Wednesday, July 31, 2013

மிராசுதாரை மிரள வைத்த மகா பெரியவர்

ஒரு சித்ரா பௌர்ணமி அன்று திருவிடைமருதூர்  மகாலிங்க ஸ்வாமிக்கு  அவ்வூர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் ருத்ர ஜபத்துடன் அபிஷேகம் நடத்தினார்.

மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் காஞ்சி பெரியவரிடம் அபரிதமான பக்தி உடையவர். அதனால் தான் நடத்திய ருத்ர ஜப பிரசாதத்தினை காஞ்சி பெரியவரிடம் ஒப்படைக்க எண்ணி உடனே காஞ்சி சென்றார். அவர்  காஞ்சி மடம் வந்தடைந்த போது  பெரியவர் தியானத்தில் இருந்தப்படியால் அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தவர்களின் கூட்டம் நின்றிருந்தது. மிராசுதார்  நாராயணஸ்வாமிஐயர் கூட்டத்தை  முந்தி  காஞ்சி பெரியவர்  அருகில் நிற்க பெரியவர் அவரை பார்க்க பெரியவருக்கு வணக்கத்தினை தெரியப்படுத்தி தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு  மிராசுதார்  நேற்று திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமிக்கு நடந்த ருத்ர ஜபத்தினையும் அபிஷேகத்தினையும் பிரசாதத்தினை பெரியவரிடம் ஒப்படைக்க எண்ணியதையும்  சொல்லி அருகில் இருந்த மூங்கில் தட்டில் வைத்தார்.

காஞ்சி பெரியவர் மிராசுதாரை பார்த்து கேட்டார்.
ருத்ர ஜெபத்தினை எதற்காக செய்தீர்கள்?.
மிராசுதார் பவ்யமாக ஊரில் விளைச்சல் இல்லை நிலமெல்லாம் தரிசாக இருக்கிறது, அதனால் எங்கள் ஊரில் உள்ள ஜோதிடரிடம் கேட்டபொழுது இந்த ஜெபத்தினையும் அபிஷேகத்தினையும் செய்ய சொன்னார் ஆகவே,…என்று மிராசுதார் இழுக்க

இடைமறித்த காஞ்சி பெரியவர் கூட்டாக செய்தீரா என கேட்க உடனே மிராசுதார் இல்லை இல்லை நானே தனியாக என் சொந்த செலவில்  ஏற்பாடு செய்தேன் என்றார் அழுத்தமாக.
நானே என்பதில் மிராசின் ஆணவம் தெரிந்தது .

இவர்கள் அருகில்  நின்றிருந்த கூட்டம் காஞ்சி பெரியவரை ஆச்சிரியமுடனும் மிராசை ஆர்வமுடனும் துருவித் துருவி கேட்கிறாரே என  வேடிக்கை பார்த்தது. புன்னகைத்தவாறே  மீண்டும் பெரியவர்  மிராசிடம் எத்தனை பேர் ஜெபிக்க ஏற்பாடு செய்தீர்? என கேட்க மிராசு தன் பாக்கேட்டிலுள்ள  காகித குறிப்பினை எடுத்து அவசர அவசரமாய் சில பெயர்களை படிக்க, கண்ணை மூடிக் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் சட்டென அதில் தேபெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் பெயர் இருக்கா என கேட்க மிராசு மகிழ்ச்சியுடன் இருக்கு இருக்கு என தலையாட்டினார் . அருகில்  நின்றிருந்தவர்கள் காஞ்சி பெரியவரை ஆச்சிரியமாய் பரவசமுடன் பார்த்தனர்.

மீண்டும் காஞ்சி பெரியவர் தொடர்ந்தார்.ஜெபம் பண்ணும் பொழுது  தேபெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் மட்டும் சரியா மந்திரம் சொல்லலே. அதனாலே நீங்க அவருக்கு எல்லாருக்கும் ஒத்துக்கிட்ட சம்பாவனையை விட குறைச்சலா கொடுத்தீங்க.

மிராசுதார்ஆமாம், ஆமாம், அவருக்கு வயசாயிடிச்சி, இருமிக் கொண்டே இருந்தார் , மந்திரம் சரியா சொல்லலே, அதனாலே எல்லாருக்கும் பத்து ரூவா இவருக்கு மட்டும் ஏழு ரூவா கொடுத்தேன் என்றார். 
அருகில்  நின்றிருந்தவர்கள் மீண்டும் ஆச்சிரியமுற்றனர் .

காஞ்சி பெரியவரே மீண்டும் தொடர்ந்தார். ஜெபம்,அபிஷேகம் முடிஞ்சி வேதம் ஓதன எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறினீங்களே என்ற பொழுது மிராசு       “ஆமாம்              சுவாமி          சக்கரைப்பொங்கல்,  பாயாசம்னு நல்லாப்     போட்டேன்,   நானே பரிமாறினேன் “என்றார் பெருமிதமாக. 

நல்லாத்தான் போட்டே ஆனா  தேபெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் சக்கரைப்பொங்கல் ருசியா இருக்கு இன்னம் கொஞ்சம் போடேன் என பலமுறை கேட்டும் நீ கவனிக்காத மாதிரியே இருந்திட்டியே அது தர்மமா? பந்தி வஞ்சனை பண்ணியே நியாயமா? என காஞ்சி பெரியவர் கேட்டார்.

 மிராசுதார் வெட்கி தலை குனிந்தார். கூடியிருந்த அனைவரும் மேலும் ஆச்சிரியமுடன் அந்த ஜெப பூஜையில் நேரில் கலந்துக் கொண்டவரை போலவே கேட்கிறாரே  என்று பரவசமுடன் காஞ்சி பெரியவரையே பார்த்தனர்.

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு காஞ்சி பெரியவரே தொடர்ந்தார். “அதனாலே  தேபெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் என்ன செஞ்சார் தெரியுமா? பந்தியிலே நீ பண்ண  பேதத்தினாலே மனசு ஒடிஞ்சி போய் மகாலிங்க ஸ்வாமி பிரகாரத்த மூணு பிரதட்சணம் வந்துட்டு மகாலிங்க ஸ்வாமி கிட்டே சாமீ எனக்கு வயசாயிடிச்சி, முன்னே மாதிரி மந்த்ரம் சொல்ல முடியலே, உடம்பும் மனசு அளவுக்கு வேகமா இல்ல என்ன மன்னிச்சுடு, எனக்கு வயசானாலும் இன்னும் நா ருசி போகல, சக்கரைப்பொங்கல் கேட்டு அவமானம் பட்டுட்டேன்.  காசியிலும் நீதான் இருக்கே , இங்கேயும் நீதான் இருக்கே , காசிக்கு போன ஏதாவது நமக்கு புடிச்சத விட்டுடனன்னு சொல்லுவாங்க. அதேமாதிரி இந்த நொடியிலே இருந்து நான்  இனிமே எந்த இனிப்பு பலகாரத்தையும் சாப்பிட மாட்டேன் இது உன் மேல செய்யற சத்யம்.” ன்னுட்டு போய்ட்டார். என்று காஞ்சி பெரியவர் நிறுத்தினார் 

கேட்டுக்கொண்டிருந்த  மிராசுதார் என்ன மன்னிச்சுடுங்க ஸ்வாமி! நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று பெரியவர் காலில் விழுந்து வணங்கி மண்டியிட்டு என் பிரசாதத்த ஏத்துங்க  என்று மன்றாடினார்.

மேலும் நான் செஞ்ச தப்புக்கு பிராயசித்தமா தேபெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் கிட்டே மன்னிப்பு கேட்பேன்  என மிராசுதார் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே  பெரியவர் இடைமறித்து, இன்னிக்கு எனக்கு பிரசாதம் கிடைக்க மகாலிங்க ஸ்வாமி அனுக்கிரகம் பண்ணுவார்,  உனக்கு ப்ராப்தம் இருந்தா  தேப்பெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் கிட்டே மன்னிப்பு கிடைக்கும்  என்று முடிக்கும் முன்னர் கொஞ்சம் வழி விடுங்கோ  என்றபடி ஒருவர் கூட்டத்திலிருந்து பெரியவர் முன் வந்து நின்று  பெரியவாளுக்கு நமஸ்காரம்,  நான் திருவிடைமருதூர்  மகாலிங்க ஸ்வாமி கோயில் அர்ச்சகர் என் பெயர்  மகாலிங்கம் நேற்று நடந்த ருத்ர ஜப பிரசாதத்த ஒப்படைக்க சொல்லி உத்தரவு. இது  எங்க ஊர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயரின் கைங்கர்யம் , என்று சொல்லிக்கொண்டே அருகில் நின்றிருந்த மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயரை பார்த்து, இதோ அவரே இருக்காரே என்று வியந்தார். நின்றிருந்த பக்தர்கள் வியந்தும் பரவசமுற்றும் சிலாகித்தனர் .

மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் காஞ்சி பெரியவரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு நேரே  தேப்பெருமானல்லூர் வந்தடைந்தார். எதிர்ப்பட்ட ஒருவரிடம் கனபாடிகள் பெயரை சொல்லி அவர் வீடு எங்கே?” என்று கேட்டார் .

அவர் கூட்டமாய் சில பேர் நின்றிருந்த வீட்டை காட்டி, நீங்க  துக்கம் விசாரிக்க வந்து இருக்கீங்களா? கனபாடிகள்  நேத்து ராத்திரி காலமாயிட்டார் என்றார்.

மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் உனக்கு ப்ராப்தம் இருந்தா  தேப்பெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் கிட்டே மன்னிப்பு கிடைக்கும் “ என்று காஞ்சி பெரியவர் சொன்னாரே.

எனக்கு மன்னிப்பே கிடைக்காதுன்னு காஞ்சி பெரியவருக்கு தெரிஞ்சு இருக்கு என்று கனத்த மனதோடும் தன்  தவறினை உணர்ந்தும் கனபாடிகள் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தார் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர்.
 *********************************************************************************************************************************

திரு. எஸ்.ரமணி அண்ணா  அவர்கள் சக்தி விகடனில் மிராசுதாரை மிரள வைத்த மகா பெரியவர் “ எழுதியதை எனது நண்பர் திரு ஆனந்தபத்மநாபன் அவர்கள்  பிடிஎப் பைலாக எனது மின்னஞ்சல்  முகவரிக்கு அனுப்பி இருந்தார். அதனை சுருக்கி எனது நடையில் எழுதி இருக்கீறேன். நண்பர் திரு ஆனந்தபத்மநாபன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் 

4 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பிரமிப்பு அடைவதை தவிர வேறு ஒன்றும் இல்லை... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கொஞ்சம் கூட ப்ராமண பாஷை கலக்காம உங்களோட தனி நடையிலே ரீமேக் கொடுத்து இருக்கீங்கோ. வெரி நைஸ்,நன்றி .

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கடவுளிடமிருந்து மகான்கள் உணர்ந்து கொள்கிறார்கள் ,சாமான்யர்கள் அனுபவித்த பின்னே உணர்கிறார்கள்

Venkat Narayanan AR said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Excellent! Very Well framed.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms