வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, July 31, 2013

மிராசுதாரை மிரள வைத்த மகா பெரியவர்

ஒரு சித்ரா பௌர்ணமி அன்று திருவிடைமருதூர்  மகாலிங்க ஸ்வாமிக்கு  அவ்வூர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் ருத்ர ஜபத்துடன் அபிஷேகம் நடத்தினார்.

மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் காஞ்சி பெரியவரிடம் அபரிதமான பக்தி உடையவர். அதனால் தான் நடத்திய ருத்ர ஜப பிரசாதத்தினை காஞ்சி பெரியவரிடம் ஒப்படைக்க எண்ணி உடனே காஞ்சி சென்றார். அவர்  காஞ்சி மடம் வந்தடைந்த போது  பெரியவர் தியானத்தில் இருந்தப்படியால் அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தவர்களின் கூட்டம் நின்றிருந்தது. மிராசுதார்  நாராயணஸ்வாமிஐயர் கூட்டத்தை  முந்தி  காஞ்சி பெரியவர்  அருகில் நிற்க பெரியவர் அவரை பார்க்க பெரியவருக்கு வணக்கத்தினை தெரியப்படுத்தி தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு  மிராசுதார்  நேற்று திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமிக்கு நடந்த ருத்ர ஜபத்தினையும் அபிஷேகத்தினையும் பிரசாதத்தினை பெரியவரிடம் ஒப்படைக்க எண்ணியதையும்  சொல்லி அருகில் இருந்த மூங்கில் தட்டில் வைத்தார்.

காஞ்சி பெரியவர் மிராசுதாரை பார்த்து கேட்டார்.
ருத்ர ஜெபத்தினை எதற்காக செய்தீர்கள்?.
மிராசுதார் பவ்யமாக ஊரில் விளைச்சல் இல்லை நிலமெல்லாம் தரிசாக இருக்கிறது, அதனால் எங்கள் ஊரில் உள்ள ஜோதிடரிடம் கேட்டபொழுது இந்த ஜெபத்தினையும் அபிஷேகத்தினையும் செய்ய சொன்னார் ஆகவே,…என்று மிராசுதார் இழுக்க

இடைமறித்த காஞ்சி பெரியவர் கூட்டாக செய்தீரா என கேட்க உடனே மிராசுதார் இல்லை இல்லை நானே தனியாக என் சொந்த செலவில்  ஏற்பாடு செய்தேன் என்றார் அழுத்தமாக.
நானே என்பதில் மிராசின் ஆணவம் தெரிந்தது .

இவர்கள் அருகில்  நின்றிருந்த கூட்டம் காஞ்சி பெரியவரை ஆச்சிரியமுடனும் மிராசை ஆர்வமுடனும் துருவித் துருவி கேட்கிறாரே என  வேடிக்கை பார்த்தது. புன்னகைத்தவாறே  மீண்டும் பெரியவர்  மிராசிடம் எத்தனை பேர் ஜெபிக்க ஏற்பாடு செய்தீர்? என கேட்க மிராசு தன் பாக்கேட்டிலுள்ள  காகித குறிப்பினை எடுத்து அவசர அவசரமாய் சில பெயர்களை படிக்க, கண்ணை மூடிக் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் சட்டென அதில் தேபெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் பெயர் இருக்கா என கேட்க மிராசு மகிழ்ச்சியுடன் இருக்கு இருக்கு என தலையாட்டினார் . அருகில்  நின்றிருந்தவர்கள் காஞ்சி பெரியவரை ஆச்சிரியமாய் பரவசமுடன் பார்த்தனர்.

மீண்டும் காஞ்சி பெரியவர் தொடர்ந்தார்.ஜெபம் பண்ணும் பொழுது  தேபெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் மட்டும் சரியா மந்திரம் சொல்லலே. அதனாலே நீங்க அவருக்கு எல்லாருக்கும் ஒத்துக்கிட்ட சம்பாவனையை விட குறைச்சலா கொடுத்தீங்க.

மிராசுதார்ஆமாம், ஆமாம், அவருக்கு வயசாயிடிச்சி, இருமிக் கொண்டே இருந்தார் , மந்திரம் சரியா சொல்லலே, அதனாலே எல்லாருக்கும் பத்து ரூவா இவருக்கு மட்டும் ஏழு ரூவா கொடுத்தேன் என்றார். 
அருகில்  நின்றிருந்தவர்கள் மீண்டும் ஆச்சிரியமுற்றனர் .

காஞ்சி பெரியவரே மீண்டும் தொடர்ந்தார். ஜெபம்,அபிஷேகம் முடிஞ்சி வேதம் ஓதன எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறினீங்களே என்ற பொழுது மிராசு       “ஆமாம்              சுவாமி          சக்கரைப்பொங்கல்,  பாயாசம்னு நல்லாப்     போட்டேன்,   நானே பரிமாறினேன் “என்றார் பெருமிதமாக. 

நல்லாத்தான் போட்டே ஆனா  தேபெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் சக்கரைப்பொங்கல் ருசியா இருக்கு இன்னம் கொஞ்சம் போடேன் என பலமுறை கேட்டும் நீ கவனிக்காத மாதிரியே இருந்திட்டியே அது தர்மமா? பந்தி வஞ்சனை பண்ணியே நியாயமா? என காஞ்சி பெரியவர் கேட்டார்.

 மிராசுதார் வெட்கி தலை குனிந்தார். கூடியிருந்த அனைவரும் மேலும் ஆச்சிரியமுடன் அந்த ஜெப பூஜையில் நேரில் கலந்துக் கொண்டவரை போலவே கேட்கிறாரே  என்று பரவசமுடன் காஞ்சி பெரியவரையே பார்த்தனர்.

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு காஞ்சி பெரியவரே தொடர்ந்தார். “அதனாலே  தேபெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் என்ன செஞ்சார் தெரியுமா? பந்தியிலே நீ பண்ண  பேதத்தினாலே மனசு ஒடிஞ்சி போய் மகாலிங்க ஸ்வாமி பிரகாரத்த மூணு பிரதட்சணம் வந்துட்டு மகாலிங்க ஸ்வாமி கிட்டே சாமீ எனக்கு வயசாயிடிச்சி, முன்னே மாதிரி மந்த்ரம் சொல்ல முடியலே, உடம்பும் மனசு அளவுக்கு வேகமா இல்ல என்ன மன்னிச்சுடு, எனக்கு வயசானாலும் இன்னும் நா ருசி போகல, சக்கரைப்பொங்கல் கேட்டு அவமானம் பட்டுட்டேன்.  காசியிலும் நீதான் இருக்கே , இங்கேயும் நீதான் இருக்கே , காசிக்கு போன ஏதாவது நமக்கு புடிச்சத விட்டுடனன்னு சொல்லுவாங்க. அதேமாதிரி இந்த நொடியிலே இருந்து நான்  இனிமே எந்த இனிப்பு பலகாரத்தையும் சாப்பிட மாட்டேன் இது உன் மேல செய்யற சத்யம்.” ன்னுட்டு போய்ட்டார். என்று காஞ்சி பெரியவர் நிறுத்தினார் 

கேட்டுக்கொண்டிருந்த  மிராசுதார் என்ன மன்னிச்சுடுங்க ஸ்வாமி! நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று பெரியவர் காலில் விழுந்து வணங்கி மண்டியிட்டு என் பிரசாதத்த ஏத்துங்க  என்று மன்றாடினார்.

மேலும் நான் செஞ்ச தப்புக்கு பிராயசித்தமா தேபெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் கிட்டே மன்னிப்பு கேட்பேன்  என மிராசுதார் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே  பெரியவர் இடைமறித்து, இன்னிக்கு எனக்கு பிரசாதம் கிடைக்க மகாலிங்க ஸ்வாமி அனுக்கிரகம் பண்ணுவார்,  உனக்கு ப்ராப்தம் இருந்தா  தேப்பெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் கிட்டே மன்னிப்பு கிடைக்கும்  என்று முடிக்கும் முன்னர் கொஞ்சம் வழி விடுங்கோ  என்றபடி ஒருவர் கூட்டத்திலிருந்து பெரியவர் முன் வந்து நின்று  பெரியவாளுக்கு நமஸ்காரம்,  நான் திருவிடைமருதூர்  மகாலிங்க ஸ்வாமி கோயில் அர்ச்சகர் என் பெயர்  மகாலிங்கம் நேற்று நடந்த ருத்ர ஜப பிரசாதத்த ஒப்படைக்க சொல்லி உத்தரவு. இது  எங்க ஊர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயரின் கைங்கர்யம் , என்று சொல்லிக்கொண்டே அருகில் நின்றிருந்த மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயரை பார்த்து, இதோ அவரே இருக்காரே என்று வியந்தார். நின்றிருந்த பக்தர்கள் வியந்தும் பரவசமுற்றும் சிலாகித்தனர் .

மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் காஞ்சி பெரியவரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு நேரே  தேப்பெருமானல்லூர் வந்தடைந்தார். எதிர்ப்பட்ட ஒருவரிடம் கனபாடிகள் பெயரை சொல்லி அவர் வீடு எங்கே?” என்று கேட்டார் .

அவர் கூட்டமாய் சில பேர் நின்றிருந்த வீட்டை காட்டி, நீங்க  துக்கம் விசாரிக்க வந்து இருக்கீங்களா? கனபாடிகள்  நேத்து ராத்திரி காலமாயிட்டார் என்றார்.

மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் உனக்கு ப்ராப்தம் இருந்தா  தேப்பெருமானல்லூர் வேங்கடேச கனபாடிகள் கிட்டே மன்னிப்பு கிடைக்கும் “ என்று காஞ்சி பெரியவர் சொன்னாரே.

எனக்கு மன்னிப்பே கிடைக்காதுன்னு காஞ்சி பெரியவருக்கு தெரிஞ்சு இருக்கு என்று கனத்த மனதோடும் தன்  தவறினை உணர்ந்தும் கனபாடிகள் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தார் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர்.
 *********************************************************************************************************************************

திரு. எஸ்.ரமணி அண்ணா  அவர்கள் சக்தி விகடனில் மிராசுதாரை மிரள வைத்த மகா பெரியவர் “ எழுதியதை எனது நண்பர் திரு ஆனந்தபத்மநாபன் அவர்கள்  பிடிஎப் பைலாக எனது மின்னஞ்சல்  முகவரிக்கு அனுப்பி இருந்தார். அதனை சுருக்கி எனது நடையில் எழுதி இருக்கீறேன். நண்பர் திரு ஆனந்தபத்மநாபன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் 

Monday, July 22, 2013

குரு பூர்ணிமா


குரு பூர்ணிமா 22.07.2013
பரதகண்டம் என பெயர்பெற்ற இந்த புண்ணிய பூமியில் பல சான்றோர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களின் தலை சிறந்தவராக வியாசர் கருதப்படுகிறார். வியாசர் துவாபராயுகம் முடியும் சமயத்திலும், கலியுகம் ஆரம்பமாவதற்கு முன்பும் அவதாரம் செய்தவர் என்று புராணங்கள் வழியாக அறியமுடிகிறது. அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் அறநெறியையும், ஆன்மிக தத்துவத்தையும் உலகிற்கு வழங்கிய வண்ணம் இருந்தார். எல்லாவற்றிற்கும் ஆதாரமான வேதத்தில் சொல்லியுள்ளபடி கலியுகத்தில் பக்திமார்க்கம் குறைந்து நசித்து போகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரே வடிவாக இருந்த வேதத்தையும், அதன் சிதறிக்கிடந்த பாகங்களையும் தொகுத்து ரிக் வேதம், யஜுர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என நான்காக பிரித்தார்.

பரமாத்மாவான இறைவனை ஜீவாத்மாவான மனிதன் எப்படி கண்டறியவேண்டும் என்பதை விளக்குவது தான் வேதம். இறைவனை மந்திரங்களாக துதித்து வழிபடும்படி வழிகாட்டுவது ரிக்வேதம். மனிதன் தன் ஆயுளில் செய்ய வேண்டிய சடங்குகள், அதற்கு தேவையான உபகரணங்கள், ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய யாகங்கள் ஆகியவை பற்றி தெரிவிப்பது யஜுர் வேதமாகும். பாடல்களால் இறைவனை துதிப்பது சாம வேதம் ஆகும். இதனால்தான் இசையில் சாமகாணம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. மந்திர தந்திரம், மருத்துவம், சக்தி, வழிபாடு ஆகியவை பற்றி விளக்குவது அதர்வண வேதம். இவற்றை தொகுத்து மக்களுக்கு அளித்ததன் மூலம் அவர் வேதவியாசர் எனப்பட்டார். வியாசர் என்ற சொல்லுக்கு தொகுத்தவர் அல்லது ஆராச்சியாளர் என பொருள்.

இந்த வேதங்களில் ரிக் வேதத்தை சுமந்து என்ற மகரிஷியிடமும், யஜுர் வேதத்தை வைசம்பாயணரிடமும், சாம வேதத்தை ஜைமினி முனிவரிடமும், அதர்வண வேதத்தை பைலரிடமும் ஒப்படைத்து அவற்றைக் கற்று மற்றவர்களுக்கு கற்பிக்கும்படி செய்தார். வேதங்களின் கருத்துக்களை உள்ளடக்கி 18 புராணங்களாகவும், மகாபாரதமாகவும் உருவாக்கினார். அதை சூதம் என்ற முனிவருக்கு உபதேசித்தார். சூதர் அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்படி அனுக்ரஹம் செய்தார். மகாபாரதத்தில் ஒரு பாத்திரமாகவும் வியாசர் தன்னை மாற்றிக்கொண்டார்.வியாசர் சத்தியவதி தாயின் மகன். இவள் ஒரு ராஜகுமாரி. விதிவசத்தால் ஒரு மீனவக் குடும்பத்தின் வளர்ப்பு மகள் ஆனாள். அந்த மீனவர் தலைவன், சத்தியவதிக்கு பரிசல் ஓட்ட கற்றுத் தந்தான். ஒருமுறை பராசர முனிவர் என்பவர் அந்தப் பரிசலில் பயணம் செய்தார். அந்த நேரம் இந்த உலகில் ஒரு மகாபுருஷன் தோன்ற வேண்டிய நல்ல நேரம். அந்த மகாபுருஷனை கலியுகம் முடிந்து, இந்த உலகம் அழியும் வரை மக்கள் மறக்க மாட்டார்கள். அவன் எழுதப் போகும் காவியம், படித்தவன், படிக்காதவன் என எல்லார் மனதிலும் நிலைத்து நிற்கும் என்பதை பராசரர் உணர்ந்திருந்தார். பராசரர் அந்தப் பெண்ணிடம், நாம் இப்போது ஒன்று சேர்ந்தால் உலகம் போற்றும் உத்தமன் ஒருவன் பிறப்பான். இதனால் உன் கன்னித்தன்மை பாதிக்காது. அவன் பிறந்த உடனேயே நீ மீண்டும் உன் கன்னித் தன்மையை அடைவாய், என்றார்.  சத்தியவதி சம்மதித்தாள். பராசரர் ஆற்றின் நடுவிலுள்ள ஒரு தீவை அடைந்தார். அந்தப் பகுதியை இருள் சூழ வைத்தார். அவர்களுக்குப் பிறந்தார் வியாசர். அவர் மிக மிக கருப்பாக இருந்தார். தன் தாயிடம் தான் துறவறம் பூண்டு செல்வதாகக் கூறினார். மகனைப் பிரியும் போது தாய் சத்தியவதி, எதாவது ஒரு இக்கட்டான நிலை வந்தால் நான் உன்னை நினைப்பேன். அப்போது நீ வந்து எனக்கு உதவ வேண்டும், என்றாள்.

வியாசரும் ஒப்புக் கொண்டார். இதனிடையே குருவம்சத்து அரசன் சந்தனுவுக்கு பீஷ்மர் பிறந்தார்.ஒரு சந்தர்ப்பத்தில், பராசரருடன் கூடி வியாசரைப் பெற்ற சத்தியவதியை சந்தனு சந்தித்தான். அவள் மீது ஆசைப்பட்டான். பீஷ்மர் கடும் முயற்சியெடுத்து அவளையே தன் தந்தைக்கு திருமணம் செய்து வைத்தார். அவளுக்குப் பிறக்கும் குழந்தையே நாடாளும் என சத்தியம் செய்தார். அத்துடன் தானும் இனி திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என சபதம் எடுத் தார். தந்தைக்காக தன் வாழ்க்கையையே துறந்து துறவி போல் வாழ முடிவெடுத்தார்.சந்தனுவுக்கும், சத்தியவதிக்கும் சித்திராங்கதன், விசித்திரவீரியன் என்னும் மக்கள் பிறந்தனர். இவர்களில் சித்திராங்கதன் ஒரு போரில் கொல்லப்பட்டான். விசித்திரவீரியன், காசி மன்னனின் மகள்கள் அம்பிகா, அம்பாலிகா ஆகியோரை மணந்தான். அவனும் திருமணமான சில ஆண்டுகளிலேயே குழந்தை எதுவும் பிறப்பதற்குள் இறந்தான். இப்போது அந்தக் குடும்பத்தில் எஞ்சியது பீஷ்மர் மட்டுமே. வேறு வழி இல்லாததால் பீஷ்மரை பட்டம் சூட்டிக் கொள்ளக் கூறினாள் சத்தியவதி. ஆனால் தான் செய்த சத்தியத்தை மீற மாட்டேன் எனக் கூறிவிட்டார் பீஷ்மர். நாடாள வாரிசு இல்லாத நிலையில், தன் மகன் வியாசரை நினைத்தாள் சத்தியவதி. தாயின் உணர்வுகளை புரிந்து கொண்டு அங்கு தோன்றினார் வியாசர். அவரிடம், சான்றோனாகிய நீ, நாட்டின் நலன் கருதி, உன் தமையனின் மனைவியருடன் கூடுவதில் தவறில்லை. அவர்களோடு கூடி குழந்தைகளைப் பெறுவாயாக, என்றாள்.

அம்பிகாவும், அம்பாலிகாவும் இதற்கு சம்மதித்தாலும், கரிய நிறமுடைய, தாடியும், ஜடாமுடியும் கொண்ட வியாசரை விரும்பவில்லை. இருப்பினும் மாமியாரின் விருப்பத்தை நிறைவேற்ற கண்ணை மூடிக் கொண்டு, வியாசருடன் ஒன்று சேர்ந்தாள் அம்பிகா. இதனால் அவளுக்கு ஒரு குருட்டு மகன் பிறந்தான். அவனுக்கு திருதராஷ்டிரன் என பெயர் சூட்டினர். இன்னொரு பெண்ணான அம்பாலிகா வியாசரின் உருவத்தை கண்ட மாத்திரத்தில் முகம் வெளுத்தது. அவள் வெளுத்த முகம் கொண்ட ஒரு மகனைப் பெற்றாள். அவன் பாண்டு எனப்பட்டான். அம்பிகாவுக்கு குருட்டு மகன் பிறந்ததால், இன்னும் ஒரு மகனைப் பெற அம்பாலிகாவைக் கேட்டுக் கொண்டாள் சத்தியவதி. ஆனால், அம்பிகா வியாசருடன் சேர விரும்பாமல், தனக்கு பதிலாக தன் தாதி ஒருத்தியை அனுப்பி விட்டாள். அவள் வியசாருடன் மனம் உவந்து, அவரது தவவலிமையை மட்டும் நினைத்து கூடினாள். அவளுக்கு விதுரன் என்ற மகன் பிறந்தான். இப்படி பாரதக் கதையை துவக்கி வைத்தவரே வியாசர் தான். இவ்வகையில் அவர் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் தாத்தா ஆகிறார். 

இதைத்தவிர வேதங்களில் உள்ளடங்கி உள்ள தத்துவங்களை சுருக்கமாக மனிதன் புரிந்து கொள்ளும் வகையில் பிரம்மசூத்திரம் எனப்படும் வேதாந்த சூத்திரங்களாக உருவாக்கினார். இது வியாச சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியோர் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியுள்ளார்கள்.

தனது நுண்ணறிவால் மனித குலத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கினார். இந்து மதத்தின் ஆதிகுருவாக வேதவியாசர் போற்றப்படுகிறார். இவர் ஆஞ்சநேயரைப் போல சிரஞ்சீவி பட்டம் பெற்றவர். சிரஞ்சீவி என்றால் என்றும் வாழ்பவர் என பொருள். கலியுகம் தோன்றி எவ்வளவோ ஆண்டுகளாகி விட்ட போதிலும் வியாசரின் மகாபாரதம் இன்றும் மக்களுக்கு வேதம் போல் விளங்குகிறது. அதில் கூறப்பட்டுள்ள ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டுமென உபன்யாசகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக விளங்குகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதம் எனபடும் ஆனி பவுர்ணமியின் குருவை வணங்கவேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. வடமாநிலங்களில் ஆனி பவுர்ணமியை குரு பூர்ணிமா என சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஞானத்தை உணர்ந்துவதால் குரு பரம்பொருளாக சொல்லப்படுகிறார்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தந்தைக்கு அடுத்தபடியாக குருவே வருகிறார். அன்னை மீது கொள்ளும் பக்தியால் இப்பிறவியில் இன்பம் பெறலாம். தந்தை மீது கொள்ளும் பக்தியால் மறுபிறவியில் இன்பம் பெறலாம். குரு பக்தியால் பிறப்பற்ற நிலையை எய்தலாம். ராமர், கிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களாக இறைவன் அவதரித்த போது அவர் கூட ஒரு குருவிடம் தீட்சை  பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.

Sunday, July 21, 2013

விதையும்,கனியும்


ஏப்ரல் 8, 1928ல் அப்போதைய தஞ்சை மாவட்டம், இப்போதைய நாகை மாவட்டம் விளநகர் கிராமத்தில் பிறந்த எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் பிற்காலத்தில் பேனா முனையால் இலட்சக்கணக் கான உள்ளங்களை உலுக்கியெடுத்து, எழுச்சி யடையச் செய்யப்போகிறார் என்று யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது. கடந்த ஜனவரி 21 அன்று இவ்வுலகிலிருந்து பிரிந்த அவரின் உன்னத வாழக்கையிலிருந்து இன்றைய இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன.


மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப்பட்டம். பிறகு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் வேதியியல் மற்றுமொரு முதுநிலைப் பட்டம். அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் மருத்துவ ரசாயணத்தில் டாக்டர் பட்டம். எனத் தொடர்ந்த படிப்பு 85 வயதில் அவரின் இறுதி நாட்கள் வரை தொடர்ந்தது.
வாழ்க்கையில் சாதிக்க விரும்புவோர் ஒவ்வொருவரும் தாரக மந்திரமாய் கொள்ள வேண்டிய கேள்வி இது என்றால மிகையில்லை.
சொன்னபடி வாழ்ந்தவர்: சுயவளர்ச்சி, சுய பொருளாதார வளர்ச்சி, சமூக ஈடுபாடு. முதலில் உன்னை ( கல்வியை, சிந்தனையை) உயர்த்திக் கொள்; உன் தேவைக்கான, உன் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரத் தன்னிறைவு கொள்; நானுண்டு குடும்பமுண்டு என்றில்லாமல் சமூக முன்னேற்றத்திற்காக பொதுக் காரியங்களில் ஈடுபட்டு, உன்னால் முடிந்த அளவு பணி செய் என்ற வாழ்க்கையின் படி நிலைகளை இயக்கத் தின் கொள்கைகளாக வைத்தவர், அடிபிசகாமல் தன் வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து காட்டினார் உயர்கல்வி கற்றவராக தன்னை உயர்த்திக் கொண்டு, அமெரிக்க பல்கலைகழகங்களில் பேராசிரியராக துறைத்தலைவராக பல ஆண்டுகள் இருந்தார். பிறகு, ஒரு உணவுத் தொழற்சாலையின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார். பின்னர், தானே ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி, அமெரிக்காவில் தொழில் துறையில் உள்ளவர்கள் யார், யார் என்ற பட்டியலில் இடம் பெற்றார். மாணவன், கல்லூரிப் பேராசிரியர், துறைத் தலைவர், தொழிற்சாலையில் தலைமை நிர்வாகி, சொந்தத் தொழிற்சாலை நிறுவுதல் என்று அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வாழ்ந்து, தன்னையும் தன் பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொண்ட அவர் அடுத்த 25 ஆண்டுகள் ( 1988 முதல்) உழைத்தது தாயகத்திற்காக, தமிழகத்திற்காக. சொன்னபடி வாழ்ந்த பெருமைக்குரிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் உதயமூர்த்தி.

அமெரிக்காவில் இருந்த காலகட்டத்திலேயே தன் எழுத்துப் பணியைத் தொடங்கிவிட்டார். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமைகள் அமெரிக்கா வந்தபோது, அவர்களுடன் பயணித்து, பயணவிவரங்கள் குறித்து தமிழகத்திற்கு எழுதினார். 1970-80களில் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள், புத்தகங்கள் இலட்சக்கணக்கான உள்ளங்களில் எழுச்சி தீபம் ஏற்றின. மனித உறவுகள், சிந்தனை, தொழில் செல்வம், நீதான் தம்பி முதலமைச்சர், உயர்மனிதனை உருவாக்கும் குணங்கள், ஆத்ம தரிசனம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். இருந்தாலும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்று இன்றுவரை பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் புத்தகம் எண்ணங்கள்மனதில் நாம் விதைக்கும் எண்ணங்களே நம் வாழ்க்கை எனும் மரமாக மாறுகிறது என்ற வாழ்க்கைத் தத்துவத்தை எளிய வார்த்தை களில், வரிகளில் விளக்கியிருப்பார் அப்புத்தகத்தில், சில ஆண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகம் அப்புத்தகத்தை மாணவர்களுக்குப் பாட நூலாக வைத்திருந்தது என்றால் அப்புத்தகத்தின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். அவர் நூல்களை தன்னம்பிக்கை, தொழில் முன்னேற்றம், சமூகச் சிந்தனைகள், ஆன்மீகம் என்ற 4 வகை களாகப் பிரிக்கலாம். என்னைச் செதுக்கிய எண்ணங்கள்  என்ற நூலின் மூலம் தன் சுயசரிதையை எழுதியுள்ளார். (இவர் எழுதிய "என்னைச் செதுக்கிய எண்ணங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ்க்கலைகள், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறது)

1988ஆம் ஆண்டில் மக்கள் சக்தி இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
கல்லூரிப் பேராசிரியர்கள் முதல் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள் வரை அனைவரையும் வாசகர் களாகக் கொண்டவர் உதயமூர்த்தி.
தன் எண்ணங்களுக்கு குருவாக இருந்தவர் ஜேம்ஸ் ஆலன் என்பார் அவர். ஆலனின் புகழ் பெற்ற நூலின் தமிழாக்கமாக ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் என்ற ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டும் புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் இறந்தாலும், அவரின் எழுத்துகள் மூலம் இன்றும் என்றும் அவர் நம்மோடு வாழ்வார்.
அவர் விட்டு சென்ற பணியினை அதாவது அவர் வைத்த மரக்கன்று இன்றும் தன்னால் முடிந்த அளவுக்கு கனியினையும் நிழலையும் இளைப்பாறுதலையும்  போற்றுபவர் களுக்கும் தூற்றுபவர்களுக்கும் பாரபட்சமின்றி தந்துக் கொண்டிருக்கிறதுஇன்னும் தரும்.

கடந்த ஜூன் மாதம் 2ந் தேதி,2013 அன்று சென்னை,அடையார், இந்திராநகரில் உள்ள யூத் ஆஸ்டலில் நடந்த கூட்டவிழாவே இதன் அடையாளமாக இருந்தது. 

அவ்விழாவில் நடந்த போது பங்கேற்ற மற்றும் செயல்வீரர்களின் புகைப்படத் தொகுப்பு இது .
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms