வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, December 31, 2014

ஆறாவது அறிவு

மிருகத்துக்கு ஐந்தே அறிவு ,எனக்கு ஆறு அறிவாக்கும் என்று மனிதன் அடிக்கடி பெருமையடித்துக் கொள்வதை சிங்கத்தால் சகிக்க முடியவில்லை .
ஒரு நாள் அது கடவுளிடம் சென்று கடவுளே கடவுளே! எங்களுக்கு ஐந்தறிவைக் கொடுத்துவிட்டு மனிதனுக்கு மட்டும் ஆறறிவைக் கொடுத்திருக்கிறீர்களே, இது நியாயமா? என்று கேட்டது.கடவுள் திடுக்கிட்டு,அவனுக்கு நான் எங்கே ஆறறிவைக் கொடுத்தேன்? என்றார்.

எங்களுக்கில்லாத பகுத்தறிவை நீங்கள் அவனுக்குக் கொடுக்க வில்லையா? அதைத்தான் அவன் ஆறாவது அறிவு என்கிறான்! என்றது சிங்கம்.

நாசமாய்ப் போச்சு, அவனுக்கு நான் கொடுத்த சாபமல்லவா அது?

சாபமா!

சந்தேகமென்ன? எதையும் அறிய முயல்வதும்,அறிந்தாலும் அதை உணர முடியாமல் இருப்பதும், உணர்ந்தாலும் அதன்படி நடக்க முடியாமல் தவிப்பதும் நான் அவனுக்குக் கொடுத்த சாபம்தான்! என்றார்.

அந்த சாபத்தையா அவன் பகுத்தறிவு என்கிறான்? ஐயோ வேண்டாம்! அது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்! என்று ஓட்டம் பிடித்தது சிங்கம்.

விசேச நாட்கள் பண்டிகை நாட்கள் விழா நாட்கள் மனிதனை மனித உறவுகளை புதுப்பித்துக்கொள்ள உண்டானதை மறந்து பஞ்சமகா பாவங்களான கள்,காமம்,கொலை,களவு,பொய், இவைகளைத் தேடி அலையாமல் நல்லதை அறியவும்,அறிந்தாலும் அதை உணர்ந்தும் உணர்ந்தாலும் அதன்படி நடக்க முயன்றும்  மனித நேயத்தினை வளர்த்தும்  
புது வருட முதல் நாளை கொண்டாடுவோம் வாருங்கள்
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .

கதை : விந்தனின் குட்டிக் கதைகள் புத்தகத்திலிருந்து 

என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Print Friendly and PDF

Saturday, December 20, 2014

ரஷ்ய குழந்தைக்கு இதயம் கொடுத்த பெங்களூரு குழந்தை!


சென்னை,19, December 2014: பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த 2 வயது குழந்தையின் இதயம் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்த‌ப்பட்டது. ஒரு குழந்தையின் இதயத்தை இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை அடையாறு போர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் கடந்த 30 நாட்களாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இரண்டரை வயது ஆண் குழந்தை ஒன்று, இதயம் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தது. இம்மருத்துவமனை சார்பில் தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று திட்ட அலுவலகத்தில் இதயம் தேவை என்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், பெங்களூருவில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் தம்பதியின் 1 வயது 10 மாதம் ஆன ஆண் குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழே விழுந்தது. படுகாயம் அடைந்த குழந்தை அங்குள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் க‌டந்த வியாழக்கிழமை அந்த குழந்தை மூளைச்சாவு அடைந்தது. எனவே, குழந்தையின் பெற்றோர் உறுப்புதானம் செய்வதாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர். இது குறித்து சென்னை மருத்துவமனைக்கு தென் மண்டல உடலுறுப்பு மாற்று ஒருங் கிணைப்பு குழு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1 வயது 10 மாதமான பெங்களூரு குழந்தையின் இதயத்தை சென்னையில் உள்ள இரண்டரை வயது குழந்தைக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. இதனையடுத்து சென்னை மருத்துவமனையில் இருந்து இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு நேற்று அதிகாலை பெங்களூரு விரைந்தது. பெங்களூரு எம்ஜி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை மூலம் மூளைச்சாவு அடைந்த குழந்தையின் இதயத்தை எடுத்தனர். அதனை இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான திரவம் நிறைந்த குளிர்சாதன பெட்டிக்குள் பாதுகாப்பாக‌ வைத்தனர்.
பறந்த இதயம்: மருத்துவமனையில் இருந்து பெங்களூரு பழைய விமான நிலையம் 2.5 கி.மீ. தொலைவில் உள்ளது. எனவே இதயத்தை எடுத்துச் செல்லும் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க கிரீன் காரிடர் முறை அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இதயம் விமான நிலையத்துக்கு விரைவாக எடுத்து வரப்பட்டது.  அங்கிருந்து தனி விமானம் மூலமாக இதயம் சென்னை விமான நிலையத்திற்கு பகல் 2 மணி அளவில் வந்தடைந்தது.

தயாராக இருந்த ஆம்புலன்ஸ்சில் இதயத்துடன் மருத்துவர்கள் ஏறினர். சென்னையிலும் போக்குவரத்து போலீசார் கிரீன் காரிடர் முறையை ஏற்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து அடையாரில் உள்ள‌ தனியார் மருத்துவமனைக்கு 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சென்றடைந்தது. மொத்தத்தில் பெங்களூரு மருத்துவமனையில் பெறப்பட்ட இதயம் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சென்னையை வெற்றிகரமாக அடைந்தது. 

மருத்துவமனையில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் சுமார் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து இரண்டரை வயது குழந்தைக்கு பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட இதயத்தை வெற்றிகரமாக பொருத்தினர்.

பாதுகாப்பாக கொண்டுவரப் பட்ட இதயத்தை குழந்தைக்கு பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இரண்டரை வயது குழந்தைக்கு உடலுறுப்பு தானம் மூலம் கிடைத்த இதயத்தை பொருத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை' என்று போர்ட்டிஸ் மலர் மருத்துவமனையின் இயக்குநர் அரிஷ் மணியன் கூறியுள்ளார். குழந்தையின் இதய துடிப்பு சீராக இருப்பதாகவும் அவர் கூறினர்.

கல்லீரல் தானம் :மூளைச் சாவு அடைந்த குழந்தையின் கல்லீரல், மைசூருவைச் சேர்ந்த கல்லீரல் தேவைப்பட்ட 2வயது குழந்தைக்கு தானமாக அளிக்கப்பட்டது . பெங்களூருவில் உயிரிழந்த இந்திய குழந்தையின் இதயம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் இனி ரஷ்யாவில் துடிக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Print Friendly and PDF

ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம்


அனுமன் ஜெயந்தியான இன்று (21.12.2014) அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்

வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
விளக்கம் : எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.

தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்
ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்
விளக்கம் : பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.
 ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்
கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே
விளக்கம் : மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும், சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், வாயுதேவரின் பாக்கிய பூதருமான ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.
தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:
தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி
விளக்கம் : சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.
வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்
தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்
விளக்கம் : வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை ரட்சிப்பதில் உறுதிகொண்டவரும், வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமனை நேரில் தரிசித்தேன்.
ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி
விளக்கம் : பஞ்ச ரத்னம் என்று பெயருள்ள ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்.


Print Friendly and PDF

Wednesday, December 3, 2014

குழந்தைகள் பாராளுமன்றம் சுவர்ணலட்சுமி


 அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒருமுறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர். ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநா சபையில் பேசியுள்ளார்.

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவி துரைக்கண்ணு-லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.

சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து நன்கு படித்து வருகிறார். தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.
 குழந்தைகள் பாராளுமன்றம் என்றால் என்ன?


இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.

குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்சனைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.

ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

குழந்தைகள் பாராளுமன்றத்தில் அமைச்சரான சுவர்ணலட்சுமி

தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.

அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.

இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார். இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.

இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.

இப்படி ஒருமுறைக்கு இருமுறை ஐநா சபைக்கு போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.

ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்'ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. 'எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்' என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்சனைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப்பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும் என்று ஒரு முன்தயாரிப்போடு இருப்பேன்.

இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள் முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்கிறார் சுவர்ணலட்சுமி.

சுவர்ணலட்சுமியை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9025241999

நன்றி : வெப்துனியா,தமிழ் அலை,தமிழால் இணைவோம்,தின நாளிதழ்


Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms