Monday, December 7, 2015

வெள்ளம் வடிந்தபின் நாம் இழந்த மேற்சொன்ன உடைமைகளை திரும்ப பெறுவது எப்படி?

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்தவர்கள் தங்கள் உடைமைகள் தண்ணீரில் விட்டு கண்ணீரோடுதான் வெளியேறினர். முக்கியமாக மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் அடக்கம். 
வெள்ளம் வடிந்தபின் நாம் இழந்த மேற்சொன்ன உடைமைகளை திரும்ப பெறுவது எப்படி?
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறமுடியும் என்கின்றனர் அரசு அதிகாரிகள்

மதிப்பெண் பட்டியல்
பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்களைப் பெற முதலில் காவல் துறையினரிடம் புகார் அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை பெற வேண்டும். அதன்பிறகு படித்த பள்ளி, கல்லூரி மூலம் விண்ணப்பம் பெற்று அதை பூர்த்தி செய்து, வட்டாட்சியரிடம் அளித்து, அசல் சான்றிதழ் மீண்டும் திருப்பப் பெற வாய்ப்பின்றி இழக்கப்பட்டது என்ற சான்றிதழை வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம், இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.

தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பட்டப்படிப்பு, அதற்கு மேற்பட்ட உயர் கல்விச் சான்றிதழ்களுக்கு தொடர்புடைய பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும். சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும்போது, தேர்வு எழுதிய பதிவு எண், ஆண்டு, மாதம் ஆகிய விவரங்களைக் கட்டாயம் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும்.
மாற்றுச் சான்றிதழ்களை புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்களை அணுகி கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஓட்டுநர் உரிமம்:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்ட போக்குவரத்து அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், பழைய ஓட்டுநர் உரிமத்தின் நகல் அல்லது எண்ணை அளிக்க வேண்டும்.

குடும்ப அட்டை:
குடும்ப அட்டை தொலைந்துபோனால், கிராமப்புறங்களில் வட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், நகரப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கல் துறை மண்டல உதவி ஆணையர் ஆகியோரை அணுக வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் குடும்ப அட்டை காணாமல்போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் அளித்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன், காணாமல்போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலை இணைத்து அளிக்க வேண்டும்.
டெபிட் கார்டு:
பற்று அட்டை (டெபிட் கார்டு) தொலைந்துபோனால், உடனே தொடர்புடைய வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் தெரிவித்து, பணப்பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுகி, கடிதம் மூலம் பற்று அட்டை தொலைந்ததை தெரியப்படுத்தி புதிய அட்டை வழங்குமாறு கோர வேண்டும். அப்போது, தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும்.

பட்டா:
வீட்டுமனைப் பட்டா தொலைந்துபோனால், முதலில் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அவரது பரிந்துரையின்பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா அளிக்கப்படும் என்கின்றனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.

வெள்ள பாதிப்பு குறைந்தபின் அரசு மற்ற நிவாரண உதவிகளுக்கு சிறப்பு முகாம்கள் அமைப்பது போன்ற அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து அந்தந்த பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து மாணவர்கள் பொதுமக்கள் இழந்த கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்பது  பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
 நன்றி : தினமலர்,தினகரன் மற்றும் விகடன் , படங்கள் : கூகுள்
Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பயனுள்ள பதிவு நண்பரே

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms