Monday, July 22, 2013

குரு பூர்ணிமா


குரு பூர்ணிமா 22.07.2013
பரதகண்டம் என பெயர்பெற்ற இந்த புண்ணிய பூமியில் பல சான்றோர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களின் தலை சிறந்தவராக வியாசர் கருதப்படுகிறார். வியாசர் துவாபராயுகம் முடியும் சமயத்திலும், கலியுகம் ஆரம்பமாவதற்கு முன்பும் அவதாரம் செய்தவர் என்று புராணங்கள் வழியாக அறியமுடிகிறது. அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் அறநெறியையும், ஆன்மிக தத்துவத்தையும் உலகிற்கு வழங்கிய வண்ணம் இருந்தார். எல்லாவற்றிற்கும் ஆதாரமான வேதத்தில் சொல்லியுள்ளபடி கலியுகத்தில் பக்திமார்க்கம் குறைந்து நசித்து போகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரே வடிவாக இருந்த வேதத்தையும், அதன் சிதறிக்கிடந்த பாகங்களையும் தொகுத்து ரிக் வேதம், யஜுர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என நான்காக பிரித்தார்.

பரமாத்மாவான இறைவனை ஜீவாத்மாவான மனிதன் எப்படி கண்டறியவேண்டும் என்பதை விளக்குவது தான் வேதம். இறைவனை மந்திரங்களாக துதித்து வழிபடும்படி வழிகாட்டுவது ரிக்வேதம். மனிதன் தன் ஆயுளில் செய்ய வேண்டிய சடங்குகள், அதற்கு தேவையான உபகரணங்கள், ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய யாகங்கள் ஆகியவை பற்றி தெரிவிப்பது யஜுர் வேதமாகும். பாடல்களால் இறைவனை துதிப்பது சாம வேதம் ஆகும். இதனால்தான் இசையில் சாமகாணம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. மந்திர தந்திரம், மருத்துவம், சக்தி, வழிபாடு ஆகியவை பற்றி விளக்குவது அதர்வண வேதம். இவற்றை தொகுத்து மக்களுக்கு அளித்ததன் மூலம் அவர் வேதவியாசர் எனப்பட்டார். வியாசர் என்ற சொல்லுக்கு தொகுத்தவர் அல்லது ஆராச்சியாளர் என பொருள்.

இந்த வேதங்களில் ரிக் வேதத்தை சுமந்து என்ற மகரிஷியிடமும், யஜுர் வேதத்தை வைசம்பாயணரிடமும், சாம வேதத்தை ஜைமினி முனிவரிடமும், அதர்வண வேதத்தை பைலரிடமும் ஒப்படைத்து அவற்றைக் கற்று மற்றவர்களுக்கு கற்பிக்கும்படி செய்தார். வேதங்களின் கருத்துக்களை உள்ளடக்கி 18 புராணங்களாகவும், மகாபாரதமாகவும் உருவாக்கினார். அதை சூதம் என்ற முனிவருக்கு உபதேசித்தார். சூதர் அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்படி அனுக்ரஹம் செய்தார். மகாபாரதத்தில் ஒரு பாத்திரமாகவும் வியாசர் தன்னை மாற்றிக்கொண்டார்.வியாசர் சத்தியவதி தாயின் மகன். இவள் ஒரு ராஜகுமாரி. விதிவசத்தால் ஒரு மீனவக் குடும்பத்தின் வளர்ப்பு மகள் ஆனாள். அந்த மீனவர் தலைவன், சத்தியவதிக்கு பரிசல் ஓட்ட கற்றுத் தந்தான். ஒருமுறை பராசர முனிவர் என்பவர் அந்தப் பரிசலில் பயணம் செய்தார். அந்த நேரம் இந்த உலகில் ஒரு மகாபுருஷன் தோன்ற வேண்டிய நல்ல நேரம். அந்த மகாபுருஷனை கலியுகம் முடிந்து, இந்த உலகம் அழியும் வரை மக்கள் மறக்க மாட்டார்கள். அவன் எழுதப் போகும் காவியம், படித்தவன், படிக்காதவன் என எல்லார் மனதிலும் நிலைத்து நிற்கும் என்பதை பராசரர் உணர்ந்திருந்தார். பராசரர் அந்தப் பெண்ணிடம், நாம் இப்போது ஒன்று சேர்ந்தால் உலகம் போற்றும் உத்தமன் ஒருவன் பிறப்பான். இதனால் உன் கன்னித்தன்மை பாதிக்காது. அவன் பிறந்த உடனேயே நீ மீண்டும் உன் கன்னித் தன்மையை அடைவாய், என்றார்.  சத்தியவதி சம்மதித்தாள். பராசரர் ஆற்றின் நடுவிலுள்ள ஒரு தீவை அடைந்தார். அந்தப் பகுதியை இருள் சூழ வைத்தார். அவர்களுக்குப் பிறந்தார் வியாசர். அவர் மிக மிக கருப்பாக இருந்தார். தன் தாயிடம் தான் துறவறம் பூண்டு செல்வதாகக் கூறினார். மகனைப் பிரியும் போது தாய் சத்தியவதி, எதாவது ஒரு இக்கட்டான நிலை வந்தால் நான் உன்னை நினைப்பேன். அப்போது நீ வந்து எனக்கு உதவ வேண்டும், என்றாள்.

வியாசரும் ஒப்புக் கொண்டார். இதனிடையே குருவம்சத்து அரசன் சந்தனுவுக்கு பீஷ்மர் பிறந்தார்.ஒரு சந்தர்ப்பத்தில், பராசரருடன் கூடி வியாசரைப் பெற்ற சத்தியவதியை சந்தனு சந்தித்தான். அவள் மீது ஆசைப்பட்டான். பீஷ்மர் கடும் முயற்சியெடுத்து அவளையே தன் தந்தைக்கு திருமணம் செய்து வைத்தார். அவளுக்குப் பிறக்கும் குழந்தையே நாடாளும் என சத்தியம் செய்தார். அத்துடன் தானும் இனி திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என சபதம் எடுத் தார். தந்தைக்காக தன் வாழ்க்கையையே துறந்து துறவி போல் வாழ முடிவெடுத்தார்.சந்தனுவுக்கும், சத்தியவதிக்கும் சித்திராங்கதன், விசித்திரவீரியன் என்னும் மக்கள் பிறந்தனர். இவர்களில் சித்திராங்கதன் ஒரு போரில் கொல்லப்பட்டான். விசித்திரவீரியன், காசி மன்னனின் மகள்கள் அம்பிகா, அம்பாலிகா ஆகியோரை மணந்தான். அவனும் திருமணமான சில ஆண்டுகளிலேயே குழந்தை எதுவும் பிறப்பதற்குள் இறந்தான். இப்போது அந்தக் குடும்பத்தில் எஞ்சியது பீஷ்மர் மட்டுமே. வேறு வழி இல்லாததால் பீஷ்மரை பட்டம் சூட்டிக் கொள்ளக் கூறினாள் சத்தியவதி. ஆனால் தான் செய்த சத்தியத்தை மீற மாட்டேன் எனக் கூறிவிட்டார் பீஷ்மர். நாடாள வாரிசு இல்லாத நிலையில், தன் மகன் வியாசரை நினைத்தாள் சத்தியவதி. தாயின் உணர்வுகளை புரிந்து கொண்டு அங்கு தோன்றினார் வியாசர். அவரிடம், சான்றோனாகிய நீ, நாட்டின் நலன் கருதி, உன் தமையனின் மனைவியருடன் கூடுவதில் தவறில்லை. அவர்களோடு கூடி குழந்தைகளைப் பெறுவாயாக, என்றாள்.

அம்பிகாவும், அம்பாலிகாவும் இதற்கு சம்மதித்தாலும், கரிய நிறமுடைய, தாடியும், ஜடாமுடியும் கொண்ட வியாசரை விரும்பவில்லை. இருப்பினும் மாமியாரின் விருப்பத்தை நிறைவேற்ற கண்ணை மூடிக் கொண்டு, வியாசருடன் ஒன்று சேர்ந்தாள் அம்பிகா. இதனால் அவளுக்கு ஒரு குருட்டு மகன் பிறந்தான். அவனுக்கு திருதராஷ்டிரன் என பெயர் சூட்டினர். இன்னொரு பெண்ணான அம்பாலிகா வியாசரின் உருவத்தை கண்ட மாத்திரத்தில் முகம் வெளுத்தது. அவள் வெளுத்த முகம் கொண்ட ஒரு மகனைப் பெற்றாள். அவன் பாண்டு எனப்பட்டான். அம்பிகாவுக்கு குருட்டு மகன் பிறந்ததால், இன்னும் ஒரு மகனைப் பெற அம்பாலிகாவைக் கேட்டுக் கொண்டாள் சத்தியவதி. ஆனால், அம்பிகா வியாசருடன் சேர விரும்பாமல், தனக்கு பதிலாக தன் தாதி ஒருத்தியை அனுப்பி விட்டாள். அவள் வியசாருடன் மனம் உவந்து, அவரது தவவலிமையை மட்டும் நினைத்து கூடினாள். அவளுக்கு விதுரன் என்ற மகன் பிறந்தான். இப்படி பாரதக் கதையை துவக்கி வைத்தவரே வியாசர் தான். இவ்வகையில் அவர் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் தாத்தா ஆகிறார். 

இதைத்தவிர வேதங்களில் உள்ளடங்கி உள்ள தத்துவங்களை சுருக்கமாக மனிதன் புரிந்து கொள்ளும் வகையில் பிரம்மசூத்திரம் எனப்படும் வேதாந்த சூத்திரங்களாக உருவாக்கினார். இது வியாச சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியோர் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியுள்ளார்கள்.

தனது நுண்ணறிவால் மனித குலத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கினார். இந்து மதத்தின் ஆதிகுருவாக வேதவியாசர் போற்றப்படுகிறார். இவர் ஆஞ்சநேயரைப் போல சிரஞ்சீவி பட்டம் பெற்றவர். சிரஞ்சீவி என்றால் என்றும் வாழ்பவர் என பொருள். கலியுகம் தோன்றி எவ்வளவோ ஆண்டுகளாகி விட்ட போதிலும் வியாசரின் மகாபாரதம் இன்றும் மக்களுக்கு வேதம் போல் விளங்குகிறது. அதில் கூறப்பட்டுள்ள ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டுமென உபன்யாசகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக விளங்குகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதம் எனபடும் ஆனி பவுர்ணமியின் குருவை வணங்கவேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. வடமாநிலங்களில் ஆனி பவுர்ணமியை குரு பூர்ணிமா என சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஞானத்தை உணர்ந்துவதால் குரு பரம்பொருளாக சொல்லப்படுகிறார்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தந்தைக்கு அடுத்தபடியாக குருவே வருகிறார். அன்னை மீது கொள்ளும் பக்தியால் இப்பிறவியில் இன்பம் பெறலாம். தந்தை மீது கொள்ளும் பக்தியால் மறுபிறவியில் இன்பம் பெறலாம். குரு பக்தியால் பிறப்பற்ற நிலையை எய்தலாம். ராமர், கிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களாக இறைவன் அவதரித்த போது அவர் கூட ஒரு குருவிடம் தீட்சை  பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.

8 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சிறப்பான விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

very nice explanation about Veda Vyasa

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Now i got information about Vyasar

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பல்சுவையான எல்லா விதமான குறிப்புகளும் தருகீறிர் .நன்றி

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

I like ur writing. selected matter only u are giving. very useful for me. Keep it up and Thanks sankar

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சும்மாவே நீங்க நெறைய மேட்டர் தருவீங்க ,குருவைப் பத்தி இன்னும் நல்லாவே எழுதி இருக்கீங்க .நன்றி

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

thankyou

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இ மெயில் மூலமாகவும் ,ப்ளாக் மூலமாகவும் என் போஸ்டிங்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms