வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Tuesday, December 20, 2016

குளிர்கால மழைக்கால காய்ச்சலை தவிர்ப்பது எப்படி?

குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் அதிக அளவில் நம்மைத் தாக்குவது காய்ச்சல். இப்போதெல்லாம் காய்ச்சல் வந்தாலே, `என்னது காய்ச்சலா? உஷாரா இருங்க... எல்லா பக்கமும் `டெங்குவாம், `சிக்குன்குனியாவாம்... ஏதோ மர்மக் காய்ச்சலாம்!எனக் கலவரத்துடன்தான் காய்ச்சலை எதிர்கொள்கிறோம். மூன்று நாட்களுக்கு மேல் ஜுரம் இருந்தால், மருத்துவர் பரிசோதனைக்கு நீட்டும் பட்டியலில் டைஃபாய்டு, மலேரியா, காமாலை, டெங்கு, சிக்குன்குனியா... என விதவிதமான பரிந்துரைகள். 

காய்ச்சல் ஏன் வருகிறது, மழைக்காலத்தில் அதைத் தவிர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்வோமா?


* காய்ச்சல் ஒரு தனி நோய் அல்ல. வெள்ளை அணுக்களைக் கொண்டு, நமது உடல் கிருமிகளுடன் நடத்தும் யுத்தத்தில் கிளம்பும் வெப்பமே காய்ச்சல். வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதபோது ஜுரம் கொஞ்சம் நீடிக்கலாம். புதுவகையான பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிரான யுத்தம் எனில், ஜுரம் நீடிக்கலாம். உடலில் வெள்ளை அணுக்கள் - கிருமிகளுக்கு இடையிலான யுத்தத்தில் ரத்தத் தட்டுக் குறைவு, உடல் நீர்ச்சத்துக் குறைவு, ஈரல்-மண்ணீரல் வீக்கம் எனத் தொந்தரவுகள் அதிகரிக்கும். அதுவே உடலின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, சுகவீனத்தை (ஜுரத்தை) உண்டாக்கும். 

* இனிப்பு, பால், நீர்க்காய்கறிகளைத் தவிருங்கள். மருத்துவர் பால் அருந்தச் சொல்லியிருந்தால், அதில் மிளகு, மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து, காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் மட்டும் அருந்துங்கள். இரவிலும் அதிகாலையிலும் வேண்டாம்! 

* ஆவி பிடித்தல், நெற்றிக்குப் பற்று இடுவது, சுக்கு-மல்லிக் கஷாயம் அருந்துதல்... என வாரம் ஒரு நாள் கண்டிப்பாகச் செய்யுங்கள். சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரம் கலந்து தயாரிக்கப்படும் கற்பூராதி தைலத்தை, குழந்தைகளுக்கு நெஞ்சில் தடவிவிடுங்கள். 
*  மிளகு, மஞ்சள், லவங்கப்பட்டை, கிராம்பு, கொள்ளுப் பயறு, நாட்டுக்கோழி முதலான, உடலுக்கு வெம்மை தரும் உணவுகளை அவ்வப்போது சேர்த்துக்கொள்வது நல்லது. 

* காலையில் கரிசாலை முசுமுசுக்கை இலை போட்ட தேநீர், மதியம் தூதுவளை மிளகு ரசம், மாலையில் துளசி பச்சைத் தேயிலை தேநீர்... இவை மழைக்கால நோய் எதிர்ப்பு உணவுகள். 

* ரத்தத் தட்டுக்களை உயர்த்த, சளியை வெளியேற்ற, இருமலை நீக்க, இரைப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகச் சிறந்த மருந்து ஆடுதொடா இலைச்சாறு. மருத்துவர் ஆலோசனையுடன், சரியான இலைதானா என உறுதிப்படுத்திக்கொண்டு ஓரிரு இலையை அரைத்து, சாறு எடுத்து, மழைக்காலத்து சளி காய்ச்சலை எளிதில் போக்கலாம். 

* இரு சக்கர வாகனத்தின் முன்புறத்தில் குழந்தைகளை அமர்த்தி, மாலை, இரவு நேரங்களில் பயணம் செய்யாதீர்கள். வாடைக் காற்று தாக்காமல் காதுகளைக் கவனமாக மூடிக்கொள்வது நல்லது! 

ஆனந்த விகடனில் மருத்துவர் கு.சிவராமன் 
Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Monday, December 19, 2016

வர்தா புயலால் நாம் கற்றுக்கொண்ட பாடம்!

அண்மையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்ட 'வர்தா' புயல் தாக்கத்தினால், மரங்கள் வேரோடு சாய்ந்தன.


நம்முடைய பாரம்பரிய தாய் மண் கொடுத்த மரங்கள் ஒன்றுகூட விழாமல் வெளிநாட்டு மரங்கள் மட்டுமே விழுந்தன.அவைகளை அகற்ற முடியாமல் குப்பை குளமாய் மாறி சென்னையே அழுக்காய் ஆனது. இது ஒருபுறம் இருந்தாலும் உயிர்பலி சேதாரம் முற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிதும் தவிர்க்கப் பட்டது.

'வர்தா' புயலால் வீதியில் சாய்ந்த மரங்களை முற்றிலுமாக அகற்றும் அளவுக்கு, போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில், காவல் துறையினருடன் தன்னார்வ தொண்டர்களும் விடியவிடிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்தந்தப் பகுதி இளைஞர்களே நேரடியாகக் களத்தில் இறங்கி மரங்களை அகற்றிய இளைஞர்கள் பலரும், "நம்ம ஊரு அரச மரமும், வேப்ப மரமும் சாயவே இல்லைங்க. விழுந்து கிடந்தது எல்லாமே வெளிநாட்டு மரங்கள்தான்" என்று சொல்லிச் சொல்லி வியக்கின்றனர். அந்த இளைஞர்களின் வியப்பே சமூக ஊடகங்களிலும் பரவி மிகவும் வைரலானது. பெருங்கொன்றை, தைல மரம், இயல்வாகை, சவுக்கு, கருவேலம் போன்ற மரங்களின் வீழ்ச்சியையும் அவர்கள் அதிகளவு கண்டுள்ளனர்.

அம்மரங்களில் ஒன்றுகூட நம்முடைய பாரம்பரிய தாய் மண் கொடுத்த மரங்கள் இல்லை' என்ற செய்தி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் நம்மூர் உள்நாட்டு மரங்களுக்கு என்றுமே தனிமவுசு உண்டு என்பது தெளிவாகியுள்ளது.

வர்தா புயலால், உள்நாட்டு மரங்கள் பெரிய அளவில் பாதிப்படையவில்லை. எந்தப் புயலையும் எதிர்கொண்டு கம்பீரத்துடன் நம்மூர் மரங்கள் நிற்பதைப் பார்க்கும்போது, சொந்த மண்ணில் நம் பலமே தனிதான் என்பதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. இந்த உண்மையை மனிதர்களுக்கு முன்பே பறவைகள் கற்றுக் கொண்டன எனலாம். அதன் காரணமாகவே, நம்மூர் மரங்களில் மட்டுமே பறவைகள் கூடுகட்டி வசித்து வந்துள்ளன. இயற்கையோடு பின்னிப் பிணைந்த வாழ்வைக் கொண்டுள்ள பறவைகளும், அவற்றின் கூடுகளும் 'வர்தாவின்' கோரப்பிடியில் பாதிப்பின்றி பாதுகாக்கப்பட்டுள்ளன. பறவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்பதோடு, அவற்றின் கூடுகளில் இருந்த வாரிசுகளும் தப்பித்துள்ளன.

மரங்கள், நிலச்சரிவைக் கட்டுப்படுத்தி, மண் அரிப்பைத் தடுக்கின்றன. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும்தன்மை மரங்களுக்கு உண்டு. புவியின் தட்பவெப்பநிலையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன. இந்தியாவில் 33 சதவீதம் அளவுக்கு இருந்த காடுகளின் பரப்பளவு மெல்ல குறைந்து, தற்போது 22 சதவீதமாகியுள்ளது. ஏற்கனவே குறைந்துள்ள 11 சதவீதத்தை மீண்டும் எட்டவேண்டுமானால், சுமார் 54 கோடி மரங்களை நட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். காடுகள் அழிவால் கடல்நீர் மட்டம் உயர்வு, புவி வெப்பமயமாதல் அதிகரித்தல் ஏற்படுகிறது. ஒரு சில இடங்களிலும் அதிக மழையும், வேறு சில இடங்களிலும் மிகுந்த வறட்சியும் ஏற்பட காடுகளின் சமநிலையின்மை காரணமாக அமைந்து விடுகிறது.

கடலோரங்களில் மரங்கள் வளர்க்கப்படுவதால், இயற்கைப் பேரிடர் ஏற்படும் நேரங்களில் அந்த மரங்கள் அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் தடுக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றுக்கு ஈடாக புதிதாக மரங்கள் நடப்படுகின்றனவா என்றால், இல்லை என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாக அமையும். அப்படியே மரங்கள் நடப்பட்டாலும், அவை முழுமையாகப் பராமரிக்கபடாமல் விடப்படுகின்றன.

எனவே. இந்த புயலின் தாக்குதலில் இருந்து நாம்  பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!.இனி பாரம்பரிய தாய் மண் மரங்களை வளர்ப்போம். இயற்கையை காப்போம் Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள் !

புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள் !

பலமானவரையும் உருக்கிப்போட்டுவிடும் அசுரபலம் கொண்டது புற்றுநோய். வந்த பிறகு அவஸ்தைப்படுவதைவிட, வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். புகைபிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, உடல் உழைப்பில்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, ஊட்டச்சத்துக் குறைபாடு, மனஅழுத்தம், மனச்சோர்வு, காஸ்மெட்டிக் பொருட்களை அதிகம் உபயோகிப்பது, பிளாஸ்டிக் பயன்பாடு... எனப் புற்றுநோய்க்கான காரணிகள் ஏராளம். இவற்றைத் தவிர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இயற்கையாகவே புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்திகொண்ட சில சமையல் பொருட்களும் மூலிகைகளும் இருக்கின்றன. அவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினாலே போதும்; புற்றுநோயை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம். அவை...
                               
         
இஞ்சி
நாட்டுவைத்தியத்தில் இஞ்சியின் பயன்பாடு மிக முக்கியமானது. நம் முன்னோர்கள் சளித் தொந்தரவில் இருந்து மூலநோய் வரைக்கும் இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இஞ்சியை அப்படியே ஃபிரெஷ்ஷாகவோ பௌடராகவோகூடப் பயன்படுத்தலாம். சமைக்கும்போது மட்டும், அளவில் கவனம் தேவை. ஒரு டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி என்பது, 1/8 டீஸ்பூன் இஞ்சி பௌடருக்குச் சமம். சமையலில் இஞ்சி சேர்ப்பது சுவையைக் கூட்டும்; சமைத்த பொருள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும்; ஆரோக்கியத்துக்கு உதவும்; குடல், வயிறு ஆகியவற்றைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.
                                       

மஞ்சள்
உணவின் நிறத்துக்காகப் பயன்படுகிறது என நாம் நினைக்கும் மஞ்சள் மகத்தானது. மஞ்சளில் இருக்கும் மஞ்சள் நிறம் அபாரமாகச் செயல்புரியும் தன்மை கொண்டது. இது, ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுகிறது. குர்குமின் (Curcumin) என்ற சத்து, புற்றுநோய் வளராமல் பாதுகாக்கிறது. தினமும் கால் டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து கொள்வது நல்லது. குடல், ப்ராஸ்டேட், மார்பகம் மற்றும் தோல் தொடர்பான புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.
                                           

சிவப்பு மிளகாய்
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் சிவப்பு மிளகாயேதான்... அதன் ஆற்றலோ அபாரம். இதில் இருக்கும் காரத்தன்மையில் உள்ள சேர்மானம் வலியில் இருந்து நிவாரணம் தரக்கூடியது; தோலுக்குப் பாதுகாப்பு தரக்கூடியது; செரிமானக்கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. சிவப்பு மிளகாயை அளவோடு சமையலில் சேர்த்துக்கொள்வது தோல் தொடர்பான புற்றுநோயில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
                                                       

பூண்டு
மருத்துவக் குணம் கொண்ட பூண்டு உடலில் சேரும் நச்சுக்களை முறிக்க வல்லது. இதை, அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது. பூண்டில் இருக்கும் சல்ஃபர், ஆர்ஜினைன், ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் செலினியம் எல்லாமே உடல் ஆரோக்கியத்துக்கு உதவுபவை. பூண்டை நசுக்கும்போது அதிலிருந்து கிளம்பும் மணத்துக்குக் காரணம், பூண்டில் இருக்கும் ஆலிசின் (Allicin) என்ற சேர்மானம்தான். பூண்டு உடலில் சேரும் கொழுப்பைத் தடுக்க உதவுகிறது. மார்பகம், குடல், வயிறு, உணவுக்குழாய், கணையம் ஆகியவற்றில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. லுகூமியாஎனும் ரத்தப் புற்றுச் செல்களை அழிப்பதில் துணைபுரிகிறது. பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ஆற்றலும் உண்டு.
                                                      

புதினா
பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தி வரும் புதினா ஓர் அருமருந்து. வாயுக்கோளாறு, செரிமானமின்மை, முதுகுப்பிடிப்பு, மூட்டுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இர்ரிடபிள் பௌல் சிண்ட்ரோம் மற்றும் ஃபுட் பாய்ஸன் போன்ற பிரச்னைகளின்போது உதவக்கூடியது. வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு.

 Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Sunday, December 18, 2016

போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த 30 வயது விவேக் ராமசாமி

முப்பது வயதில் எந்த வேலையும் கிடைக்கமாட்டேன் என்கிறது என்பதும், கிடைத்த வேலையில் திருப்தி இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்ற இளைஞர்களுக்கு மத்தியில் முப்பதே தில் நூறு கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரராகி இருக்கிறார் விவேக் ராமசாமி. இவருடைய வளர்ச்சி போர்ப்ஸ் பத்திரிக்கையில் இளம் தொழில்முனைவோர் பட்டியலில் இடம்பிடிக்க வைத்து இருக்கிறது. 


இவர் அமெரிக்காவில் ரொய்வன்ட் சயின்ஸ் என்று நிறுவனத்தை தொடங்கி அதில் தலைமை பொறுப்பில் இருக்கிறார். இவரது நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இவரது நிறுவன பெயரை கேட்டாலேயே பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிலியும், சிறிய பயோடெக்னாலஜி, பார்மா நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியும் தருகிறது. இதற்குக் காரணம், 'பல மருந்துகளைக் கால ஓட்டத்தில் மறந்து விட்டோம் அல்லது அந்த மருந்துகளைத் தயாரிக்க முதலீடு செய்யாமல் இருந்து விட்டோம். பெரிய பார்மா நிறுவனங்கள் மட்டுமே அனைத்திற்கும் மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பது அல்ல. மிகச்சிறிய நிறுவனம் கூட மிகப்பெரிய மருந்தினை கண்டுப்பிடிக்க வேண்டும். அந்தச் சிறிய நிறுவனங்களை அடையாளங்காணுவதே பெரிய வேலை' என்கிறார் விவேக். 

தென்னிந்தியாவில் இருந்து அமெரிக்காவில் வேலை வாய்ப்பிற்காக இடம்பெயர்ந்தவர்கள் இவருடைய பெற்றோர்கள். அப்பா ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாளர். அம்மா முதியோர் மனநல மருத்துவர். விவேக் பயாலஜி மூலம் உலகை மாற்ற முடியும் என்று நம்பி பயாலஜி படித்து இருக்கிறார். பள்ளியிலும், கல்லூரியிலும் அதிக நாட்கள் ஓட்டக்கூடாது என்று முடிவெடுத்தவர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறார். இப்படி ஆரம்பித்து உலகம் எந்த மருத்து பொருளை தேடி ஓடுகிறது என்பதைக் கணித்து அதனைத் தயாரிக்க ஆரம்பித்து இருக்கிறார். 

அல்சைமர் நோய் மறதிநோய் அமெரிக்காவில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் முதியோர்களுக்கு இந்த நோய் வாட்டி எடுக்க தொடங்கி இருப்பதை நூல் பிடித்தவர், புதிய நிறுவனத்திற்கு அசோவன்ட் என்று பெயரிட்டு மருந்து தயாரிப்பிலும் இறங்கி விட்டார். மொத்த பணியாளர்கள் 12 பேர் மட்டுமே. அதிலும் இவரது அம்மாவும், சகோதரரும் அடங்கும். இவருடைய நிறுவனத்தில் கல்லூரி படித்து முடித்தவர்கள் சில பேரையும், இரண்டு பயோடெக்னாலஜி ஜாம்பவான்களை வேலைக்கு வைத்திருக்கிறார். இந்த இரண்டு ஜாம்பவான்கள் ஏற்கனவே ஆராய்ச்சி துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
அசோவன்ட் நிறுவனம் தொடங்கி ஒரே வருடத்தில் 360 மில்லியன் டாலர் முதலீட்டை எட்டி இருக்கிறது. இந்த நிறுவனத்தை வாங்க கிளக்சோஸ்மித் கிளைன் முயற்சி செய்ய அதன் பின்பு இந்த நிறுவனத்தின் மதிப்பு கடகடவென ஐந்து பில்லியன் டாலர் வரை மதிப்பு உயர்ந்து இருக்கிறது. கிளக்சோஸ்மித் நிறுவனம் வாங்கும் முயற்சி தோல்வியில் முடிய அசோவன்ட் நிறுவனம் பெரிய நிறுவனமே அல்ல; மொத்தம் 12 பேரை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டது. ஆனால் பங்கு விலை சரிந்ததே தவிர, விவேக்கின் வளர்ச்சியினை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

கிளக்சோஸ்மித் கிளைன் கற்றுக்கொடுத்த பாடத்தை வைத்தும், அசோவன்ட் நிறுவனத்தின் லாபத்தை வைத்தும் தனியார் (ஹெச் ஃபண்ட்) முதலீட்டு நிறுவனத்தை ரொய்வன்ட் என்ற பெயரில் ஆரம்பித்திருக்கிறார் விவேக். இந்த நிறுவனம் பயோடெக்னாலஜி நிறுவனங்களுக்கும், பார்மா நிறுவனங்களுக்கும் முதலீட்டு உதவி செய்யும். குறிப்பாக, அரிதான நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் சிறு நிறுவனங்களிலும் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார். இதன் மூலம் பார்மா துறை வளர்ச்சி அடையும் போது பெருமளவில் வருமானம் கிடைக்கும். 2008 -ம் ஆண்டு பார்மாசெட் என்ற நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்ய ஆரம்பித்து இருக்கிறார். பார்மாசெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 5 டாலர். 2011 ம் ஆண்டு அதே பங்கின் விலை 137 டாலர். மூன்று வருடத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஒருவராக உயர்ந்து இருக்கிறார். இதைப்போலவே பல சிறிய பார்மா நிறுவனங்களில் முதலீடு செய்து மூன்றே வருடத்தில் பில்லியனர் ஆகி இருக்கிறார். இதன் மூலம் இவர் மிகவும் இளம் வயதில் பில்லியனர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். போர்ப்ஸ் நிறுவனம் ரொய்வன்ட் நிறுவனத்தின் மதிப்பு 3.5 பில்லியன் என மதிப்பிட்டு இருக்கிறது. 

இவருடைய வளர்ச்சியின் போதே ஐந்து வருடத்தில் நியூயார்க் பங்கு சந்தையில் பயோ டெக்னாலஜி இன்டெக்ஸ் 300% உயர்ந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் நாஸ்டாக் இன்டெக்ஸ் 100% உயர்ந்திருக்கிறது. S & P 500 பங்குகள் இன்டெக்ஸ் 70% மட்டுமே உயர்ந்திருக்கிறது. கேன்சருக்கு மருந்து தயாரிப்பு, ஹெபடைடிஸ் சி-க்கான மருந்துகள், ஜீன் குறைபாட்டால் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எனப் பல விதமான முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. மேலும், அரசு அதிக விலைக்கான மருந்துகளை நிறுத்திக் குறைந்த விலையில் தரமான மருந்துகள் தயாரிப்பு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்த விஷயங்கள் எல்லாம் விவேக் ராமசாமி நிறுவனத்திற்கு உதவியாக இருக்கிறது. 

இவர் ஸ்டெம் செல் உருவாக்கத்தில் மனிதன் மற்றும் விலங்குகளில் இருந்து எடுத்துக் கையாளப்படுவதற்கு முயற்சியில் இறங்கி இருக்கிறார். மருந்து தயாரிப்பில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தவர், ஹெபடைடிஸ் சி, ரத்த செல் நுரையீரல் வைரஸ் போன்றவற்றிற்கு மருந்து தயாரிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்த இரண்டு நோய்களும் முப்பது லட்சம் அமெரிக்கர்களுக்குப் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கண்டறிந்த சிறிய நிறுவனம் டவுன்சின்ட்ரோம் பாதிப்பிற்கு மருத்துவ முறைகளைக் கண்டறிந்து இருக்கிறது .

இந்திரா நூயி உள்ளிட்ட பல பிரபலங்கள் 2016-ம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த டாப் 25 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள வேளையில்இப்போது போர்ப்ஸ் நிறுவனத்தின் இளம் தொழில்முனைவோர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் விவேக். விரைவில் உலக அளவில் மிகப்பெரிய பயோடெக்னாலஜி நிறுவனத்தின் தலைவராகவும், அறிவுசார் அனுபவத்திலும் உலக அளவில் இடம்பிடிப்பார் என்கிறார் இவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த யேல் பல்கலைக்கழக பேராசிரியர். விவேகமாக முதலீடு அவரை இன்னும் பல உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கலாம். வாழ்த்துகள் விவேக் ராமசாமி. 

நன்றி : தி இந்து(தமிழ்) ,விகடன்
--Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms