக்காவிட்டாலும், கிடைத்த வேலையில் சேர்வது நல்லது. அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு மறதி, தூக்கம் அதிகரிக்கும். படிப்பில் கவனம் மிக அவசியம். அரசியல்வாதிகளுக்கு, தலைமையிடம் இருந்து முக்கிய பொறுப்பு கிடைக்கும். ஆதாரம் இல்லாமல் எதிர்க்கட்சியினரை வசைபாட வேண்டாம்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு விடாமுயற்சியால் உங்களை சாதிக்கவைப்பதாக அமையும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். தினமும் ராம நாமம் சொல்லி தியானிப்பதால், உங்களின் செயல்பாடுகள் சிறக்கும்.


ரிஷபம்

ல்லோரையும் நேசிப்பவர் நீங்கள். ராகுவும் சனியும் 6-ஆம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும்போது விஜய வருடம் பிறப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
அயல்நாடு, வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். பிதுர் வழி சொத்துக்களில் பிரச்னைகள் விலகும். வழக்கு சாதகமாகும். கடனை மொத்தமாக அடைக்கும் அளவுக்கு வருமானம் கூடும். உங்கள் ராசியிலேயே விஜய வருடம் பிறப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
27.5.13 வரை ஜென்ம குரு நீடிப்பதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். லாகிரி வஸ்துக்களைத் தவிர்க்கவும். சிலர், உங்களை அவதூறாகப் பேசலாம். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். 28.5.13 முதல் குரு உங்கள் ராசியை விட்டு விலகி, வருடம் முடியும் வரை 2-ஆம் வீட்டில் அமர்கிறார். வீட்டில் குழப்பங்கள் நீங்கும். தம்பதிக்கு இடையே கலகம் ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து விலக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையில் இருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு நல்ல வேலை அமையும். எதிர்பார்த்த தொகை வந்துசேரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாகும். சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனம் அறிந்து செயல்படத் துவங்குவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்ல விதத்தில் முடியும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்து வீர்கள். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள். பாதியில் நின்ற வீட்டுப் பணியை பூர்த்தி செய்ய, தேவையான வங்கி லோன் தொகை வந்து சேரும்.
விஜய வருடம் முழுவதும் கேது, ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கோயில் கும்பாபிஷேகங்களை முன்னின்று நடத்துவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். 7.9.13 முதல் 3.10.13 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பலவீனம் அடைவதால் சிறு வாகன விபத்துகள், மனஉளைச்சல், வீண் பழிச்சொல் வந்து நீங்கும். 30.11.13 முதல் வருடம் முடியும் வரையிலும் உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டிலேயே செவ்வாய் நீடிக்கிறார். இந்த காலகட்டத்தில் மனைவியை அனுசரித்து செல்லவும்.
அவருக்கு சிறு சிறு அறுவை சிகிச்சைகள், மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிக்கவும். கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து உட்கொள்ள வேண்டாம். சொத்து விற்கும் போது ஒரே தவணையில் பணத்தை வாங்குங்கள்.
வியாபாரத்தில், ஆனி, கார்த்திகை, தை, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபம் உண்டு. புது கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார்.
28.5.13 முதல் குரு உங்கள் ராசியை விட்டு விலகுவதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடனான மோதல்கள் விலகும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். ஐப்பசி மாதத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் வரக்கூடும். மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த சம்பளம்- பதவி உயர்வு கிடைக்கும். கலைத் துறையினர் பற்றிய வதந்திகள் விலகும். பாராட்டு கிடைக்கும்.
மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. கன்னிப்பெண்கள், தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர்வர். நல்ல வாழ்க்கைத் துணைவர் அமைவார். அரசியல்வாதிகளுக்கு  மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
மொத்தத்தில் இந்த விஜய வருடம், உங்களுக்கு வெற்றியை அளிப்பதுடன், வசதி-வாய்ப்புகளை வாரித் தருவதாக அமையும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு துணை நிற்கும். சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோயில்களுக்குச் சென்று, துளசி சார்த்தி வழிபட்டு வாருங்கள்; இன்னல்கள் காணாமல் போகும்.


மிதுனம்

யர்வு-தாழ்வு பேதம் பார்க்காதவர் நீங்கள். முக்கிய கிரகங்கள் லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் விஜய வருடம் பிறப்பதால், தன்னம்பிக்கை மிளிரும். தடைப்பட்ட விஷயங்கள் இனிதே பூர்த்தியாகும். புதிய வீடு- மனை வாங்க முயற்சிப்பீர்கள். வி.ஐ.பி-களுக்கு நெருக்கம் ஆவீர்கள். பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும்.
அரசால் அனுகூலம் உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆபரணங்கள் சேரும். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.      
உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் விஜய வருடம் பிறப்பதால், சிக்கனம் தேவை. நீண்ட நாட்களாக செல்ல நினைத்த கோயில்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். 28.5.13 முதல் குரு உங்கள் ராசிக்குள் நுழைவதால் வீண் அலைச்சல் குறையும். முன்கோபம், உணர்ச்சிவயப் படுவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் வாக்குவாதம், தம்பதிக்கு இடையே ஈகோ பிரச்னை வேண்டாம். மனைவிக்கு தைராய்டு, ஹார்மோன் கோளாறுகள் வந்து செல்லும். வேலை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எவரை நம்பியும் உறுதிமொழி தரவேண்டாம். வங்கிக் காசோலைகளில் கவனம் தேவை.
வருடம் முடியும் வரை சனியும் ராகுவும் 5-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், தெளிவான முடிவுகள் எடுக்கமுடியாமல் திணறுவீர்கள். பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகளிடம், குடும்பச் சூழலை அன்புடன் எடுத்துச் சொல்லி புரியவையுங்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிகள் எடைமிகுந்த பொருட்களைச் சுமக்க வேண்டாம். பூர்வீகச் சொத்துக்கான வரியைச் செலுத்தி, முறையாகப் பராமரிக்கவும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அவருடன் கருத்து மோதல்களும் வந்து செல்லும். தாய்வழி உறவினருடன் விரிசல்கள் எழலாம்.
30.11.13 முதல் வருடம் முடியும் வரை, உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் செவ்வாய் தொடர்கிறார். இந்தக் காலகட்டத்தில் அலைச்சல், வீண் பழி, தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து செல்லும். வீடு-வாகனப் பராமரிப்புச் செலவுகளும் உண்டு.
கேது லாப வீட்டில் நிற்பதால், வியாபாரத்தில் அனுபவ அறிவைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். எனினும், புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். சந்தை நிலவரத்தைக் கவனித்து செயல்படுவது சிறப்பு. கடையை வசதியான வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். சித்திரை, ஆவணி, கார்த்திகை மற்றும் பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஸ்டேஷனரி, உணவு, ஏற்றுமதி- இறக்குமதி மற்றும் கடல்வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். மேலதிகாரியிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள். முக்கிய பொறுப்புகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. சட்டத்துக்குப் புறம்பாக எவருக்கும் உதவ வேண்டாம். எதிர்பார்த்திருந்த சம்பள பாக்கி கைக்கு வரும். ஆவணி, கார்த்திகை மாதங்களில் பதவி- ஊதிய உயர்வு உண்டு. கலைத் துறையினர் கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும்.
மாணவர்கள், சமயோசிதமாகச் செயல்பட்டு வெற்றி காணவேண்டும். அரசியல்வாதிகள், தலைமையிடம் கவனமாகப் பழகவேண்டும். பதவி கிடைக்கும். கன்னிப் பெண்கள், ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். கல்யாணம் கூடிவரும். பெற்றோர் வார்த்தையை புறக்கணிக்க வேண்டாம்.
மொத்தத்தில் இந்த விஜய வருடம் செலவு, அலைச்சலை தந்தாலும் உங்களின் செல்வாக்கை அதிகரிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: துர்கை வழிபாடு துன்பம் அகற்றும். அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று நெய் தீபமேற்றி வழிபட்டு வாருங்கள். சகல வளமும் பெருகும்.


கடகம்

தவி- பணத்துக்கு மயங்காதவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-வது வீட்டில் விஜய வருடம் பிறக்கிறது. அந்தஸ்து உயரும். பிரபலமாவீர்கள். பதவிகள் தேடி வரும். உடல் நிலை சீராகும். செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகியோர் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் விஜய வருடம் பிறப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீடு கட்டும் வேலையை தொடங்குவீர்கள். தம்பதிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை அமையும். பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். முன்பணம் கொடுத்திருந்த சொத்துக்கு, பாக்கி தொகையையும் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். அயல்நாட்டு பயணம் சாதகமாகும். சகோதரர்கள் உதவுவர். வழக்கு சாதகமாகும். மகளுக்கு, எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும்.
27.5.13 வரை உங்களின் பாக்கியாதிபதியான குரு லாப வீட்டில் தொடர்கிறார். தொட்டது துலங்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு குதூகலம் பெறும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். 28.5.13 முதல் வருடம் முடியும் வரை, 12-ஆம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். செலவுகள் துரத்தும். ஃபைனான்ஸ் தொழில் செய்பவர்கள், தகுந்த ஆதாரம் இல்லாமல் எவருக்கும் பணம் தரவேண்டாம். உயர் கல்வி, உத்தியோகம் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய நேரிடும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப உணவு முறைகளை அமைக்கவும்.
விஜய வருடம் முழுக்க சனியும் ராகுவும் 4-ஆம் வீட்டில் நீடிப்பதால், வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். மனை வாங்கும்போது வில்லங்கச் சான்றிதழ், தாய் பத்திரத் தைச் சரிபார்த்து வாங்கவும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. பழைய வாகனங்கள் வாங்கும்போது, உரிய ஆவணங்களைச் சரிபார்க்கவும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். அரசுக்கு வரி செலுத்தவேண்டிய விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். விஜய வருடம் முழுவதும் கேதுவும் 10-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், மறைமுக எதிர்ப்புகள், வேலைச்சுமை வந்து செல்லும். எவருக்காகவும் வாக்குறுதி தரவேண்டாம். 30.11.13 முதல் வருடம் முடியும் வரை, செவ்வாய் உங்கள் ராசிக்கு 3-ல் தொடர்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு- மனை சேரும். பணத் தட்டுப்பாடு வந்து நீங்கும். வியாபாரத்தில், புதியவர்களை நம்பி கடன் தர வேண்டாம்.
சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் பற்று - வரவு உயரும். புது ஒப்பந்தங்களும் பெரிய வாய்ப்புகளும் கிடைக்கும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். வியாபார பிரச்னைகள், நீதிமன்றம் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங் கள். புதிய பங்குதாரரை சேர்க்கும்போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுங்கள். துரித உணவு, கணினி உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு மூலம் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில், பணியின் நிமித்தம் வெளி மாநிலம், வெளிநாடு செல்ல நேரிடும். எனினும், கேது 10-ல் தொடர்வதால் வீண் பயம் நீடிக்கும். அலுவலக ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். விரும்பத்தகாத இடமாற்றங்களும் இருக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பளம் கூடும். மார்கழி, பங்குனி மாதங்களில் புது பொறுப்புகள் வரும்.
கலைத் துறையினர், அரசால் கௌரவிக்கப்படுவர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பர். பெற்றோர் ஒத்துழைப்புடன் விரும்பிய கோர்ஸில் சேர்வார்கள். அரசியல்வாதிகளின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்றுக் கொள்வர். எனினும், உட்கட்சிப் பூசல் வெடிக்கும். சகாக்களிடம் பெருமை பேச வேண்டாம். கன்னிப் பெண்கள், தாயை தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். கெட்ட நண்பர்களிடம் இருந்து விடுபடுவீர்கள்.
மொத்தத்தில், இந்த விஜய வருடம் கடின உழைப்பாலும் தொலைநோக்கு சிந்தனையாலும் முன்னேற்றம் தருவதாக அமையும்.
பரிகாரம்: சஷ்டி திதி அல்லது ஏதேனும் ஒரு செவ்வாய்க் கிழமையன்று பழநி ஸ்ரீமுருகனை தரிசித்து வாருங்கள். தினமும் சஷ்டி கவசம் படியுங்கள். சங்கடங்கள் நீங்கும்; செல்வம் சேரும்.


சிம்மம்

னதில் உதித்ததை மறைக்காமல் பேசுபவர் நீங்கள். உங்களது ராசிக்கு 3-ஆம் வீட்டில் சனியும் ராகுவும் முகாமிட்டிருக்கும் நேரத்தில் விஜய வருடம் பிறக்கிறது. முடங்கிக் கிடந்த நீங்கள் விஸ்வரூபம் எடுப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வந்துசேரும். பிரபலமாவீர்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும்.

புறநகரில் வீடு-மனை வாங்கும் யோகம் உண்டாகும். நல்லவர்- கெட்டவர்களை அடையாளம் காண்பீர்கள். வெளிநாடு- வெளி மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். தள்ளி நின்ற உறவுகள் தேடி வருவர். கடன்கள் அடைபடும் அளவுக்கு பணவரவு உண்டு. இளைய சகோதரர்கள் உதவுவர். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும்.  

உங்களது 10-வது ராசியில் விஜய வருடம் பிறப்பதால், உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 27.5.13 வரை குரு 10-ஆம் வீட்டில் தொடர்வதால், வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். ஆபரணங்களை இரவல் தருவதோ, வாங்குவதோ வேண்டாம். வீண்பழி வந்து சேரும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களை திணிக்க வேண்டாம்.

28.5.13 முதல் வருடம் முடியும் வரை, குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நல்லவர்களின் நட்பால் புதிய பாதையில் பயணிப்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். இருவரும் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள், இனி பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். மகளின் கல்யாணம் சிறப்பாக நடந்தேறும். வீண் பழி, வதந்தியிலிருந்து விடுபடுவீர்கள். வீடு மராமத்து பணிகள் பூர்த்தியாகும். இயக்கம், சங்கம் ஆகியவற்றில் பதவிகள் தேடி வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

ஐப்பசி மாதம் முழுக்க உங்கள் ராசிநாதன் பாவ கிரகங் களுடன் சேர்ந்து பலவீனமடைவதால் விபத்து, ஏமாற்றம், மனஇறுக்கம், உடல் நலக்குறைவு வந்துபோகும். வருடம் முழுக்க கேது ராசிக்கு 9-ஆம் வீட்டிலேயே தொடர்வதால் செலவு அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்தில் சிக்கல்கள் எழலாம். தந்தையுடன் கருத்து மோதல், அவருக்கு கால் வலி வந்து செல்லும்.

வியாபாரத்தில் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர யுக்திகளால் லாபம் பெருகும். சந்தை நுணுக்கங்களை கற்றுக்கொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். கார்த்திகை, தை, மாசி மாதங்களில் கடையை நவீனமாக்குவீர்கள். ஹார்டுவேர், ஹோட்டல், லாட்ஜ், டிரான்ஸ்போர்ட் வகைகளால் ஆதாயம் உண்டு. புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர்.    

உத்தியோகத்தில், உங்கள் கை ஓங்கும். அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பளம், பதவி உயர்வு உண்டு. புது வாய்ப்புகளும் வரும். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். தை, மாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.  

கன்னிப்பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். திருமண முயற்சி கூடி வரும். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பள்ளி மாற வேண்டியது இருக்கும்.  கலைஞர்கள் புது வாய்ப்புகளால் அதிகம் சம்பாதிப்பீர்கள். அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை மேலிடம் கூர்ந்து கவனிக்கும். தொகுதியில் புகழ் கூடும்.

மொத்தத்தில் இந்த விஜய வருடம், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும், திடீர் யோகங்களையும் வாரி வழங்குவதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடுவது விசேஷம். சென்னை- செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்ரீபானக நரசிம்மரை வழிபட, சகலமும் நலமாகும்.



கன்னி

ன்னிக்கும் மனப்பக்குவம் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் விஜய வருடம் பிறக்கிறது. சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். செலவுகள் துரத்தினாலும் வருமானமும் உண்டு. வீடு வாங்கும் கனவு நனவாகும். குறைந்த வட்டிக்குக் கடன் பெற்று, அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள்.

27.5.13 வரை சுக - சப்தமாதிபதியான குரு 9-ஆம் வீட்டில் நிற்பதால், அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு குறையும். தாம்பத்தியம் இனிக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த ஊரில் மரியாதை கூடும்.

28.5.13 முதல் குரு உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டுக்கு வருவதால், அதுமுதல் சிறு சிறு அவமானங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வங்கிக் கணக்கை சரிபார்த்து விட்டு, காசோலை வழங்கவும். மனைவியின் குற்றம் குறைகளைக் குத்திக்காட்ட வேண்டாம். தாயாருக்கு கை- கால் வலி, சிறு சிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். வி.ஐ.பி-களைப் பகைக்க வேண்டாம்.

முக்கிய கிரகங்கள் 8-ஆம் வீட்டில் மறைந்திருக்கும்போது விஜய வருடம் பிறப்பதால் வீண் அலைச்சல், மன உளைச்சல் வந்துபோகும். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்ற நேரிடும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், பேசி சுமுகமாக முடிக்கப்பாருங்கள். 

ந்த ஆண்டு முழுவதும் சனி 2-ல் அமர்ந்து, ஏழரைச்சனியின் ஒரு பகுதியான பாதச் சனியாக இருப்பதால், குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிருங்கள். பிள்ளைகளை அன்பால் திருத்துங்கள். கர்ப்பிணிகள் கவனமாக செயல்பட வேண்டும். கண், காது வலி வந்து செல்லும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகவும். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.

விஜய வருடம் முழுக்க ராகு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம் வீட்டிலும் இருப்பதால், பேச்சில் கடுமை வேண்டாம். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னை வந்து போகும். இரவில் தொலைதூர பயணமாக தனியே வாகனத்தில் செல்ல வேண்டாம்.

வியாபாரத்தில், அதிகம் உழைக்க வேண்டியது இருக்கும். தீர விசாரிக்காமல் முதலீடு செய்ய வேண்டாம். வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பழைய பங்குதாரர் விலகுவார். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கெமிக்கல், எண்டர்பிரைசஸ் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். கார்த்திகை, மார்கழி, மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில், 28.5.13 முதல் குரு 10-ஆம் வீட்டில் அமர்வதால் வேலை அதிகரிக்கும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலக ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. உங்களின் உரிமையையும், சலுகையையும் தக்கவைக்க வழக்குத் தொடுக்க வேண்டி வரும். கார்த்திகை, மாசி மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.  

கன்னிப்பெண்களுக்கு கனவுத் தொல்லை உண்டு. முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, பெற்றோரை கலந்து ஆலோசியுங்கள். புதிய நட்பு மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கடுமையாக உழைத்தால், சாதிக்கலாம். கலைத் துறையினர், விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். அரசியல்வாதிகள், வீண் பேச்சைத் தவிர்க்கவும். ஜெயிக்கும் அணியில் இடம்பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த விஜய வருடம், அலைச்சல் தந்தாலும், அனுபவத்தின் மூலம் வளர்ச்சியைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமி நாட்களில், அருகிலிருக்கும் சிவாலயத்துக்குச் சென்று ஸ்ரீபைரவ மூர்த்திக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டு வாருங்கள். வினைகள் யாவும் தீரும்



துலாம்
னித நேயம் மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், விஜய வருடம் பிறக்கிறது. எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பிரபலங்களின் உதவியுடன் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.

விஜய வருடம் உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் பிறப்பதால், எளிதாக முடிய வேண்டிய விஷயங்களும் போராட்டத் துக்கு பிறகே முடிவடையும். செலவுகள் தொடரும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் முக்கிய கிரகங்கள் அமர்ந்திருக்கும்போது விஜய வருடம் பிறப்பதால், உங்களின் பலம்-பலவீனம் அறிந்து செயல்படுங்கள்.  மனைவியுடன் பனிப்போர் வந்து செல்லும். அரசு காரியங்கள் தாமதமாகும். வீடு- மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் எழும். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

27.5.13 வரை உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் குரு இருப்பதால், வீண் கவலையும், நம்பிக்கையின்மையும், அலைச்சலும் வந்து போகும். மறைமுக எதிரிகள் முளைப்பர். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களது நட்பை இழக்க நேரிடும். 28.5.13 முதல் உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கூடிவரும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு நல்ல வேலையும் அமையும்.


21.5.13 முதல் 6.7.13 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்பு, ஏமாற்றங்கள் வந்து நீங்கும். விஜய வருடம் முழுக்க, உங்களின் பிரபல யோகாதிபதியான சனி ராசியிலேயே உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சிலர், புது மனை புகுவீர்கள். எனினும் ஜென்மச் சனியாக தொடர்வதால், உடல் நலம் பாதிக்கும். உணவில் கவனம் தேவை. வழக்கை நினைத்து கவலை கொள்வீர்கள். சொத்துப் பிரச்னையைப் பேசித் தீர்க்கப் பாருங்கள். விஜய வருடம் முடியும் வரையிலும் உங்கள் ராசிக்கு உள்ளேயே ராகுவும், 7-ஆம் வீட்டில் கேதுவும் இருப்பதால் முன்கோபம், சஞ்சலம், ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்து செல்லும். இரும்பு, நார், சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள காய்- கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தம்பதிக்குள் ஈகோ பிரச்னைகள், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

வியாபாரத்தில் ஆடி, ஆவணி மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். மார்கழி, தை மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். பங்குனி மாதத்தில் அயல்நாட்டு தொடர்புடைய புது பங்குதாரர் வர வாய்ப்பு உண்டு. கொடுக்கல் - வாங்கலில் நிம்மதி ஏற்படும். உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் 7.7.13 முதல் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். பங்குனி மாதத்தில் பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்ட கல்யாணம் இனி கூடிவரும். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள். கலைத் துறையினருக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு தேடி வரும். அரசியல்வாதிகள், கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த விஜய வருடம், ஆனி மாதம் வரை கொஞ்சம் கஷ்டங்களைத் தந்தாலும், அதன் பிறகு உங்களின் அந்தஸ்தை உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்: சிவவழிபாடு சிந்தை மகிழ்விக்கும். பிரதோஷ காலங்களில், வில்வம் சார்த்தி விரிசடைக் கடவுளை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் முன்னேற வழி பிறக்கும்.



விருச்சிகம்

காரியத்தில் கண்ணானவர் நீங்கள். இந்த விஜய வருடம் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் பிறப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். மதிப்பு உயரும். எதிர்பாராத பண வரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். தள்ளிப் போன திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

உங்கள் ராசிநாதன் செவ்வாயும், உங்களின் ஜீவனாதிபதி சூரியனும் வலுவாக 6-ல் நிற்கும்போது, விஜய வருடம் பிறப்பதால், அமைதியாக சாதிப்பீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகும். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வருடம் பிறக்கும்போது சுக்கிரனும் உங்கள் ராசிக்கு 6-ல் மறைந்து கிடப்பதால் வாகன விபத்துகள், பணப் பற்றாக்குறை, இருமல், கழுத்து வலி, மாதவிடாய்க் கோளாறு வந்துபோகும். மனைவிவழி உறவினருடன் மனக்கசப்பு வரும். ஆனால், உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் விஜய வருடம் பிறப்பதால் குடும்ப ஒற்றுமை பாதிக்காது 27.5.13 வரை உங்களின் தன-பூர்வ புண்ணியாதிபதியான குரு 7-வது வீட்டிலேயே தொடர்வதால், அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் - மனைவிக்கு இடையே ஒற்றுமை பலப்படும். அவ்வப்போது, இருவருக்கும் இடையே எழும் சிறு சிறு பிரச்னைகளை பெரிதுபடுத்த வேண்டாம். சிலருக்கு மழலை பாக்கியம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தை உங்களுடைய ரசனைக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள்.

28.5.13 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 8-ல் சென்று குரு மறைவதால் வீண் அலைச்சல், கவலைகள் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கனிவாக நடத்துகொள்ளுங்கள். கர்ப்பிணிகள் நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்கவும்.

விஜய வருடம் முழுக்க சனி 12-ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதாலும், ராகு 12-ல் நிற்பதாலும் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்துபோகும். தூக்கம் குறையும். தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். இளைய சகோதரர்கள் உங்களை தவறாகப் புரிந்துகொள்வர். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.

விஜய வருடம் முழுக்க கேது 6-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், வி.ஐ.பி-களுக்கு நெருக்கமாவீர்கள். ஏமாற்றுக் காரர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.  

வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். சித்திரை, வைகாசியில் சிலர் புதிய துறையில் கால் பதிப்பார்கள். மார்கழி, தை மாதங்களில் புது கிளை தொடங்கும் வாய்ப்பு உண்டு. பங்குதாரர்களிடம் கனிவு தேவை. புரோக்கரேஜ், சினிமா, சிமெண்ட், பெட்ரோ- கெமிக்கல், மருந்து மற்றும் மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், உங்கள் மீது விமர்சனங்களும் அவதூறுகளும் எழும். புதிய அதிகாரிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். எனினும் சித்திரை, வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் அதிரடி முன்னேற்றம் உண்டு. பெரிய பொறுப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும்.

கன்னிப் பெண்களே, பெற்றோரின் கனவை நனவாக்க முயற்சியுங்கள். மாணவர்கள் கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும்

கலைத் துறையினர், விமர்சனங்கள் எழுந்தாலும் திறமையால் சாதிப்பர். அரசியல்வாதிகளே, உங்களின் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தலாம்; கவனம் தேவை. போராட்டங்களுக்கான தலைமை பொறுப்பு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த விஜய வருடம் தொலைநோக்கு சிந்தனையால் உங்களை வெற்றிபெற வைக்கும்.

பரிகாரம்: சரபேஸ்வரர் வழிபாடு சங்கடங்களை அகற்றும்.  தினமும் சிவபுராணம் படியுங்கள். மனக்குழப்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவீர்கள்.




தனுசு 
குதி அறிந்து பழகுபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ராகுவும் சனியும் பலம்பெற்று அமர்ந்திருக்கும்போது, விஜய வருடம் பிறக்கிறது. செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். பெரிய பதவிகள் தேடி வரும். வீட்டுப் பணி முழுமை பெறும். சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். அரசு விஷயங்களும் நல்லவிதத்தில் முடிவடையும். கடன் தீரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.

புகழ், கௌரவம் வளரும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் சூரியனும் செவ்வாயும் நிற்கும்போது விஜய வருடம் பிறப்பதால், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துபோகும். அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகவும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.  

7.5.13 வரை குரு 6-ஆம் வீட்டிலேயே மறைந்திருப்பதால், குடும்பத்தாரை அனுசரித்துப் போகவும். எவரையும் எவரிடமும் பரிந்துரைக்க வேண்டாம். வெளியூர் செல்லும்போது கேஸ் சிலிண்டர், மின்சார சாதனங்களை ஒருமுறை சரிபார்த்த பிறகு வெளியே புறப்படுங்கள். தங்க நகைகளை இரவல் தருவதோ வாங்குவதோ வேண்டாம். ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும்.

28.5.13 முதல் வருடம் முடியும் வரை, உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குரு 7-ஆம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். திருமணம் கூடிவரும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். புறநகரில் மனை வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். அவர் வழி சொத்துக்களைப் பெறுவதில் தடைகள் நீங்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

19.8.13 முதல் 10.10.13 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் பலவீனம் அடைவதால், இந்த காலகட்டத்தில் பிள்ளைகளால் அலைச்சல், பண விஷயத்தில் ஏமாற்றங்கள் வந்து நீங்கும். விஜய வருடம் முழுக்க கேது உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டிலேயே நீடிப்பதால், மன இறுக்கம் வந்து நீங்கும். மகள் திருமணத்துக்காக கடன் வாங்க வேண்டி வரும். மகனின் படிப்பு, உத்தியோகத்துக் காக சிலரது சிபாரிசை நாடுவீர்கள். கர்ப்பிணிகள் அதிக எடையுள்ள பொருட்களை தூக்க வேண்டாம்; படிகளில் ஏறும்போது கவனம் தேவை. பூர்வீகச் சொத்து பாகப் பிரிவினையில் மனக் கசப்பு வந்து நீங்கும்.

வியாபாரம் தழைக்கும். வைகாசி, ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பெரிய நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தால், உங்கள் நிறுவனம் புகழ் பெறும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வீர்கள். ஹார்டுவேர், ஹோட்டல், ஸ்பெகுலேஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

கன்னிப் பெண்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். மாணவர்களின் பொது அறிவுத் திறன் வளரும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வியைத் தொடர்வீர்கள்.

அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை மேலிடம் ஏற்கும். மாநில அளவில் பெரிய பதவியும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வருமானம் உயர வழி பிறக்கும். மூத்த கலைஞர்கள் சிலரிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.

மொத்தத்தில் இந்த விஜய வருடம் உங்கள் நீண்டகால கனவுகளை நனவாக்குவதுடன், உங்களை சாதிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்: ஞாயிறுதோறும் சூரிய ஸ்தோத்திரங்களைச் சொல்லி தியானியுங்கள். சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள், நினைத்தது யாவும் தடையின்றி நடந்தேறும்.




மகரம்

னசாட்சிக்கு மதிப்பு தருபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது, விஜய வருடம் பிறக்கிறது. வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமாகப் பேசி பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கடன் பிரச்னையில் ஒரு பகுதி தீரும். வருமானம் உயரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து, அதற்கேற்ப செயல்படத் துவங்குவீர்கள்.

27.5.13 வரை உங்களின் சேவகாதிபதியும்- விரயாதிபதி யுமான குரு 5-ஆம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களை சாதிப்பீர்கள். மகனின் அலட்சியப் போக்கு நீங்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

 வாகன வசதி பெருகும். 28.5.13 முதல் விஜய  வருடம் முடியும் வரை குரு 6-ல் மறைகிறார். அதுமுதல் செலவுகள், அலைச்சல், எதிர்ப்புகள் வந்து நீங்கும். தம்பதிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம். ஃபைனான்ஸ் தொழில் செய்பவர்கள், தகுந்த ஆதாரம் இல்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அரசு வரிகளை தாமதமின்றி செலுத்துங்கள். சிலர், உங்கள் மீது வழக்கு தொடுப்பார்கள். விலையுயர்ந்த பொருட்கள், பணத்தை இழக்க நேரிடும்.      

விஜய வருடம் முழுக்க உங்கள் ராசிநாதன் சனி 10-ஆம் வீட்டில் உச்சம் பெற்று தொடர்வதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். எனினும் வேலைச்சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வந்து போகும். மேலதிகாரி உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுவார். மறைமுக அவமானம் ஏற்படக்கூடும்.

விஜய வருடம் முழுக்க ராகு 10-ஆம் வீட்டிலும், கேது ராசிக்கு 5-ஆம் வீட்டிலும் இருப்பதால் மனதில் இனம் புரியாத பயம், தடுமாற்றம் வந்து செல்லும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய நேரிடலாம். பூர்வீகச் சொத்தை பெறுவதில் பிரச்னைகள் எழலாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போடாதீர்கள்.

புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். 30.11.13 முதல் விஜய வருடம் முடியும் வரை, உங்கள் ராசிக்கு 9-ல் செவ்வாய் தொடர்வதால், இந்த காலகட்டத்தில் சேமிப்புகள் கரையும். வீடு- மனை வாங்குவது, விற்பதில் தாமதம் ஏற்படும். தந்தையின் உடல் நிலை பாதிக்கும். சகோதரர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

வியாபாரத்தில், நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.  வைகாசி மாதத்தின் முற்பகுதி வரை பற்று-வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். ஆனி மாதம் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும். புது முதலீடுகள் குறித்து நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசிப்பீர்கள். ஏற்றமதி - இறக்குமதி, மருந்து, பிளாஸ்டிக், ஊதுவத்தி, உணவு, லாட்ஜிங் வகைகளால் ஆதாயம் பெருகும்.

உத்தியோகத்தில், நீங்கள் பொறுப்பாக நடந்தாலும், மேலதிகாரி குறை கூறிக்கொண்டிருப்பார். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டியது வரும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் படித்துப் பாருங்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் வரும்.

கன்னிப்பெண்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவர். வெளி மாநிலத்தில் வேலை அமையும். மாணவர்களுக்கு, விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். கலைத் துறையினர் பிரபலம் ஆவார்கள். அரசியல்வாதிகள், தலைமையுடன் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். கௌரவப் பதவி உண்டு.

மொத்தத்தில் இந்த விஜய வருடம் பிரச்னைகளை தந்தாலும், பெரிய மனிதர்களின் நட்பால் உங்களை சாதிக்கவைக்கும்.

பரிகாரம்: அனுதினமும் அனந்தனை வழிபடுங்கள்; ஆனந்தம் பெருகும். ஸ்ரீரங்கத்துக்குச் சென்று திருவரங்கனை வழிபட்டு வாருங்கள். இல்லத்தில் சுபிட்சம் பெருகும்.





கும்பம்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து வாழ்பவர் நீங்கள். முக்கிய கிரகங்கள் 3-ஆம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் விஜய வருடம் பிறக்கிறது. உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். நினைத்த காரியங்கள் பலிதமாகும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும்

உங்களின் ரசனைக்கு ஏற்ப வீடு-வாகனம் அமையும். அரசு காரியங்கள் அனைத்தும் நல்லவிதமாக முடியும். வழக்குகள் சாதகமாகும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வேலைக்கான முயற்சியில் இருந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும்.

27.5.13 வரை குரு ராசிக்கு 4-ஆம் வீட்டில் தொடர்வதால் வேலை அதிகரிக்கும். தாயாருக்கு மூட்டுவலி, ரத்த அழுத்தம் வந்துபோகும். தாய்வழி சொத்துப் பிரச்னைகளைப் பேசி தீர்க்கப் பாருங்கள். வாகனத்தில் பயணிக்கும்போது அதீத கவனம் தேவை.  

28.5.13 முதல் வருடம் முடியும் வரை, 5-ஆம் வீட்டுக்கு குரு செல்வதால், உங்களது எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும். அடுத்தடுத்து தொடரும் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணம், மகனின் உத்தியோகம் நல்லவிதமாக அமையும். ஆடை- ஆபரணம் சேரும்.

விஜய வருடம் முழுவதும் உங்கள் ராசிநாதன் சனி உச்சம் பெற்று, 9-ஆம் வீட்டிலேயே இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். குறைந்த வட்டிக்குக் கடன் பெற்று, அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள்.

விஜய வருடம் முழுக்க ராகுவும் 9-ல் நீடிப்பதால், சேமிக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். அவ்வப்போது, கடந்த கால இழப்புகளை நினைத்து மனம் வருந்துவீர்கள். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். வழக்குகளில், வழக்கறிஞரை கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும்.


விஜய வருடம் முழுவதும், கேது 3-ல் தொடர்வதால், உங்களின் மனோபலம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். மகான்களின் ஆசி கிட்டும். பழைய நண்பர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, வலிய வந்து உறவாடுவார்கள்.

30.11.13 முதல் வருடம் முடியும் வரை செவ்வாய் 8-ல் தொடர்வதால், இந்த காலகட்டத்தில் நெருப்பு, மின் சாதனங்களைக் கையாளும்போது மிக கவனமுடன் செயல்படுங்கள். சகோதர வகையில் சில சங்கடங்கள் வந்து சேரலாம். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்க்கவும்.


வியாபாரத்தில், புதிய முதலீடுகள் செய்து போட்டி யாளர்களைத் திணறவைப்பீர்கள். சித்திரை, வைகாசி, ஆடி ஆகிய மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்; லாபம் கூடும். ஆவணி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் புதிய பங்குதாரர்கள் அமைய வாய்ப்பு உண்டு. வி.ஐ.பி-களும் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் ஆவார்கள். வாகன உதிரி பாகங்கள், ஷேர் மற்றும் ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.


உத்தியோகத்தில், இதுவரை நீங்கள் சந்தித்த அவமானங்கள் யாவும் நீங்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் சில முக்கியமான பொறுப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சம்பளம் உயரும்.

கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பார்கள். அரசியல்வாதிகள், வீண் சச்சரவுகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். கோஷ்டிப் பூசலிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம். பெரிய பதவி கிடைக்கும். கன்னிப் பெண்கள், விடுபட்ட பாடத்தில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறுவார்கள். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் தனித் திறமைகளை வளர்த்துக்கொள்வர்.

மொத்தத்தில் இந்த விஜய வருடம், சிறு சிறு பிரச்னைகளைத் தந்தாலும், நீங்கள் தொட்டதை எல்லாம் துலங்க வைப்பதாக அமையும்.


 பரிகாரம்: தினமும் பாசுரங்கள் படித்து, பெருமாளை பூஜிப்பது சிறப்பு. திருச்சிக்கு அருகில் குணசீலத்தில் அருளும் பெருமாளுக்கு துளசி சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். நினைத்தது நடக்கும்.




மீனம் 

யோசித்து செயல்படுபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் விஜய வருடம் பிறக்கிறது. எதிலும் போராடி வெற்றி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பி-கள் உதவுவர். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். வீட்டு ப்ளான் அப்ரூவல் ஆகும். சுபநிகழ்ச்சிகளால் குடும்பம் களைகட்டும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்



27.5.13 வரை உங்கள் ராசிநாதன் குரு 3-ல் மறைந்திருப்பதால் சில காரியங்கள் இழுபறியாகும். 28.5.13 முதல் விஜய வருடம் முடியும் வரை, குரு உங்கள் ராசிக்கு 4-ல் அமர்வதால் வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரை தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். அவருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்து போகும். பழைய பிரச்னைகள் எழுமோ என்று அஞ்சுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். சொத்து வாங்கும்போது வில்லங்கம் சரிபார்க்கவும்.



விஜய வருடம் முழுக்க உங்கள் ராசிக்கு 2-ல் கேது தொடர்கிறார். ராகு 8-ல் நீடிக்கிறார். எதிலும் நாட்டமின்மை, பிடிப்பற்ற போக்கு வந்துசெல்லும். கறார் பேச்சால் பிறரது மனதைப் புண்படுத்துவீர்கள். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். கண் பரிசோதனை அவசியம். பல்- காது வலியும் வந்துபோகும். பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். குடும்பத்தாரை அனுசரித்து செல்லவும். வாகன லைசன்ஸ், இன்சூரன்ஸை குறிப்பிட்ட காலத்துக்குள் புதுப்பித்துக்கொள்ளுங்கள். தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது நினைவுக்கு வரும்.  



விஜய வருடம் முழுக்க அஷ்டமத்துச் சனி தொடர்வதால், ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்துபோகும். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்துப் போகவும்.  மனைவி வழி உறவினருடன் கருத்துவேறுபாடுகள் வரக்கூடும். வழக்கில் இழுபறி நீடிக்கும். நீங்கள் நம்பிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பு உண்டு. அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உணவில் கவனம் தேவை. உப்பு, வாயு பதார்த்தங்களைத் தவிர்க்கவும். சொத்து வாங்கும்போது அவசரம் வேண்டாம். பணம், நகை களவு போக வாய்ப்ப்பு உண்டு. கூடாப் பழக்கவழக்கங்களைத் தவிர்க்கவும்.



வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் லாபம் கூடும். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. பங்குதாரர்களுடன் சச்சரவு வரக்கூடும். புது ஏஜென்ஸியை யோசித்து எடுங்கள். அவ்வப்போது சந்தை நிலவரங்களை தெரிந்துகொள்ளுங்கள். கடன் வாங்கி, கடையை நவீனமாக்குவீர்கள். ஆவணி, மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தம் வரும். பற்று- வரவு உயரும்.  



உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். எந்த வேலையை முதலில் பார்ப்பது என்ற டென்ஷன் எழும். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். அலுவலக ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எவர் நிர்பந்தித்தாலும் நேர்வழியில் இருந்து தடம்புரள வேண்டாம். வைகாசி, ஆவணி, மார்கழி, தை மாதங்களில் சம்பளம் கூடும். புது பொறுப்புகள் வரும். புது வேலையும் அமையும்.  


கன்னிப்பெண்கள் ஆசை வார்த்தைகளை நம்பவேண்டாம். தடைப்பட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். திருமணம் சற்று தாமதமாகி முடியும். மாணவர்கள் படிப்பில் அதீத கவனம் செலுத்த வேண்டும். பள்ளி மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். அரசியல்வாதிகள் வீண் செலவுகள், விமர்சனத்தைத் தவிர்க்கவும். கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.  



மொத்தத்தில் இந்த விஜய வருடம், தைரியத்தைத் தந்து, பல வகையிலும் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.


 பரிகாரம்: அனுதினமும் அபிராமி அந்தாதி பாடி, அம்பாளை துதியுங்கள். அருகில் இருக்கும் ஆலயங்களில், அம்பாளுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள். நல்லதே நடக்கும்.

நன்றி : திரு.கே.பி.வித்யாதரன் ஆனந்த விகடனில் எழுதிய விஜய வருட ராசிப்பலன்கள்

2 கருத்துரைகள்:

Venkat Narayanan AR said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Great! Thanks for publishing this Sir. I Pray that everyone has an exciting and a wonderful year ahead.

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி...

அனைவரின் வாழ்வும் சிறப்பாக இருக்கட்டும்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms