அவி, ஆகுதி, சமித்துகள் இவைகளுக்கு என்ன பொருள்?
ஹோமம் நடத்தும் சாஸ்திரிகள் அடிக்கடி அவி, ஆகுதி, சமித்துகள் என்பன போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் இவைகளுக்கு என்ன பொருள்?
மிகவும் சாதாரணமான பொருள்களுக்கும், புனிதமான பொருள்களுக்கும் வெளித்தோற்றத்தில் வேறுபாடு இல்லை என்றாலும் மறைமுகமான வேறுபாடுகள் உண்டு. கண்ணுக்கு தெரியாத பல சக்திகள் அவற்றில் நிறைந்திருக்கும். இதை பொருட்களுக்கு மட்டுமல்ல, வேறு பலவற்றிற்கும் பொருத்தி சொல்லலாம். உதாரணமாக நானும் நீங்களும் பிறந்தால் அது சாதாரண பிறப்பு. அதுவே ஒரு பெரிய மகானோ, இறைவனோ தாயின் வயிற்றில் இருந்து பிறப்பெடுத்தால் அதன் பெயர் அவதாரம். நாம் ஒரு சாதாரண மனிதனை சென்று பார்த்தால் அதுவெறும் பார்வை தான் இறைவனையோ துறவியையோ சென்று பார்த்தால் அதை பார்த்தல் என்று கூறக்கூடாது. தரிசனம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மகான் காலமாகி விட்டால் அதன் பெயர் முக்தி. நீங்களும், நானும் காலமானால் அதை இறப்பு, சாவு என்று சர்வசாதாரணமாக சொல்லலாம்.
இதே போன்றது தான் அவி, ஆகுதி, சமித்து என்ற வார்த்தைகள். சமித்து என்றால் காய்ந்த குச்சிகள் என்பது தான் பொருள். அதை குச்சி என்று சொல்லாமல் சமித்து என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. காய்ந்து போன மரக்கட்டைகளை சமைக்க பயன்படுத்தினால் அதை விறகு என்போம். அதே கட்டைகளை, குச்சிகளை யாகத்திற்கோ, ஹோமத்திற்கோ பயன்படுத்தினால் அதன் பெயர் சமித்து. அவி என்பதும் தானியங்களால் செய்யபடுகிற ஒரு வித உணவு. ஆகுதி எனப்படுவதும் உணவுகளை பொருட்களை மற்றவர்களுக்கு கொடுப்பது என்பதாகும். இங்கே இவை அனைத்தும் இறைவழிபாடான யாகங்களுக்கு பயன்படுவதனால், புனித பெயர்களை அடைகிறது. ஒரு பொருளை புனிதமானது என்று நம்பிக்கையோடு தொட்டாலே அதில் இல்லாத புனிதம் இறைவன் அனுகிரஹத்தால் வந்து விடுகிறது.
விளக்கம் :யோகி ஸ்ரீராமானந்த குரு
0 கருத்துரைகள்:
Post a Comment