வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Sunday, February 26, 2012

மாரடைப்பு(Heart Attack)


மாரடைப்பு(Myocardial infarction)


இதயத்திசு இறப்பு (Myocardial infarction), இதயத்தின் ஒரு பகுதிக்கு குருதியோட்டம் தடைப்படும்போது ஏற்படுகிறது. இது பெரும்பாலும் இதயத் தமனியில் தடை ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலாஸ்ட்ரால் போன்ற கொழுப்புப் பொருட்களும், வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்வதால் அத் தமனியின் உட்புறம் குறுகிவிடுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் ஆக்சிசன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலையில் கடினமாய் உழைக்கும் வேளையில் நெஞ்சு வலி ஏற்படும். இந்த வலி ஓய்வு எடுக்கும் போது அல்லது நைட்ரேட் மாத்திரைகள் சாப்பிடும் போது இதய இரத்த ஓட்டம் சீரடைந்து வலி குறையும். மருத்துவ உதவி உரியகாலத்தில் பெறப்படாவிட்டால் நிரந்தரமான இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு இதயத் தசைகள் இறந்து விடும். ஓய்வு எடுத்தாலும் இந்த வலி குறையாது.

அறிகுறிகள்

நெஞ்சை அழுத்துவது போன்ற வலி, வாந்தி, வியர்வை, மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள் ஆகும். சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகள் ஏதும் இன்றியும் இதயத்திசு இறப்பு நிகழக்கூடும்.
இதயம் தசைகளால் ஆனது. தசைகளின் இயக்கத்தின் மூலமே இதயத்தால் இரத்ததை உடலின் எல்லா பாகங்களுக்கும் செலுத்த முடியும். அந்த தசைகளின் இயக்கத்துக்கு இரத்த ஊட்டம் தேவை. அதை தருவது இரத்தக்குழாய்கள். இந்த குழாய்களில் ஏற்படும் அடைப்பால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு வருகின்றது.

 

மாரடைப்பும் இதயத்திசு இறப்பும்

மாரடைப்பு
இதயத்திசு இறப்பு
தற்காலிக இதய இரத்த ஓட்டத் தடை
நிரந்தரத் தடை
உடல் உழைப்பின் போது பொதுவாக வலி ஏற்படும்
ஓய்வின் போதும் வலி ஏற்படும்
பொதுவாக நெஞ்சு வலி அரை மணி நேரத்திற்கு மிகாது.
அரை மணி நேரத்திற்கும் அதிகமாகவே இருக்கும்
இளைப்பாறுதல், நைட்ரேட் மாத்திரைகள் சாப்பிடுதல் போன்றவற்றால் வலி குறைய வாய்ப்புண்டு
இவற்றால் வலி குறையாது.
டிரோப்போனின்-டி போன்ற வேதிப்பொருட்களின் அளவு குருதியில் கூடாது.
இதயத்தசை இறப்பைக் காட்டும் டிரோப்போனின்-டி போன்ற வேதிப்பொருட்களின் அளவு குருதியில் கூடும்.

திடீர் இரத்தக்குழாய்க் கூட்டறிகுறி

திடீர் இரத்தக்குழாய்க் கூட்டறிகுறி என்பது நிலையற்ற மாரடைப்பு (unstable angina) மற்றும் இதயத்திசு இறப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இதயத்திசு இறப்பு என்றாலே பெரும்பாலான வேளைகளில் இதய மின்துடிப்புப் பதிவியில் ST உயர்ந்து இருக்கும். ஆனால் நிலையற்ற மாரடைப்பில் ST உயர்வு காணப்படாது. இவ்விரண்டிலுமே நெஞ்சு வலி காணப்பட்டாலும் இரண்டையும் வேறுபடுத்தி அறிய வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் இவ்விரண்டு நிலைகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட வகையில் மருத்துவமளிக்கப்பட வேண்டியவை.
இதயத் திசு இறப்பு (STEMI - ST Elevation MI)
நிலையற்ற மாரடைப்பு (NSTEMI - Non ST Elevation MI)
ஓய்வில் ஏற்படும் நெஞ்சு வலியும் அதைத் தொடர்ந்த இதயத் தசை இறப்பும்
ஓய்வில் ஏற்படும் வலி அல்லது உடலுழைப்பில் உண்டாகும் மாரடைப்பு மோசமாதல் அல்லது சாதாரண உடலுழைப்பின் போது கூட ஏற்படும் மிக மோசமான வலி
ST உயர்வு, டிரோப்போனின் உயர்வு காணப்படும்.
80 விழுக்காட்டுக்கும் மேல் காணப்படாது.
இரத்தக்கட்டி கரைப்பான்கள் தரப்பட வேண்டும்.
இரத்தக்கட்டி கரைப்பான்கள் தரப்படக்கூடாது.

 

மாரடைப்பு அதிகப்படுத்தும் காரணிகள்

மாற்ற இயலாத காரணிகள்:
 • வயது (40 க்குமேல், வயது ஏற நோய் தாக்கும் ஆபத்தும் அதிகரிக்கும்)
 • பாலினம் (அதிகமாக ஆண்கள். 45 - 50 வயதுக்குமேல் சமமான வாய்ப்பு)
 • பரம்பரையாக வரும் வாய்ப்புகள்
 • வாழும் இடம்
மாற்ற இயலும் காரணிகள்:
 • நீரிழிவு
 • அதிக இரத்த அழுத்தம்
 • அதீத எடை
 • அதிக கொழுப்பு
 • புகைப்பிடித்தல்
 • அதிகமாக மது அருந்துதல்
 • குறைந்த உடல் உழைப்பு / உடல் பயிற்சியின்மை
 • மன அழுத்தம்

மாரடைப்பை தவிர்க்கும் வழிகள்


 • நீரிழிவு நோய் உடையவர்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது.
சரியான சர்க்கரையின் அளவு: சாப்பிடுவதற்கு முன்பு: 70 லிருந்து 110 மி.கி/ டெ. லி வரை சாப்பிட்ட இரண்டு மணிகளுக்குப்பிறகு: 100 லிருந்து 140 மி.கி/ டெ. லி வரை
 • இரத்த கொதிப்பு உள்ளவர்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது.
சரியான இரத்த அழுத்தத்தின் அளவு: 120/ 80 மிமி/ ஏச்ஜி
 • அதிக எடை உள்ளவராயின் உடல் எடையை குறைப்பு.
ஏறக்குறைய சரியான எடை= உயரம் (செண்டி மீட்டரில்) 100
 • கொழுப்பு சத்தின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.
மொத்த கொழுப்பின் அளவு 200 ம் குறைவாக இருப்பது நல்லது கெட்டகொழுப்பின் (LDL) அளவு 130 ம் குறைவாக இருப்பது நல்லது நல்ல கொழுப்பின் (HDL) அளவு 35 க்கு மேல் இருப்பது நல்லது
 • புகைப்பிடித்தலை அறவே நிறுத்தி விட வேண்டும்
புகைப்பதை விடுவதுடன் மற்றவர் விடும் புகையை சுவாசிப்பதையும் தவிர்த்தல்
 • மன அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.
மன அழுத்தத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் இவைகளில் சிலவற்றை பயில வேண்டும் - யோகா, தியானம், இசை, சிரிப்பு பயிற்சி மற்றும் நண்பர்கள்
 • தினமும் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சிகளை மேற்கொள்வது
உடற்பயிற்சிகள் தொடங்கும் வயது: 2. இன்றைய குழந்தைகள் கணினி, தொலைக்காட்சி பெட்டி முன் அமரும் நேரத்தை விட விளையாடும் நேரம் மிக மிகக்குறைவு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட செய்யவேண்டும். சிறார்கள் கொழு கொழு என்று இருப்பது நல்லதல்ல. தினமும் குறைந்தது அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை உடல் பயிற்சி மற்றும் வேகமான நடை பயிற்சிகளை (அல்லது மெதுவாக ஓடுதல்/ நீந்துதல்/ மிதி வண்டிப்பயிற்சி) மேற்கொள்ளவேண்டும்.
 • சமச்சீரான / நல்ல ஆரோக்கியமான உணவுமுறைகள்
உணவை மருந்தை போல் சாப்பிட்டால் பின்னாளில் மருந்தை உணவாக சாப்பிடவேண்டியது இல்லை. கொழுப்பு குறைந்த, உப்பு குறைந்த, எண்ணை குறைந்த, பழங்கள் நிறைந்த, பச்சை காய்கறிகள் நிறைந்த உணவே ஆரோக்கியமானது. மஞ்சள் கரு இல்லாத முட்டை, வேகவைத்த மீன், தோள் உரித்த கோழி அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

மருத்துவம்

வலி நீக்கல் வலி பரிவு (sympathetic) நரம்பு மண்டலத்தைத் தூண்டி இதயத் துடிப்பை அதிகரிக்கும். இதனால் ஏற்கனவே செயல் இழந்த நிலையில் உள்ள இதயம் மேலும் செயலிழக்கும். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றது இந்த வலி. எனவே வலியை உடனடியாகப் போக்க வேண்டும். சாதாரண வலி நீக்கிகள் எல்லாம் இந்த வலிக்கு பயன்படுத்தக் கூடாது. வலியைப் போக்க மார்ஃபின் சல்ஃபேட் 5 முதல் 10 மில்லிகிராம் சிரை வழியாய்த் தரப்பட வேண்டும். இதயத் திசு இறப்பால் பாதிக்கபட்டோருக்கு ஒரு போதும் தசையுள் (intra muscular)மருந்து செலுத்தக் கூடாது. பின்னர் இரத்தக் கட்டி கரைப்பான்களைத் தரும் போது ஊசி போட்ட இடத்தில் இரத்தக் கசிவு ஏற்பட்டு வீங்கிக் கொள்ளும்.

ஆராய்ச்சி

ஆண்கள் இரத்த தானம் செய்வது இதயத்திசு இறப்பைக் குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இத்தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லை.
தங்களுடைய எலும்பு மஜ்ஜை இதயத் தமனிகளுக்குள் செலுத்தப்பட்டு குருத்தணு சிகிச்சை பெற்றோர் இதயத்திசு இறப்புக்குப் பின் முன்னேற்றம் பெறுவதாய் ஆராயப்பட்டுள்ளது. உயிரிப்பொருட்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான ஆய்வுகள் அனைத்தும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன.

Saturday, February 25, 2012

நீரிழிவு (Diabetes)


Diabetes


நீரிழிவு என்பது மனிதருக்குத் தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது. அதாவது நீரிழிவு என்பது ஒரு நோயல்ல அது உடலின் இன்சுலின் ஆனது சமசீர் இழத்தல் நிலை ஆகும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியம். குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல் இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது.

நீரிழிவில் மூன்று வகைகள்

1 வதுவகை

முதலாவது வகை (Type I Diabetes-IDDM- Insulin Dependent Diabetes Mellitus) நீரிழிவானது குழந்தைகள் சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. 10% வீதமான நீரிழிவு நோயாளிகள் வகை 1 இனால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

2 வது வகை

இரண்டாவது வகை நீரிழிவு (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதியளவு இன்சுலின் சுரக்காதாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை (Resistance) ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரழிவை நிறைகுறைவதாலும் சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.

3 வது வகை

மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவானது 2 % முதல 4 % பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். நமது இரைப் பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.

குருதியில் உள்ள வெல்லம் கலன்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?

பல காரணங்களால் இது நிகழலாம்.
 • தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.
 • இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல்.
போன்ற காரணங்களால் ஏற்படலாம்.

நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படும்?

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள், ஆகியவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

நீரிழிவு நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?

பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள்
 • அடிக்கடி சிறுநீர் கழிப்பது
 • அடிக்கடி தாகம்
 • அதிக பசி
 • மிக வேகமாக எடை குறைதல்
 • அதிகமாக சோர்வடைவது
 • கண்பார்வை மங்குதல்
 • வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்
 • திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்
 • பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல்

நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?

இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படக்கூடியவை.

நீரிழிவு நோயினை உறுதி செய்யும் சோதனை முறைகள்

நீரிழிவு நோயினை உறுதிசெய்வதற்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் அளவானது அளவிடப்படுகின்றது. பட்டினிக் குருதிச் சர்க்கரை அளவு (Fasting plasma glucose) 7.0 mmol/L (126 mg/dL) இலும் அதிகமாக அல்லது எதேச்சையான குருதிச் சர்க்கரையின் அளவு (Random plasma glucose) 11.1 mmol/L (200 mg/dL) இலும் அதிகமாக காணப்பட்டால் நபர் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என உறுதி செய்யப்படும்.
 
நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?
 
அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.
உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா?

கீழே இருக்கும் அறிகுறிகளையும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் குறித்துக் கொள்ளுங்கள்.


1.அடிக்கடிசிறுநீர் கழித்தல் – 4

2. எப்போதும் பசித்தல் – 2

3. தண்ணீர் அதிகமாகக் குடிப்பது – 4

4. எப்போதும் களைப்பாக இருக்கும் – 2

5. ஆறாத புண் – 2

6. பிறப்புறுப்பில் இன்பெக்சன் – 3

7. உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல் – 2

8. காரணமில்லாமல் எடை குறைதல் – 2

9. இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு 2

10. மிகக் கூடுதல் எடை – 3

11. கால் மரத்துப் போய் உறுத்துதல் – 2

12. மங்கலான பார்வை – 2


நீங்கள் உங்களுக்காகக் குறித்துள்ள மதிப்பீட்டின் கூட்டுத் தொகை 7-க்கு அதிகமாக இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

நீரிழிவை கவனிக்காததால் ஏற்படும் விளைவுகள்

நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் . கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக,

1. பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம்.

2. சிறுநீரகங்கள் சேதமடையலாம்.

3. இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம்.

4. காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள் வரலாம்.

5. உடலுறவில் இயலாமை ஏற்படலாம்.

6. மூளைச்சேதமும் ,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

Affecting Parts by Diabetes


 
நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால் ,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.


நீரிழிவு நோயின் சிகிச்சையில்

1. உணவுமுறை

2. உடற்பயிற்சி

3. நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள்
    எடுத்துக்கொள்தல்

4. இன்சுலின் பயன்படுத்துதல்

இந்த சிகிச்சைகளைத் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்.

1. உணவு முறை

சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ-ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.

1. கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.

2. கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.

3. சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள்.

4.கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

5. சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

6. மீன், கோழி, பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா?

நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப்பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைகளையும் மருந்துகளையும் தெரிவிக்கலாம்.

நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்

உங்கள் மருத்துவரிடம் உங்களுக்காக ஒரு உணவு அட்டவணையைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.

மாற்று உணவு வகைகள் என்றால் என்ன?

ஆகாரத்தில் மாற்றங்கள் எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட சமமாக இருக்கும் மற்ற உணவு வகைகள்தான் மாற்று உணவு வகை.ஓர் உணவு வகைக்குப் பதிலாக கீழ்கண்ட 7 மாற்று உணவு வகைளை மாற்றி மாற்றி சாப்பிடலாம்.

1. காய்கறிகள்.

2. கார்போஹைட்ரேட்ஸ்.

3. பழங்கள்.

4. இறைச்சி, மீன் மற்றும் பருப்புகள்.

5. பால் மற்றும் பால் தயாரிப்புகள்.

6. தானியங்கள்.

7. எண்ணெய்,கொழுப்பு மற்றும் கொட்டை வகைகள்.

2. உடற்பயிற்சி

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால்,

1. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
2.எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
3.நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது.
4. உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.

உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை

உங்கள் உடலுக்கேற்ற பயிற்சியைப் பற்றி முதலில் உங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.

1.கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து தவறாமல் செய்யவும்.
2.மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுக்களில்                  பங்கெடுத்துக் கொள்ளவும்.
3. காலி வயிற்றுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
4.இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
5.இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதாக இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது. நீரிழிவு கட்டுக்குள் இல்லாத போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

3. மாத்திரைகள்

சில சமயங்களில் , இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது. சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய உதவும்.

சில மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, கணையத்தைத் தூண்டிவிடுகிறது. மாத்திரைகள் சிறப்பாகச் செயல்புரிய , இன்சுலின் சுரக்கும் அளவிற்கு நோயாளியின் கணையம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

சில மாத்திரைகள் , செல்லினுள் இன்சுலின் நுழைந்து செயல்புரிய உதவுகிறது. சில மாத்திரைகள் குடலிலிருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன.

4.இன்சுலின்

நீரிழிவு முற்றினால், பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்து விட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ளத் தொடங்குவது நல்லது.

இன்சுலின் எப்படி செயலாற்றுகிறது?

இரைப்பைக்குப் பின்னால் உள்ள உறுப்பான கணையத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன்தான் இன்சுலின். இன்சுலின் சுரக்காமல் போனால் அல்லது குறைவாகப் போனால் அல்லது செயல்பட முடியாமல் போனால் செல்களுக்குள் சர்க்கரை (குளுக்கோஸ்) செல்ல முடியாது. இரத்தத்திலேயே அதிக அளவில் தங்கிவிடும். எனவே நீரிழிவு முற்றினால், இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட பிறகு இரத்த ஓட்டத்தில் கலந்து , உடல் முழுவதும் பரவுகிறது. செல்லின் மேற்பரப்பில் படர்ந்து செல்லினுள் சர்க்கரை புக வழி செய்கிறது.

இன்சுலினின் வகைகள்

இன்சுலின் இனம், செயல்பாடு மற்றும் அதன் சக்தியை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.

இன்சுலின் அதன் மூலத்தைப் பொறுத்து ஹியூமன், போர்சைன், போவைன் போன்ற வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஹியூமன் இன்சுலின் மரபியல் மூலமாக அல்லது செமி சிந்தெடிக் முறையில் தயாரிக்கப் படுகிறது. போர்சைன், போவைன் இன்சுலின் முறையே பன்றி மற்றும் மாடுகளின் கணையங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இன்சுலின் செயல்படும் கால அளவு, அதன் செயல்படும் திறன்களைக் கொண்டும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

இன்சுலின் ஊசி எப்படி தாமாகவே போட்டுக் கொள்வது?

1. முதலில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.

2.உங்கள் இன்சுலின் சக்திநிலைக்கு ஏற்ற சிரின்ஜைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது 40 ஐ.யூ.இன்சுலினுக்கு 40 ஐ.யூ. சிரின்ஜ். நீங்கள் கலங்கலான இன்சுலினைப் பயன்படுத்தினால், உள்ளே இருக்கும் வண்டல் முழுவதும் நன்கு கலக்கும் வரையில் பாட்டிலைக் கவிழ்த்துக் குலுக்கவும்.

3.இன்சுலின் செலுத்த வேண்டிய அளவு வரை சிரின்ஜ் மூலம் பாட்டிலை நேராகப் பிடித்து காற்றை மெதுவாக உள்ளே செலுத்தவும்.

4.தேவையான அளவு இன்சுலினை இழுக்கவும். காற்றுக் குமிழிகளைப் போக்க சிரின்ஜை மெதுவாகத் தட்டவும்.

5.ஊசி போட வேண்டிய இடத்தில் உள்ள தோலைப் பிடித்து அகலமான மடிப்பினுள் தோலின் அடியில் உள்ள அடுத்த திசுவிற்கு எதிராக 90 டிகிரி கோணத்தில் ஊசியைக் குத்தவும்.

6.இன்சுலினை மெதுவாகச் செலுத்தவும் ஊசியை வெளியே எடுக்கும் பொழுது, அந்த இடத்தில் வேறொரு விரலால் அழுத்திக் கொண்டே எடுக்கவும்.

7. தோலின் அடியில் உள்ள திசுவில் மாறுதல் வராமல் இருக்க ஊசி போடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.


நினைவில் வைத்திருக்க வேண்டியவை

1. நீங்கள் நீரிழிவைப் பற்றி அறிந்து, புரிந்து சமாளிக்க மனம் வைத்தால் போதும். மற்றவரைப் போல ஆரோக்கியமாக, உற்சாகமிக்க, மனம் நிறைந்த வாழ்க்கை வாழலாம்.

2. உங்கள் நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய நபர் நீங்கள்தான். மருத்துவரும்,மற்றவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் அறிவுரை வழங்குவார்கள்.

3. நீங்கள் நோயுற்றிருந்தாலும் இன்சுலினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் சாப்பிட முடியாத போது திரவநிலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

4. சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. சிகிச்சையின் முடிவுகளைத் தவறாமல் குறித்து வைத்துக் கொண்டால்தான் நீரிழிவை சிறப்பாகச் சமாளிக்க முடியும்.

5.தவறாமல் பரிசோதனைகள் செய்வதும், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வதும்   மிக முக்கியம்.


6.ஹைப்போக்ளைசீமியாவை உடனடியாக சமாளிக்க கையில் குளுக்கோஸ், சர்க்கரை போன்ற இனிப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.

7.உங்கள் கைகள், பாதங்கள், கண்கள், பற்கள் மற்றும் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்ளவும்.


சரிவிகித உணவு, தவறாத உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை போன்றவற்றால், நீரிழிவு இருந்தாலும் உங்கள் இலக்கை அடைய உதவும்.

நன்றி :   

மருத்துவ ஆலோசகர் திரு.Dr.ரமேஷ் சதாசிவன்.MBBS,FCIP,RCGPஅவர்கள்

தமிழ் விக்கீபீடீயா,முத்துக்கமலம் இணையஇதழ், தினநாளிதழ்

 

-‘ Arrow சங்கர்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms