வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Sunday, September 15, 2013

ஓணம்


ஆவணி  மாதத்தில்  வரும்  திருவோணம் நட்சத்திரம்தான்  கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவன் கோயில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது.
தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணி யத்தை தந்தது. அடுத்த ஜென்மத்தில் எலிக்கு சக்கரவர்த்தி யோகத்தை தந்தருளினார் சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதரிக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ புண்ணிய காரியம் செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு உதாரணம் இந்த புராண நிகழ்வு.
தற்போது கேரளா என அழைக்கப்படும் மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி
வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) வழிநடத்தி வந்தார். தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் விஷ்ணுவிடம் கூறினார்.
நல்லாட்சி நடத்தி வரும் மகாபலி மீது தேவர்கள் குறை கூறுகிறார்களே என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இந்த வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழுடன் இருக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார். குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். தானம் கேட்பதற்காக கொடை வள்ளலாம் மகாபலியிடம் சென்றார். விஷ்ணுதான் வாமன அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்துகொண்டார் சுக்கிராச் சாரியார்.
வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே. அது உன் ஆட்சி, அதிகாரம் மட்டுமின்றி ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும்என்று மகாபலியை எச்சரித்தார்.
மகாபலி கேட்கவில்லை. நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை, மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் பாராட்டுகிறது. இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த பாக்கியம். எல்லோரும்  கடவுளிடம்தான்  கேட்பார்கள். அந்த கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறதுஎன்றார் மகாபலி.
விஷ்ணுவை தரிசிக்க காத்திருந்தார். மகாபலியிடம் வந்து சேர்ந்த வாமனன் தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாக கூறினார். குள்ளமான உருவத்துடன் வந்த வாமனனை மகாபலி விழுந்து வணங்கினார். மூன்றடி நிலம்தானே.. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்என்றார். நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடு என்றார் வாமனன்.
இடையே புகுந்தார் சுக்கிராச்சாரியார். மகாபலி! வந்திருப்பது விஷ்ணு. மூன்றடி நிலம்தானே என சாதாரணமாக நினைத்து தாரை வார்த்துக் கொடுத்துவிடாதேஎன்றார். அப்போதும் மகாபலி கேட்கவில்லை. தாரை வார்ப்பதற்காக கமண்டல நீரை சாய்க்கத் தொடங்கினார். குரு சுக்கிராச்சாரியாரின் மனம் கேட்கவில்லை. வண்டாக மாறி கமண்டலத்தின் துளையை அடைத்துக் கொண்டார்.
மகாபலி கமண்டலத்தை எவ்வளவு சாய்த்தும் தண்ணீர் வரவில்லை. சுக்கிரனின் இந்த காரியத்தை தெரிந்துகொண்டார் வாமனன். கையில் இருந்த தர்ப்பையை எடுத்து கமண்டல துளையில் குத்தினார். வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார். கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேற, அதை தன் கையில் பிடித்து மூன்றடி நிலத்தை தாரை வார்த்துக்  கொடுத்தார் மகாபலி.
மூன்றடி நிலம் எடுத்துக் கொள்ளலாமா? என்றார் வாமனன். தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் மகாபலி. குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?’ என்றார்.
உலகையை அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள்என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு.
கொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கவும் அருள் செய்தார். மகாவிஷ்ணுவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் மகாபலி. நீங்கா புகழ் தந்தருளிய பெருமாளே. நாட்டு மக்களை என் உயிராக கருதி ஆட்சி செய்து வந்திருக்கிறேன். அவர்களை பிரிவது கஷ்டமாக இருக்கிறது.
ஆண்டு தோறும் ஒருநாளில் அவர்களை நான் சந்திக்க வரம் அருள வேண்டும்என வேண்டினார். அவ்வாறே நடக்க அருள் செய்தார் மகாவிஷ்ணு. தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டுதோறும் ஓணப் பண்டிகையின்போது மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அதனால்தான், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.
****************
தமிழக கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ள ஓணம் பண்டிகை வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகை கொண்டாடும் சந்தோஷமான தருணத்தில், தமிழ்நாட்டிலும், நாட்டின் பிறபகுதியிலும் வாழுகின்ற மலையாளிகளுக்கு என் இதயப்பூர்வமான, நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சந்தோஷமான தருணம், நாமெல்லாம் ஒருவர் என்பதற்கு அடையாளமாக திகழட்டும்.இந்த ஓணம் பண்டிகை, மொழி மற்றும் கலாச்சார இணக்கத்தையும், நம்முடைய ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் விதமாகவும் அமையட்டும். அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் ஆகியவை அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்.இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.
******
‘‘சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைத்து வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் கொண்டாடப்படும் இவ்வோணத்திருநாளில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்’’ என்று, முதல்அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

(திங்கட்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:திருவோணம் என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அகந்தையை அழித்திட
திருமால் மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அழித்திட வாமன அவதாரம் தரித்து தனக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று கேட்டு, ஓர் அடியை வானத்திலும்; இரண்டாம் அடியை பூமியிலும்; மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையிலும் வைத்து அடக்கியதோடு, அந்த மன்னனின் வேண்டுதலின்படி, ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் அவர், தம் நாட்டு மக்களை வந்து காணும்படியாக அருள் புரிந்தார். அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
 10 நாள் கொண்டாட்டம்
திருவோணப் பண்டிகையின் போது, பத்து நாட்களுக்கு மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் கோலமிட்டு, வண்ணப்பூக்களால் அலங்கரித்து, அதன் நடுவே குத்துவிளக்கேற்றி ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வார்கள். மேலும், ஓணம் பண்டிகையின் போது திருவாதிரைக் களி, கைக்கொட்டிக் களி, மோகினி ஆட்டம், கோலாட்டம், ஓணக் களி போன்ற உள்ளம் கவரும் நடனங்களை அரங்கேற்றியும் மக்கள் இன்புறுவார்கள்.
ஒருங்கிணைந்து வாழ வேண்டும்
சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும், உயர்வு, தாழ்வு உணர்வுகளுக்கு இடங்கொடாது ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் கொண்டாடப்படும் இவ்வோணத் திருநாளில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு முதல்அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள செய்தியில், ""ஓணம் பண்டிகை தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓணம் பண்டிகையானது அறுவடைக் காலத்தில் வருகிறது. இது மனித முயற்சிகள் மகிழ்ச்சியுடன் நிறைவடைவதையும் எதிர்காலத்துக்காக நம்பிக்கையுடன் பிரார்த்திப்பதையும் குறிக்கிறது. மதங்கள், ஜாதிகள் ஆகியவற்றைக் கடந்த மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடி வந்துள்ளனர். இது நம் சமூகத்தின் மதச்சார்பற்ற தன்மையை உணர்த்துகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தனது வாழ்த்துச் செய்தியில், ""இந்த ஓணம் பண்டிகை நம் அனைவரின் வாழ்விலும் செழுமையையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""வாழ்க்கை மற்றும் நம்பிக்கையின்பண்டிகைதான் ஓணம். கேரள மக்களின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை இப்பண்டிகை உணர்த்துகிறது. ஓணம், அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும்' என்று வாழ்த்து கூறியுள்ளார்.
*****
ஓணம் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையட்டி கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஓணம் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
அறுவடை திருநாள்
கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாள் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் திருநாள் என மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. மாபலி மன்னன் ஆண்டுக்கொரு முறை தம் நாட்டை காண வருவான் என்றும்; அப்போது அவன் தம் இல்லம் வருவான் என்றுன் கருதி, அந்த நம்பிக்கையோடு அவனை வரவேற்க தம் இல்லத்தை அழகுபடுத்தி வாசலில் அத்தப்பூ கோலங்கள் இட்டுக் கொண்டாடி மகிழும் நாள் இந்த ஓணம் திருநாள்.
இந்த ஓணம் திருநாள், வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒழிக்கப்பட வேண்டும்; ஆணவமும் அகம்பாவமும் அழிக்கப்பட வேண்டும்; அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதை ஓணம் திருநாள் மனித சமுதாயத்திற்கு உணர்த்துகிறது.
திராவிட மொழி குடும்பங்கள் எனும் உணர்வுடன் அண்டை மாநில மக்களோடு என்றும் நல்லுறவு பேணுவதையே விரும்பிடும் தி.மு.க. சார்பில் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
**
ஞானதேசிகன் வாழ்த்து 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘தியாக வாழ்க்கையின் உன்னதத்தைப்போற்றும் வகையிலும் அறுவடைத்திருநாளாக கொண்டாடும் முறையிலும் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா நன்னாளான இன்று மதநல்லிணக்கம் மேம்பட்டு அனைவர் வாழ்வும் சிறந்திட இந்திய நாடெங்குமுள்ள அனைத்து கேரள மாநில சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது மனமுவந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜயகாந்த் வாழ்த்து 

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘கேரளாவை ஆட்சி செய்த மாபலி சக்கரவத்தி மன்னன் கிருஷ்ண பகவானிடம், தான் திருவோண நாள் அன்று கேரள மாநிலத்திற்கு வருகை தருகின்ற வரத்தை விரும்பி பெற்றார். அந்த மாமன்னர் தன்னுடைய மக்களை சந்திக்க வருகின்ற நாளே திருவோண நாளாக கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் கேரள மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று நல்வாழ்வு பெற தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

சரத்குமார் வாழ்த்து 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘மதவேறுபாடுகள் ஆங்காங்கே வேரூன்றி மக்களை பிளவுபடுத்தி கொண்டிருக்கும் நேரத்தில், இப்படிப்பட்ட பண்டிகைகளை ஒற்றுமை உணர்வுடன் கொண்டாடும் போது மதநல்லிணக்கம் வலுப்படும். இந்த இனியநாளில் தமிழகத்திலும், கேரளத்திலும் மற்றும் உலகெங்கும் வாழும் மலையாள சகோதர சகோதரிகளுக்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் எனது சார்பிலும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
***

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms