வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, May 26, 2016

வேற்றுமை மனிதர்கள் -தொழிலாளி

தொழிலாளி

என் தெருவிலுள்ள முடிதிருத்தம் ஒன்றில் முடித் திருத்துவதற்காக அன்று காலை ஏழு மணிக்கு சென்றேன். அப்போதுதான் திறந்து இருந்தது என்பதை ஊதுவர்த்தியின் மெல்லிய வாசனைப்புகையும் செல்போனில் கந்தசஷ்டியும் சொல்லியது. யாரும் இல்லாததால் நானே முதல் ஆளாய் உட்கார முடிதிருத்துபவர்(அவரேதான் அந்த கடையின் முதலாளி) துணி போர்த்தி வழக்கமாய் கேட்கும் கேள்வியோடு ஆரம்பித்தார். அவர் வாயில் இருந்த குட்காவின் வாசனை அவர் கேள்வியோடு சொதப்பி நாற்றமாடியது. தண்ணீர் ஸ்பிரே ஸ்,.. ஸ்,.. என என் தலையை ஜில்லாக்க, சீப்பும் கத்திரிக்கோலும் கச்சேரி ஆரம்பித்தது.

இடைஇடையில் கடை வாசலின் ஓரமாய் குட்கா எச்சிலைத் துப்பிவிட்டு வந்து முடிவெட்டினார். யாரோ செல்போனில் கூப்பிட கந்தசஷ்டி நிற்க முடிதிருத்துபவர் எடுத்து கொஞ்சம் திட்டினார், கொஞ்சம் கொஞ்சினார், கொஞ்சம் மிரட்டினார். நடுவில் மச்சான்,மாமா என்று உறவுமுறையோடு பேசி வைத்தார். கந்தசஷ்டி தொடர  மீண்டும் குட்கா எச்சிலைத் துப்பிவிட்டு வந்து முடிவெட்டினார். முடிந்தது. ஒரு மிருதுவான பிரஷ்ஷால் என் கழுத்தில் தோளில் இருந்த முடியை சுத்தம் செய்து போர்த்திய துணியினை அவிழ்த்து வேலை முடிந்ததை சைகையால் காட்டினார்.

நான் கட்டணம் எவ்வளவு எனக் கேட்க முடிதிருத்துபவர் வாயில் இருந்த குட்காவை  முழுவதும் துப்பிவிட்டு வாயை டிஷுயு பேப்பரில் துடைத்துகொண்டே தெளிவாய் நீங்க குடுங்கய்யா என்றார்.

நான் எவ்வளவு என்று மீண்டும் கேட்க ஏழை தொழிலாளி நீங்க பெரியமனசு பண்ணி நெறையா கொடுத்தாதான்யா எங்க பொழப்பு என்றார்.

நான் நூறு ரூபாய் தாளை நீட்டினேன். பவ்யம்மாக இரு கைகளால் பெற்றுக்கொண்டார். சில்லறை எதுவும் தரவில்லை. போய்வா என்பதுப் போல் தலையை ஆட்டினார்.

இப்போதுதான் நான் ஆரம்பித்தேன்.

கட்டிங்கு (Hair cutting) எவ்வளவுன்னும் சொல்லமாட்டே,ஆனா எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்குவே நீ என்ன பிச்சையா எடுக்குறே. கவுரமான ஒரு தொழிலை செய்றே, அதுக்கு ஒரு வரைமுறை வெச்சிக்க வேணாம்மா, சும்மா கொடுக்கறதுக்கும் வாங்கறதுக்கும் தொழில்னு பேரு கிடையாது என்றேன் கொஞ்சம் கோபமாய்.

இல்ல சார் மத்த கடைக்கு போனா டிப்சு தரமாட்டிங்களா,அதான் என்றார்.

இந்த கடைக்கு நீதான் ஓனர்,நீதான் தொழிலாளி.தொழிலுக்கும் மரியாதை தரமாட்டே,மனுஷனையும் மதிக்க மாட்டே இல்லேஎன்றேன்.

கல்லாவிலுருந்து இரண்டு பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்து சாரி சார் என்று கூறினார்.

மீண்டும் நான், ஒரு நல்ல தொழில செய்றே,அதுக்கு நீ மதிப்பு தர வேணாம்மா, பாக்கு போட்றே, வேலைக்கு  நடுவுலே துப்றே இதுவெல்லாம் உனக்கு வேணா நல்லா இருக்கலாம்,ஆனா கஸ்டமருக்கு நல்லா இருக்காது என்றேன்.

கையெடுத்து கும்பிட்டார்.

அதற்கு பிறகு நான் அந்த கடைக்கு போகவில்லை. அவரும் என்னை வழியில் பார்த்தால் பார்க்காததுப் போல் இருப்பார். நஷ்டம் அவருக்குத்தான் என்பதை நான் மட்டுமே புரிந்து கொண்டிருப்பது மட்டும் வேடிக்கையாக இருக்கிறது.

பின் குறிப்பு : இந்த பதிவை அவர் படிக்க நேரிடும். அல்லது தன் தவறினை வரும் காலத்தில் உணரலாம். அப்பொழுது இந்த பதிவு மீண்டும் தொடரும்.

Print Friendly and PDF 

Sunday, May 8, 2016

கடவுளும் கற்சிலையும்

ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத,ஆகம ,சிற்ப சாஸ்திர முறைப்படி,யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம். ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள்.


பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான கரணம் உண்டு. உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.

நீர்: கல்லில் நீர் உள்ளது.எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.

நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு.கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று

காற்று : கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.

ஆகாயம்: ஆகாயத்தைப் போல் ,வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட'கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.

திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம். இக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். அபிஷேகம்,அர்ச்சனை,ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது ,ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி ,அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.

ஆகம விதிப்படி கண்திறக்கும் முறைகள்
ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் தெய்வத் திருவுருவங்கள் விக்ரகங்கள் எனப் படுகின்றன. இத்திருவுருவங்களில் தாமாகவே தோன்றிய சுயம்பு வடிவங்களும்; தேவர்கள், ரிஷிகள், ஞானிகளால் ஸ்தாபிக்கப்பட்டவையும் உண்டு. ஸ்தாபனம் செய்யப்பட்ட விக்ரகங் களைப் பலவகை பூஜைகளாலும் ஆராதனைகளாலும் கடவுள் சக்தியை நிலைநிறுத்திஅவற்றை வழிபடுவோர் பயன்பெறும்படி செய்துள்ளனர்.

ஆண்டவனது அருளைப் பெற ஆலயங்களுக்குச் சென்று வழிபடு கிறோம். தெய்வ விக்ரகங்களைத் தரிசிக்கும்போது நமது உள்ளத்தில் அருள் அலைகள் பாய்கின்றன. தெய்வச் சிலைகளின் கண்களின் மூலமாகவே நாம் தெய்வ அனுக்கிரகத்துக்குப் பாத்திர மாவதாக உணர்கிறோம்.

ஆலயங்களிலுள்ள மூலமூர்த்தி சிலா விக்ரகம், சுதைமூர்த்தி, தாருக மூர்த்தி என மூவகைப்படும். சிலா விக்ரகங்கள் கல்லாலோ, உலோகத்தாலோ செய்யப்படுகின்றன. சுதை மூர்த்தி என்பது பலவித மூலிகைகளையும் சுண்ணாம்பையும் சேர்த்து வடிக்கப்படும். தாருகமூர்த்தி என்பது மரத்தினால் செய்யப் படுவது.

திருவுருவங்கள் செய்யப்படுவதற்கான பல நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டே சிலைகள் வடிக்கப்படுகின்றன. கல் அல்லது உலோகங்களால் செய்யப்படும் சிலைகளின் கண் திறக் கப்படுவது என்பது கடைசி நிகழ்ச்சியாகவும்; சிலையின் புனிதத்துவத்தை நிலைபெறச் செய்வதற்கான நிகழ்ச்சியாகவும் அமைகிறது. சிலை கண் திறப்புக்கென சில நியதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

சிலை செய்து முடிக்கப்பட்டபின்- கண்கள் திறக்கப்படுவதற்குமுன் அங்க ரத்ன நியாசம் எனப்படும் ஆராதனை செய்யப்படும். நவரத்தினங்களை சிலையின் சிரசு, நெற்றி, கழுத்து, மார்பு, நாபி, கைகள், பாதங்கள் போன்ற ஒன்பது இடங்களில் வைத்துப் பூஜை செய்து, பால் நிவேதனம் செய்து, தூப தீப ஆராதனைகள் செய்வார் கள். அதன்பின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும்.

அபிஷேகம் செய்தபிறகு சிலை செய்த சிற்பியைக் கொண்டு கண்திறக்கச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

சிற்பி கண் திறக்கச் செல்வதற்குமுன் சில நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர் குளித்து, புத்தாடைகள் அணிந்து, பூணூல் தரித்து, நெற்றிக்கு திருக்குறி இட்டு, விரல்களில் மோதிரங்கள் அணிந்து, இடது தோளில் மேலாடை தரித்துக்கொண்டு நிகழ்ச்சியின் முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும்.

பிறகு சிலைக்கு அருகில் ஓரிடத்தில் அரிசியைப் பரப்பி, அதன்மீது கலச ஸ்தாபனம் செய்து பூஜை செய்ய வேண்டும். அக்கலச நீரால் உரிய தேவதையைப் படிமத்தில் ஆவாஹனம் செய்து, அந்த தேவதைக்குரிய மந்திரத்தை ஜெபித்து, அந்தப் படிமத்தை பூஜை செய்ய வேண்டும். பூஜையின்போது மணிமங்கள கோஷங்களை முழங்கச் செய்ய வேண்டும்.

பிறகு ஸ்தபதி விராட்விஸ்வ பிரம்மனைத் தியானித்து, வணங்கி, அவர் அனுமதி பெற்று கண்களைத் திறக்க வேண்டும். பொன்னாலான உளி அல்லது தங்க ஊசியைக் கொண்டு முதலில் வலது கண்ணையும் அடுத்ததாக இடது கண்ணையும் திறக்க வேண்டும். பல முகங்கள் இருந்தால் அவற்றிலுள்ள கண்கள் அனைத்தையும் திறக்க வேண்டும்.

முக்கண்ணனாகிய இறைவனின் வலது கண் சூரியனைக் குறிப்பதால் சூரிய பீஜ மந்திரத்தை ஜெபித்துக் கொண்டும்; சந்திரனைக் குறிக்கும் இடது கண்ணை சந்திர பீஜ மந்திரத்தை ஜெபித் துக்கொண்டும் திறக்க வேண்டும். நெற்றிக்கண் அக்னியைக் குறிப்பதால் அக்னி பீஜத்தை ஸ்மரித்துக் கொண்டு செதுக்க வேண்டும்.

பிறகு கூரிய உளியால் ஒளி மண்டலம், விழி மண்டலம் ஆகிய இரண்டையும் திருத்தமாகச் செய்ய வேண்டும். உடலுக்குரிய ஒன்பது வாசல் களையும் குறிப்பதான ஒன்பது துவாரங்களையும் உளியால் செதுக்க வேண்டும்.

கண்கள் திறக்கப்படும்போது, ஸ்தபதியைத் தவிர வேறு யாரும் அருகில் இருந்து பார்க்கக் கூடாது. நான்கு புறமும் திரையிடப்பட்டு, திரைக்குள்ளேயே தூப தீபம் காட்டி, பால், பழம், தேன் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். படிமத்தில் அதற்குரிய தேவதை எழுந்தருளி நிலைத்திருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

கண் திறக்கப்பட்ட பிறகு சிலையின் கண்கள் முதலில் பார்க்க வேண்டியவை எவை என சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. அவற்றைப் பார்க்கச் செய்யும் நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும்.

சிற்ப நூல்களில் பார்க்க வேண்டியவை பற்றி மிகுதியாகக் கூறப்பட்டிருந்தாலும், நடைமுறையில் உள்ள "தச தரிசனங்கள்' என்ற பத்து வகை தரிசனங்களைப் பார்ப்போம்.

கண்கள் திறந்தவுடன் சுவாமிக்குமுன் ஒன்றன்பின் ஒன்றாக கண்ணாடி, பசுவின் பின்பாகம், ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலிப் பெண்கள், நெற்கதிர்கள், நவதானியங்கள், கன்னியர்கள், சந்நியாசிகள் ஓரிருவர், வேத விற்பன்னர்கள், அடி யார்கள் என்ற வரிசையில் காட்டப்படும். இறுதியாக ஆலயம் கட்டுவித்த எஜமானனை சுவாமிமுன் நிறுத்தி வணங்கிடச் செய்வார்கள்.

இவற்றை ஸ்தபதி மற்றும் சிலர் உடனிருந்து செய்வதோடு, ஒவ்வொரு தரிசன இடைவெளியிலும் தூப தீப ஆராதனைகள் காட்டி மங்கள வாத்தியங் கள் முழங்கச் செய்தல் வேண்டும்.

இவ்வளவு சிறப்புடனும் சிரத்தையுடனும் திறக்கப்படும் இறை விக்கிரகங்களின் கண்கள் பக்தர்கள் மீது அருள்மழை பொழிவதில் என்ன வியப்பு!

 Print Friendly and PDF

Tuesday, May 3, 2016

மே மாதத்தை.....

மே மாதம் என்றவுடன் சுட்டெரிக்கும் வெய்யிலின் தாக்கமே நினைவு வரும். கோடையின் கொடையாக கல்வி நிலையங்கள் அறிவிக்கும் விடுமுறைகூட இந்த மே மாதத்தில்தான் முழுதாக வருகிறது. திடீர் குளிர்பான கடைகள்,சுற்றுலா மையங்கள்,புது சினிமா படங்கள் என வருகிறது. இந்த கோடையின் விடுமுறையை வைத்து சினிமா படம் வெளியிடவும் பல தயாரிப்பாளர்கள் தயாராய் திட்டமிடுவார்கள்.அப்படி வெளியிட தயாரான ஒரு படத்தின் பின்னே ஒரு கவிஞனின் தமிழ் நயமான மே மாத வரவேற்பை பார்ப்போம்.


ஒரு முறை சிவாஜி கணேசனின் படம் ஒன்றிற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பதாக இருந்தது. ஒரு டூயட் பாடல் மலேசியா, சிங்கப்பூர் போய் எடுக்கத் திட்டமிட்டிருந்தார்களாம். மலேசியாவில் குறிப்பாக மே மாதத்தில் படமாக்க வேண்டும் என்பது இயக்குனரின் திட்டமாக இருந்தது.

காரணம் மலேசியாவின் பிரபல மலர் கண்காட்சி அப்போதுதான் தொடங்கும். அதற்கான அவசரத்தில் படப்பிடிப்புக் குழுவினர் இருந்தனர்.
பாடலுக்கான மெட்டு, படப்பிடிப்பு குழுவினருக்கான பாஸ்போர்ட், விசா எல்லாம் தயாராக இருந்தன.

சிவாஜி, மஞ்சுளா கால்ஷீட்டுகளும் ப்ரீ. பாடல் மட்டும் தயாராகவில்லை. பலமுறை கேட்ட போதும் கண்ணதாசன் எழுதி கொடுக்கவில்லை அப்புறம் தருகிறேன்என்பதே அவரது பதிலாக இருந்திருக்கிறது. நாட்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் கவிஞர் கண்ணதாசனுக்கு நல்ல பாடல் வரிகளாக எழுத இயலவில்லையாம்.

எம். எஸ். வி. திரும்பத் திரும்ப கவிஞரிடம் மே மாதம் ஷுட்டிங் இருக்கிறது, பாடலை விரைவில் கொடுங்கள் என்றார்.

மலேசியா செல்வதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கி என்ற நிலையில் கண்ணதாசனிடம் பேசிய எம். எஸ். வீ. மே மாதம் படப்பிடிப்பு நடத்த வேண்டும், பாடல் எழுதி தருகிறாயா? இல்லை வேறு யாரிடமாவது எழுதி வாங்கி கொள்ளட்டுமா? என்று கேட்டிருக்கிறார்.

பொறுமை இழந்த கடுப்பான கண்ணதாசன் என்னையா.... சும்மா மே... மே... ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்கஎன்ற படியே ஐந்து நிமிடத்தில் பாட்டை எழுதி கொடுத்தாராம்.

அந்தப் பாடல்தான் அன்பு நடமாடும் கலைக்கூடமே என்று தொடங்கும் பாடல். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் மே என்று முடியும்.


அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே.
மாதவி கொடிப்பூவின் இதழோரமே
மயக்கும் மதுச்சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குல தங்கமே

பச்சை மலைத்தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே
வெள்ளலை கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே

செல்லும் இடந்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் தமிழ் பாடும் மனமே
உலகம் நமதாகுமே

அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

திரைப்படம்: அவன் தான் மனிதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

 Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms