Friday, July 27, 2018

ஆடி மாதத்தின் மகிமைகள் என்ன?

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடியை கற்கடக மாதம் என்றும், சக்தி மாதம் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். 'ஆடிப் பட்டம் தேடி விதை" என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை அம்மனுக்கு சாத்தி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது. இதற்கு காரணம், இந்த மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ குணமும், தெய்வீக குணமும் உண்டு.

ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.

 துர்க்கை, காளி உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரியதாகவும் ஆடி மாதம் கருதப்படுகிறது. இதேபோல் 18ஆம் பெருக்கு எனப்படும் ஆடி-18 விழா மிகவும் உன்னதமானது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நாகலட்சுமி பூஜை, வரலட்சுமி நோன்பு ஆகிய தினங்களில் விரதம் இருந்து அம்மனை தரிசிப்பது மிகவும் நல்லது. ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், முன்னோர்களின் ஆசிகளைப் பெறலாம்.

ஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவார். சுமங்கலிப் பெண்கள் இதுபோன்று வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். ஆகையால் ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டு நல்ல ஆரோக்கியத்தைப் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்.....!

ஆடி மாத விரதங்கள் !!

ஆடி மாதங்களில் இறைவனுக்கு விரதங்கள் இருப்பது விஷேமானது. இம்மாதத்தில் விரதங்கள் இருப்பதால் பல விதங்களில், கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். உண்ணாமல் விரதம் இருப்பதும், எந்நேரமும் இறைவனையே சிந்தித்து, மௌன விரதம் இருப்பதால், வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது, பக்தர்களின் அசையாத நம்பிக்கை.
இம்மாதத்தில் வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆடி மாதத்தில் பிராணயவாயு அதிகமாக கிடைப்பதால், ஜீவ ஆதார சக்தி அதிகமாக உள்ள முக்கிய மாதமாகவும் உள்ளது. இதனால், ஆடி மாதம் சக்தி நிறைந்த மாதமாக கருதப்படுகிறது.

ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைபிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

ஆடி மாதத்தில் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும், அம்மன் கோவில்களுக்கு சென்று, பெண்கள் வழிபட்டால், எண்ணிய காரியம் ஈடேறும். இந்நாளில், பெண்கள் அதிகாலையில் குளித்து, குலதெய்வ வழிபாடு நடத்திய பின், துர்க்கை அம்மன், முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.

வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிக்கலாம். ஆடி - செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைபிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம். இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதேபோல், ஆடி வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் ஊற்றி, பூஜை செய்வதால், நாகதோஷம் நிவர்த்தியாகும். குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.


ஆடிமாதம் முழுவதும் பக்தி நிறைந்த நாளாக காணப்படுவதால் விரதம் இருந்து வழிபட்டு வேண்டியதை அருளும் இறைவனை வணங்குவோம்.

Arrow Sankar Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms