Saturday, April 8, 2017

மஹாவீரர்

மஹாவீரர்
சமண மதத்தின் 24-வது தீர்த்தரங்கரர் மஹாவீரரின் பிறந்தநாளை, சமணர்கள் புனிதநாளாகக் கொண்டாடுகிறார்கள். மஹாவீரர் பிறந்த ஆண்டு குறித்து ஸ்வேதம்பரர்கள், திகம்பரர்கள் ஆகிய சமண மதத்தின் இருபிரிவினரிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர் பிறந்த தினத்தை இருவரும் சேர்ந்தே கொண்டாடுவார்கள். அவரது பிறந்தநாளன்று பலவிதமான ஊர்வலங்களும் வழிபாடும் நடைபெறும்.

மஹாவீரர் பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அவர் பிறப்பதற்கான நற்செயல்கள் தென்பட்டன. தெய்வீகக் குழந்தை அவதரிக்கப்போகிறது என்பதை உணர்த்தும்விதமாக நாடு முழுவதும் மகிழ்ச்சி அலை பரவியது. நாடெங்கும் வளமும் நலமும் செழித்தோங் கியது. மஹாவீரரை வயிற்றில் சுமந்து கொண்டு இருக்கும் போது அவருடைய தாய்க்கு வெள்ளை யானை, துள்ளும் மீன்கள், தாமரை மலர்கள் நிறைந்த நீர்ப்பரப்பு, பூமாலை, வெள்ளை எருது, அமைதியான பாற்கடல் போன்ற நிறைவைக் குறிக்கும் கனவுகள் தோன்றின என நம்பப்படுகிறது.


மஹாவீரர் எந்த இடத்தில் பிறந்தார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடம் பண்டைய வைஷாலி நகரத்தில் இருந்த குந்தலகிராமா. குந்த்கிராம் அரசர் சித்தார்த்தாவுக்கும் ராணி திரிஷலாவுக்கும் மகனாகப் பிறந்தார் மஹாவீரர்.

அதிகாலை நான்கு மணிக்கு மஹாவீரர் அவதரித்தார் என்பதால் இன்றும் சமணர்களுக்கும் இந்துக்களுக்கும் அதிகாலை நான்கு மணி புனிதநேரமாக இருக்கிறது. மஹாவீரர் பிறந்த போது மூன்று உலகங்களிலும் மகிழ்ச்சி யும் நிறைவும் பெருகின. தீர்த்தங்கரரை வாழ்த்த வானுலகில் இருந்து தேவர்களும் தேவதை களும் இறங்கி வந்ததாக நம்பப்படுகிறது. அவர்கள், குழந்தையை நன்னீராட்டி வர்த்தமான், வீர், மஹாவீர், அதிவீரா போன்ற பெயர்களைச் சூட்டினார்கள். ஒப்பீடற்ற தெய்வீக அழகுடன் அந்தக் குழந்தை விளங்கியது.

மஹாவீரர் என்னும் வடமொழிச்சொல்லுக்கு சிறந்த வீரர் என்று பொருள். அதை உணர்த்தும் விதமாக சிறு வயதிலேயே கொடிய விஷமுடிய பாம்பை இவர் அடக்கியிருக்கிறார்.

மஹாவீரர் தனது 30-வது வயதில் உலகப் பற்றைத் துறந்து, துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வீட்டைவிட்டு வெளியேறினார். பல துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தார். ஆடையின்றி வலம் வந்தார். சிறுவர்களும் பொதுமக்களும் அவரைக் கல்லால் அடித்தும், கீழ்த்தரமாக நடத்தியும் துன்புறுத்தினார்கள் என்று கல்பசூத்ரா குறிப்பிடுகிறது.

துறவுநிலைக்கு வந்தபிறகு 30 ஆண்டுகள் இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சென்று தன் தத்துவங்களைப் வர்த்தமானர் போதித்தார். மஹாவீரர் போதித்த தத்துவம் எட்டு கொள்கைகளை உள்ளடக்கியது. அவற்றுள் ஐந்து ஆன்மக் கொள்கைகள் மிக முக்கியமானவை. 

பிறஉயிர்களைத் துன்புறுத்தாத அகிம்சை அவற்றுள் முதன்மையானது. சமூகத்தில் அனைவருடனும் நட்பு பாராட்ட உதவும் சத்தியமும், உண்மையும் இரண்டாவது கொள்கை. எக்காலத்திலும் பிறரது உடைமைகளுக்கு ஆசைப்படாத குணம் மூன்றாவது கொள்கை. புலனடக்கத்தை வலியுறுத்தும் பிரம்மச்சரியம் நான்காவது கொள்கை. ஐந்தாவது கொள்கையாக இருப்பது உலக பந்தங்களில் இருந்து பற்றற்று இருக்கும் துறவுநிலை.

உடல், மனம், ஆன்மா மூன்றையும் ஒருமுகப்படுத்தி கட்டுப்படுத்தும் முறையை மஹாவீரர் போதித்தார். தேவைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம் சமூகத்தில் எல்லாருக்கும் எல்லாம் என்றிருப்பதான நிலை கிடைக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். அவர் போதித்த ஐந்து கொள்கைகளும் சமூகக் குற்றங்களை அழித்து, அமைதியை நிலை பெறச் செய்வதாகவே இருந்தன.

உலகெங்கும் பேரமைதி செழித்தோங்க விரும்பிய மஹாவீரர், தமது 72-வது வயதில் உலக வாழ்க்கையைத் துறந்து முக்தி அடைந்தார்.

சுமார் 2600 ஆண்டுகளாக அவரது ஒவ்வொரு பிறந்தநாளையும் ஜைன சமூகத்தினர் மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வகையில், 08-04-2017 ஆகிய இன்றும் மஹாவீரரின் பிறந்தநாள் நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக, சென்னையில் உள்ள ஜைன ஆலயங்கள் மற்றும் ஜைன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வகைகளை வழங்கி ஜைன சமூகத்தினர் மஹாவீர் ஜெயந்தியை கொண்டாடி மகிழ்கின்றனர்.
print this in PDF Print Friendly and PDF

2 கருத்துரைகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்னாளில் ஒரு நல்ல பதிவு. அருமை.

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமையான பதிவு
மகாவீரரின் போதனைகளை மறந்துவிட்டு
அவரது பிறந்தநாளை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms