Tuesday, December 22, 2015

தொண்டை வலி

குளிர்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்களில் தொண்டை வலியும் ஒன்றாகும்  பருவ நிலை மாற்றங்களால் வரும் மழை,குளிர் காற்று தொற்று மற்றும் சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும் போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும் போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது. இதன் அடுத்த கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கு ஒழுகல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப் புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது. ஸ்டிரெப்டோகாக்கஸ் கிருமி நோய் பரவலுக்கு காரணமாகிறது. தொற்று பரவும் போது டான்சில்ஸ் வீங்கும். இதனால் எச்சில் விழுங்கும் போது வலி ஏற்படும். தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். சளி, எச்சில் மற்றும் கைகள் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது. 

தொடக்கத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விடும்போது நோய் கடுமையாகி மூச்சுக் குழலில் தொற்று உண்டாகி வீக்கத்தால் காற்றுப்பாதை அடைபடலாம். இதனால் மூச்சு விடுவது மற்றும் விழுங்குவது இரண்டுமே சிரமமாகும். கடும் தலைவலி மற்றும் அதிக காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தொண்டைப் புண்ணுக்கு மருந்துகள் தரப்பட்டால் அவற்றை முழுமையாக உட்கொள்ள வேண்டும். பாதியில் நிறுத்துவதால் சில பாக்டீரியாக்கள் தொண்டையிலேயே தங்கி விட வாய்ப்புள்ளது. இவற்றைக் கண்டுகொள்ளாமல் விடும் போது ருமாட்டிக் காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் தொற்று போன்ற சிக்கல்களை உண்டாக்கும். 

எனவே தொண்டை வலி ஏற்பட்டவுடன் காது மூக்கு தொண்டை நிபுணரை அணுகி ஆன்டிபயாடிக் மற்றும் ஆன்டிஇன்பிளமேட்டரி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.பாதுகாப்புமுறை: தொண்டையில் நோய் தொற்று இருக்கும் பட்சத்தில் இதமான சூட்டில் சுத்தமான திரவ உணவுகள் (தண்ணீர், சூப்) எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் சளி மென்மையாகி எளிதில் வெளியேறும். கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். இது தொண்டைக்கு இதமளிப்பதுடன் சளி வெளியேறவும் உதவும். 

சப்பி சாப்பிடும் மாத்திரை மற்றும் இனிப்பில்லாத சூயிங்கம் ஆகியவற்றை சுவைப்பதால் அதிக உமிழ்நீர் சுரந்து தொண்டையை சுத்தம் செய்யும். இந்த மாதிரியான நேரங்களில் பேச்சைக் குறைப்பதும் அவசியம். அசுத்தக் காற்றை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும். புகைபிடித்தலை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். காய்ச்சல், ஜலதோஷம் இருக்கும் பட்சத்தில் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது முக்கியம். கைகளால் முகத்தைத் துடைப்பதை தவிர்க்கலாம். 

குழந்தைகளுக்கு ஒரு ஆண்டில் தொடர்ந்து மூன்று முறைக்கும் மேல் டான்சில் நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அதில் இருந்து கிருமிகள் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. டான்சில் அறுவை சிகிச்சை செய்வதால் குரல் மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தியில் எந்த பாதிப்பும் இருக்காது. சுகாதாரமான உணவு, குளிர்பானம், தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் தொண்டை வலியில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

பாட்டி வைத்தியம்

அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து அதன் சாற்றைக் குடித்தால் சளி நீங்கும்.

ஆகாயத்தாமரை இலைச்சாறுடன் பன்னீர் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், மூச்சிரைப்பு குணமாகும். 

ஆடாதொடா இலை, வேர் சம அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் இருமல், காய்ச்சல் குணமாகும். 

ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலையில் தேய்த்துக் குளித்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு, தலைவலி நீங்கும். 

இஞ்சி சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் குணமாகும். 

இஞ்சியுடன் தேன், லவங்கப் பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
 
உப்பை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைக் கட்டு குணமாகும். 

கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும். 

கற்பூரவள்ளிச் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால் மூக்கில் நீர் கொட்டுதல், தலைவலி குணமாகும். 

கிராம்பை நீர் சேர்த்து மை போல அரைத்து நெற்றி, மூக்கில் பற்றுப் போட்டால் மூக்கடைப்பு குணமாகும். 

குப்பைமேனிக் கீரையை அரைத்து அதில் சுண்ணாம்பு கலந்து தொண்டைப் பகுதியில் தடவினால் தொண்டைக் கட்டு சரியாகும்.

தொண்டை வலி இருக்கும்போது சாப்பிடவும் இதமாகவும் உள்ள உணவு வகைகள்:

அசைவம் : பெப்பர் சிக்கன் மசாலா: சிக்கன் அரை கிலோ, சின்ன வெங்காயம் 100 கிராம், தேங்காய் துருவல் அரை கப், மிளகுத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், சீரகம், கருவேப்பிலை, சிவப்பு மிளகாய் ஆகிவற்றை வதக்கவும். இத்துடன் தேங்காய் துருவல், கொத்தமல்லித் தூள் ஆகியவை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம் நறுக்கியது, தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த கலவை மற்றும் சிக்கன் சேர்க்கவும். கெட்டியான பதத்தில் வெந்த உடன் மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். 

சைவம் : ஜிஞ்சர் கார்லிக் சூப்: பூண்டு உரித்தது 10 பல், இஞ்சி சிறிய துண்டு எடுத்து இரண்டையும் நெய்யில் வதக்கவும். பின்னர் தண்ணீரில் 10 நிமிடம் இஞ்சி, பூண்டை வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். கொதித்த தண்ணீரை சூப் வைக்க பயன்படுத்தவும். தண்ணீரில் சிறிதளவு சீரகத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் அரைத்த பேஸ்ட் சேர்க்கவும். இதில் தேவையான அளவு சோயாமாவு மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். சூப் பதத்துக்கு வந்த பின்னர் வெங்காயத் தாள் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். பூண்டில் எதிர்ப்பு சக்தி இருப்பதால் சளித் தொல்லை வெகுவாக குறையும். 

கேரட் கார அடை: பச்சைப் பயறு அரை கப், அரிசி அரை கப் எடுத்து 4 மணி நேரம் ஊறவைத்து அடை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை கட் செய்து போடவும். துருவிய கேரட், கருவேப்பிலை, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து அடை பதத்துக்கு மாவைக் கரைத்து தோசைக் கல்லில் ஊற்றி எடுக்கலாம். 

டயட்

தொண்டை வலி உள்ளவர்கள் என்னென்ன சாப்பிடலாம் என்று உணவு ஆலோசகர்கள் கூறுபவை:  
குடிக்கும் தண்ணீர் மற்றும் சாப்பிடும் உணவு ஆகியவை சுத்தம் இல்லாத போது, அதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவற்றால் தொண்டையில் நோய் தொற்று ஏற்படுகிறது. தொண்டை வலி வருவதை தடுக்க கண்டிப்பாக ரோட்டோரங்களில் விற்கும் உணவுகளை தவிர்க்கவும். தண்ணீர், குளிர்பானம், ஐஸ்கிரீம் எதுவாக இருந்தாலும் சாப்பிடும் முன்னர் அதன் சுத்தத்தில் கவனம் செலுத்துவது அவசியம். 

தொண்டை வலி இருக்கும் பட்சத்தில் சூடான மற்றும் காரமான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். இந்த சமயத்தில் அசைவ சூப் மற்றும் அசைவ உணவு வகைகள் எடுத்துக் கொள்வதும் நல்லது. உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்தல் மற்றும் சுடு தண்ணீரில் குளிப்பது அவசியம். குளிர் பானம், நெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி, பால், மோர் ஆகியவற்றை தவிர்க்கவும். சர்க்கரை சேர்த்த இனிப்பு பதார்த்தங்களையும் சாப்பிட வேண்டாம். இதனால் இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம். கொள்ளுப் பருப்பு தொண்டையில் பரவும் நோய் தொற்றை தடுக்கும். 

வைட்டமின் சி உள்ள மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணப் பழங்கள், பச்சைக் காய்கறிகள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். உணவில் பூண்டு அதிகம் சேர்க்கும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதமான உணவு, நிறையத் தண்ணீர் குடிப்பதுடன் கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்குவதன் மூலம் தொண்டை வலியை விரைவில் விரட்ட முடியும்.

எனக்கு தற்போது ஏற்பட்ட கடுமையான தொண்டை வலிக்காக எனது குடும்ப மருத்துவரிடம் சென்ற போது எனக்கு கிடைத்த ஆலோசனையும் நிவாரணமும்தான் இந்த பதிவை எழுத வைத்தது.
Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பயனுள்ள பதிவு
நன்றி நண்பரே

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms