வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, March 18, 2016

கவிதாஞ்சலி

ஒரு நன்னாளில்
உங்களுக்கு
மருமகனானேன்.
சிறிது நாளில்
என்னை மகனாய் மாற்றினீர்.

பாசத்திற்கு
படிப்பறிவு தேவையில்லை
தூய அன்பு போதும்.
அதனால் எந்நேரமும்
எல்லார் நலமும் வேண்டினீர்.

உங்கள் இதயத்தில்
அன்பை மட்டும்
சென்று வர அனுமதித்தீர்
அதனால் இரத்தம்
கொஞ்சம் சென்று வர தடுமாறியது.

இனிப்பாய் பேசி
மறுபக்கம் கசப்பு
வைக்கும் உறவினரிடையே
எனக்கு பாசம் மட்டுமே காட்டியதால்
உங்களுக்கு சக்கரை கொடுத்தானோ?பாவிக் கடவுள்.

பங்குனி முதல்நாளில்
என் பிரார்த்தனை
பொய்த்த போது
காலன் கண் வைத்தான்
உங்கள் மூச்சிற்கு முற்றுப்புள்ளியிட்டான்.

வாழும் மக்களுக்கு
வாழ்ந்த நீங்கள் பாடம்
அது மட்டுமா?
உங்கள் அன்பு
ஞானம் தரும் போதி மரம்.

இது கால் நூற்றாண்டு
மேலான பந்தம்.
காலமெல்லாம் மறவாமல்
இனி காத்திருப்பேன்
மீண்டும் ஜென்மம் என்றொன்று இருந்தால்  உங்கள் மகனாய் பிறக்க.
எனது மனைவியின் அம்மாவும் எனக்கு இன்னொரு தாயுமான திருமதி காந்தா ஜெயராமன் அவர்களின் மறைவையொட்டி (மன்மத வருடம் பங்குனி முதலாம் நாள் – 14.03.2016) நான் வடித்த கண்ணீர் கவிதாஞ்சலி

Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Tuesday, March 8, 2016

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தலைவர்கள் வாழ்த்து


வான்மீகீயூர்.L.L.சங்கர்

சுய முன்னேற்றம் கண்டு வெற்றி பெற சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.
ஆளுநர் ரோசய்யா

ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மகளிர் மேம்பாடு மூலமாகவே வீட்டையும் நாட்டையும் முன்னேற்ற முடியும் என கூறியுள்ளார்.மகளிருக்கு எதிரான வன்முறைகளையும் தடைகளையும் தகர்த்து அவர்களை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், மகளிருக்காக தமிழக அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார். மகளிர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, சோதனைகளை உறுதியாக எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்கள் முன்னேற்றத்திற்காக, என்றென்றும் பாடுபடும் இயக்கம் திமுக என கூறியுள்ளார். மகளிர்க்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அவர், மகளிருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பெண்கள் தற்சார்பு பெற்று தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் அனைத்து துறைகளிலும் முன்னேறவும் வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பெண்களின் விருப்பம் நிறைவேற இந்நாளில் உறுதியேற்போம் என கூறியுள்ளார்.
ஜி.கே. வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் முன்னேற அனைவரும் உறுதுணையாக இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
PDF ஆக டவுன்லோட் செய்ய / மெயிலாக அனுப்ப கிளிக் செய்யவும் Print Friendly and PDF

Monday, March 7, 2016

சிவாலய ஓட்டம்

முன்பு ஒரு காலத்தில் சுண்டோதரன் என்னும் அரக்கன் ஒருவன் இருந்தான். அவன் மிக சிறந்த  சிவ பக்தன். சிவலிங்கத்தை எங்கு பார்த்தாலும் குளித்து அந்த லிங்கத்தை மூன்று முறை சுற்றி விட்டுதான் மறுவேலை பார்ப்பான். அவன் ஒரு முறை சிவ பெருமானை நினைத்து கடுமையாக தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவ பெருமான் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும்என்று கேட்க, அரக்கன் தான் யாரை நோக்கி தனது சுண்டு விரலை காட்டுகிறேனோ அவன் சாம்பல் ஆகிட வேண்டும் என்று வரம் கேட்க, சிவபெருமானும் கொடுத்து விட்டார்.


வரத்தை பெற்றதும் அரக்கனுக்கு தனக்கு உண்மையிலே வரம் கிடைத்து விட்டதா என்று சந்தேகம் எழுந்தது. உடனே சிவபெருமானிடம், “நான் இதனை சோத்தித்து பார்க்க தேவலோகம் வரை போகவேண்டும். இப்போது அதற்கு நேரமில்லை. அதனால் தங்களிடமே இதனை சோதித்து பார்க்க போகிறேன்என அரக்கன் சொல்ல சிவபெருமான் அதிர்ந்து அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார்.

ஓடும்போதுதான் சிவபெருமானுக்கு அரக்கனின் சிவபக்தி குறித்து நினைவு வர தன் கழுத்தில் இருந்து ஒரு ருத்ராட்சையை எடுத்து கீழே போட்டார். அதில் ஒரு லிங்கம் உருவானது. லிங்கத்தை கண்டதும் மூடனான அரக்கன் அருகில் உள்ள குளத்தில் குளித்து லிங்கத்தை வழிபாடு செய்து பின் துரத்தினான். சிவபெருமானும் அரக்கன் தன்னை நெருங்கும் போதெல்லாம் ஒரு ருத்திராட்சையை போட்டு வந்தார்.

ஓடும் போது சிவபெருமான் காக்கும் கடவுளான விஷ்ணுவை உதவிக்கு கோவிந்தா.... கோபாலா.... என அழைத்தபடி ஓடினாராம். அதன் அடையாளமாகாத்தான் தற்போதும் பக்தர்கள் ஓடும் பொது கோவிந்தா... கோபாலா என்று கூவிய படி செல்வார்கள். சிவராத்திரி அன்று சிவ ஆலயத்தில் நட்டகும் விசேஷத்தில் கோவிந்த கோபாலா என பக்தர்கள் முழங்குவது வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கும்.

பன்னிரெண்டாவது ஆலயமான நாட்டலாம் வரும்போது விஷ்ணு பெண் அவதாரமான மோகினியாக தோன்றி அரக்கனை மயக்கி அவனுடன் ஆடுகிறார். விஷ்ணு ஆடுவதை போன்றே அரக்கனும் ஆட, விஷ்ணு தனது சுண்டு விரலை தன்னை நோக்கி காட்ட, அரக்கனும் அவ்வாறே செய்ய அரக்கன் சாம்பல் ஆகி விடுகிறான். அதனால் தான் பன்னிரெண்டாவது ஆலயத்தில் மட்டும் விஷ்ணு சன்னதியும் இருக்கும். சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் தங்கள் கையில் விசிறி வைத்திருப்பார்கள். எல்லா ஆலயம் செல்லும்போது லிங்கத்திற்கும் விசிறி விடுவார்கள்.

அதாவது தங்களுடன் சிவபெருமானும் ஆடுவதாக ஐதீகம். அவ்வாறு ஓடும் சிவபெருமானுக்கு இளைப்பாற விசிறி விடுவது வழக்கம்.

தமிழகத்தில், குமரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் சிவராத்திரி நாளில் சிவாலய ஓட்டம் இடம் பெறுகிறது. சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக் கணக்கான அடியார்கள் தொடர் ஓட்டமாகச் சென்று பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர். அத்தலங்கள்:- 1.திருமலை, 2.திருக்குறிச்சி, 3.திருப்பரப்பு, 4.திருநந்திக்கரை, 5.பொன்மலை, 6.பன்னிப்பாக்கம், 7.கல்குளம், 8.மேலங்கோடு, 9.திரு விடைக்கோடு, 10.திருவிதாங்கோடு, 11.திருப்பன்றிக்கோடு, 12.திருநட்டாலம். ஆகியவை.


பக்தர்கள், நடையாக நடப்பது மட்டுமல்லாது வாகனங்களிலும் இந்த பன்னிரண்டு கோவில்களுக்கு இந்த சிவராத்திரி நாளில் சென்று வருவார்கள். குமரி மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்திற்காக சிவராத்திரி நாளில் குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Friday, March 4, 2016

மகாசிவராத்திரி 2016

அன்றாடம் சிவனை இரவில் வழிபட்டால் அது, நித்திய சிவராத்திரிஎனப்படும். திங்கட்கிழமைகளில் (சோமவாரத்தில்)  அமாவாசை வருவது மிகவும் சிறந்தது. அத்தகைய சோமவார இரவு, ‘யோக சிவராத்திரிஎனப்படும். தேய்பிறைச் சதுர்த்தசி இரவு, ‘மாத சிவராத்திரிஎனப்படும். சிவனடியார்கள் பலர் மாதந்தோறும் இந்த சிவராத்திரியைத் தவறாமல் அனுஷ்டித்து வருகின்றனர். மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க மகாசிவராத்திரிபுண்ணிய காலமாகும்.


தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது அங்குத் தோன்றிய நல்ல பொருள்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்வதற்குப் பலரும் முன்வந்தனர். ஆனால், விஷம் தோன்றியதும் எல்லாரும் பயந்து ஓடினார்கள். ஈசன் தன் அணுக்கத் தொண்டரான சுந்தரரை அனுப்பி, அந்தக் கூட்டு நஞ்சை எடுத்துவரப் பணித்தான். சுந்தரரும் ஆலாலத்தை எடுத்து வந்து ஈசனிடம் கொடுத்தார். ஆலாலத்தை எடுத்து வந்ததால் அன்று முதல் சுந்தரருக்கு, ‘ஆலாலசுந்தரர்என்ற பெயர் ஏற்பட்டது. அவரே பின்னர் தமிழ்நாட்டில் சுந்தரமூர்த்தி நாயனாராக அவதரித்தார். சிவபெருமான் ஆலகாலத்தை உண்டு உயிர்களைக் காத்தான். ஒப்பற்ற அடைக்கலம் அளித்து ஹாலஹால விஷத்திலிருந்து உயிர்களைக் காத்த ஈசனின் கருணையை நினைவு கூரும் நாளே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. ஈசன் நஞ்சை உண்ட பிறகு, சற்றுக் களைத்தவர் போல் காட்டிப் படுத்துப் பள்ளி கொண்டார். அவர் விழித்தெழும் வரை உமையம்மை உட்பட, எல்லாரும் கண்ணுறங்காமல் விழித்திருந்து சிவபெருமானை வழிபட்ட அந்த இரவே சிவராத்திரி என்றும் ஒரு வரலாறு உண்டு.


மகாப்ரளயம்என்னும் பேரூழிக் காலத்தில் அனைத்தும் ஈசனிடம் ஒடுங்கின. அப்போது எங்கும் இருள் படர்ந்தது. உலகங்களையும், உயிர்களையும் மீண்டும் படைத்தருள வேண்டி, அம்பிகை ஈசனை முறையாக வழிபட்ட நாளே மகாசிவராத்திரி என்றும் கூறுவர்.
ஒருமுறை பார்வதி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடினாள். அதனால் உலகங்கள் இருண்டன. தேவர்கள் மீண்டும் ஒளியை அருளவேண்டி இறைவனை வழிபட்ட நாளே சிவராத்திரி என்றும் கூறுவர்.

சிவபெருமான் லிங்கோற்பவராக வடிவெடுத்த அதாவது, அவன் லிங்கத் திருமேனியில் எழுந்தருளிய நாளே மகாசிவராத்திரி.

சிவராத்திரி நாளில் அடியார்கள் விரதம் அனுஷ்டித்து, இரவில் உறங்காமல் கண் விழித்திருந்து அடுத்த நாள், அடியார்களுக்கு அமுதளித்து, பாரணை செய்வார்கள். பாரணைஎன்றால் நோன்பை நிறைவு செய்தல் என்பது பொருள். சிவராத்திரி நாள் இரவை, சிவகதைகளைக் கேட்டும், படித்தும் திருக்கோயில் வழிபாடுகளில் பங்கேற்றும் கழித்தல் வேண்டும்.

சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர்

தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் பள்ளி கொண்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு சிவபெருமான், பார்வதிதேவியின் மடியில் தலை வைத்துப்படுத்திருக்கும் திருக்கோலத்தை காணும்போது நெஞ்சம் உருகுகிறது. என் ஐயனே மக்களைக் காக்கும் மகேசா! என்று உள்ளம் உருகுகிறது.


பள்ளி கொண்டுள்ள இந்த ஈசனுக்கு அருகே மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், பிருகு மகரிஷி, பிரம்மா, சூரியன், சந்திரன், குபேரன், சப்த ரிஷிகள் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர், கிம்புருடர் ஆகிய அனைவரும் சிவனை வணங்கிப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இத்திருக்கோயில் தல வரலாறு வைணவ சைவ ஒற்று மையைக் காட்டுகிறது. அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனர். ஆனால் அமுதம் வருவதற்கு முன் ஆலாகால விஷம் வந்தது. அப்போது அருகில் சென்றார் மகாவிஷ்ணு. விஷத்தில் இருந்து கிளம்பிய வாயு தாக்கியதால் அவரது மேனி நீல நிறமானது. இதனைக் கண்ட சிவபெருமான் அந்த ஆலாகால விஷத்தை முழுவதுமாக விழுங்கிவிட்டார். அருகில் இருந்த பார்வதி தேவி பதறினாள். தன் கைகளால் கணவனின் கழுத்தை இறுக்கிப் பிடித்தாள். இதனால் ஆலாகால விஷம் அவரது கழுத்தைத்திலேயே உறைந்து விட்டது. கழுத்து என்னும் கண்டத்தில் நீல நிறத்தில் விஷம் தோய்ந்து விட்டதால், சிவன் திருநீலகண்டன் என்ற திருநாமம் கொண்டார்.

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழி லில் அழிக்கும் தொழில் கொண்ட சிவபெருமான் இவ்வுலகத்தோரைக் காக்க விஷம் என்னும் தீமையை அழித்தார். பின்னர் பார்வதி தேவியும் சிவனும் கைலாயம் நோக்கிச் சென்றார்கள். செல்லும் வழியில் சோலைகள் நிறைந்த இன்றைய சுருட்டப்பள்ளியில் இருவரும் தங்கினார்கள். விஷ மயக்கம் தீராமல் இருக்கவே சிவபெருமான், பார்வதி தேவியின் மடியில் தலை வைத்துச் சிறிது நேரம் கண் அயர்ந்தார்.

அதிசயமாக பரமன் பள்ளி கொண்டது தெரிய வந்ததும் இத்திருக்கோலத்தைக் கண்டு மகிழ தேவர்கள் அனைவரும் சுருட்டப்பள்ளிக்கு விரைந்து வந்துவிட்டார்கள். தன்னை நாடி வந்தோருக்காக சிவபெருமான் அந்த மாலை நேரத்தில் ஆனந்த நடனம் ஆடிக்காட்டினார். தேவர்கள் அவரை தரிசித்து மகிழ்ந்தார்கள் என்கிறது இத்திருகோவில் ஸ்தல புராணம்.

அரிய காட்சியாகப் பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனைத் தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். சுருட்டப்பள்ளியில் மட்டுமே சிவன் பள்ளி கொண்ட கோலத்தைக் காண முடியும்.

இத்திருக்கோயிலில் தெய்வங்கள் தம்பதி சமேதராகக் காட்சி யளிக்கின்றனர்.

சர்வமங்களாம்பிகை உடனுறை பள்ளிகொண்ட பரமேஸ்வரன்,
மரகதாம்பிகையுடன் வால்மீகிஸ்வரர்,
சித்தி, புத்தி சமேத விநாயகர்,
பூரணா, புஷ்கலாவுடன் சாஸ்தா,
கவுரிதேவியுடன் குபேரன்
தாராவுடன் தட்சிணாமூர்த்தி ஆகியோர் இங்கே வீற்றிருக்கிறார்கள்.

தற்காலத்தில், சில வரலாற்று நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையில் அவ்வப் பொழுது, தொடர் ஓட்டங்கள் நடைபெறு கின்றன. விளையாட்டு வீரர்களும் மற்றவர்களும் கலந்து கொள்ளும் இத்தகைய ஓட்டங்களால் முக்கிய வரலாற்று உண்மைகள் மக்களுக்குத் தெரிய வருகின்றன. அத்துடன், உடல்நலம், நல்லிணக்கம் ஆகியவை வளர்கின்றன.

தமிழகத்தில், குமரி மாவட்டத்தில், சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது. சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக் கணக்கான அடியார்கள் தொடர் ஓட்டமாகச் சென்று பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர். அத்தலங்கள்:-

1.திருமலை, 2.திருக்குறிச்சி, 3.திருப்பரப்பு, 4.திருநந்திக்கரை, 5.பொன்மலை, 6.பன்னிப்பாக்கம், 7.கல்குளம், 8.மேலங்கோடு, 9.திரு விடைக்கோடு, 10.திருவிதாங்கோடு, 11.திருப்பன்றிக்கோடு, 12.திருநட்டாலம். ஆகியவை.
PDF ஆக டவுன்லோட் செய்ய / மெயிலாக அனுப்ப கிளிக் செய்யவும் Print Friendly and PDF

Thursday, March 3, 2016

இது உச்சமல்ல!

இது உச்சமல்ல!



உன் வியர்வையை
தாய் முந்தானை
துடைக்கும்.

பயத்தை தந்தை கை
பக்கத்தில் வராமல்
ஒடுக்கும்.

பாடங்களை பதிய வைத்த
ஆசிரியனின் ஆசிகள்
உன்னை அக்கரை சேர்க்கும்.

வெற்றி மட்டுமே
வேண்டும் என்ற முனைப்போடு
செயல்படு.

வாழ்த்துக்களும் ஆசியும்
உனக்கு உண்டு
தளராமல் எழுது ஞாபகத்தோடு.

வாசலில் வந்து நிற்கும்
எதிர்கால வசந்தம்
புன்னைகையோடு.

இது உச்சமல்ல
இதுவொரு பதிவேடு
பதிவுகள் உன்னால் உனக்காக நிரப்பப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (04.03.2016) தொடங்கும் பிளஸ் டூ தேர்வை எழுதும் அனைத்து  மாணவ-மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள்


Read Arrow Sankar's Blog Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms