ஆங்கிலேயனுக்கு அடிமைப் பெற்று இருந்த இந்தியாவின்
தென் திசையில் நடந்தது.
தலையில் கட்டுக்குடுமி,காதில் கடுக்கன்,அவன்
நெற்றியில் திருநீறு,ஒளி உமிழும் கண்கள்
கொண்ட சிறுவன்.அந்த பையன் மேலே என்னப் படிப்பது என்பது விவாதம்.
கூடத்தில் சாய்நாற்காலியில் சாய்ந்திருந்த குடும்பப்
பெரியவர் குரல் உயர்ந்தது, “இதப்பார்... ஒண்ணு சமஸ்கிருதம் படி...இல்லாட்டி இங்க்லீஷ்
படி. இங்க்லீஷ் படிச்சா இந்த லோகத்திலே
நன்னா இருக்கலாம்,... சமஸ்கிருதம் படிச்சா.. இங்க இல்லேன்னாலும் பரலோகத்தில
சவுக்கியமா இருக்கலாம். நீ என்ன படிக்க போறே? “.
“ தமிழ் படிக்கப் போறேன் “ என்றான் சிறுவன்.
“ ஏன்?” என்று உறுமினார் பெரியவர்.
“ இங்க்லீஷ் படிச்சா இங்கே நன்னா இருக்கலாம், சமஸ்கிருதம்
படிச்சா அங்கே நன்னா இருக்கலாம், தமிழ் படிச்சா ரெண்டு இடத்துலேயும் நன்னா
இருக்கலாம்.” என்று
பளிச்சென்று சொன்னான் அந்த சிறுவன்.
அன்று அந்த சிறுவன் தமிழ் படித்ததால் இன்று தமிழே
நன்றாக இருக்கிறது.
அன்றைய சிறுவன் சாமிநாதன் தான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர்.
**
பிப்ரவரி19, 1855ஆம் ஆண்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள உத்தமதானபுரம் சிற்றூரில் வேங்கட சுப்பைய்யர் மற்றும் சரசுவதி அம்மாள் அவர்களுக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது
தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார்.
பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற
மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று
தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக்
கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.
உ.வே.சா கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே சேலம்
இராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்து நட்பு கொண்டார். ஒருநாள் வழக்கம் போல்
இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் சீவக
சிந்தாமணியைப் பற்றித் தெரியுமா என முதலியார் வினவினார். தனது ஆசிரியரிடம் சிற்றிலக்கியங்கள்
பெரும்பாலானவற்றை மட்டுமே கற்றிருந்த உ.வே.சா சிற்றிலக்கியங்களைத் தவிர வேறு பல
தமிழ் இலக்கியங்களும் இருப்பதை அன்று அறிந்தார்.
இராமசாமி முதலியார் உ.வே.சாவுக்கு அளித்த சமண சமய நூலான சீவக
சிந்தாமணியின் ஓலைச்சுவடிப் பகுதிஅக்காலக் கட்டத்தில் சமயக்காழ்ப்பினால்
புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் உ.வே.சா வினுள்
தூண்டியது. சமண இலக்கியங்களோடு
பல ஓலைச்சுவடி களையும் உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது
மட்டுமின்றி அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும்
துவங்கினார்.
பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும்
ஆற்றினார். இப் பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில்
இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.
சங்கஇலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்
வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது
மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.
சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
நன்றி : தமிழ் விக்கிபீடியா, சுகி சிவம் அவர்களின் “வெற்றி நிச்சயம்” புத்தகம்
9 கருத்துரைகள்:
அருமையான பதிவு.
நன்றி.
சிறப்பான பகிர்வு ஐயா... வாழ்த்துக்கள்...
சூப்பர்
ரொம்ப நல்லா இருக்கு
நான் கொஞ்ச நாளைக்கு முன்னாலேத்தான் வெற்றி நிச்சயம் புக் படிச்சேன். இப்பிடி டைமிங்க்கா கோர்த்து இருக்கீங்க. இன்னைக்கு திரு உ.வே.சாவின் பிறந்த நாள்.இந்த பதிவு அவரின் தமிழ் சேவையை நினைவு கூறும்
அருமையான பதிவு.சங்கர் சார்
தமிழ் சேவைக்கு இன்று பிறந்த நாள்.இந்த பதிவு அவருக்கு வாழ்த்தாகும்
துணுக்கா படிச்சத சூப்பர பதிய விட்டீங்க. வாழ்த்துக்கள்
தமிழ்த் தாத்தா வின் நினைவினைப் போற்றுவோம்
Post a Comment