Tuesday, January 16, 2018

செல்வம் ஞானம் சேர்த்தருளும் அன்னை ராஜ மாதங்கீ

`திருமகள் இருக்குமிடத்தில் கலைமகள் இருக்க மாட்டாள்' என்று பொதுவாகச் சொல்வது உண்டு. அதாவது, `செல்வம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காதுஎன்று பொருள். ஆனால், வித்தை, தனம் ஆகிய இரண்டுக்குமே அதிதேவதையாக ராஜமாதங்கி இருந்து வருகிறாள். ஒப்பற்ற அழகும், எவரையும் வணங்கச் செய்யும் கம்பீரமும்கொண்ட அன்னை ராஜமாதங்கியின் அவதாரப் பெருமையையும், வணங்கும் முறைகளையும் காண்போம். ராஜ ஸ்யாமளா, மாதங்கி, காதம்பரி, வாக்விலாஸினி என்று பலவாறு துதிக்கப்படுபவள் இந்த அன்னை. ஆதிசங்கரர் தொடங்கி சங்கீத மும்மூர்த்திகள் வரை இவளைப் பாடிப் பணிந்து பல சிறப்புகளைப் பெற்று இருக்கின்றனர். கவிகாளிதாஸர் ஷ்யாமளா தண்டகத்தில் பாடிப் பாடி பரவசப்பட்ட அன்னை. ஆதிபராசக்தியின் மந்திரிணியாக இருந்து அற்புதமான ஆலோசனைகள் சொல்பவர். `ராஜ ஷ்யாமளாஎன்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் இவளைக் கொண்டாடுகிறது. சாக்த வழிபாட்டில் சப்த மாதாக்களில் ஒருவராகவும், தசமகா வித்யாக்களில் ஒன்பதாவது தேவியாகவும் ராஜ மாதங்கி இருந்துவருகிறாள். இந்த அன்னையின் அவதாரம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றிப் பார்ப்போம்.



ஊழிக்காலத்தின் இறுதிப்பகுதி அது. புதிதாகத் தோன்றிய பிரம்மதேவன், `மதங்கம்எனும் யானையின் வடிவம்கொண்டு சிவனைத் துதிக்க ஆரம்பித்தார். சிவனின் பேரருளால் படைப்புக்கான ஆற்றலையும் பிரம்மா பெற்றார். மதங்க வடிவில் இருந்த பிரம்மா தனது ஆற்றலால் மகனாகப் பெற்றவரே மதங்க முனிவர். இவர் ஆதிகாலப் படைப்பில் பிரம்மாவுக்கு பல உதவிகள்புரிந்தார்

பின்னர், பூவுலகின் புண்ணியப் பகுதியான ஸ்வேதவனத்தை அடைந்தார். திருவெண்காடு எனும் ஸ்வேதவனத்தில்  சிவனை எண்ணி தியானம் இருந்து விடையேறு நாதரைக் கண்குளிர  தரிசித்தார். அன்னை பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும், அவரை மணந்துகொண்டு சிவனே தனக்கு மருமகனாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அப்படியே சிவனும் அருளினார்.  மஹாசக்தியே பிறக்க இயலாது என்ற காரணத்தால், அன்னையின் மந்திரிணி சக்தி அவருக்கு மகளாகப் பிறப்பெடுத்தாள். ஆடி மாத வெள்ளிக்கிழமை, திருவெண்காட்டு ஆலயத்தின் மதங்க புஷ்கரணியில் ஒரு நீலோத்பல புஷ்பத்தில் ஸ்ரீ ராஜமாதங்கி அவதரித்தார். மரகதப் பசுமை நிறத்தில் மாதவமே உருவெடுத்து வந்தாற்போல பிறந்தாள். அன்னை ஸ்ரீ ஸ்ரீ லலிதாம்பிகையின் கையில் இருக்கும் கரும்பு வில்லே ராஜ மாதங்கியாக உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது. சர்வ அலங்காரத்தோடு பிறந்த அன்னை ராஜ ஷ்யாமளா அற்புதமான சக்தியாக வளர்ந்துவந்தாள். அன்னைக்கு ஏழு வயது நிறைவடைந்தபோது ஈசனின் வாக்குப்படியே அவருக்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டார் மதங்க முனிவர். சித்திரை மாத சுக்ல பக்ஷத்தில், சப்தமியன்று ஈசன் மதங்கேஸ்வரராக வருகை புரிய, அன்னை முப்பெரும் தேவியர் புடைசூழ, திருவெண்காட்டில் திருமணம் செய்துகொண்டார் என திருவெண்காட்டு தலப்புராணம் கூறுகிறது.

மதங்கேஸ்வர - மாதங்கி திருமண வைபோகத்தில் ஒரு சுவையான விவாதம் நடைபெற்றதாகப் புராணம் தெரிவிக்கும் சம்பவம் ஒன்று உண்டு. இவர்களின் திருமணத்தின்போது அன்னை மாதங்கிக்கு எந்தச் சீர்வரிசையுமே செய்யப்படவில்லை. அகிலத்தின் நாயகிக்கு நாம் என்ன செய்வது என்று மதங்க முனிவர் எண்ணி அமைதியாக இருந்துவிட்டார். `ஆண்டவனின் திருமணமே ஆனாலும், சீர்வரிசை இன்றி திருமணம் செய்வது கூடாதுஎன தேவர்களில் சில பிரிவினர் வாக்குவாதம் செய்தனராம். அன்னையின் பக்கமிருந்து சில தேவர்கள், `சீர்வரிசை எதுவும் தேவையில்லைஎன்று வாதிட்டனராம். சர்ச்சை பெரிதாகவே, சிவனே தலையிட்டு, `சீர்வரிசை தருவதும் பெறுவதும் தவறுஎனக் கண்டித்தாராம் (வரதட்சிணை வாங்குபவர்கள் கவனிக்கவும்). சீர்பெறுவது திருமணச் சடங்கு என பிரம்மா கூறவும், வேறு வழியின்றி சிவனின் ஆணைப்படி நந்திதேவர் கயிலையில் இருந்து பெரும் செல்வத்தினைக் கொண்டு வந்து, அன்னைக்கு கொடுத்தனராம். இந்த அரிய தகவலை திருநாங்கூர் மாதங்கீஸ்வரர் ஆலய தலபுராணம் தெரிவிக்கிறது.

கலைமகள், மலைமகள், அலைமகள் என மூவரின் அம்சமும்கொண்ட அன்னையாக ஸ்ரீ ராஜ மாதங்கி வடிவெடுத்தாள். இதனால் அரச பதவி வேண்டுவோர் முக்கிய தெய்வமாக எண்ணி வழிபடத் தொடங்கினர். அரச போகத்தினை அளிக்கும் இந்த தேவியின் அங்க தேவதைகளாக ஹசந்தி ஷ்யாமளா, சுக ஷ்யாமளா, சாரிகா ஷ்யாமளா, வீணா ஷ்யாமளா, வேணு ஷ்யாமளா, லகுஷ்யாமளா என ஆறு தேவியர் தோன்றி கலைகளின் அதிபதியாகினர். `லலிதா சகஸ்ரநாமம்’, `ஸ்ரீசாக்த ப்ரமோதத்தம்’, `மீனாக்ஷி பஞ்சரத்னம்’, `ஸ்ரீவித்யார்ணவம்’, `சாரதா திலகம்’, `நவரத்ன மாலாபோன்ற பல நூல்களில் அன்னை ராஜ மாதங்கியின் புகழும் வரலாறும் போற்றிப் பாடப்படுகிறது. சாக்த ப்ரமோதத்தில் இந்த அன்னை, இசைவாணியாகவும், வாக் தேவதையாகவும் வர்ணிக்கப்பட்டு வணங்கப்படுகிறாள். ஆக, கலைகளின் தேவதையாகவும், அரச போக வாழ்வை அளிப்பவளாகவும் இவளே விளங்குகிறாள். கலைகளில் தேர்ச்சி பெற, பதவி உயர்வு பெற, வாக்கு வளம் பெற இவளை வணங்கலாம். நவாவர்ண பூஜையும், குங்கும அபிஷேகமும் இந்த அன்னைக்கு பிடித்தமானது. மீனாக்ஷி அன்னையே ராஜ மாதங்கியின் அம்சம்தான் என்பதால், மீனாட்சியை வணங்குவதே ராஜ ஷியாமளாவை வணங்குவது போல்தான். வடநாட்டில் ஷ்யாமளா வழிபாடு மிகப் பிரபலமானது. சியாமளா நவரத்னமாலை, சியாமளா ஆவரணம், மாதங்கி ஸஹஸ்ரநாமம், சியாமளா தண்டகம், சியாமளா கவசம், மாதங்கி ஹ்ருதயம், ராஜமாதங்கி மந்த்ரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி ஸுமுகி கவசம், ஸ்யாமளா ஸஹஸ்ரநாமம் போன்ற பல துதிகள் இந்த அன்னையின் புகழைப் போற்றுகின்றன. பூவுலகின் எல்லா மனிதர்களும் சகல கலைகளிலும் தேர்ச்சிபெறவும், செல்வ வளத்தினைப் பெறவும் அவதரித்தவள் அன்னை ராஜ மாதங்கி, அவளை வெள்ளிக்கிழமை தோறும் வணங்கி சகல நன்மைகளும் பெற்று வாழ வேண்டுகிறோம்.

 Arrow Sankar Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms