வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, December 31, 2015

சென்னையில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள்

சென்னையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டிச்சென்றால் வாகனங்கள் உடனே பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமலும், சந்தோஷமாக, மகிழ்ச்சி யாக புத்தாண்டு விழாவை கொண்டாடும் வகையிலும் போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். 

அதுபற்றிய விவரம் வருமாறு:-

* பொழுதுபோக்கு இடங்களில் 31-ந் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்கப்படும். நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுபான விற்பனை மற்றும் உணவு விற்பனையை நிறுத்திக்கொண்டு கொண்டாட்டங்களையும் கண்டிப்பாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

* நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கும் இடங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வரும் வாகனங்களை நுழைவுவாயிலில் நிறுத்தி உரிய சோதனை நடத்த வேண்டும்.

* அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மது வகைகளை பரிமாற வேண்டும்.

* நீச்சல் குளங்களின் மீது மேடை அமைத்து புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த கூடாது.

* நீச்சல் குளங்களை 31-ந் தேதியன்று மாலை 6 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6 மணி வரை மூடிவிட வேண்டும்.

* மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மது அருந்தி விட்டு வாகனங்களில் செல்பவர்கள் மது அருந்தாத சிறப்பு டிரைவர்களை வாகனங்களை ஓட்டுவதற்கு பணியமர்த்த வேண்டும். குடிபோதையில் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக புத்தாண்டு கொண்டாட்டங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுபவர் மீது கடுமையான சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.

* இரண்டு சக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் செல்லக்கூடாது. இரண்டு சக்கர வாகனங்களை அதிவேகமாகவும் ஓட்டிச் செல்லக்கூடாது.

* புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மெரினா மற்றும் எலியட்ஸ் பீச் போன்ற இடங்களில் கடலில் குளிக்க அனுமதி இல்லை. கடல் ஓரமாக செல்வதற்கு கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கடலில் உல்லாசமாக படகு சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* பெண்களை கிண்டல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. பெண்கள் மற்றும் பிறர் மீது வண்ணப்பொடிகளை தூவுதல், சாயத்தண்ணீரை பீய்ச்சி அடித்தல் போன்றவற்றுக்கும் அனுமதி இல்லை.

* சென்னையில் முக்கியமான சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையும் நடத்தப்படும்.


இவ்வாறு போலீஸ் கமிஷனர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly and PDF புத்தகங்கள் படிக்க –ARROWINBOOKS BLOG
Happy New Year 2016 Arrow Sankar's Blog

Wednesday, December 30, 2015

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில எளிய வழிகள்!

குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டுமெனில், அது அந்த தாயின் கையில் தான் உள்ளது. சிறு வயதிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் நன்கு மனதில் பதியும் படி சொல்லிக் கொடுத்தால், அதை அவர்கள் மறக்கவேமாட்டார்கள். இங்கு உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்: 

* பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும்.

* எப்போதும் குழந்தைகளுக்கு படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதிலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். எனவே படிப்பில் சற்று மந்தமாக இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த முறையை அவசியம் பின்பற்றினால் மிகவும் நல்லது. 

* உங்கள் குழந்தைகளை குறைந்தது 8 மணிநேரமாவது தூங்க வைக்க வேண்டும். மேலும் இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தைப் பின்பற்ற வைக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு மாவுச்சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிமானமாகும் உணவை கொடுப்பது நல்லது. ஏனெனில் மாவுச்சத்துள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.

ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள்.


படித்தது பிடித்து இருந்தது - பதிவிட்டுள்ளேன்

Print Friendly and PDF
  புத்தகங்கள் படிக்க –ARROWINBOOKS BLOG 

Happy New Year 2016 Arrow Sankar's Blog

Monday, December 28, 2015

புத்தாண்டு வருக

புதிது என்றாலே உற்சாகம்தான், புது உடை, புது உறவுகள், என புதிது கிடைத்தாலே உற்சாகம் அடைகிறது மனம். அதுபோலத்தான் 12 மாதங்கள் முடிந்து புதிதாய் ஒரு ஆண்டு பிறக்க தொடங்கினாலே அனைவருமே அதை கொண்டாட தொடங்கிவிடுகின்றனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் ஜனவரி-1ம் தேதி தொடங்கி இரண்டு வாரங்களுக்காவது உறவினர்கள், நண்பர்களிடையே புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். புத்தாண்டு கொண்டாட்டம் வரலாறு புத்தாண்டு கொண்டாடும் பழக்கம் எப்படி வந்தது என்பதை சற்றே பின்னோக்கினால் மெசபடோமியாவில் தான், முதன் முதலில் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது என்று கூறப்படுகிறது. பாபிலோனில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது.


பாபிலோன் நாட்டில் கி.மு 2000 மாவது ஆண்டில் வசந்த காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் விதமாக புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது. 

இலையுதிர்காலம் முடிந்து பூமியில் புதிய இலைகள் பசுமையை மலரச்செய்யும் வசந்தத்தை வரவேற்கும் விதமாக பாபிலோனிய மக்கள் புத்தாண்டு கொண்டாடினர். 11 நாட்கள் அவர்களின் கொண்டாட்டம் களை கட்டும். தற்போதைய நவீன புத்தாண்டு கொண்டாட்டம் டிசம்பர் 31ம் நாள் இரவோடு முடிந்து விடுகிறது. ரோமானியர்கள் புத்தாண்டு சூரியனின் நகர்வினை அடிப்படையாக்க் கொண்டு ரோமானியர்களின் காலண்டரின் மார்ச் 1 ம் தேதியே புத்தாண்டு தினமாக கொண்டாடத் தொடங்கினர். அந்த காலக் கட்டத்தில், மார்ச்சை முதல் மாதமாக கொண்டு, ஒரு ஆண்டுக்கு, 10 மாதங்கள் இருந்தன. அந்த காலண்டரில் 7வது மாதமாக செப்டம்பரும், 8 வது மாதமாக அக்டோபரும், 9வது மாதமாக நவம்பரும், 10வது மாதமாக டிசம்பரும் இருந்தது. லத்தீன் மொழியில் செப்டம்என்றால் ‘7’, ‘அக்டோஎன்றால் ‘8’, ‘நவம்என்றால் ‘9’, ‘டிசம்என்றால் ‘10’ என்றும் பொருள்படும். ஆனால் தற்போது, 9வது மாதமாக செப்டம்பரும், 10வது மாதமாக அக்டோபரும், 11வது மாதமாக நவம்பரும், 12வது மாதமாக டிசம்பரும் உள்ளன.

ஜனவரி 1ல் கொண்டாட்டம் இதன் பின்னர் கிமு 153 ஆண்டில் ரோமன் செனட் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தது. கி.மு.153ம் ஆண்டில், ரோமாபுரியை ஆட்சி செய்த இரண்டாவது ரோமானிய அரசன் நுமா பொன்டிலிஸ் ரோமன் காலண்டரில், ஜனவரியை முதல் மாதமாகவும், பிப்ரவரியை இரண்டாவது மாதமாகவும் திருத்தி அமைத்தார். அப்போதுதான், ஜனவரி ஒன்றாம் தேதிக்கு, புத்தாண்டு இடம் பெயர்ந்தது. கிரிகோரியன் காலண்டர் ஜூலியஸ் சீசர் காலத்தில் இருந்து ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜூலியஸ் சீசர் ஆண்ட காலத்தில், சூரியனை மையமாக கொண்டு, ஜூலியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்பின்னர் பல புதிய காலண்டர்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு முன்பு, நிலவின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு காலண்டர்கள் உருவாக்கப்பட்டன. போப் 12ன் கிரிகோரி காலத்தில் கிரிகோரியன் காலண்டர் முறை உருவாக்கப்பட்டது. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த கத்தோலிக்கர்களும், பிராடஸ்டன்டுகளும் இந்த காலண்டரை ஏற்றுக் கொண்டனர். இதன் பின், உலகில் உள்ள அனைவரும் கிரிகோரியன் காலண்டர் முறையை ஏற்றுக் கொண்டு, அதை பின்பற்றி வருகின்றனர். கிருஸ்தவர்களால் புதுப்பொலிவு இயேசு கிறிஸ்துவிற்கு பின், கிறிஸ்தவர்களால் புத்தாண்டிற்கு ஒரு பொலிவு ஏற்பட்டது. கிருஸ்துமஸ், புனித வெள்ளி, ஈஸ்டர் என வரிசையாக விழாக்கள் வருவதை ஒட்டி கிருஸ்துவ பெருமக்கள் புத்தாண்டினை உற்சாகமாக கொண்டாடத் தொடங்கினர். அன்றைய தினம் தேவாலயத்திற்குச் சென்று பாடல்களைப் பாடி பிரார்த்தனைகள் செய்கின்றனர். இன்றைக்கு உலக மக்கள் அனைவருமே மொழி, இன, மத பாகுபாடு இன்றி, ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாகக் கருதி, உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஆனால் புத்தாண்டு தினம் என்பது நாடு மொழி இனம் மதம் எனும் காரணிகளால் மாறுபடுகிறது. உதராணமாக தமிழ் புத்தாண்டு என்பது தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை முதல் நாளையும் ,ஆந்திர,கர்நாடக மற்றும் மராட்டியர் யுகாதி என்று பங்குனி மாதத்தின் நிறைவின் போது கொண்டாடுகின்றனர். ஜெயின் சமூகத்தினர் தீபாவளியை புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர். சீன தேசத்தினரும் மாறுபட்ட மாதத்தின் நாளை புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர்.

அதனால் முதலில் சொன்னது போல் புதிது என்றாலே உற்சாகம்தான். புது உடை, புது உறவுகள், என புதிது கிடைத்தாலே மனம் உற்சாகம் அடைகிறது.எனவே புதிது,உற்சாகம்,நம்பிக்கை என்ற அடிப்படையில் எப்போதும் விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் மனித இனத்திற்கும் மனதிற்கும் அவசியமாகிறது.
Happy New Year 2016 Arrow Sankar's Blog
Print Friendly and PDF புத்தகங்கள் படிக்க –ARROWINBOOKS BLOG

Thursday, December 24, 2015

தலைமை

சுமை நிறைந்த வனப் பகுதிக்குள் ஆசிரமம் அமைத்து தங்கியிருந்தார் ஒரு ஆன்மிக குரு. அவரிடம் ஏராளமானவர்கள் சீடர்களாக சேர்ந்து, ஞானத்தையும், ஆன்மிக மார்க்கத்தையும் கற்றறிந்து வந்தனர். ஒரு பிரிவினர் தங்களின் ஆன்மிக ஞானத்தை வளர்த்துக் கொண்டதும், அவர்களை தனியாக போகும்படி கூறிவிட்டு, அடுத்ததாக புதியவர்களை சீடர்களாக சேர்த்து, அவர்களுக்கு ஞான மார்க்கத்தை கற்றுக்கொடுப்பதை தன்னுடைய பணியாக வைத்திருந்தார் அந்த குரு.

சிறிய குடிலாக தொடங்கப்பட்ட குடில், பல சீடர்களின் வருகை காரணமாக கொஞ்சம் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. குருவின் ஆன்மிகத் தொண்டையும், அவரது சிறந்த தவத்தையும் தெரிந்து கொண்ட, அந்நாட்டு மன்னரும், பொதுமக்களும் கூட அவ்வப்போது குருவின் ஆசிரமத்திற்கு வந்து தங்கியிருந்து அவரை வழிபட்டு, வாழ்வை சிறப்புற வாழ்வதற்கான வழியை கேட்டுச் சென்றனர். 

காலங்கள் பல உருண்டோடின. குருவுக்கு உடல் அளவில் தளர்ச்சி ஏற்பட்டது. தனது இறுதிக்காலம் நெருங்கிக் கொண்       டிருப்பதை அவர் உணர்ந்தார். எனவே தனக்கு அடுத்தபடியாக ஆசிரமத்தைக் கவனித்துக் கொள்ளவும், ஞான மார்க்கத்தை தளர விடாமல் வளர்த்தெடுக்கவும், தகுந்ததொரு நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் குருவுக்கு தோன்றியது. இதனால் அவர் சீடர்களுக்கு ஒரு தேர்வு வைக்க முடிவு செய்தார்.

அதன்படி சீடர்கள் அனைவரையும் அழைத்தார் குரு. அவரது கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு, சீடர்கள் அனைவரும் ஆயத்தமாக நின்று கொண்டிருந்தனர்.

குரு பேசலானார். என் அன்புக்குரிய சீடர்களே! உங்களிடம் நான் ஒன்று கூறப்போகிறேன். அது யாதெனில், எனக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது. அதனால் எனது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம், என்னை ஓய்வு எடுக்கச் சொல்வது போல் இருக்கிறது. எனவே இனிமேலும் தொடர்ந்து என்னால் இந்த ஆசிரமத்தை நடத்த முடியாது. எனவே உங்களில் இருந்து ஒருவரை, எனது வாரிசாக, இந்த ஆசிரமத்தை எந்த சுயநலமும் இல்லாமல், நல்லவிதமாக நடத்துவதற்கு தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அவ்வாறு தேர்வு செய்யப்படுபவரிடம் இந்த ஆசிரமம் ஒப்படைக்கப்படும். அவருக்கு கீழ் மற்றவர்கள் அனைவரும் இருந்து தங்கள் பணியை செய்து வர வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு முன் உங்களது கருத்தை கேட்கவே, அனைவரையும் இங்கு அழைத்தேன்என்றார்.


மேலும் அவர், ‘உங்களில் யார் இந்த ஆசிரமத்தின் அடுத்த வாரிசாக வர விரும்புகிறீர்கள். அப்படி விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கையை உயர்த்திக் காட்டி எனக்குத் தெரியப்படுத்தலாம்என்றார்.

அனைத்து சீடர்களும் ஒரு சேர தங்களது கையை உயர்த்தி, தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள். குருவானவர் தன்னுடைய தீர்க்கமான பார்வையால், சீடர்கள் கூட்டத்தை ஒருமுறை கவனித்தார். அப்போது ஒரே ஒரு சீடன் மட்டும் கையை உயர்த்தாமல் இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

அந்த சீடனிடம், ‘நீ மட்டும் ஏன் கையை தூக்கவில்லை. உனக்கு இந்த ஆசிரமத்தின் தலைமை பொறுப்பை ஏற்க விருப்பம் இல்லையா?’ என்று கேட்டார்.

அதற்கு அந்த சீடன், ‘குருவே! இங்கு பலரும் ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க விருப்பம் தெரிவிப்பதைக் கண்டேன். அவர்களின் ஆசைக்கு குறுக்கே நிற்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் அவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் வகையில் அமைதியாக இருந்து விட்டேன்என்றான்.

அவனது பதிலைக் கேட்டதும் குரு மனம் மகிழ்ந்தார். அவரது முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இந்த ஆசிரமத்தின் தலைமை பொறுப்பிற்கு வரக்கூடியவர் ஆசைகளை துறந்தவராக இருக்க வேண்டும். அடுத்தவர்களின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து, அவர்களை அனுசரித்து போகக் கூடியவராக இருக்க வேண்டும். அந்தத் தகுதிகள் அனைத்தும் உன்னிடமே உள்ளன. அதனால் இந்த ஆசிரமத்தின் தலைமை பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன்என்றார்.

பின்னர் மற்ற சீடர்களைப் பார்த்து, ‘உங்களுக்கு இதில் ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா?’ என்று கேட்டார்.


சீடர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், ‘இல்லை குருவேஎன்று மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

புத்தகங்கள் படிக்க –ARROWINBOOKS BLOG
Print Friendly and PDF

எல் நினோ

சென்னையின் பெருமழைக்கு முன்பும் சரி, பிறகும் சரி எல் நினோ (El Nino)  என்ற பெயர் அதிகமாக அடிபடத் துவங்கியிருக்கிறது. அதிலும் .நா சபையின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு எல் நினோவைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.


இதோ, எல் நினோவை பற்றிய பத்து தகவல்கள்...

1.  'எல் நினோ' என்பது ஸ்பானிய மொழி வார்த்தை. 'குட்டிப் பையன் அல்லது சிறுவன்' என்பது இதன் பொருள். டிசம்பர் மாதத்தை ஒட்டி அதாவது கிறிஸ்துமசை ஒட்டி நிகழும் வளிமண்டல மாற்ற நிகழ்வாதலால் குட்டிப் பையனைப் பொதுவாக 'குழந்தை ஏசு' என்ற பொருள்படும்படியும் அழைக்கிறார்கள். பசுபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியின் மேற்பரப்பில் நடைபெறும் வெப்பநிலை மாறுபாடு மற்றும் இதன் உப விளைவாக உலகின் பெரும்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே 'எல் நினோ.'

 2. சுருக்கமாக எல் நினோ என அழைக்கப்பட்டாலும், 'எல் நினோ தெற்கத்திய அலைவு' (El Nino Southern Oscillation – ENSO) என முழுமையாக அழைக்கப்படுவதே சரியானது. கிழக்கு பசுபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு ஏற்படும் போது வழக்கமாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் திசையானது அதற்கு நேர்மாறாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி திசை மாறுகிறது, காற்று வீசும் திசையின் இந்த ஊசலாட்டத்தின் காரணமாகவே 'எல் நினோ தெற்கத்திய அலைவு' என்று அழைக்கப்படுகிறது.

3. இத்தகைய காற்றின் திசைமாற்றத்தின் காரணமாக பசிபிக் பெருங்கடலின் காலநிலை முற்றிலுமாக மாற்றமடைகிறது. வழக்கமான ஈரப்பதம் மற்றும் மித வெப்பம் கொண்ட பசிபிக்கின் மேற்குப் பகுதியானது எல் நினோவிற்குப் பிறகு ஈரப்பதம் இல்லாமல் குறைந்த மழையும் வறண்ட நிலையும் கொண்டதாக மாறுகிறது. இதேபோல  எல் நினோ நிகழ்வால் வழக்கமாக வறண்ட குளிர் மற்றும் குறைந்த மழையைக் கொண்ட  பசிபிக்கின் கிழக்குப் பகுதியானது ஈரப்பதமும் மித வெப்பமும் அதிக மழையும் கொண்டதாக மாற்றமடைகிறது.

4. எல் நினோ நிகழ்வைப் பற்றிய முறையான அறிவியல் ரீதியான விளக்கம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்பாகவே மனிதனின் பட்டறிவின் மூலமாக இந்நிகழ்வு கவனிக்கப்பட்டே வந்தது. பெரு நாட்டின் கடல் பகுதி மீனவர்களும் கப்பலோட்டிகளும் சில ஆண்டுகள் இடைவெளியில் கடலில் நீரோட்டம் வழக்கத்தை விட வெப்பமடைவதையும், மீன்களின் அளவு குறைந்து வருவதையும் கண்டறிந்தனர். இத்தகைய நிகழ்வுகளை அடுத்து வானிலையில் மாற்றமடைவதையும் கவனித்தே வந்தனர்.

5. தெற்கத்திய அலைவோட்டம் பற்றி  அறிவியல் ரீதியான விளக்கத்தை முதன் முதலாக அளித்தவர்  இங்கிலாந்தைச் சேர்ந்த 'சர் கில்பர்ட் வாக்கர்'. 1923 -ம் ஆண்டு அவர் இதை கண்டறிந்தார். 1904 -ம் ஆண்டு இந்திய வானவியல் ஆராய்ச்சி மையங்களின் தலைமை இயக்குநராக பணிபுரிந்த அவர் இந்திய வானிலை ஆராய்ச்சியில்தான் பயின்ற கணிதம் மற்றும் புள்ளியியலை பொருத்தி ஆய்வுகள் மேற்கொண்டார்.

இந்திய பருவ கால மழைகளை ஆராய்ந்ததில் சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதை அவர் கண்டறிந்தார். பதினைந்து ஆண்டுகள் இந்திய வானிலை மாற்றங்கள் மற்றும் பசிபிக் பிராந்திய வானிலையைக் கண்காணித்து வந்ததில் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் ஊசலாட்டம் போன்ற நிகழ்வு தெற்காசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கப் பகுதிகளின் வானிலையில் மாற்றம் ஏற்படுத்துவதைக் கண்டறிந்தார். இந்த நிகழ்வுகளையே 'எல் நினோ தெற்கு அலைவு' என்று அழைத்தார்.

6. எல் நினோவைப் பொறுத்த வரை, முன்கூட்டியே நம்மால் அதை துல்லியமாக இதுவரை கணிக்க முடிந்ததில்லை. இரண்டு முதல் ஐந்து ஆண்டு களுக்கு ஒரு முறை இந்நிகழ்வு ஏற்படுகிறது. இந்த கால இடைவெளியில் எல் நினோ நிகழ்வு சில வாரங்கள் முதல் மாதம் வரை நீடிக்கிறது.

சில சமயங்களில் எல் நினோ நிகழ்வானது மூன்று ஆண்டு முதல் ஏழு ஆண்டு  வரையிலான கால இடைவெளியில் காணப்படுகிறது. இத்தகைய சமயங்களில் சில மாதங்கள் வரை கூட எல் நினோ நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.

7. எல் நினோ நிகழ்வின் விளைவாக தென் அமெரிக்காவை ஒட்டிய கடல் பகுதிகளில் முக்கியமாக பெரு நாட்டின் கடல் பகுதிகளில் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதனால், மீன்களின் உணவூட்டப் பொருட் கள் குளிர்ச்சியான நீரின் அடிப்பகுதியில் தங்கிவிடுவதால் மேற்பகுதியின் வெப்பநீரில் ஊட்டப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படுகிறது, இதனால் மீன்கள் மடிகின்றன. இதனால் இக்கடல் பகுதிகளில் எல் நினோ நிகழ்வுக் காலத்தில் மீன்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும்.

8. 1982 மற்றும் 1983 ம் ஆண்டு  ஏற்பட்ட எல் நினோ நிகழ்வின் விளைவாக உலகம் முழுக்க 2000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். பொருளாதார ரீதியாகவும் ஆயிரம் கோடிக்கும் மேலான இழப்பு ஏற்பட்டது. 1990-1995 -ம் ஆண்டு வரை மிக நீண்ட எல் நினோ நிகழ்வு ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் மிகப்பெரும் வெள்ளம், புயல் போன்றவை சில பகுதிகளிலும் பஞ்சம், காட்டுத்தீ போன்றவை சில பகுதிகளிலும் நிகழ்ந்தது. ஆயிரம் ஆண்டுகாலத்தின் பெரும் பேரழிவாக இது கருதப்படுகிறது.

1997-1998 -ம் ஆண்டு எல் நினோ நிகழப்போவதை முன்கூட்டியே நம்மால் கணிக்க முடிந்தது என்றாலும்உலகம் முழுவதும் ஏற்பட்ட  2000க்கும் மேற்பட்ட உயிரிழப்பை தடுக்க முடியவில்லை.

9. எல் நினோ நிகழ்வால் உலகின் பல பகுதிகளில் பெரு மழை, வறட்சி போன்றவை நிலவி பெரும் சேதத்தை ஏற்படுத்தினாலும் எல் நினோ நிகழ்வால் சில நன்மைகளும் இருக்கின்றன. வளி மண்டலத்தின் உயரத்தில் வேகமாக கிழக்கு நோக்கி வீசும் 'ஜெட் காற்றோட்டங்கள்' இக்காலப் பகுதியில் பெரும்பாலான புயல்களை வழி நடத்துவதாக இருக்கின்றன.

எல் நினோ நிகழ்வால் இந்த ஜெட் காற்றோட்டங்கள் மாற்றம் பெறுகின்றன. இதனால் பெரும் புயல்கள் வலுவிழக்கின்றன. சில பகுதிகளில் வானிலை மாற்றங்களில் நல்ல விளைவை ஏற்படுத்துகின்றன.

10. எல் நினோ நிகழ்விற்கு அப்படியே எதிர்மாறானது லா நினா ஆகும். எல் நினோ எவ்வாறு சிறுவன் எனப் பொருள் கொண்டதோ அதே போல லா நினா என்றால் ' சிறுமி' என்று பொருள் ஆகும். லா நினா நிகழ்வால் தென் அமெரிக்க கடல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அதிக வறட்சியும் குளிர்ச்சியும் ஒருங்கே நிகழும். மேற்கு பசுபிக் கடல் பகுதி மிதவெப்பமாகவும் அதிக ஈரப்பதமும் மற்றும் அதிக மழையும் இருக்கும்.

பொதுவாக எல் நினோ வை அடுத்து லா நினா நிகழும். ஆனால், எல்லா நேரங்களில் சிறுவனை அடுத்து சிறுமி வரமாட்டாள்.


Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms