வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, January 14, 2016

மாட்டுப் பொங்கல் திருநாள்

லகமக்களின் நன்மைக்கு ஆதிநாளிலிருந்தே ஆதாரமாக விளங்கி வருவது பசு. முறைப்படி பசுவை வணங்குவதை கோபூஜை என்பர். கோ என்றால் சத்தியம், வாக்கு, நீர், சுவர்க்கம், ஒளி, சந்திரன், அக்கினி, அரசன், உலகம் என்று பொருள் சொல்லப்படுகிறது.


ராமபிரான் பூமியில் அவதரிக்க மூல காரணமே கோபூஜைதான் என்கிறது புராணம். சக்கரவர்த்தி திலீபன் பல வருடங்களாக பிள்ளைப் பேறின்றி வேதனையில்ஆழ்ந்திருந்தான். அப்போது, அவன் அரண்மனைக்கு வந்த வசிஷ்ட முனிவர், நந்தினி எனும் பசுவைக் கொடுத்து பூஜிக்கும்படி சொன்னார். அதன்படியே தினமும் அதனை நீராட்டி, தகுந்த ஆகாரத்தைக் கொடுத்து வழிபட்டுவந்தான் திலீபன். அவ்வாறு அதனைப் பேணி வளர்த்துவந்ததன்  பயனாக திலீபனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு ரகு என்று பெயரிட்டான்.

வருடங்கள் கழிந்தன. திலீபன் தன் மகனான ரகுவுக்குத் திருமணம் நடத்தி வைத்தான். ஒரு வருடத்திலேயே தந்தையானான்  ரகு. திலீபன் தன் பேரனுக்கு "அஜன்' என்று பெயர் சூட்டி விழா எடுத்தான். கல்வி கேள்வியில் சிறந்து விளங்கிய அஜனுக்கு காலாகாலத்தில் திருமணம் நடந்தது. அவனுக்குப் பிறந்த மகன்தான் தசரதன். தசரத சக்கரவர்த்தி ரிஷ்யசிருங்கர் மூலம் நடத்திய யாகப் பயனால் ராமாவதாரம் நிகழ்ந்தது.

திலீபன் பல வருடங்களுக்குமுன் கோபூஜை செய்த பயனால் மகாவிஷ்ணுவே பூவுலகில் அவதரித்தார்.

பசு குறித்து இன்னொரு புராணத் தகவலும் உண்டு. பிரம்மதேவனால் படைக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் உடலிலுள்ள சக்தி விரைவில் தீர்ந்துபோவதை அறிந்து, அதனை சமன் செய்யும் வழியை அறியவேண்டுமென்று திட்டமிட்டார்கள். அவர்கள் ரிஷிகளையும் முனிவர்களையும் சந்தித்து அதற்கு வழிகூறுமாறு வேண்டினர். அவர்கள் பிரம்மதேவனை அணுகி மனிதர்களின் கோரிக்கையைத் தெரிவிக்க, பிரம்மா யோசித்தார். தேவலோக அமிர்தத்தை மானிடர்களால் ஜீரணிக்கமுடியாது என்பதால் தானே சிறிது அமிர்தத்தை உண்டு, அதனை மனிதர்களுக்கு ஏற்றவிதத்தில் மாற்றிக்கொண்டார். பின்னர் அவர் ஒரு பசுவாக உருவெடுத்து பாலைச் சொரிந்தார். அந்தப் பாலே வழிவழியாக மனிதர்களுக்கு சக்தியூட்டுவதாக விளங்கிவருகிறது.

எனவே பசு மனிதர்களுக்கு தாயும் தந்தையும் போன்றது. பசுவை வணங்கிப் போற்றுபவன் பிரம்மதேவனையும், தனது பெற்றோர்களையும் வணங்குபவனாகிறான். 
பசுவைப் பாதுகாப்பவன் தனது பெற்றோரை, அவர்களின் முதிய காலத்தில் காப்பாற்றுவான் என்று சாஸ்திரம் கூறுகிறது.

பசுவின் கொம்புகளில் பீமனும் இந்திரனும்; காதுகளில் அஸ்வினி குமாரர்களும்; கழுத்து, தாடைப்பகுதிகளில் ராகு- கேதுவும்; இரண்டு கண்களில் சூரிய சந்திரர்களும்; மூக்கின் மேல்பகுதியில் விநாயகரும் முருகனும்; முன்னிரண்டு கால்களில் பைரவரும்அனுமனும்; முகப்பகுதியில் சிவபெருமானும்; கழுத்து முதலான பகுதிகளில் பாரத்வாஜர், குபேரன், வருணன், அக்னி, பிரம்மன், கங்காதேவி, நாரதர், வசிஷ்டர், ஜனக குமாரர்கள், பூமாதேவி, சரஸ்வதி, விஷ்ணு, பராசரர், விஸ்வாமித்திரர், அமிர்தசாகரமும்; வால் பகுதியில் நாகராஜனும்; முன்குளம்புப் பகுதியில் விந்தியம், இமாச்சல பர்வதங்களும்; பின்கால் பகுதியில் மந்த்ராசலம், துரோணாசல பர்வதங்களும்; மடியில் அமிர்தசுரபி கலசமும்; பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமியும் வசிப்பதுடன், இன்னும் பிற தேவர்களும் பசுவின் உடலில் வாசம்செய்வதாக ஐதீகம்.

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் முக்கிய பொருளாக பால், தயிர், நெய் ஆகியவை இருக்கின்றன. பால், தயிர், நெய், கோமயம், கோசலம் ஆகிய ஐந்தையும் ஐம்பூதங்களாக பாவித்து, ஒன்றாகக் கலந்து, பூஜைசெய்யும் இடத்தையும் யாகம் செய்யும் இடத்தையும் தூய்மை செய்வர்.

பொதுவாக, யாகங்களுக்கு நெய் மிக அவசியம். பசு நெய்யில் தீ வளர்த்து, அதில் பால் ஊற்றி நெருப்பை அவிக்கும்போது அதிலிருந்து உண்டாகும் புகையானது விஷ வாயுக்களைத் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்.

சாஸ்திரங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், பசு தானம் மிக சிறப்பிக்கப்படுகிறது.

ஒருவரின் வருடப்பிறப்பிலும், ஜென்ம நட்சத்திரத்திலும் கோ தானம் செய்வதும், கோ பூஜை செய்வதும் மேன்மை தரும். பசுதானம் செய்பவர்களுக்கு கயிலையில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும்.

கோசாலை உள்ள கோவில்களுக்கு பால் கறக்கும் பசுவையும் கன்றினையும் அளித்தால் கோடி புண்ணியம் கிட்டுவதுடன், அவர்களது வாரிசுகளுக்கும் புண்ணியம் கிட்டும். பசுவையும் கன்றையும் ஓராண்டு பராமரிப்பதற்கான பணத்தைக் கொடுப்பதும் சாலச் சிறந்தது.

பசு தானம் செய்பவர் தன் பூவுலக வாழ்வை நீத்தபின், பசுவின் ஒவ்வொரு உரோமத்திலும் ஒவ்வொரு ஆண்டுவீதம், கோலோகத்தில் கண்ண பரமாத்மாவுடன் பல்லாயிரம் ஆண்டுகள் வசிக்கும் பேறு பெறுவர்.

பசு தானத்தால் ஒருவர் தனது முன்னேழு, பின்னேழு தலைமுறையினரை மோட்சம் பெற வழிசெய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகும். (தெரிந்தே பாவம் செய்தவருக்குப் பலன் தராது) 

கோபூஜை போலவே கோதுளி நீராடலும் சிறந்த பலனைத்தருவது. அதாவது பசு நடந்து செல்லும்பொழுது, அதன் கால்கள் பதிந்த இடத்திலுள்ள மண்ணை எடுத்து உடல்முழுவதும் பூசிக்கொண்டு நீராடினால், கங்கை நதியில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்கின்றன வேதநூல்கள்.

ஒரு காரியமாக வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது பசு எதிரே வந்தால் சுபசகுனமாகும். பசுக்களை கூட்டமாகப் பார்த்தால் இன்னும் சிறப்பு. தினமும் பசுவுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடும்போது, ஒரு கைப்பிடி பசும்புல் அல்லது வாழைப்பழம் அதற்குக் கொடுக்கவேண்டும். தினமும் இப்படி செய்ய இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில் வழிபட்டாலும் சுகமான வாழ்வு கிட்டும்; முன்னோர்களின் ஆசியும் கிட்டும்.

இவ்வாறு செய்ய இயலாதவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மாட்டுப்பொங்கல் திருநாளிலாவது பசுவை வணங்குதல் நன்று. பசுவை மட்டுமின்றி காளையையும் வழிபடவேண்டும். விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காளைகளை நீராட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணம்தீட்டி, மலர் மாலை சூட்டி, சர்க்கரைப் பொங்கல், கரும்பு தந்து வழிபடுவதை கிராமப்புறங்களில் காணலாம்.

சிவபெருமானின் வாகனமான நந்தியின் வாரிசுகள்தான் காளைகள். நந்தி, நன்மைகளின் சொரூபம். வம்சவிருத்தியின் அடையாளம்.

பசு இருக்குமிடத்தில் தீயசக்திகள் அண்டாது. நமக்கு கெடுதல் செய்யும் மனம் கொண்டவர்கள் நம் இல்லம்தேடி வந்தால், முன்கூட்டியே பசு குரல் கொடுத்து தெரிவிக்குமாம். தற்போதைய சூழலில் நகரங்களில் பசு வளர்ப்பதற்கு முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் மாட்டுப் பொங்கலன்று அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று, நந்தி பகவானுக்கு பூஜை செய்யலாம். அன்று மாலை வேளையில் பசு வைத்திருப்பவர்கள், கோவிலுக்கு அழைத்து வருவார்கள். அப்பொழுது, அவர்களிடம் அனுமதி பெற்று கோவில் குருக்கள் மேற்பார்வையில் கோபூஜை செய்தாலும் நல்ல பலன்கள் கிட்டும். கோசாலை இருந்தால் அங்கும் பூஜிக்கலாம்.

மாட்டுப் பொங்கல் நாளில் சிவலிங்கத்திற்கு எதிரிலுள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அறுகம்புல் மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல், நிலக்கடலை, கரும்பு படைப்பார்கள். அந்த வழிபாட்டில் கலந்துகொண்டு நந்தியம்பெருமானை வழிபட்டால் வம்சம் நல்ல முறையில் வளரும்.

இவ்வாறு மாட்டுப் பொங்கல் திருநாளில் வழிபட்டு மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் அருளுடன் சிவபெருமானின் அருளையும் பெறலாம்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Print Friendly and PDF

Wednesday, January 13, 2016

அறுவடைவிழா

சங்க காலமான கி.மு. இருநூறுக்கும் கி.பி. முந்நூறுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடியதாக நம்பப்படுகிறது. அறுவடை விழாவாகக் கொண்டாடப்படும் பொங்கல், தங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்த இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி செலுத்தவும், தங்கள் கவலைகளை விலக்கி புதிய பயணத்தைத் தொடங்கவும் கொண்டாடப்படுகிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையின் விழாவாகக் கொண்டாடப்படும் இந்த விழா தன்னகத்தே நான்கு நான்கு நாள் விழாவினை அறிய இங்கே க்ளிக் செய்யவும்) விழாக்களைக் கொண்டிருக்கிறது.


தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும் அதே நாளில் இந்தியா முழுவதும் பல பெயர்களில் அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் லகோரி என்றும், அஸ்ஸாமில் போகாலி பிகு என்றும், உத்தர பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பீகாரில் மகர் சங்கராந்தி என்றும், ஆந்திராவில் போகி என்றும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கேரளாவில் இந்த நாளில் தான் மலையில் மகர ஜோதி ஏற்றப்பட்டு வழிபடப்படுகிறது.

தை நீராடல் என்னும் பொங்கல் விழாவில் முன்னோடியைக் குறித்த செய்திகள் கி.பி. 4-ம் நூற்றாண்டு - 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களான ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆதிகாலத்திலேயே விவசாயிகள் அறுவடை விழாக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இதற்குப் பல காரணங்கள் இருந்தன. பயிர்களில் ஆவிகள் இருப்பதாகவும் அவை மனம் குளிர்ந்தால் விளைச்சல் அமோகமாகவும், இல்லையேல் குறைவாகவும் இருக்கும் என்று மக்கள் நம்பினார்கள். அதுபோல் ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு காவல் தேவதை இருப்பதாகவும் அதனிடம் வேண்டுதல் செய்தால் அறுவடை அதிகரிக்கும் என்றும் நம்பினார்கள். அறுவடை செய்யும் போது பயிர்களிலுள்ள ஆவி கோபமடையும் என்பதும், அந்தக் கோபத்தை குறைக்க அவற்றுக்குப் படையல் செலுத்த வேண்டும் என்பதும் கூட ஆதியில் இருந்த நம்பிக்கைகளில் ஒன்று, இதனடிப்படையில் தான் ஆதியில் அறுவடை விழாக்கள் இயற்கைக்கும், இயற்கையைப் பராமரிக்கும் தெய்வங்களுக்கும் ஆனந்தமளிப்பதற்காக நடத்தப்பட்டன. கிரேக்க, ரோம, எகிப்திய, அரேபியக் கலாசாரங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழா கொண்டாடியிருக்கின்றன.

கொரியாவில் அறுவடை விழா சூசாக் என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றி விழாவாக கொரிய மக்களால் கொண்டாடப்படுகிறது.

ஜப்பானியர்கள் நவம்பர் மாதத்தில் டோ ரி- னோ இச்சி என்னும் பெயரில் அறுவடை விழா கொண்டாடுகிறார்கள். இரவு முழுவதும் ஆட்டம் பாட்டமாய் இந்த விழா குதூகலமூட்டுகிறது.

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை நன்றி செலுத்தும் விழா கொண்டாடப்படுகிறது. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா விளைச்சலுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மக்கள் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். அமெரிக்கா வழி செல்லும் கன்டாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது.

சீனாவில் மக்கள் ஆகஸ்ட் நிலா விழா கொண்டாடுகிறார்கள். இந்த விழாவின் முக்கிய உணவான மூன் கேக்குகளை மக்கள் பகிர்ந்து, பரிசளித்து மகிழ்கிறார்கள்.

வியட்நாமில்- தெட் திரங் து என்னும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின் பதினைந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. பெற்றோர் தங்கள் விவசாய காலம் முடிந்து குழந்தைகளுடன் ஆனந்தமாய் ஒன்றித்திருக்கும் விழாவாக இந்த விழா அமைந்து குழந்தைகளை மையப்படுத்துகிறது.

இஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாள் சுக்கோத் விழா கொண்டாடப்படுகிறது. அறுவடை விழாவான இது நன்றி தெரிவித்தல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இந்த அறுவடை விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழா இன்று கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படுகிறது.

ஆபிரிக்காவில் யாம் என்னும் பெயருடன் இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழா ஆபிரிக்காவில் சில பகுதிகளில் மூன்று நாட்கள் நடக்கிறது. இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறது. இரட்டையர்கள், மூவர் முதலானோர் இறைவனின் சிறப்புப் பரிசுகளாகக் கருதப்பட்டு இந்த விழாவில் பெருமைப்படுத்தப்படுவதுண்டு.

ரோமர்கள் அக்டோபர் நான்காம் நாள் செரிலியா என்னும் விழாவைக் கொண்டாடுகிறார்கள். இது தங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்ததற்காக சோளப் பயிரின் பெண் தெய்வமான சீரஸ் என்பவருக்கு நன்றி செலுத்தும் விழா, தங்கள் தெய்வத்துக்கு புதிய காய் கறிகள், பழங்கள், பன்றி போன்றவற்றைப் படைத்து, இசை, விளையாட்டு, நடனம் என விழாவை கொண்டாடுகிறார்கள். வினாலியா என்றொரு விழாவையும் இவர்கள் கொண்டாடுகிறார்கள். தங்கள் திராட்சைத் தோட்டங்களில் விளையும் முதல் திராட்சைக் குலையை இறைவனுக்குப் படைத்து அந்த விளைச்சல் காலத்தை ஆசிர்வதிக்க ஆண்டவனை வேண்டுகிறார்கள்.

எகிப்தியர்கள் விளைச்சல் விழாவில் காய்கறிகள் மற்றும் வளம் தரும் கடவுளான மின் வழிபாடு பெறுகிறார். இசை, நடனம் என கோலாகலப்படுகிறது எகிப்தியர்களின் இந்த அறுவடை விழா.

அவுஸ்திரேலியாவிலும் ஏப்ரல் மாதக் கடைசியில் திராட்சை அறுவடை விழாவும், ஜனவரி மாதத்தில் லவண்டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில் அப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர்- ஜனவரி காலத்தில் கோதுமை அறுவடை விழாவும் கொண்டாடப்படு வது பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது.

ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோபர்விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திராட்சை அறுவடையின் கடைசியில் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஒளிமயமான பேரணிகளும், நடனங்களும் இந்த விழாவில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

மலேசியாவில் ஜூன் மாதம் இரண்டாம் நாள் அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. அரிசி விளைச்சலுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. புதிய அரிவாள்களுடன் அறுவடை செய்து, வயல்வெளிகளில் கூடி இந்த விழாவை இவர்கள் கொண்டாடுகிறார்கள்.

இங்கிலாந்தில் அறுவடை வீடு என்னும் பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் இந்த விழாவில் பழங்களையும், காய்கறிகளையும் இறைவனுக்குப் படைக்கும் விழாவாகவும், நன்றி செலுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. ஆலயங்களை எல்லாம் அலங்கரித்து மக்கள் அறுவடை செழிக்க வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறார்கள்.


Print Friendly and PDF புத்தகங்கள் படிக்க –ARROWINBOOKS BLOG

Tuesday, January 12, 2016

மகர சங்கராந்தி நாயகன்

ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல்நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.
ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதை என்று ஒன்று உண்டு. இதனை மகர சங்கராந்தி தேவதைஎன்று அழைப்பார்கள். இவ்விதம் 60 வருடங்களுக்கு தனித்தனிப் பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன.

இந்த தேவதைகளின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள்.
இத்தகைய புண்ணிய தினமான சங்கராந்தியன்று சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்திர அயனம் என்று பெயர் அன்றைய தினம் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார்.
அன்றைய தினம் சூரிய வழிபாடு செய்ய மிக உகந்த நாளாகும். எனவேதான் அன்று சூரியனுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம். சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே கிடையாது.
வேதம் கதிரவைனைப் பலவாறும் புகழ்கிறது. நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவனேஎன்பதை வேதம் கூறுகிறது. மேலும் சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி நல்வழிப்படுத்துபவர் என்பதை ஓம் ய ஏஷோந் தராத்தியே ஹிரண்மய புருஷஎனப் புகழ்கிறது.
உடல் ஆரோக்கியத்தை அளிப்பதிலும் சூரியன் அருட்கடல் என்பதை வேதம் ஆரோக்கியம் பாஸ்கராதிச்சேத்என்றும், இதய நோயை நீக்குபவர் என்பதை ஹ்ருத்ரோகம் மம சூர்ய ஹரிமாணம் சநநாசயஎன்றும் குறிப்பிடுகிறது. இவரே மழை பெய்யக் காரணம் என்பதை வேதத்தில் பாபி ராதித்யஸர்பத்பதி ரஸ்மிபிஸ் தாபிஎனக் கூறப்படுகிறது. இதையே கீதாசார்யணும், “ஆதித்யஜாஜா யதே வ்ருஷ்டிஎன்று கூறுகிறார்.
இத்தகைய சிறப்புமிக்க சூரிய பகவானைப் போற்றும் சூரிய நமஸ்கார மந்திரங்கள் யஜுர் வேதத்தில் 32 அணுவாகங்களாக உள்ளன. ரிக்வேதம் இவரைப் பற்றி மஹா ஸெளரம்என்ற ஒரு துதியை வெளியிடுகிறது.அகத்தியரின் ஆதித்ய ஹ்ருதயம் சூரிய பகவானைப் போற்றும் எளிய பாடலாகும்
சாம்வேதம் சூரியனை சுக்ரியம்என்ற ஒப்பற்ற துதியால் போற்றுகிறது. சூரிய தேவனது பெருமையைக் கூறும் அசதி உபதிஷத்என்ற உபநிடத்தை ஜெபிப்பவர்கட்கு கண்நோய் ஏற்படாது என்றும், இந்த கிரந்தத்தை ஜெபம் செய்வதால் எத்தகைய பயங்கரமான நோய் ஏற்பட்டிருந்தாலும் அதைப் போக்கிடலாம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பாண்டவர்கள் விராட நகரத்தில் அஞ்ஞாத வாசம் செய்த போது கீசகனால் துன்புறுத்தப்பட்ட திரெளபதி சூரியனை வேண்டி தன்னைக் காப்பாற்றுமாறு துதித்தாள். அப்போது சூரியன் தனது தூதனை அனுப்பி கீசகளை விரட்டியதாக பாரதம் கூறுகிறது. மேலும் மகாபாரத்தில் சூரியனுக்கு சித்திரை முதலான மாதங்களிலும் பன்னிரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. அவையாவன, மித்ரன், ரவி, சூரியன், பானு, சுகன், பூஷ்ணன், ஹிரண்ய, கர்ப்பன், மரீசி, ஆதித்யன், ஸவிதா, அர்க்கன், பாஸ்கரன் என்பதாகும்.
பெண்கள் சூரியனுக்கு அர்க்யம் கொடுத்தால், ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் வைதவ்யம் (விதவைக் கோலம்) அடையமாட்டார்கள் என்று கூறுகிறது. விதவைப் பெண்களை கஷ்டங்களினின்று காப்பவன் என்று சூரிய சஹஸ்நாமம் போற்றுகிறது.
சூரிய பசுவானது கருணையை விளக்க செளர புராணத்தில் ஒரு வரலாறு கூறப்படுகிறது. ஒரு காட்டில் தன் மனைவி, மக்களுடன் ஏழை ஒருவன் வசித்து வந்தான். ஒருநாள் அவனுக்கு காட்டில் எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லை.
அன்று மாலை வரை தண்ணீர் கூட அருந்தாத அம்மனிதன் சூரியனை நோக்கி தற்செயலாகத் தன் குறையைக் கூறி புலம்பிவிட்டு தரையில் மயங்கி வீழ்ந்தான். இரவு முழுவதும் அவ்விதம் மயக்கத்தில் கிடந்தான். கண் விழித்துப் பார்த்த போது அவ்வழியே வந்த அரசன் ஒருவனது பாதுகாப்பில் இருப்பதைக் கண்டான்.
தற்செயலாக இம்மனிதனைப் பார்த்த அரசன் அவனைக் காப்பாற்றியதோடு மட்டுமின்றி அவனது ஏழ்மை நிலை பற்றி அறிந்ததும், அவனைப் பெரும் செல்வந்தனானவும் ஆக்கிவிட்டான். அவையனைத்துக்கும் காரணம் அம்மனிதன் அன்ன ஆகாரமின்றி இருந்த தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகும். எனவே பானுவார விரதம் இருந்து சூரியனை வழிபட்டதால் இப்போது கிடைத்தது என்று செளர புராணம் கூறுகிறது.
மேலும் ராமாயணத்தில் வரும் சுக்ரீவன் என்ற வானரணும், பாரதத்தில் வரும் கர்ணனும் சூரிய புத்திரர்கள் ஆவார்கள். வாலகில்யர்கள் எனப்படும் 60,000 முனிவர்கள் சூரியனது சீடர்கள் ஆவர். இவர்கள் மிகச்சிறிய வடிவம் உடையவர்கள். தண்டி, பிங்களன் என்பவர்கள் இவரது முக்கிய ஏவலர்களாகும்.
சூரிய பகவானை சிவாகமங்களும், அபிதான சிந்தாமணி, சூரிய உபநிஷத் போன்ற நூல்களும், ஜோதிட நூல்களும் புகழ்கின்றன. சூரியன் இல்லையேல் இவ்வுலகில் ஒளியும் உயிரினங்களும் இல்லை என்பதை மகாநாராயண உபநிஷத் க்ருணி ஸுர்ய ஆதித்யோ ப்ரபாவாத்யக்ஷரம்என்று கூறுகிறது. மகர சங்கராந்தியன்றுதான் மதுரையம்பதியில் இறைவன் கல் யானைக்குக் கரும்பு அளித்த திருவிளையாடல் நடந்தது. சபரிமலையில் ஐயப்பனுக்குரிய மகரஜோதி தரிசனம்காண்பதும் இந்த புண்ணிய தினத் தன்றேயாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த உத்ரயாண புண்ணிய காலத்தில் இறக்கும் ஜீவன்கள் நற்கதி அடைவதாகக் கூறப்படுகிறது. உத்தராயணத்தில் இறந்த உயிர்கள் முக்தி பெறுவதைப் பற்றி விவரிக்கும் பகவத்கீதை (அக்னிர் ஜோதிர் அஹ சுக்ல ஷண்மாஸா உத்தராயணம்) என்று கூறுகிறது. மகாபாரதமும் மிகச்சிறந்த போகியான பீஷ்மர் உத்தராயண புண்ணிய காலம் வந்தபின்பே தன் உயிரை விட்டார் என்றும் சிறப்பாக விவரிக்கிறது.
இத்தகைய பவித்ரமான உத்தராயண புண்ணிய காலம் தொடங்கும் மகர சங்கராந்தி தினததன்று நாம் அனைவரும் சூரிய வழிபாடு செய்து கிரக தோஷங்கள் நீங்கி எல்லா வளமும் பெறுவோமாக !
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
Print Friendly and PDF புத்தகங்கள் படிக்க –ARROWINBOOKS BLOG

Monday, January 11, 2016

ஏறுதழுவுதல்

ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது. இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லை நில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது.

கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட ந்த ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும். பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர். ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர்.

அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு. அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது. பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான். ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.


எனவே தமிழர்கள் பல உயிர்களைக் கொல்ல வாய்ப்புள்ள இடமாகவும், பலருக்குக் காயம் முதலியன விளைவிக்கும் இடமாகவும், நிகழ்வாகவும் உள்ளதை நன்கு அறிந்திருந்த சூழலிலும் ஏறு தழுவுதலை வீரக்கலையாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டு என்ற சொல் "ஜல்லி" (Salli) என்னும் மூலச் சொல்லிலிருந்து பிறந்தது என்கிறது சொல்லாக்க வரலாறு. காசு (Kasu) என்பது Coins என்பதாகவும் Kattu என்பது பரிசுத்தொகையின் கோர்ப்பாகவும் பொருள்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு எண்ணற்ற சான்றுகள் சங்கத்தமிழ் முழுவதும் விரவிக்கிடக்கின்றன என்பதைச் சங்கத் தமிழ் நூல்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

'மஞ்சு விரட்டு' என்று மறுபெயரிட்டு இது அழைக்கப்பட்டு ஜல்லிக்கட்டிலிருந்து வேறுபடுகிறது இவ் விளையாட்டு என்பதே இதன் மீதான சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகிறது. திறந்த மைதானத்தில் 'காளை' தனிமையில் விடப்படுகிறது. ஆயுதங்கள் இல்லாத மனவலிமை கொண்ட வீரர்கள் அதனை விரட்டிப் பிடித்து அடக்குவார்கள் என்பது நிஜம். அப்போது காளையின் இரண்டு கொம்புகளையும் தமது உரமேறிய கைகளால் மடக்கிப் பிடித்து அடக்கும் வீரர்கள், கொம்பில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் துணியிலுள்ள பரிசை வென்று மகிழ்வார்கள். வலிமையைப் பறைசாற்றும் இவ்விளையாட்டில் ஆண்களுக்கு மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பெண்கள் பார்வையாளர்களாக அனுமதிக்கப் படுவதுகூட ஒருவகையில் காதல் பயிரிடும் களமாகிறது.

ஒரு நல்ல வீரம் நிறைந்த ஆண்மகனைக் காதலனாகப் பெறவே இவ்விளையாட்டு, பழங்காலந்தொட்டு நம்நாட்டில் நடத்தப் பட்டுவருகிறது. எனக்குச் சரியாக நினைவில்லையென்றாலும் உலகின் பல நாடுகளிலும் இது போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டு வந்துள்ளது.

மாடுபிடிப் போரில் காளையை அடக்கிய வீரன் காதல் நிரம்பிய அழகிய கன்னிகையிடமிருந்து காதல் பரிசாக மோதிரத்தைப் பெற்றுக்கொள்கிறான் என்கிறது தமிழரின் பழைய வரலாறு. காதலும் வீரமும் தமிழர்களின் ஒழுக்கமாகும். அதனையே இந்த விளையாட்டு உலகிற்கு உணர்த்துகிறது.
காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், தமிழக மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. 


Print Friendly and PDF புத்தகங்கள் படிக்க –ARROWINBOOKS BLOG

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms