Wednesday, August 3, 2016

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவில்


திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவில் புராண வரலாற்று சிறப்பு மிக்கத் திருத்தலமாகும். வேதங்கள் மலை வடிவில் வந்து தவம் செய்த தலம் இதுவாகும். அந்த மலையின் மீதே வேதகிரீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 

முனிவர்கள் 8 பேர் கழுகு உருவில், இத்தலத்து இறைவனை வழிபட்டதால் திருக்கழுக்குன்றம்என்று பெயர் பெற்றது.

இங்கு தஞ்சாவூரில் நடைபெறும் மகாமகம் போல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தீர்த்த புஷ்கர மேளாஎன்னும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. பொதுவாக உவர்நீரில்தான் சங்கு தோன்றும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆலயத்தில் உள்ள நன்நீர் நிறைந்த குளத்தில், ஒரே ஒரு சங்கு பிறந்து வெளி வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். அவ்வாறு தோன்றும் சங்கைதான், சங்குதீர்த்த புஷ்கர மேளாவின் போது, இறைவனை அபிஷேகம் செய்ய பயன்படுத்துவார்கள். 

ஒரு சமயம் வேதங்கள் அனைத்தும் சிவபெருமானிடம் வந்து தொழுதன. இறைவா! இந்த உலகம் அழியும் காலத்திலும், வேதங்களாகிய நாங்கள் அழியாமல் உங்கள் திருவடியின் கீழ் நிலைபெற்றிருக்க வேண்டும்என்று வேண்டின.

அதற்கு சிவபெருமான், ‘நீங்கள் ஒரு மலை வடிவாய் நில்லுங்கள். அங்கு நான் சிவலிங்க வடிவில் நீங்கள் செய்யும் பூஜையை ஏற்றுக் கொண்டு ஞான சொரூபமாய் இருந்து அருள்வேன். அந்த இடம் வேதகிரி என வழங்கப்படும்என்றார். அதன்படி ருக்வேதம் அடியாகவும், யஜூர்வேதம் மத்தியிலும், சாமவேதம் மேற்பகுதியாகவும், அதர்வணவேதம் மலையின் சிகரமாகவும் அமைந்தன. 

மார்கண்டேய சங்கு தீர்த்தம்

மிருகண்டு முனிவர்மருத்துவதி தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ‘உங்களுக்கு நீண்ட காலம் வாழும் புத்தி குறைவான மகன் வேண்டுமா?, நிறைந்த புத்தியோடு குறைந்த காலம் வாழும் மகன் வேண்டுமா?’ எனக் கேட்டார்.

இறைவனிடம் புத்தியோடுள்ள குறைந்த காலம் வாழும் மகனை வேண்டினர் அந்த தம்பதியர். எனவே மார்கண்டேயர் 16 வயது ஆயுளோடு பிறந்து, சிவ பக்தியோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு 16 வயது ஆனபோது அவரது உயிரைப் பறிக்க எமதூதர்கள் வந்தனர். அப்போது மார்கண்டேயர் சிவனை நினைத்து கடும் பூஜை செய்து கொண்டிருந்தார். இதனால் அவரது உயிரை கவர முடியாமல் எமதூதர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து எமனே நேரடியாக அங்கு வந்தான். எமனைக் கண்டதும் மார்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக தழுவிக்கொண்டார்.

ஆனால் எமன், பாசக்கயிறை மார்கண்டேயர் மேல் வீசினான். அந்த கயிறு மார்கண்டேயரோடு சிவலிங்கத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், உக்கிரமூர்த்தியாய் தோன்றி எமனை எட்டி உதைத்தார். எமதர்மன் மூர்ச்சையாகி விழுந்தான்.

பின்னர் மார்கண்டேயரை என்றும் 16 வயதுடன் இருக்க அருள்புரிந்தார். இதையடுத்து மார்கண்டேயர் பல சிவதலங்களுக்கு சென்று வழிபட்டார். அப்படி அவர் வந்த திருத்தலத்தில் ஒன்றுதான் திருக்கழுக்குன்றம். 

அவர் இந்த ஆலயத்திற்கு, குரு பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் நேரத்தில் வந்தார். இத்தல வேதகிரீஸ்வரரை வழிபடும் முன்பாக அங்குள்ள குளத்தில் நீராடினார். சிவபூஜை செய்யும் முன்பாக அங்கு விநாயகர் ஒருவரை பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு அபிஷேகம் செய்ய, நீர் எடுக்க பாத்திரம் எதுவும் இல்லாததால், சிவபெருமானை நினைத்து வேண்டினார் மார்கண்டேயர். இதையடுத்து அங்குள்ள நன்நீர் குளத்தில் ஒரு சங்கு உருவாகி வெளிவந்தது. இறைவனால் தரப்பட்ட அந்த சங்கை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்தார். இறைவனுக்காக சங்கு உருவானதால் அந்தக் குளத்திற்கு சங்கு தீர்த்தம்என்று பெயர் உண்டானது.


இந்த நிகழ்வே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக் கழுக்குன்றம் திருத்தலத்தில் சங்கு தீர்த்த புஷ்கர மேளாஎன்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு சங்கு தீர்த்தக் குளத்தில் நீராடி மகிழ்கிறார்கள்.

சங்கின் இத்திருப்பிறப்பு முதன்முதலில் குரு பகவான் கன்னி ராசியில் செல்லும் போது நடந்தது. ஆகவே குரு பகவான் கன்னி ராசிக்குச் செல்லும் நாள் சங்கு தீர்த்த புஷ்கர மேளாவாக கொண்டாடப்படுகிறது.  அந்நாளில் குரு பகவான், இத்தல இறைவனை லட்சதீபம் ஏற்றி வழிபடுவதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

இன்று வரை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இங்குள்ள குளத்தில் சங்கு பிறக்கிறது. கடைசியாக கடந்த 1.9.2011 அன்று சங்கு பிறந்தது. அந்த சங்கைக் கொண்டுதான், சங்கு தீர்த்த புஷ்கர மேளாவின் போது இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

சங்கு பிறப்பதற்கு முதல் நாள் குளம் முழுவதும் நுரையாகக் கிளம்பும். பின்னர் அக்குளத்தில் தோன்றும் சங்கு, ஒரு ஓரமாக மிதந்து வரும். அதை கோவிலிலுக்குள் மேள தாளம் முழங்க எடுத்துச் சென்று, இறைவனின் சிறப்பு அபிஷேகங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். 

இந்த ஆண்டு 2.8.2016 (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் குரு கன்னி ராசியில் பிரவேசமாகிறார். இதை உத்தேசித்து 31.7.2016 மாலை முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. 2.8.2016 அன்று காலை 9 மணிக்கு முடியும் இந்த பூஜையை அடுத்து, சங்கு தீர்த்தக் குளத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு லட்ச தீபங்கள் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. இரவு திருக்கல்யாணம் செய்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமிஅம்பாள் வீதி உலா வந்தனர்.

நால்வர் கோவில்

சைவ சமயக் குரவர்கள் திருக்கழுக்குன்றம் அடைந்து வேதகிரி மலையில் ஏற நிதானித்து, கீழேயே நின்று பாடல் பாடினர். இந்த இடம் நால்வர் கோவில் என்று வழங்கப்படுகிறது. மலைமீது சொக்கநாயகி உடனுறை வேதகிரீஸ்வரர் என்ற ஆலயமும், ஊருக்குள் திருபுரசுந்தரி உடனுறை பக்தவசலேஸ்வரர் திருக்கோவிலும் உள்ளன. இவை முறையே மலைக்கோவில், தாழக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.

மலைக்கோவிலுக்குச் செல்ல 565 படிகள் உள்ளன. இறைவன் சுயம்புத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார். கருவறை, கருங்கற்பாறைகளால் ஆனது. உட்சுவரில் சோமாஸ்கந்தர், பிரம்மா, திருமால் உள்ளனர். வடக்குச் சுவரில் தட்சிணாமூர்த்தி உள்ளார். முதல் பிரகாரத்தில் விநாயகரும், சொக்கநாயகி அம்மனும் அருள்கின்றனர். செங்கல்பட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

2 கருத்துரைகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். இப்போது உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் கோயிலைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக்க நன்று சிறுவயதில் படித்த மார்க்கண்டேயர் சரிதமும் நினைவு வந்தது.
மிக்க நன்றி உறவே.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms