Friday, December 7, 2012

தாசி தாசனாக்கிய கதை


நகுலனுக்கு எந்த கவலையும் இல்லை. காலையில் எழுந்ததும் சுவையான உணவுகளை உண்டு, நறுமண பொருட்களால் தன்னை மிகவும் வாசனையானவன் ஆக்கி கொண்டு ஊர்சுற்ற கிளம்பி விடுவான். தனது தந்தை பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதால் அவன் தொழில் மேல் நாட்டம் இல்லாமல் இருந்தான். தினமும் குடி மற்றும் பெண்கள் மேல் இச்சை என அவனின் கும்மாளம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது.நகுலனின் தந்தையும் இதை கண்டிக்கவில்லை. தனது ஒரே மகன் செய்யும் காரியம் அனைத்தும் அவருக்கு சரியாகவே பட்டது.

இவ்வாறு நகுலனின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் பொழுது தான் அந்த ஊருக்கு வந்தாள் வேதயாணி.
வேதயாணி நல்ல அழகும் துடுக்குத்தனமும் கொண்ட பெண். அவள் ஒரு தாசியாக வாழ்ந்து வந்தாள்.பல ஊருகளுக்கு நாடோடி போல பயணம் செய்து அத்தொழிலை செய்துவந்தாள். வேதயாணியை கண்டவுடன் நகுலனுக்கு தனது மனதை கட்டுபடுத்த முடியவில்லை. தினமும் பல பெண்களை காணும் அவனுக்கு வேதயாணி மேல் அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது.
வாரத்தில் சில நாட்கள் சென்று வேதயாணியை சந்தித்து வந்த நகுலன் பின்பு தினமும் சந்திக்க நினைக்கும் அளவுக்கு அவளிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
ஒரு முறைக்கு மேல் பழகிய பெண்களை மீண்டும் சந்திக்க விரும்பாத நகுலனுக்கு தன்னிடம் ஏற்பட்ட மாற்றம் வியப்பாக இருந்தது.
ஊருக்கு எல்லையில் ஓடும் ஆற்றங்கறையின் மறுபுறம் இருக்கும் நந்தவனத்தில் தான் வேதயாணியின் வீடு இருந்தது.
தினமும் பரிசல்காரனின் உதவியுடன் ஆற்றைகடந்து சென்று நந்தவனத்தில் வேதயாணியுடன் செலவிடுவது நகுலனுக்கு வழக்கம்.வேதயாணியின் வீட்டின் முன் இருக்கும் செண்பகப்பூ மரத்தின் நிழலில் இருவரும் சந்தித்து உரையாடுவார்கள். இதற்கு முன் எந்த பெண்ணையும் அவன் இவ்வாறுசென்று சந்தித்ததில்லை. தனது பண செருக்கால் அவர்களை தான் இருக்கும் இடத்திற்கு வர சொல்லி அதிகாரம் செய்வான். தானே சென்று வேதயாணியை சந்திக்கும் செயலை தனது நண்பர்கள் கிண்டல் செய்தாலும் கவலைபடவில்லை நகுலன்.
இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது...
ஒரு நாள் கனமழையின் காரணமாக ஊர் முழுவதும் வெள்ளப்பெருக்கு இருந்தது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் இருந்தார்கள்.
காமமும்,மோகமும் ஊர்மக்கள் போல் அல்லவே, நகுலனை விட்டு வெளியே வர துடித்தது.
பெரும் மழையை பொருட்படுத்தாது வேதயாணியை காண புறப்பட்டான்.
கனமழையால் ற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. பரிசல்காரர்கள் யாரும் இல்லாதது நகுலனுக்கு ஏமாற்றம் அளித்தது. ஆற்றை நீந்தி கடக்கலாம் என்றால் வேகம் அதிகம். நகுலனுக்கு சாதகமாக ஒரு சிறிய மரம் ஆற்றில் அடித்துக்கொண்டு வந்தது..

அதை பாய்ந்து பிடித்து கொண்டே, மறு கையால் நீந்தி ஆற்றைகடந்தான்.மறு கரையை அடைந்ததும் சிறிய மரத்தை கரைக்கு அருகில் போட்டுவிட்டு வேதயாணியின் வீட்டை பார்த்தான். வீட்டை சுற்றி நீர் தேங்கி இருந்தது.
வீட்டின் மேல் மாடத்தில் இருந்து நகுலனின் வருகையை பார்த்தவண்ணம் இருந்தாள் வேதயாணி.மிகவும் வேகமாக வந்த நகுலனுக்கு வீட்டின் முன் தேங்கி இருந்த நீர் ஒரு தடையாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவன், செண்பக மரத்தில் இருந்த கயிற்றை பிடித்து நீரை தாண்டி அவளின் வீட்டு முற்றத்தை அடைந்தான்.

வேதயாணியை பார்க்கும் ஆவலுடன் அவளை நெருங்கினான்.என்றும் புன்னகையுடன் வரவேற்கும் அவள் இன்று அவனிடத்தில் கேட்டாள்.

"காம சுகத்தில் என்ன இருக்கிறது?”
இது வரை எவரும் தன்னிடம் கேள்வி கேட்டதில்லை. தன்னிடம் ஒரு பெண் கேள்வி கேட்கிறாளே என கோபம் கொண்ட நகுலன்.

அதைவிட இந்த உலகின் என்ன சுகம் இருக்க முடியும்? என்றான்.

உன் கண்கள் காமத்தால் கட்டப்படிருக்கிறது, உனது மனம் அறியாமையால் சூழப்பட்டு இருக்கிறது என்றாள் வேதயாணி.
தாசியாக இருந்தவள் திடிரென வேதாந்தம் பேசுகிறாளே என அவளை ஏறிட்டான்.
 
பிறகு , “என்னை விட உலகில் இன்பம் துய்ப்பவன் யாரும் இல்லை. தெரியுமா உனக்குஎன்றான் நகுலன்.

அவனை தீர்க்கமாக பார்த்த வேதயாணி இருக்கவே முடியாதுஎன தீர்மானமாக சொன்னாள்.அவனை திருப்பி ஆற்றின் கரையோரம் காண்பித்தாள்.

அதோ பார் நீ நீந்தி வந்தது மரம் அல்ல, ஒரு பிணம். அதை மரம் என நினைத்து ஆற்றை கடந்தாய்.மரத்தில் இருந்த பாம்பை கயிறு என நினைத்து நீரை கடந்து இந்த வீட்டை அடைந்தாய்..

அப்பொழுது தான் கவனித்தான் நகுலன். அது ஒரு பிணம் இது ஒரு பாம்பு.

வேதயாணி தொடர்ந்தாள் .. பிணத்திற்கும் மரத்திற்கும், பாம்புக்கும் கயிறுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் நீ எப்படி உலகின் உயர் இன்பத்தை உணர்ந்தவனாவாய் ?”

தனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட சூழலை சந்திக்காத நகுலன் தன்னில் நிலைகுழைந்து நின்றான்.சில நிமிட மெளனத்திற்கு பிறகு வேதயாணியை பார்த்து கேட்டான்.

உலகின் உயர் இன்பம் பெற என்ன செய்ய வேண்டும்?”

அவனது நிலை உணர்ந்த வேதயாணி இரண்டு எழுத்து மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரி. அது போதும்என்றாள்.சொன்னது மட்டுமல்லாமல் அவனது காதில் அதை உபதேசித்தாள். வேட்டைக்காரனை வால்மீகியாகிய மந்திரம் நகுலனை ராமதாஸனாக்கியது.  தன்னை உணர்ந்து ...
உயர் இன்பம் அடைந்தான் ராமதாஸன்.

Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms