வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, March 31, 2017

முட்டாள்கள் தினம்

முட்டாள்கள் தினம்ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். இதை யார் துவக்கி வைத்தது? இதற்கு ஒரு ஆரம்பம் இருந்தாக வேண்டுமே. தோ,....

முட்டாள்கள் தினம் தோன்றிய வரிசை என்று பார்த்தால், பிரான்சு முதலாவதாக , இரண்டாவதாக இங்கிலாந்து, மூன்றாவது மெக்ஸிக்கோ அடுத்து சுவீடன், இந்தியா என்று பட்டியல் ஒரு ரவுண்ட் உலகம் சுற்றி வரும். காலம் தன் தேய்பிறை நாட்களில் உண்மையை முழுவதுமாக மறைத்து விடவில்லை.

அன்றைய ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி பொழுது புலர்ந்து பூபாளம் பாடுகிற வேளை தான் வசந்தம் துவங்குகிற பொன்னாள்.இது கி.பி.154க்கு முன்பிருந்து பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

இந்நாளில் கடவுளுக்கு பலி செலுத்தும் பழக்கமும் காணிக்கைகளைச் செலுத்தும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். ஆடல், பாடல், நடனம் என்று கலை நிகழ்ச்சிகளில் மூழ்கி தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டனர். இது எதிர் வரும் புத்தாண்டைச் சிறப்பாக வரவேற்கும் வகையான நிகழ்வின் வெளிப்பாடாகக் கருதப்பட்டது. மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை நிலவிட வழிபாடுகளை மேற்கொண்டனர். ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், “பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம்தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார்.

திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின் போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த ஒரு வாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

16ம் நூற்றாண்டில் பிரான்சு தேசத்தில் துவங்கியது இந்தப் பழக்கம். 1500களில் ஆண்டுத் துவக்க நாளாக ஏப்ரல் 1ம் தேதியையே கொண்டிருந்தனர். 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப் படுத்தும்படி அறிவித்தார்.

ஆண்டுத் துவக்க நாளாக சனவரி 1ம்தேதியை அறிமுகம் செய்து வைத்தார். இனி மேல் பிரான்சு தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்படது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம்தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர். ஏப்ரல் 1ம்தேதியைக் கொண்டாடியவர்களை கேலியும் கிண்டலும் செய்ததோடு அவர்களை நூதனமாக ஏமாற்றி ஏப்ரல் முட்டாள்கள்” (April Fool) என்றழைக்கவும் செய்தனர். நள்ளிரவு தாண்டியும் நாட்டிய நடனங்களில் ஈடுபட்டு மிகுந்த மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கின்றனர்.

ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர். இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம்.

னவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக் கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர்.

ஏப்ரல் முதல் நாளை, “Poission d’avril ” என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக் கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இல்லிநாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார். கிரகோரியன் காலண்டரை ஏற்றுக் கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நெப்போலியன் I , ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810-ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

ஸ்காட்லாந்தில் “April Fool’s Day”யை, “April Gawk” என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார். ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், “இன்று ஏப்ரல் பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்,” இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.

ஏப்ரல் மீன்பிரெஞ்சுக் குழந்தைகள் கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் ஏப்ரல் மீன்என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் “April Fool’s Day” அல்லது “All Fool’s Day” என்று அழைக்கிறார்கள். சாதாரணமாக ஒரு நண்பர் இன்னொரு நண்பரை திடீர் என்று, “ஒன்னோட ஷ்லேஸ் அவிழ்ந்து தொங்குது பார்என்றோ முதுகுப் பக்கம் கோட்டுல ஏதோ ஒரு கறை அசிங்கமா இருக்கு, மொதல்ல அதைக் கழட்டு என்று சொல்லி ஏமாற்றுவார்கள். 19ம் நூற்றாண்டில் ஆசிரியர்களே மாணவர்களிடம் அங்க மேல பாருங்க பொம்மை கூஸ் பறக்குதுன்னு சொல்வாங்களாம். (நம்ம ஊர்ல வெள்ளைக் காக்கா பறக்குதுன்னு சொல்வோமே..!) மாணவர்கள் சக மாணவர்களைப் பார்த்து இன்னைக்கு ஸ்கூல் லீவு தெரியுமா? அப்படின்னு சொல்லுவார்கள். எது எப்படியோ அவர்கள் ஏமாந்தவுடன் ஹை….. எப்ரல் பூல் என்று சொல்லி குதூகலித்துக் கொள்வது என்ற அளவில் தான்.

ஏமாற்றலுக்கு ஏமாற்றல் என்றும் நடப்பதுண்டு. சர்க்கரைச்(சீனி) சாடியில் உப்பைப் போட்டு ஏமாற்றுதல், மணிப் பர்ஸில் ஒரே ஒரு பென்னியை வைத்து ஏமாந்தாயா முட்டாள் என்று எழுதி நண்பர்களை ஏமாற்றுதல் சகஜமான ஒன்று. கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் ஒரு மணி நேரத்தை பின்னோக்கி வைத்து குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் போக விடாமல் செய்வது; அல்லது வரலாறுக்குப் பதிலாக உயிரியல் வகுப்புக்குச் செல்ல வைப்பது; ஆனால் யாருக்கும் தீங்கிழைப்பது இல்லை; ஏமாற்றலுக்குப் பழி வாங்குதல் என்று இன்று வரை நடந்தது கிடையாது என்றே சொல்ல வேண்டும். ஆங்காங்கே முட்டாள்தனமான ஜோக்குகளைச் சொல்லி விலா எலும்பு நோகச் சிரிக்க வைத்தல் போன்றெல்லாம் நடக்கும்.

print this in PDF Print Friendly and PDF

Friday, March 24, 2017

உலக காச நோய் தினம் (மார்ச் 24)

உலக காச நோய் தினம் (மார்ச் 24)என்று ஒரு நாளினை குறித்து வருடந்தோறும் அதனைப் பற்றிய விழிப்புணர்வினையும், சிசிச்சை முறைகளையும் தவிர்ப்பு முறைகளையும், மருத்துவ முன்னேற்றங்களையும் நாம் விடாது பல ஊடகங்கள், செய்தி தாள்கள், முகாம்கள் மூலமாக செய்து வருகின்றோம். இதன் பொருள் என்ன? 


*
இந்த நோயின் தாக்குதலுக்கு எளிதில் பலர் ஆளாகுகின்றனர். 
*
நோய் தாக்குதல் இருப்பது தெரியாமலே நோயினை முற்ற விட்டு விடுகின்றனர். 
*
சுகாதார பாதுகாப்பு முறைகளை இன்னமும் முழுமையாய் அனைவரும் கற்றுக் கொள்ளவில்லை. 
*
மருத்துவ முன்னேற்றத்தினை நன்கு அறிந்து அதன் பயனை அனைவரும் முழுமையாய் பெற வேண்டும். 
*
தவிர்ப்பு முறைகளை நன்கு அறிய வேண்டும் என்பதே ஆகும். 

டிபி எனப்படும் காசநோய் என்றால் என்ன? 

இது ஒரு தொற்று நோய். ஆரம்ப நிலையில் நல்ல சிகிச்சை அளிக்காவிடில் மிக அதிக பாதிப்பினை உடலுக்கு ஏற்படுத்தும். ஆனால் சிகிச்சையின் மூலம் இந்நோய்க்கு முழு நிவாரணம் பெற முடியும். இந்த நோய் தாக்கும் பாக்டீரியாவின் பெயர் பையோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் என்பது ஆகும். நுரையீரலிலும், தொண்டையிலும் ஏற்படும் இத்தாக்குதலே அவரது சளி, எச்சில் மூலமாக காற்றில் அடுத்தவரை பாதிக்கச் செய்யும். ஆனால் டிபியின் தாக்குதல் சிறுநீரகம், மூளை, எலும்பு இவற்றிலும் கூட ஏற்படலாம். 

நுரையீரல் தொண்டையில் தாக்குதல் ஏற்பட்டவர் இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் வெளியாகும் துளிகள் காற்றின் வழியாக கிருமிகளை சுமந்து செல்கின்றது. இதனை அடுத்தவர் சுவாசிக்கும் பொழுது அவரையும் இந்நோய் பாதிக்கின்றது. சிறிது காலம் சென்றே நோயின் பாதிப்பினை அவர் உணருவார். பாதிப்பு இல்லாமலும் பலரும் இருப்பர். காரணம். 

*
அதிக நேரம் நோய் வாய் பட்டவரோடு இல்லாது இருத்தல். 
*
ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருத்தல் ஆகியவை ஆகும். 
பாதிப்புடையவரை தொடுவதால் இந்நோய் பரவாது என்பதையும் அறிய வேண்டும். 

காச நோயின் அறிகுறிகள் என்ன?

*
மூன்று வாரம் அல்லது அதற்கும் மேற்பட்ட இருமல்.
*
எடை குறைவு-மிக அதிக எடை குறைவு
*
பசியின்மை
*
ஜுரம், அதிக ஜுரம்
*
இரவில் வியர்வை
*
மிக அதிக சோர்வு
*
சக்தியின்மை
ஆகியவை ஆகும். 

பொதுவில் அறிகுறிகள் தாக்கப்பட்ட இடத்திற்கேற்ப இருக்கும். நுரையீரலில் பாதிப்பு இருந்தால் இருமல் அறிகுறியாக இருக்கும். நிணநீர் சுரப்பிகளில் பாதிப்பு இருந்தால் தொண்டையில் வீக்கம் தெரியும். மூட்டுகளில் காரணமின்றி வலி இருத்தல், எலும்பில் டிபி பாதிப்பு இருக்கின்றதா என பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதிக தலைவலி இருந்தாலும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

சிகிச்சை நல்ல பலன் அளிக்கும் என்பதனைப் போல் சிகிச்சை இன்மை ஆபத்தான விளைவுகளையும் அளிக்கும் என்பதனை உணர்த்துவதும் உலக காச நோய் தினத்தின்நோக்கம் ஆகும். சிலருக்கு சாதாரண மருத்துவ பரிசோதனையில் நெஞ்சு எக்ஸ்ரே எடுக்கும் பொழுதே இப்பாதிப்பு கண்டு பிடிக்கப்படுகின்றது. 

இந்நோயினால் ஏற்படும் பிற பாதிப்புகள்

*
பாதிக்கப்பட்டவரின் இடங்களில் இருந்து வரும் நபர்களுக்கு நோயின் பாதிப்பு வெளியில் தெரியாமல் இருக்கலாம்.

*
சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக எளிதில் பாதிப்பு ஏற்படலாம்.

*
நீரிழிவு நோய், சிறு நீரக நோய் உடையோருக்கு காச நோய் எளிதில் தாக்கலாம்.

*
எய்ட்ஸ் பாதிப்பு உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக எளிதில் பாதிக்கப்படுவர்.

*
புற்று நோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் என சில வகை நோய்களை ஏற்கனவே உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக காசநோய் பாதிப்பினை பெறலாம்.

*
காச நோய் கிருமி ஒருவருக்கு இருந்து அதன் வீரியம் குறைவாய் இருந்தால் சிகிச்சை மிக மிக எளிது. 6-9 மாதத்திற்குள் பூரண நலம் பெறலாம்.

*
இன்று உலகில் 9 மில்லியன் மக்கள் வருடந்தோறும் காசநோயினால் பாதிக்கப்படு கின்றார்கள் என்று சொல்கின்றது.

*
மனித இறப்பிற்கு முக்கியமான மூன்று காரணங்களில் காசநோயும் ஒன்றாகும். 15-45 வயதுள்ள பெண்கள் இதில் அதிகம் இடம் பெறுகின்றனர்.

*
டிபி கிருமி உடலில் இருந்தும் அநேகர் பாதிப்பு வெளிப்பாடு இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் இந்த பாதிப்பு வெளிப்பாடு எந்நேரத்திலும் நிகழலாம். உலகில் முன்றில் ஒரு பங்கு மக்கள் இப்பாதிப்பிற்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

*
பி.சி.ஜி. தடுப்பு ஊசி 70-80 சதவீதம் வரை சிறப்பாக வேலை செய்வதால் சிறு குழந்தைகளுக்கு இதனை அவசியம் மருத்துவர்கள் உபயோகிக்கின்றனர்.

*
பொதுவில் டிபி வீரிய நிலை பாதிப்பு உடையவர்கள் சில வாரங்கள் அலுவலகம், பள்ளி செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துவர். ஆனால் சிகிச்சை என்பது பல மாதங்கள் தொடரும். மருத்துவர் நீங்கள் பூரண நிவாரணம் பெற்றுவிட்டீர்கள் என்று கூறிய பிறகு பாதிக்கப்பட்டவர் இயல்பு வாழ்க்கையினை மேற்கொள்ளலாம்.

*
டிபி வீரிய நிலையில் இருக்கும் பொழுது பாதிக்கப்பட்டவரின் குடும்ப நபர்கள் மிகுந்த கவனத்துடன் அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நோயாளி அருகில் செல்லும் பொழுது மாஸ்க்’, ‘கையுரைஅணிவது நல்லது. அதே போன்று நோயாளியும் இருமல், தும்பல் வரும் பொழுது மூக்கு, வாயினை மென்மையாய் டிஷ்யூ பேப்பரினை பொத்தி பின் அதனை குப்பை கவரில் போட்டு விட வேண்டும்.

*
டிபி சிகிச்சை சிறந்த பலனை அளிக்கின்றது. ஆயினும் முறையான மருந்தினை முறையான காலம் வரை முறையாய் எடுக்க வேண்டியது மிக அவசியம். பலருக்கு இருக்கும் விடா பிரச்சினைகளுக்கு காரணம் முறைபடி மருந்தினை உட்கொள்ளாததே ஆகும். இதன் காரணமாக சிகிச்சை தீவிர சிகிச்சை ஆகலாம்.

*
மற்றொரு வகை டிபி அரிதானது. இவ்வகையில் கிருமி ரத்தத்தின் வழியாக உடலில் பல்வேறு உறுப்புகளை ஒரே நேரத்தில் பாதிக்கும். இவ்வகை மிகவும் அபாயகரமானது.

*
வறுமை கோட்டில் வாழும் பெண்கள் பலருக்கு குழந்தையின்மை ஏற்படுவதற்கு ஒரு காரணம் பிறப்புறுப்பில் டிபி தாக்குதல் நிகழ்வதுதான்.
(
காச நோயிலிருந்து சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரம் பெறலாம்)

*
சுகாதாரத்தினை கூட்டுவதே மிகப்பெரிய தீர்வினைக் கொடுக்கும்.

*
பொது இடங்களில் எச்சில் துப்புவது, மூக்கினை சிந்துவது இவை மிக அநாகரிகமானது மட்டுமல்ல. சுகாதார சீரழிவு என்பதனை இனியாவது மக்கள் உணர வேண்டும்.

*
காச நோயின் வயது சுமார் 15,000 வருடங்கள் ஆகும். கி.மு. 2400-3000 வருட மம்மீஸ்ஆய்வுகளில் அவர்கள் முதுகெலும்பில் இக்கிருமி தாக்குதல் இருந்ததாம். கி.மு.460ல் கூட காசநோய் எடை குறைவோடு கூடிய நோய் என்ற குறிப்பு கிடைத்துள்ளது.

*
நல்ல சிகிச்சை முறையினை மருத்துவம் காணும் வரை இந்நோயினால் தாக்கப்பட்டவர்கள் 5 வருடத்திற்குள்ளாகவே இறந்துள்ளனர். உலகெங்கிலும் இதற்கான கவனம் அதிகம் கொடுக்கப்பட்டதன் விளைவே இன்று மக்கள் இந்நோயிலிருந்து எளிதில் விடுபட முடிகின்றது. அனைவருமே இந்நோய் கிருமிகளை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி உடையோர் தவிக்கின்றனர்.

*
கடும் முயற்சிகள் எடுத்தும் இந்நோயினை கட்டுப்படுத்த கூடுதல் உழைப்பு தேவைபடுகின்றது.

*
ஆறு மாதம் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்த உடன் அநேகர் இதனை செய்வதில்லை. பின்னால் இவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இவர்கள் மூலம் நோய் பரவவும் செய்கின்றது.

*
அரசாங்கம் இதற்கான மருந்துகளை எளிதாய் கொடுத்தாலும் சில அடிப்படை தேவைகளை செய்து கொள்ளும் வசதி பலருக்கு இருப்பதில்லை.

* 4-5
மாத்திரைகளை முறையாய் தினம் எடுத்துக் கொள்ளும் ஒழுங்கு முறை பலருக்குத் தெரிவதில்லை.

*
முறையான பரிசோதனை செய்து கொள்ளத் தவறுகின்றனர்.

*
பலர் தனக்கு டிபி உள்ளது என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்று அஞ்சுகின்றனர்.

*
பலர் தனக்கு நோய் இருந்து விடுமோ என்ற பயத்திலேயே பரி சோதனைக்கு வருவதில்லை.

*
மேற் கூறியவைகளை தவிர்த்தால் காச நோயற்ற சமூகத்தினை நம்மால் உருவாக்க முடியும்.


 print this in PDF Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms