வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, November 30, 2016

174 வயது பாலம்!

இரட்டை நகரங்களான நெல்லையையும், பாளையங்கோட்டையும் பிரித்து இடையில் ஓடுகிறது தாமிரபரணி ஆறு. வற்றாத ஜீவநதி என வர்ணிக்கப்படும் தாமிரபரணியில், முன்பு ஏப்ரல், மே மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பரிசல் மூலமாகவே ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை. பரிசல் பயணத்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதால், வசதியானவர்கள் மட்டுமே பத்திரமாக ஆற்றைக் கடக்க முடியும். மற்றவர்கள் நீந்தியே ஆற்றைக் கடந்தனர். வயதானவர்கள், குழந்தைகள் ஆற்றைக் கடக்கும்போது, தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடிக்கடி உயிர்ப்பலிகளும் நிகழ்ந்தன.


நெல்லை டவுனில் மட்டுமே வணிக நிறுவனங்கள் செயல்பட்டதால், படகுத்துறை மூலமாகவே உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இதற்காக படகுத்துறையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். படகில் முதலில் இடம் பிடிக்க லஞ்சம் கொடுக்கும் நிலையையும் இது ஏற்படுத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தகராறுகள் ஒரு புறமும், மறுபுறம் சமூக விரோதிகளால் கொள்ளை சம்பவங்களும் நடக்க... படகுத்துறை எப்போதும் குழப்பமான சூழலிலேயே காட்சியளித்தது.


பாலம் கட்ட கோரிக்கை : நிராகரித்த ஆங்கிலேய அரசு
"இப்பிரச்னைக்கு தீர்வு காண திருநெல்வேலி, பாளையங் கோட்டையை இணைக்கும் பாலம் கட்ட வேண்டும். அது அவசரமானதும், அவசியமானதும் கூட" என 1836-ம் ஆண்டு அப்போது நாட்டை ஆண்ட ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த ஆர்.ஈடன் கடிதம் ஒன்றை எழுதினார்.

ஆங்கிலேயர்கள் வளர்ச்சி திட்டங்களை தங்களின் வசதிக்காக மட்டுமே செய்து கொண்டனர். தங்களுக்கு பயன்படாத எந்த திட்டங்களையும் அவர்கள் செய்யவில்லை. அதனால் அந்த திட்டத்தைக் கிடப்பில் போட்டது.

இந்நிலையில், நான்கு வருடங்களுக்குப் பிறகு 1840 மார்ச் 5-ம் தேதி நெல்லை ஜில்லா கலெக்டராக பொறுப்பேற்றார் .பி.தாம்சன். அவர் பொறுப்பேற்ற ஐந்து நாட்களில் குறுக்குத்துறை படகுத்துறையில் பெரிய கலவரம் வெடித்தது. அங்கு நடந்த வன்முறையில் சிலர் கொல்லப்பட்டனர்.

இது கலெக்டர் தாம்சனை பாதித்தது. படகுத்துறை பகுதியில் ஒரு மேம்பாலம் இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது என நினைத்தார். உடனடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் தாசில்தார் அந்தஸ்துக்கு நிகரான சிரஸ்தார் பொறுப்பில் இருந்த சுலோச்சன முதலியாரும் கலந்து கொண்டார். படகுத்துறையில் நடக்கும் கலவரம் மற்றும் குழப்பங்களைக் கட்டுப்படுத்த உடனடியாக பாலம் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

லண்டன் பாலத்தின் தோற்றத்தில் புதிய பாலம்

இதற்கான பொறுப்பு கேப்டன் ஃபேபரிடம் ஒப்படைக்கப்பட்டது.  760 அடி நீளம், 21.5 அடி அகலம், 60 அடி விட்டத்தில் 11 ஆர்ச்சுகள், அவற்றை தாங்க இரட்டை தூண்களுடன்  பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டது. அந்த தூண்கள் ரோமானிய அரண்மனையை நினைவூட்டியது. லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடன் இந்த வரைபடம் இருந்ததால், கலெக்டர் தாம்சனுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால், அதில் ஒரு சிக்கல்.. இந்த பாலத்துக்கான திட்ட மதிப்பீடு அரை லட்சம்!  அப்போது 50 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.

மக்களுக்காக கட்டப்படும் பாலம் என்பதால் மக்களிடம் வசூலித்து பணத்தை திரட்டலாம் என்றார் கலெக்டர் தாம்சன்.  பணத்தை வசூல் செய்யும் பொறுப்பு சுலோச்சன முதலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களிடம் பணத்தை பெற்றா இதை செய்வது என யோசித்தார். மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களுக்கு மக்களிடமே பணம் பெறுவதா என்பதாக இருந்தது அவரது சிந்தனை.

பொன், பொருளை விற்று பாலம் கட்டினார்

இது தொடர்பாக மனைவி வடிவாம்பாளிடம் ஆலோசித்தார். நாமே இந்த பாலத்தை கட்டிக்கொடுத்தால் என்ன என மனைவியிடம் கேட்டார் சுலோச்சன முதலியார். அவர் எந்த மறுப்பும் சொல்லாமல், தன்னிடம் இருந்த நகைகளை எல்லாம் கொடுத்தார். வீட்டில் இருந்த பணம், நகைகளை எல்லாம் கொடுத்து பாலப்பணிகளை துவங்கச் சொன்னார் சுலோச்சனா முதலியார், உடனடியாக பணிகளை தொடங்கச் சொன்னார். மூன்று வருடமாக கட்டப்பட்ட இந்த பாலத்தின் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.

"இந்தப் பாலத்தை கட்ட தனிநபராக உதவிய சுலோச்சன முதலியாரை வெள்ளைய அரசு சிறப்பாக கௌரவித்து உள்ளது. திறப்பு விழாவின்போது யானை முன்னே நடந்து செல்ல அதன் பின்னால் மேளதாளம் முழங்க முதல் ஆளாக சுலோச்சன முதலியார் அந்தப் பாலத்தில் நடந்து சென்றுள்ளார். அவருக்கு பின்னால், பாலத்தை கட்டிய கேப்டன் ஃபேபர், பொறியாளர் டபிள்யூ.ஹெச்.ஹார்ஸ்லே ஆகியோர் சென்றுள்ளனர். அதன் பிறகே கலெக்டர் சென்றுள்ளார். அவர்களுக்கு பின்னரே அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து சென்று இருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள் அளித்த கவுரவம்...

அத்துடன், சுலோச்சன முதலியாரை பாராட்டும் வகையில் அந்த பாலம் தொடங்கும் இடத்தில் 20 அடி உயத்தில் கோபுரம் அமைக்கப்பட்டு அதில் ஒரு மீட்டர் அகலம் கொண்ட கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. ஒரு பக்கத்தில் தமிழும் மறு பக்கத்தில் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்தது. அந்த பாலத்தை கட்டுவதற்கு சுலோச்சன முதலியார் உதவி செய்ததை குறிப்பிட்டு ஆங்கிலேயர்கள் அந்த கல்வெட்டை பதித்து இருந்தார்கள். 1970 வரையிலும் அந்த கல்வெட்டு இருந்தது.

இடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் பழுதடைந்தது. பின்னர், வாகன நெருக்கடி காரணமாக இந்தப் பாலத்தை உடைத்து விட்டு, அருகிலேயே அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதில் உள்ள தூண்கள் உடைக்கவே முடியாதபடி மிகவும் உறுதியாக இருந்தன. பாலத்தை உடைப்பது இயலாத காரியம் என்பதால் அதே பாலத்தை அகலப்படுத்தினார்கள். அப்படி செய்யும்போது அங்கிருந்த கற்கோபுரத்தை தகர்த்து விட்டார்கள். அதில் இருந்த கல்வெட்டையும் எடுத்து வீசிவிட்டார்கள். ஆங்கிலேய அரசு தமிழனுக்கு செலுத்திய மரியாதையை நாம் மறந்து போனது இப்படித்தான்," என்கிறார் வரலாற்று ஆய்வாளரான தொ.பரமசிவன்.

சுலோச்சன முதலியாரின் வாரிசுகள் இப்போதும் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமணம் என்ற ஊரில் வசிக்கிறார்கள். தங்கள் மூதாதையர் சேர்த்த சொத்துக்களை பாலத்தில் போட்டு விட்டதாலோ என்னவோ வறுமையில் வாடுகிறார்கள். சுலோச்சன முதலியாரின் 6-ம் தலைமுறை வாரிசான அருணாச்சல முதலியார் என்பவர் அங்கு மருந்துக்கடை நடத்தி வருகிறார். ஆங்கிலேய அரசாங்கம் சுலோச்சன முதலியாரின் தியாகத்தை பாராட்டி வழங்கிய செப்புப் பட்டயம்ஆங்கிலேய அரசு அவருக்கு நன்றி தெரிவித்து எழுதப்பட்ட வாழ்த்துப் பத்திரமும் அவரிடம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

யார் இந்த சுலோச்சன முதலியார்?

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமணம் என்கிற குக்கிராமத்தில், செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர், சுலோச்சன முதலியார். அவரது மூதாதையர்கள் ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்களாக இருந்தவர்கள். தந்தை ராமலிங்க முதலியார் காலத்தில் குடும்பம் நெல்லைக்கு குடிபெயர்ந்தது. அவரது தந்தை, ஆங்கிலேயரான பானர்மேனிடம் (கட்டபொம்மனின் வழக்கை விசாரித்தவர்) மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்.

சுலோச்சன முதலியார் செல்வச்செழிப்பில் இருந்ததால் கவுரவத்துக்காகவே கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். கலெக்டருக்கு இணையாக குதிரை பூட்டிய கோட்ச் வண்டியில் தினமும் அவர் அலுவலகத்துக்கு செல்வார். கறுப்பு கோட்டு, தலைப்பாகை, அங்கவஸ்திரம், வைரக்கடுக்கண் அணிந்து அவர் அலுவலகத்துக்கு செல்வார் என்கிறார்கள். தான் மட்டும் அல்லாமல் தனது குடும்பத்தினர் சம்பாதித்த பணம் முழுவதையும் செலவு செய்துதான் இந்த பாலத்தை கட்டினார் சுலோச்சன முதலியார்.

கடந்த சில வருடங்களாக எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் இந்த பாலம் திறக்கப்பட்ட தினத்தை கொண்டாடி வருகிறார்கள். அதன்படி 174 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது இந்த பாலம். ஒரு ஊருக்காக, மக்களுக்காக நடந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில், இந்த நாளை அரசு விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

 Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Wednesday, November 23, 2016

சத்தமின்றி


சத்தமின்றி
கத்தைக்கத்தையாய்
பெட்டியில் வைத்து பூட்டீனீர்

கணக்கில்
வரவு வைக்காமல்
கையிருப்பில் அடுக்கி கொண்டீர்.

புதிதாய்
கருப்பு என்று
பெயர் சூட்டி வைத்தீர்.

அச்சடித்த
காகிதக்குப்பை ஒழிவதற்குள்
சில்லறையாய் மாற்ற வழிவகுத்தீர்.

வங்கியில்
வரிசையாய் நின்றும்
மேலாளரை கவனித்தும் கைமாற்றினீர்.

தங்கம்
வாங்கி வைத்தும்
பங்கம் வராமல் பதுக்கினீர்.

நூறாய்
வைத்துக் கொண்டவனை
ஆளாய் பார்த்து நட்பாக்கினீர்.

வேலைக்காரன்
வீட்டுப்பானையை தற்காலிக
கருவூலப் பெட்டியாய் மாற்றினீர்.

நிம்மதி
தராது என்று
ஏழை ஒருபோதும் சொன்னதில்லை.

நிம்மதி
தராத என்னை
பணக்காரன் இழக்க தயாரில்லை.
Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms