வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, June 14, 2018

மேல்நோக்கு நாள்- கீழ்நோக்கு நாள்-சம நோக்கு நாள்

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் இப்படியான வார்த்தைகள் தினசரி காலண்டரில் உங்கள் கண்களில் நிச்சயம் பட்டிருக்கும். மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் தெரியுமா?மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் ஆகிய மூன்றும் அந்த நாளுக்குரிய நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது.

மேல்நோக்கு நாள்: உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.

கீழ்நோக்கு நாள்: கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட் டில் போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக் கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை செய்யலாம்.

சமநோக்கு நாள்: அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிரு கசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. 

இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு சாலை அமைப்பது, சமமான சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்றவற்றை செய்யலாம்.
-Arrow Sankar Print Friendly and PDF

Friday, June 8, 2018

கர்மா என்பது என்ன?

கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ:


ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்!

அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறதுஎன்றான்.

மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!

அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்!

அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்!

அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!

நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாதுஎன்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.

அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்!

அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்என்றான் கடைக்காரன்!

அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது!

இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படி சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!

மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்!

தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்!

அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்!

அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்!

அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்!

அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது!

இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்!

அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!

குரு சிஷ்யர்களைக் கேட்டார் சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்!.

பல சீடர்கள் அதற்கு பல விதமாக கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்என்றெல்லாம் பதில் கூறினர்!!

குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே..

நாம் அடுத்தவர்கள் மேல்  நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்!

மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே  எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் .

நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.
நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.

எனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்
Arrow Sankar Print Friendly and PDF

Saturday, May 5, 2018

பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?

பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. `ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!' என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். `தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை' என்றே நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார். ஆனால், துரியோதனனோ, '`பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். `அவர்களைப் போரில் கொல்வேன்'' என்று சொல்லுங்கள்' என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், ``அப்படியே ஆகட்டும்'' என்று கூறிவிட்டார். அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை. 
சற்றைக்கெல்லாம், பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது. அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டுவிட்டது. `பிதாமகர் பீஷ்மர் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும், தர்மம் வெல்லும்' என்று நமக்கு ஆசி கூறியவர் ஆயிற்றே. அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால், நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும்'என்று நடுங்கினார்கள்.
பாண்டவர்களின் இந்தச் சோர்வையும் கலக்கத்தையும் கண்ட பாஞ்சாலி, மிகவும் கவலை கொண்டாள். `இனி தன்னுடைய சபதம் என்னாவது? போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே. இந்தக் கண்ணன் என்ன ஆனார்... அவருக்கு இதெல்லாம் தெரியுமா?' இப்படியெல்லாம் பாஞ்சாலி நினைத்துக்கொண்டிருந்தபோதே, கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான்.
பாஞ்சாலியைப் பார்த்து, ``சத்தம் செய்யாமல் என் பின்னால் வா’’ என்று மிக மெல்லிய குரலில் கூறி, அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். போர்க்களத்தினூடே கண்ணன் நடந்து சென்றுகொண்டிந்தான். ரணகளமாக மாறியிருந்த யுத்தபூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி, அந்தப் பிரதேசத்தையே அமானுஷ்யமாக மாற்றியிருந்தது. ஆனாலும், கண்ணன் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் பாஞ்சாலிக்குச் சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கண்ணனின் பின்னால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள். 
யுத்தகளத்தைவிட்டுச் சற்று விலகியதும் மற்றொரு சத்தம் கேட்டது. அரசகுலத்தில் பிறந்தவள் ஆதலால், பாஞ்சாலி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசைதான் அது. திடீரென்று ஓரிடத்தில் நின்ற கண்ணன், பாஞ்சாலியைப் பார்த்து, ``சகோதரி, உன் காலணிகள் மிகவும் சத்தமெழுப்புகின்றன. அவற்றைக் கழற்றிப் போடு’’ என்று கூறினான். பாஞ்சாலியும் அப்படியே காலணிகளைக் கழற்றி வீசினாள்.
பின்னர், தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைச் சுட்டிக் காட்டிய கண்ணன், ``பாஞ்சாலி, நீ  எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச்  செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. மற்றபடி ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காதே’’ என்றான்.
பாஞ்சாலியும் கண்ணன் சொன்னபடியே கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்தாள். அங்கே ஒரு மனிதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அவருடைய காலில் விழவேண்டும் என்ற வேகத்துடன் அவருடைய கால்களில் விழுந்தாள் பாஞ்சாலி. யாரோ  ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர், ``தீர்க்கசுமங்கலியாக இரு பெண்ணே’’ என்று வாழ்த்தினார்.  பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன், அவள் யாரென்றும் கேட்டார். 
பாஞ்சாலி எழுந்தாள். அவளைப் பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார். `போயும் போயும் இவளையா வாழ்த்தினோம்?' என்று தனக்குள் மருகினார். நாளைய போரில் யாரை ஒழித்துக்கட்டப்போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ, அந்தப் பாண்டவர்களின் பத்தினியை, `தீர்க்கச் சுமங்கலியாக இரு' என்றல்லவா வாழ்த்திவிட்டார். தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.
பாஞ்சாலியைப் பார்த்த பீஷ்மர், ``அம்மா பாஞ்சாலி, பிணங்கள்  குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தினூடே நீ தனித்தா வந்தாய்? உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள்?’’ என்று கேட்டார். அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது. அங்கே கண்ணன் நின்றுகொண்டிருந்தான். பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது.
``வா கண்ணா, வா. இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு?’’ என்று கேட்டார்.
``, இதுவா? பாஞ்சாலியின் பாதணிகள்தாம் இவை. அதிக ஓசை எழுப்பவே கழற்றச் சொன்னேன். அதைத்தான் என் உத்தரியத்தில் முடிந்துவைத்திருக்கிறேன்’’ என்றான்.
கண்ணன் சொன்னதுதான் தாமதம்... திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். ``கண்ணா! இது என்ன சோதனை... என் காலணிகளை நீ சுமப்பதா?என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா?’’ - அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.
``தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பேசாதிரு. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயல்லவா..." என்றான் கண்ணன். பீஷ்மர் குறுக்கிட்டு, ``மாயவனே! அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால், நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன். நீ பொல்லாதவன். உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க, அவர்களின் பாதணிகளைக்கூட தாங்கிக்கொண்டிருப்பாய். பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும்? கோபாலா, நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான், ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் ஆகுமென்று நினைத்துவிட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட, பக்தர்களை ரட்சிக்கும் பக்தவத்சலனாக இப்படி பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா?’’என்று வினவினார். பிதாமகரின் கண்களிலும் நீரருவிகள் கொப்பளித்தன. மறுநாள் போரில் அந்தப் பழுத்த பழம் அம்புப் படுக்கையில் விழுந்ததைத்தான் பாரதம் சொல்லுமே..?! 


Arrow Sankar Print Friendly and PDF

Wednesday, March 14, 2018

உலக நுகர்வோர் தினம்

நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ஆம் தேதி, உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்க ப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது; அதன் மீது நடவடிக்கை எடுத்தல்; சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

அனைத்துலக நுகர்வோர் அமைப்பின் சார்பில் அனுசரிக்கப்படும் தினம். 1962ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜான் கென்னடி உலக நுகர்வோர் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அவ்வேளையில் நுகர்வோர் உரிமைகளுக்கான மசோதா பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச நுகர்வோருக்கான அடிப்படை உரிமைகளைப் பெற இந்த மசோதா வழிவகுத்தது. இதனை குறிப்பிடும் வகையில், நுகர்வோர் உரிமைகள் ஆர்வலர் அன்வர் பசல் இத்தினத்தை சர்வதேச நுகர்வோர் தினமாக அறிவித்தார்.
யார் நுகர்வோர்?

நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை பயன்படுத்துபவர். வாடிக்கையாளர் என்பவர், உற்பத்தியாளரிடம் பொருளை வாங்கி, அதை பயன்படுத்தாமல் மற்றொருவருக்கு கொடுப்பவர். உதாரணமாக, தந்தை குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருகிறார். இதில் தந்தை வாடிக்கையாளர். அதை சாப்பிடும் (பயன்படுத்தும்) குழந்தை நுகர்வோர். வணிகத்தில் எத்தனையோ விதமான வியாபாரம் நடக்கிறது. இவை நுகர்வோருக்கு சரியான விலையில், சரியான தரத்தில் கிடைக்கிறதா என்பது சந்தேகமே. உரிமைகள் என்ன என்பதே தெரியாமல் வியாபாரிகளிடம் நுகர்வோர் ஏமாறுகின்றனர். பணம் மட்டுமே குறிக்கோளாக வியாபாரிகளும் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
நுகர்வோர் உரிமை குறித்த புத்தகங்களை படித்து, நுகர்வோர் உரி¬ மகளை தெரிந்து கொள்ளுங்கள். பாடப்புத்தகத்தில் நுகர்வோர் உரிமைகள் குறித்த பாடத்தை சேர்க்க வேண்டும். அரசும், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நுகர்வோர் உரிமைகளையும், அதன் சட்ட திட்டங்களையும் மக்களுக்கு செய்திதாள், "டிவி' உள்ளிட்ட வழிகளில் தெரியப்படுத்த வேண்டும். நுகர்வோர் எதிர்த்து போராடினால் தான், தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்கும். நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வை, தங்களது பகுதியில் குறைந்தது ஒருவருக்காவது ஏற்படுத்த வேண்டும் என இந்நாளில் உறுதி ஏற்போம்.
பாதுகாப்பு உரிமை
உயிருக்கும் உடமைக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விற்பனையிலிருந்து காக்கப்படும் உரிமை. வாங்கப்படும் பொருள் உடனடி தேவையைப் பூர்த்தி செய்வதோடல்லாமல் நீண்ட நலன்களை நிறைவு செய்வதாகவும் இருக்க வேண்டும்.
பொருட்களை வாங்குவதற்கு முன்பாகப் பொருளின் தரம், சேவை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்குமாறு நுகர்வோர் வற்புறுத்த வேண்டும். அக்மார்க், ஐ-எஸ்-ஐ முதலான தரக் குறியீடுள்ள பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.
விவரமறியும் உரிமை
முறையற்ற வியாபாரத்திற்கு எதிராய்த் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொருள்களின் தரம் அளவு, திறன், தூய்மை, வரைநிலை, விலை ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கான உரிமை. ஒரு பொருளைத் தேர்வு செய்வதற்கு அல்லது வாங்க முடிவு செய்வதற்கு முன்பு அப்பொருளைப்பற்றி அல்லது சேவையைப் பற்றி முழு விவரங்களை அளிக்குமாறு நுகர்வோர் வற்புறுத்த வேண்டும். இது அவரைப் பொறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்ளச் செய்யும்.
நுகர்வோரின் குறை  தீர்க்கப் பெறுவதற்கான உரிமை
 நியாயமற்ற வியாபார முறைகள், தயக்கமற்ற சுரண்டல் குறைகளைத் தீர்க்கும் உரிமை. நுகர்வோரின் உண்மையான குறைகளை நியாயமான முறையில் தீர்த்து வைப்பதற்கான உரிமையும் இதிலடங்கும். நுகர்வோர் தங்கள் உண்மையான குறைகளை குறித்து புகார் செய்ய வேண்டும். சில சமயங்களில் புகாரின் மதிப்பு சிறியதாய் இருந்தாலும் மொத்ததில் சமூகத்தில் அதன் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கலாம். நுகர்வோர் தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ள நுகர்வோர் அமைப்புக்களின் உதவியையும் பெறலாம். என்ன நுகர்வோரின் உரிமைகளைப் பற்றி புரிந்து கொண்டீர்களா? இனி எதிலும் அலட்சியமாக இருக்காமல் நமது உரிமைகளைக் கேட்டுப் பெறுவோம். 
தேர்வு செய்யும் உரிமை
போட்டி விலைகளில் விற்கப்படும் பலவகைப் பொருட்களை முடிந்தவரை தெளிவாகப் பார்த்துத் தேர்வு செய்யும் உரிமை. ஏகபோக வியாபாரம் என்றால் நியாயமான விலைக்கு திருப்திகரமான தரம், பணி ஆகியவற்றை உறுதி செய்வதற்கான உரிமை.
Tuesday, March 13, 2018

கோடையில் உண்ண வேண்டிய பழங்களின் வகைகள்

தர்பூசணியின் பயன்கள் :

தர்பூசணி வெளிர் பச்சை மற்றும் கரும் பச்சை நிறமும் வரி வரியாக ஒன்றை அடுத்து ஒன்று காணப்படும். இதன் உள்ளே நன்கு சிவந்த உண்ணத்தகுந்த சதை பகுதி காணப்படும். இந்த சதை பகுதி முழுக்க முழுக்க நீர் நிறைந்து காணப்படும். இந்த சதை பகுதியில் கருப்பு நிற கொட்டைகள் அதிகமாக காணப்படும்.

தர்பூசணி கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலில் உண்டால் தாகத்தையும், கலைப்பையும் தணிக்க கூடிய அற்புதமான பழம்.

இதில் வைட்டமின் பி1, சுண்ணாம்பு சத்து மற்றும் இரும்பு சத்தும் உள்ளது. இது வெள்ளரிப்பழ இனத்தை சேர்ந்தது.

இப்பழத்தை கோசாப்பழம் என்றும் கூறுவர்.

தர்பூசணி அதிக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

முலாம் பழத்தின் பயன்கள் :

முலாம் பழத்தில் புரதச்சத்து, கார்போஹைட்டிரேட், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் ஏ, பி, சி, ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

முலாம் பழத்தை சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். சிறுநீர்தாரை எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும்.

அஜீரணத்தை குணப்படுத்தும் தன்மை முலாம் பழத்திற்கு உண்டு.


முலாம் பழ சதையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.

இளநீரின் பயன்கள் :

கோடை காலம் வந்துவிட்டது. கொதிக்கும் வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க, இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை.

கோடைக்காலத்தில் உடல் சூடு அதிகமாவதால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை இளநீர் பருகுவதால் தடுக்கலாம்.

காலையில் இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. இது உடலுக்கு ஊக்கமும், சத்தும் தரும் ஆரோக்கியமான மருந்து.

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது.

இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளது. இதுத் தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன.

நுங்கின் பயன்கள் :

கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

Arrow Sankar Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms