Friday, July 12, 2013

ஆஷாட நவராத்திரி


ஆஷாட நவராத்திரி (07.07.2013 - 17.07.2013)


அன்னை பராசக்தியை வழிபடும் முறை சாக்த வழிபாடு. சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான்.

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியனதான்.

12 மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள்.அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்.

ஆனி மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் `ஆஷாட நவராத்திரி'
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் `சாரதா நவராத்திரி'
தை மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் `மகா நவராத்திரி' .
பங்குனி மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் `வசந்த நவராத்திரி' எனவும் அழைக்கப்படுகின்றன. 

வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான்.

ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.

ஆனி-ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம்.
பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம்.
விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம்.

இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது.

பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது.

தமிழகத்தில், தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது.


பல ஊர்களில் சிவன் கோவிலில் தென்முக கடவுளுக்கு எதிரில் வரிசையாக வீற்றிருப்பர்கள்.

நெல்லையப்பர் கோவில் வராஹி அதி அற்புதமாய் இருப்பாள்.

பள்ளூரில் (காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் ரயில் நிலையத் திற்கு அருகிலுள்ளது பள்ளூர் ) தனியாக கோவில் அமைய பெற்றவள். இங்கும் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது

தஞ்சாவூர் பெரிய கோயிலில்தனியாக சந்நிதி அமைய பெற்ற வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது.

வராஹி தேவி, தேவீ புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம்.

வார்த்தாளி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரியா சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.

வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.


ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.




முதலாம் நாள் இந்திரா தேவி (இந்திரானி)
இரண்டாம் நாள் ப்ரம்ம தேவி (ப்ராஹ்மி)
மூன்றாம் நாள் விஷ்ணு தேவி (வைஷ்ணவி)
நான்காம் நாள் சிவ தேவி (மகேஸ்வரி)
ஐந்தாம் நாள் குமார தேவி (கௌமாரி)
ஆறாம் நாள் ருத்ர தேவி (காளி சாமுண்டா)
ஏழாம் நாள் சாகம்பரி தேவி
எட்டாம் நாள் வராஹி தேவி
ஒன்பதாம் நாள் லலிதா பரமேஸ்வரி

ஆஷாட நவராத்திரியில் அன்னை பராசக்தியை வழிபாடு செய்து, ஆனந்தமான நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம்.

பின் குறிப்பு : நண்பர் திரு ஜீவானந்தம் அவர்களின் ஆவலுக்காகவும் அவர்  தந்த தகவலின் அடிப்படையிலும் எழுதப்பட்டது. நன்றி .

ஆட்டோ கேடில்(AutoCad)  நான் வரைந்த ஸ்ரீ வராஹி ஓவியம் 

1 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சிறப்பு பகிர்வு... வாழ்த்துக்கள் ஐயா...
நண்பர் திரு ஜீவானந்தம் அவர்களுக்கும் நன்றி...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms