பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம்.ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்றஒரே கிரகம் சனியாகும்.
ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும்முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு.ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.
சாக்கடையில் பதுங்கிய இந்திரன்
ஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என விளக்கம்சொன்னார். ‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார்.
சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டுசாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா’ என்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர்சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில்உழன்றீர்களே.. அதுகூட என் பார்வை, பீடிப்பினால்தான்’ என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.
சனீஸ்வரரின் அதிகாரம்
எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் திசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால்சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும்.ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.
நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், ‘சனியனே! உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது’ என்று சொல்லி திட்டுவார்கள். உன்னை புதன் பிடித்து ஆட்டுகிறது. கேது ஆட்டுவிக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை. எந்த கிரக திசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும்.
இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது. இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் சனிபகவான் தன் உச்ச ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும். தற்போது 2012-ம் ஆண்டு முதல் சனி தன் உச்ச வீடான துலா ராசியில் அமர்ந்துள்ளார்.
ஆகையால் பூரண பலத்துடன் திகழ்கிறார். இதனால் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த உச்ச சனியால் சகல யோக அதிர்ஷ்டங்கள், சுப விசேஷங்கள் கூடிவரும். யோக பாக்யத்தைஅருள்வார். மற்ற ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள், நிறை, குறைகள், கஷ்ட-நஷ்டங்கள் இருந்தாலும் உச்ச பலம் காரணமாக சில சாதகமான பலன்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி திசை நடப்பவர்களுக்கு இந்த உச்ச நேரம் மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும்.
-
நன்றி : ‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்
0 கருத்துரைகள்:
Post a Comment