வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, August 29, 2018

யோக வாழ்வு தரும் ‘5’ பிள்ளையார்கள்!

யோக வாழ்வு தரும் ‘5’ பிள்ளையார்கள்!
கட்டமுது கொடுத்த பிள்ளையார்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தலயாத்திரையில் `திருக்குருகாவூர் வெள்ளடை' என்ற தலத்தை தரிசிக்கச் செல்கிறார். அப்போது கோடை காலம். கடுமையான வெயில். சீர்காழியிலிருந்து இத்தலத்துக்கு வரும் வழியில், நாக்கு வறண்டு தண்ணீர் தாகமும் பசிவேட்கையும் மிகுந்திருந்தன. தம்பிரான் தோழரும் அவருடன் வந்த சிவனடியார்களும் மிகவும் களைப்படைந்தனர். இவர்களின் தவிப்பையும் வேதனையையும் கண்டு மனம் குழைந்த சிவபெருமான், அத்துயரை மாற்ற திருவருள் புரிந்தார்.
அவர்கள் நடந்து வரும் வழியில் எடமணல் என்ற ஊரில் வீடுகளோ அல்லது சாலைகளோ இல்லை. ஊர்ப்பெயருக்கு ஏற்றவாறு எங்கும் வெட்டவெளியாகக் கடற்கரை மணல் போன்று காட்சியளித்தது. ஆனால், அங்கு ஒரு மூலையில் மூத்த பிள்ளையார் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தார். அந்த விநாயகர் மூலம் சுந்தரரின் இடர்நீக்க திருவுளம் பாலித்தார் சிவபிரான்.
“என் அன்பன் சுந்தரன் அடியார் கணங்களுடன் மிகுந்த பசியுடனும் களைப்புடனும் வருகிறான். ஒரு பந்தல் அமைத்து அவர்களுக்கு அன்னம் பாலித்து பசியாற்றி, அவர்கள் இளைப்பாற வழி செய்வாய்” என்று மூத்த பிள்ளைக்கு ஆணையிட்டார் தந்தை. அதன்படி கோடை வெயிலின் சூட்டை அடியோடு மாற்றும் வகையில், குளிர்ச்சியைத் தரும் குளம் போன்ற ஒரு கோடைப் பந்தலை அமைத்தார் பிள்ளையார். அத்துடன், சீலம் மிகுந்த அந்தண வடிவம் கொண்டார் சிவனார் மகனார்; சுந்தரமூர்த்தியாரின் வரவை எதிர்நோக்கினார்.
மாசிலா மறையவரைக் கண்ட சுந்தரர் “சிவாயநம:” என்று கூறி அடியார் கூட்டத்துடன் அருகில் சென்று பேரன்புடன் பேசி பந்தலின் கீழ் அமர்ந்தார். சுந்தரரும் மற்றும் அடியார்களும் பல வகையான சித்திரான்னங்களைப் பசிதீர உண்டனர். ஏலக்காய் பொடியுடன் கூடிய குளிர்ந்த தண்ணீரைப் பருகி களைப்பு நீங்கச் சற்று கண் அயர்ந்தனர். அவ்வளவுதான்! மறையவராக வந்து உணவளித்த மூத்த பிள்ளையார் வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிட்டார். நிழல் கொடுத்த பந்தலையும் காணவில்லை. எதுவுமே தெரியாததுபோல் தம் இருப்பிடத்துக்குச் சென்று அமர்ந்துவிட்டார் அந்த ‘கட்டமுது விநாயகர்'.
சுந்தரர் கண் விழித்துப் பார்த்தார். இறைவன் திருவருளை எண்ணி உருகினார். ‘பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளை வாய்...' (பிணி - பசிப்பிணி) என்று உள்ள மனமுருகிப் பாடினார். சீகாழியிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது எடமணல். இவ்வூர் விநாயகரை வழிபட்டால், வீட்டில் அன்னத்துக்குக் குறையிருக்காது.

வெண்ணெய்ப் பிள்ளையார்!
கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலுக்குத் திருக்குடமூக்கு என்று பெயர். ஒரு பிரளயத்தின்போது, சிருஷ்டி பீஜம் வைத்த குடம் வெள்ளத்தில் மிதந்து வர, சிவபெருமான் ஒரு வேட வடிவில் (கிராத மூர்த்தியாக) வந்து அக்குடத்தின் மீது பாணம் எய்தி சிருஷ்டியைத் தோற்றுவித்த தலம் இதுவாகும். 
குடத்திலிருந்த மண் லிங்க வடிம் பெற்று சிவபெருமானாலேயே பூஜிக்கப்பெற்றது. இவ்வாறு இறைவன் கும்பேஸ்வரராகித் தன்னைத்தானே பூஜித்த சிறப்புடையது இத்திருக்கோயில். இங்கு அருள்பாலிக்கும் மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகை அழகே வடிவானவள். கிராதமூர்த்தி (வேடமூர்த்தி) சந்நிதிக்கு முன்புறம் கிழக்கு நோக்கி (கிணற்றுக்கு எதிர்புறம்) காட்சியளிப்பவர் நவநீத விநாயகர். 
இந்திரனும் நான்முகனும் சத்யலோகம் சென்று அளவளாவியிருந்தனர். அந்த நேரத்தில் காமதேனு அங்கே வேகமாக வந்தபோது, கால் குளம்பினால் துர்வாச முனிவரை மிதித்துவிட்டது. உடனே முனிவர் கோபம் கொண்டு காமதேனுவைச் சபித்தார். இதனால் வருந்திய காமதேனு பிரம்மதேவனை வணங்கி நடந்ததைக் கூறிற்று.  
அவர் காவிரிக் கரையில் திருக்குடமூக்கு என்ற தலத்தில் ஆதி கும்பேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்க வழி கூறினார். 
அதன்படி காமதேனு குடமூக்கில் காசிப தீர்த்தத்தில் நீராடி ஆதி கும்பேஸ்வரரைத் தரிசிக்க வரும்போது, `கணபதியைப்  பூஜை செய்க; உடனே சாபம் நீங்கும்' என்று அசரீரி எழுந்தது. அதன்படி தன் குளம்பினால் ‘குரத் தீர்த்தம்' என்ற தீர்த்தத்தை உண்டாக்கி, விநாயகரைப் பிரதிஷ்டை செய்ததுடன், ஆதிகும்பேஸ்வர பெருமானையும் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்று மகிழ்ச்சியடைந்தது. இந்த விநாயகருக்குத் தன் நவநீதத்தை (வெண்ணெய்யை) எடுத்துச் சார்த்தி `நவநீதக் களிறு' என்று பெயரிட்டு வழிபட்டது. இவருக்குச் சுத்தமான வெண்ணெய் சார்த்தி பூஜை செய்தால், வம்ச விருத்தி முதலான எல்லா யோகங்களையும் பெற்று இன்புறுவர். இந்தத் தகவல், திருக்குடந்தை புராணத்தில் காமதேனு பூசித்த படலத்தில் விரிவாக உள்ளது.

ஞானப் பிள்ளையார்!
அருணகிரிநாதர் திருப்புகழில் பாடிப்பரவிய குன்றுதோறாடு குமரன் தலங்களில் ஒப்பற்ற திருத்தலம் ‘ஞானமலை'. திருவண்ணாமலையில், அருணகிரிநாதர் உலகை வெறுத்துத் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முனைந்தபோது, அவருக்குத் திருவடிக்காட்சி அளித்து அருள் பாலித்தான் அருணைக்கந்தன். அதேபோல், அருணகிரியாருக்கு யோகாநுபூதி அளித்து மீண்டும் திருவடி தரிசனம் கொடுத்த அற்புதத் திருத்தலமே ஞானமலை. இத்தலத்தில் தனித் திருக் கோயிலில் அருள்பாலிக்கும் ‘குறமகள் தழுவிய குமரன்' வடிவம் உலகெங்கிலும் காண இயலாத அரிய மூர்த்தமாகும்.
சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் 95 கி.மீ. தொலைவி லுள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சோளிங்கர் செல்லும் வழியில், 14-வது கிலோமீட்டரில் உள்ள மங்கலம் என்ற ஊருக்கு அருகில், கோவிந்தச்சேரி என்ற கிராமத்தில் உள்ள மலை மீது ஞானமலை ஞானபண்டித சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் மலைக்குச் செல்லும் படிகள் தொடங்கும் இடத்தில் ‘ஞானஸித்தி கணபதி' தனியாக ஒரு சிற்றாலயத்தில் அருள்காட்சியளிக்கிறார். 
`ஸித்தி' என்பது எந்தச் செயலையும் குறைவில்லாமல் நிறைவுறச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பதைக் குறிக்கும். நமது உள்ளத்தில் நற்செயலை நினைக்கவைத்து அதனைச் செயல்படுத்த வலிமையையும் ஊக்கத்தையும் தந்து அதன் பூரணமான பயனை நாமே அனுபவிக்கச் செய்து இன்பமடையச் செய்யும் ஆற்றலே இறையருளாகும். அந்த ஆற்றலுடன் ஞானத்தையும் வழங்கி அருள்வதால் ஞானஸித்தி விநாயகர் என்று இவர் அழைக்கப் பெறுகிறார். 
இவர் நான்கு திருக்கரங்களில் முறையே பரசு, மாங்கனி, கரும்புத்துண்டு, பூங்கொத்து ஆகியவையும், துதிக்கையில் எள் உருண்டையும் கொண்டு எழிற்காட்சியளிக்கிறார். கரும்பு செயல் நோக்கத்தையும், மழுவாயுதம் (பரசு) செயல் ஆக்கத்தையும், பூங்கொத்து அதன் வெற்றியையும், மாம்பழம் செயலின் பலனையும், எள் உருண்டை பயன் அனுபவிப்பதையும் குறிக்கிறது. இவரை வழிபாடு செய்வதால், நாம் மேற்கொள்ளும் செயல்கள் யாவும் சிறப்புடன் நிறைவேறும்; அதன் பலனும் மிக நல்லதாக அமைந்து வாழ்க்கைச் செழிக்கும்.

சிறை மீட்ட பிள்ளையார் 
தொண்டை நாட்டில் நெற்குன்றம் என்ற ஊரில் ஒரு புலவர் வாழ்ந்து வந்தார். அவரது பெயர் நெற்குன்ற வாணர். மிகச்சிறந்த கவிஞர்; ஆசுகவி. ஆனால் வறுமையால் வாடினார். வாழ்க்கை நடத்தப் பொருள் தேவைப்பட்டது. அதனால் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று. கடனைத் திரும்ப செலுத்தவோ வட்டியைக் கட்டவோ இயலவில்லை. கடன் கொடுத்தவர்கள் இவரை மிரட்டினர். அரசனிடம் தெரிவித்தனர். இதனால் பயந்து சோழநாட்டுக்குச் சென்றார்.

இதனிடையே அரசாங்க சேவகர்கள் இவர் சோழ நாட்டில் திருப்புகலூரில் இருப்பதை அறிந்து, இவரைத் தேடி வந்தார்கள். அத்தலத்தில் அக்னி தீர்த்தக் கரையிலுள்ள விநாயகப் பெருமானை தரிசித்து, அங்கிருந்து திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அக்னீச்வரரை வழிபட்டுக்கொண்டிருந்தார் புலவர். அந்த நேரத்தில் சேவகர்கள் இவரைச் சிறைப்பிடிக்க முற்பட்டனர். நெற்குன்றனார் அவர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார் “இங்குள்ள விநாயகரை நான் வழிபாடு செய்துவிட்டு வருகிறேன்'' என்றார். சேவகர்களும் உடன்பட்டனர்.
புலவரும் ஆசுகவியாக ஒரு பாடலைப் பாடினார். பாடலின் ஈற்றடி... `திருப்புகலூர் அரசினிடத்து மகிழ்வஞ்சி ஈன்றவோர் அத்திநின்றே' என்று முடிந்தது. அப்போது அவ்வூரில் வாழ்ந்து வந்த சிந்தாமணி என்ற தாசி அங்கு வந்தாள். அவள், இவரது பாடலைக் கேட்டு வியந்து மகிழ்ந்தாள். திருப்புகலூர் இறைவனிடம் அளவற்ற பக்தியுடைய அவள், தன்னைக் குறிப்பிட்டு இப்பாடல் அமைந்ததாக எண்ணினாள். அவள் உடனே புலவரிடம் ``இச்செய்யுளைக் காப்பாக (விநாயகர் துதியாகக்) கொண்டு ஒரு அந்தாதி பாட வேண்டும்'' என்று வேண்டினாள்.
“இந்தக் காப்பு எனது விலங்கை நீக்குமா'' என்று கேட்டார் புலவர். “நிச்சயமாக!” என்று கூறிய சிந்தாமணி, புலவர் கட்ட வேண்டிய அசல் மற்றும் வட்டித்தொகையை உடனே சேவகர்களிடம் செலுத்தி, சிறை செல்வதிலிருந்து அவரை மீட்டாள். புலவர் அந்த விநாயகப் பெருமானின் அருளை வியந்து `திருப்புகலூர் அந்தாதி' பாடி முடித்தார். 
ஆமாம்! இந்த விநாயகர் திருவருளால்தான் சிறை செல்வதிலிருந்து புலவர் தப்பித்தார்; திருப்புகலூர் அந்தாதியும் நமக்குக் கிடைத்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் அமைந்துள்ளது திருப்புகலூர். இத்தல இறைவனை தேவார மூவரும் போற்றியுள்ளனர். திருநாவுக்கரசு நாயனார் இத்தலத்தில் முக்தியடைந்தார்.

படிக்காசு தந்த பிள்ளையார்
தேவாரப் பாடல் பெற்ற அற்புதமான திருத்தலம் திருவீழிமிழலை. இந்தத் திருத்தலத்துக்கு 23 திருப்பதிகங்களுடன், சேந்தனார் திருவிசைப்பாவும், அருணகிரிநாதரது திருப்புகழும் உள்ளன. 
இங்கு அருள்பாலிக்கும் சுவாமி வீழியழகர் எனும் நேத்ரார்ப்பணேஸ்வரர். இறைவி சுந்தர குஜாம்பிகை. வீழிச்செடி தலவிருட்சமாதலால், இத்தலத்துக்கு வீழிமிழலை என்று பெயர் உண்டாயிற்று. திருமால் இத்தலத்தில் சக்கரம் வேண்டி பூஜை செய்த போது, ஒருநாள் ஒரு மலர் குறையவே தம் கண்ணையே அளித்து சக்கரத்தைப் பெற்றாராம். எனவே நேத்ரார்ப்பண ஈஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார் இறைவன்.  மேலும், இறைவன் உமையை மணந்துகொண்ட தலம் என்பதால், கர்ப்பக்கிரக வாயிலில் `அரசாணிக்கால்' எனும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் `பந்தக்கால்' எனும் தூணும் உள்ளன. தனி மண்டபத்தில் மாப்பிள்ளை சுவாமி என்ற திருநாமத்துடன் அம்மையுடன் அருள்பாலிக்கிறார் கல்யாணசுந்தரர்.
திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் இத்தலத்துக்கு வந்தபோது, அங்கு கடும் பஞ்சம் நிலவியது. சிவபெருமான் இந்த இருவருக்கும் தினமும் ஒவ்வொரு பொற்காசு வீதம் அளித்தருளினார்.
அப்பர் பெற்ற பொற்காசுக்கு வணிகர் உடனே பொருள் கொடுத்தனர். அதைக் கொண்டு அவர் அடியார்களுக்கு அமுதளித்து உதவினர். ஆனால் சம்பந்தர் பெற்ற காசுக்கோ, வாசி (வட்டம் - கமிஷன்) கேட்டனர். அதனால், சம்பந்தப்பெருமான் பொன்னுக்குப் பொருள் பெற்று அடியார்களுக்கு உணவளிக்கத் தாமதமாயிற்று. ஆகவே,
‘வாசிதீரவே காசு நல்குவீர்...' என்று சம்பந்தர் வீழிமிழலை இறைவனைப் பாடி, வாசியில்லா காசு பெற்றார். அவ்வாறு படிக்காசு வைத்த பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும், மேற்கிலும் உள்ளன. 
மேற்கு கோபுரத்தின் வழியே நுழைந்தால் பலிபீடத்தின் அருகே  உள்ளவர் படிக்காசு விநாயகர். அருகில் சம்பந்தர், அப்பரின் திருவுருவங்கள் உள்ளன. அடியார்களுக்கு உணவளிக்கத் தேவையான இந்தப் படிக் காசுகளை இறைவன் ஆணைப்படி விநாயகர் வைத்தார் என்ற செய்தியை ‘பாரறிய அனுதினமும் வீழிநகர்தனில் முன் படிக்காசு வைத்த கணபதி' என்று தலபுராணம் போற்றுகிறது. மயிலாடுதுறை - திருவாரூர் வழியிலும், கும்பகோணம் பூந்தோட்டம் வழியிலும் உள்ளது திருவீழிமிழலை. இந்தப் பிள்ளையாரை வழிபட பொருளாதாரப் பிரச்னைகள் நீங்கும்; கடன் தொல்லைகள் 
விலகும்.

-சக்தி விகடன் 
Arrow Sankar Print Friendly and PDF

Thursday, August 16, 2018

சப்த விடங்கத் தலங்கள் பற்றி் தெரியுமா?

சப்த விடங்கத் தலங்கள் பற்றி் தெரியுமா?
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பர், இறைவனின் திருநடனமே இந்தப் பிரபஞ்சத்தின் அசைவாகக் கருதப்படுகிறது. சைவ சமயத்தில், ஆனந்த தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் ஆக்கத்தின்போதும், ஊர்த்துவ தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் அழிவின்போதும் இறைவன் ஆடும் திருநடனம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு, சிவபெருமான் ஏழு திருத்தலங்களில் ஆடிய ஏழு வித நடனங்கள் சப்த தாண்டவம் என்றும், தாண்டவம் நடைபெற்ற இடங்கள் சப்த விடங்கத் திருத்தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. 'சப்த' என்றால் சமஸ்கிருதத்தில் 'ஏழு' என அர்த்தமாகும். 'விடங்கம்' என்பதற்கு உளியால் செதுக்கப்படாதது என்று பொருளாகும். எனவே, உளியால் செதுக்காமல் சுயம்புவாகத் தோன்றிய மூலவரை உடைய ஏழு திருத்தலங்கள் இந்த சப்த விடங்கத் தலங்கள் ஆகும்.

திருவாரூர் - அஜபா நடனம்
கும்பகோணத்தில் இருந்து 43 கி.மீ
இறைவன் - வான்மீகிநாதர், தியாகராஜர்; 
இறைவிகமலாம்பாள்
தில்லைக்கு முந்தைய கோயில் இதுவாகும். வீதிவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய, கடன் தொல்லை நீங்க, உடல் பிணி அகல, திருமண வரம் பெற, வேலை கிடைக்க, தொழில் விருத்தியாக, குழந்தை வரம் வேண்டி என பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

திருநள்ளாறு - உன்மத்த நடனம்
கும்பகோணத்தில் இருந்து 56 கி.மீ
இறைவன் - தர்ப்பாரண்யேசுவரர்; இறைவிபிராணேஸ்வரி
சனீஸ்வர பரிகாரத் தலமான இக்கோயிலில், நகர விடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். சனீஸ்வர பகவானின் அருளைப் பெறவும், அவரால் ஜாதகத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கவும், பரிகாரத்தலமாக இது விளங்குகிறது. இங்குள்ள வாணி தீர்த்தத்தில் நீராட கவி பாடும் திறன் வரும் என்பது நம்பிக்கை.

திருநாகைக்காரோணம் - தரங்க நடனம்
கும்பகோணத்தில் இருந்து 67 கி.மீ
இறைவன் - காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்;
இறைவி - நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி
மூன்று காயாரோகத் தலங்களுள் முதன்மையானது இது. இங்கு, சுந்தரவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, செய்த பாவத்துக்கு மன்னிப்பு பெறவும், முக்தி பெறவும் பக்தர்கள் பிரார்த்தித்துக்கொள்கின்றனர்.

திருக்காறாயில் - குக்குட நடனம்
கும்பகோணத்தில் இருந்து 54 கி.மீ
இறைவன் - கண்ணாயிரநாதர்; இறைவிகயிலாயநாயகி
ஈசன் ஆயிரம் கண்களுடன் பிரம்மனுக்கு காட்சியருளிய தலம் இது. ஆதிவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். பாவங்கள், சாபங்கள் அகலவும், கண் சம்பந்தப்பட்ட நோய் சரியாகவும் இங்குள்ள இறைவனை வழிபட்டு, சிறப்பு பிரசாதத்தை பக்தியுடன் பெற்று உண்ணுகின்றனர் பக்தர்கள்.

திருக்குவளை - பிருங்க நடனம்
கும்பகோணத்தில் இருந்து 72 கி.மீ
இறைவன் - பிரம்மபுரீஸ்வரர்;
இறைவி - வண்டமர் பூங்குழலம்மை
நவகிரகங்கள் ஒன்பதும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன. அவனிவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். நவகிரக தோஷங்களைப் போக்கிக்கொள்ள பக்தர்கள் இங்கு வந்து அப்பனையும் அம்மையையும் வழிபட்டுச் செல்கின்றனர்.

திருவாய்மூர்கமலநடனம்
கும்பகோணத்தில் இருந்து 76 கி.மீ
இறைவன் - வாய்மூர்நாதர்;
இறைவி - பாலினும் நன்மொழியம்மை
பிரம்மன், சூரியன் சாபம் தீர்த்த தலம். நீலவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபடத் திருமணத் தடை நீங்குகிறது, கல்வி மற்றும் செல்வம் பெருகுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமறைக்காடு - ஹம்ச பாத நடனம்
கும்பகோணத்தில் இருந்து 106 கி.மீ
இறைவன் - மறைக்காட்டுநாதர் () வேதாரண்யேஸ்வரர்; இறைவி
யாழினுமினிய மொழியாள் () வேதநாயகி
அப்பரும் சம்பந்தரும் பாடி கதவைத் திறந்து மூடிய அற்புதத் தலம். புவனி விடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். மணிகர்ணிகை தீர்த்தம் மற்றும் ஆதி சேது கடல் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்துவகை பாவங்களும் விலகி, புண்ணியம் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மன அமைதி, தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு ஆகிய வரங்களைப் பெற இங்குள்ள இறைவனை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

 Arrow Sankar Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms