வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Sunday, February 28, 2016

2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்.

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று (29.02.2016) தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு :* ஊரக ஏழைக் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்படும்.

* அனைத்து குடும்பத்திற்கும் ஒரு லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சந்தைப் படுத்த 100 விழுக்காடு அந்திய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்.

* 75 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு மானியத்தை கை விட்டுள்ளன.

* உள்ளாட்சித்துறைக்கு ரூ.87,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சாலைப் போக்குவரத்து துறை மற்றும் ரயில்வே துறைக்கு ரூ.2.80 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 50 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

* சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு ரூ.55,000 கோடி ஒதுக்கீடு.

* 10,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* 2016-17 ல் 50,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும்.

* தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தில் 76 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

* புதிதாக ரூ.1700 கோடியில் 1500 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

* அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்க இலக்கு.

* பிரதம மந்திரி ஊரகச் சாலைகள் திட்டத்திற்கு ரூ.19000 கோடி ஒதுக்கீடு.

* முடங்கி கிடந்த 85 சதவீத சாலைத் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

* டிஜிட்டல் முறையில் கல்வி போதிக்கும் வகையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 2 திட்டங்கள்

* 6 கோடி குடும்பங்கள் பலன் அடையும் வகையில் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* உலகத் தரத்தில் 10 அரசு கல்வி நிலையங்களும், 10 தனியார் கல்வி நிலையங்களும் உருவாக்கப்படும்.

* உயர் கல்விக்கான நிதியாக ரூ.3000 கோடி ஒருக்கீடு செய்யப் படுகிறது.

* 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கும் வகையில் கொள்கை உருவாக்கப்படும்.

* 2018 மே மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

* சரியானவர்களுக்கு மானியம் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டம் தொடரும்.

* சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் வசதியை ஊரகப் பகுதிகளுக்கும் வழங்க புதிய திட்டம்.

* உள்ளாட்சித்துறைக்கு ரூ.87,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 14வது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி கிராம பஞ்சாயத்துகளுக்கு 2.87 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ரூ.38,500 கோடி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கீடு.

* கிராமங்களை இணைக்கும் வகையில் 2.25 லட்சம் கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கப்படும்.

* விவசாய திட்டங்களுக்கு கடந்த நிதியாண்டில் 8.5 லட்சம் கோடி, நடப்பு நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடி ஒதுக்கீடு.

* ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துறைக்கு ரூ.35,984 கோடி நிதி ஒதுக்கீடு.

* நீர் பாசனத்தை மேம்படுத்த நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பாசன வசதிகளை மேம்படுத்தும் வகையில் அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

* பரம்பரகட் கிரிசி விகாஷ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 5 லட்சம் ஏக்கர் நிலங்களில் இயற்கை வேளாண்மை உருவாக்கப்படும்.

* இந்தியாவில் உள்ள அனைவரும் பலன் அடையும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.

* பிரதம மந்திரி பயீர்க்காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.

* 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கும் வகையில் கொள்கை உருவாக்கப்படும்.

* 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

* பிரதம மந்திரி ஊரக சாலைகள் திட்டத்திற்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக உலக பொருளாதார அமைப்புகள் பாராட்டி உள்ளன.

* நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக உள்ளது.

* அந்நிய செலவாணி கையிருப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 350 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

* கிராமப்புற மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு அதிக செலவிட அரசு முன்னுரிமை.

* வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கத் திட்டம்

* விவசாயிகளின் வருமானம் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்

* மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு

* 28.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பாசனத்தின் கீழ் கொண்டு வரப்படும்

* வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது.

* விவசாயிகளுக்கு வருமான வரி உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.

* இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

* ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை கொண்டு வர மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

நன்றி : தினந்தந்தி/மாலைமலர்/தினமலர்/விகடன்

PDF or MAIL Click here Print Friendly and PDF

Friday, February 26, 2016

பயணமும் நீராடலும் பாகம்-02

இன்றுதான் (22.02.2016 திங்கட்கிழமை)  தீர்த்தவாரி திருவிழா. காலையில் இருந்தே கூட்டம். நேற்றைய முடிவு எது இன்றைய தொடக்கம் எதுவென்று அறியாமல் பக்தர்களின் வருகை தொடர்ந்துக் கொண்டுதான் இருந்தது. நாங்கள் வீட்டிலேயே குளித்து முடிந்து சிற்றுண்டியை முடித்து விட்டு தீர்த்தவாரிக்காக தயாராய் இருந்தோம்.மணி பத்தை தாண்டியதும் ஒவ்வொரு சுவாமியும் குளக்கரைக்கு தீர்த்தவாரி திருவிழாக்காக வரத் தொடங்கினார்கள்.

ரிஷப வாகனத்தில் கும்பேஸ்வரர்

அருள்மிகு காசி விஸ்வநாதர் ,கும்பேஸ்வரர் ,நாகேஸ்வரர் , சோமேஸ்வரர், கோடீஸ்வரர் ,காளஹஸ்தீஸ்வரர் , கௌதமேஸ் வரர்,அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர், அபிமுகேஸ்வரர்,கம்பட்ட  விஸ்வநாதர் ,  ஏகாம்பரேஸ்வரர்  என அனைவரும் வருகையிட மணி 10.50ஐ தாண்டியது. தீர்த்தவாரிகளே குளக்கரைக்கு வந்தபிறகு நாங்கள் மட்டும் வீட்டிலேயே இருக்கலாமா?
 
தீர்த்தவாரியின் போது சுவாமிகளின் வருகைகள்
நான்,என்மனைவி,என் இருமகன்கள்(பரத்-சரத்), சகலை திரு.ரவி யின்  மனைவி மகன்கள்(பிரசன்னா ஹரிபிரசாத்) ,  இன்னொரு சகலை திரு.ரமேஷ் அவரது மனைவி,மகன் ராகுல் என் மனைவியின் அக்காளும் அவரது மகன் கார்த்திக்கும், மைத்துனர்கள் திரு சீனிவாசன் அவரது மனைவி திரு.சுரேஷ் அவரது மனைவி, என ஒரு குழுவாய் மகாமக குளத்தில் தீர்த்தவாரிக்காக புறப்பட்டோம்.என் சகலைகளின் வீட்டுக்கும் குளத்திற்கும் இருநூறு அடி தூரம்தான். மைத்துனர் திரு.சுரேஷ் குடிதண்ணீர் பாட்டில் வாங்கி வெய்யிலில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவலர்களுக்கு இலவச விநியோகம்(நீர் தானம்) செய்தார்.

நாங்கள் குளத்தில் இறங்கியபோது மணி பதினொன்றை ஆகியது இன்னும் சிறிது நேரத்தில் தீர்த்தவாரி நடைபெறப் போகிறது கிழக்கு கரையில் ஆதிகும்பேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்து அருளினார்.
 
தீர்த்தவாரி நடைப்பெற்ற போது
கொம்பு ,தாள வாத்திய ஒலியுடன்  நாதஸ்வரம், மேளதாளத்துடன்  இசைக்கலைஞர்களின் வாத்திய இசை கச்சேரி உற்சாகத்துடன் நடந்துக் கொண்டிருக்க பக்தர்களின் நமசிவாய பஞ்சாட்சர ஒலி விண்ணை பிளக்க குளக்கரையே சன்னதியாய் அருள் பொங்க,மனம் இளகி,கரம் கூப்பி பக்தி சரணமாய் குளத்திலும் கரையிலும் மக்கள் வெள்ளம் பரவசத்துடன் நின்றக் கோலம்,இதை வார்த்தைகளால் சொன்னால் போதாது.காண வேண்டும். அவ் விழாவில் கலந்து ஆதிகும்பேஸ்வரரின் பரிபூரண ஆசியை பெற வேண்டும்.கரையில் வேத விற்பனர்களின் மந்திர ஒலி தொடர வானில் சூரியபகவான் உச்சமிட மேகம் கறுத்து நிழலிட   ஐந்து கருடன்கள் வானில்   வட்டமிட்டது. பச்சைக் கிளிகள்  குறுக்கும் நெடுக்கும் கீ கீ ஓலியுடன் பறந்தது. அபிமுகேஸ்வரர் கோயிலின் முதல் தளத்தில் இருந்து இந்நிகழ்ச்சியை தொலைக்காட்சி ஒளிபதிவாளர்கள் காணொளிப் பதிவை பதிந்துக் கொண்டிருந்தனர்.
அன்று கும்பகோணம் ஸ்தல நேரப்படி பகல் 12:10 மணிக்கு ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி நாயகர் அருள்மிகு. ஆதிகும்பேஸ்வரர் அருள தீர்த்தவாரி நடைப்பெற்றது.நாங்களும் நீராடினோம்.
திங்கள் தங்கிய சடை உடையானை, தேவ தேவனை, செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே


எங்கோ சுந்தரர் பாடிய பதிகவரிகள் காற்றில் ஒலிக்க மனம் முழவதும் சிவனே என்று இன்புற்று இருக்க தீர்த்தவாரி நீராடி கரையடைந்தோம். வீட்டிற்கு வந்தபோது லெமன் சாதமும், தயிர் சாதமும் நான்கு பொட்டலங்கள் நண்பர் திரு.சீனிவாசனிடம் இருந்து வந்து காத்து இருந்தது.


தீர்த்தாதிநாதாய பலப்ரதாய
பலஸ்வரூபாய பலாங்கதாரிணே
ஸ்ரீமந்த்ரபீடேஸ்வரி வல்லபாய
ஸ்ரீகும்பலிங்காய நமஸ் ஸிவாய
பொருள்: கும்பகோணத்திலுள்ள அனைத்து தீர்த்தங்களுக்கு அதிபராக விளங்குபவரே, தீர்த்தத்தில் நீராடும் புண்ணிய பலன்களை அளிப்பவரே, கும்பேஸ்வரா, நமஸ்காரம். நற்பலன்களின் உருவாக இருப்பவரே, கோரிய வரங்களைத் தரும் அற்புதமானவரே, மந்த்ரபீடேஸ்வரியான மங்களாம்பிகையின் மணாளனே, கும்பேஸ்வரா,  ஈசா, நமஸ்காரம்.

துயர் நீக்கி
துன்பமெல்லாம் துடைத்து
துவளும் சோர்வின்றி
தூய வாழ்வினை
அருள்வாய் திருவே.
மாலை ஆறு மணியாகியது.அப்போதும் பக்தர்களின் கூட்டம் குறையவில்லை.மக்கள் சாரைசாரையாக வந்தவண்ணம் இருந்தனர். நண்பர் திரு.சீனிவாசனிடம் போன் செய்து நன்றி தெரிவித்துவிட்டு சென்னைக்கு கிளம்ப உள்ளதையும் தெரிவித்து விடைப்பெற்றேன். எங்களுக்கு சென்னைக்கு எட்டரை மணிக்கு மீண்டும் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து.ஆனால்  பண்ருட்டி வழியாக செல்லும் பேருந்து. சென்னைக்கு கிளம்ப தயாராக மாற்றுடையணிந்து வாசலில் நின்று மக்கள் வெள்ளத்தை பார்த்துக் கொண்டே இருக்க மணி ஏழரையை கடந்தது. டிபன் ரெடியாம்மா என மனைவியிடம்  கேட்டுக்கொண்டே நான் மக்கள் வெள்ளத்தை நோக்க சிரித்த முகத்தோடு  சாமி வணக்கம் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது மாறி என்று கூறிக்கொண்டே அருகில் வந்து நின்றார் கனிமுத்து எனும் நண்பர் தன் துணைவியுடன்.
 
தீர்த்தவாரிக்கு பிறகும் மக்கள் கூட்டம்
எப்படியாவது உங்களை இங்கே பாப்பேன்னு நெனைச்சிக்கிடே வந்தேன் சாமி,உங்கள பாத்துட்டேன் என்று புளாங்கிதமடைந்தார் கனிமுத்து.

எப்ப சென்னைல இருந்து கிளம்பினிங்க என நான் கனிமுத்துவை விசாரித்தேன். அவரும் தான் வந்ததையும் காரை செட்டிமண்டபம் எனும் இடத்தில் பார்க் செய்துள்ளதையும் கூறினார்.

நாங்க வந்து ரெண்டு நாளாச்சி இன்னிக்கி நைட்டு எட்டரை மணிக்கு வண்டி இப்போவே கிளம்பினாத்தான் பஸ் ஸ்டாண்டுக்கு போகமுடியும் என்று கூறிக்கொண்டே அவருக்கும் அவர் துணைவிக்கும் தண்ணீர் பாட்டிலை கொடுத்தேன்.

உடனே கனிமுத்து சாமி எங்கக் கூட வந்துடுங்க சாமி. என்றார்.

நான் நாங்க நாலுபேரு, கார்லே இடம் பத்துமா என்றேன்.
தவேரா கார்தாங் சாமி. எய்ட் பிளஸ் ஒன்னு தாரளாமா போலாம் சாமி என்று பெருமையுடன் கனிமுத்து கூறினார்.
நான் புன்னைகையுடன், பரவாயில்லே  நாங்க பஸ்ல போய்க்கிறோம் என்றவுடன்  கனிமுத்து கோபித்துக்கொண்டார்.
நான் அவரை தேற்றிவிட்டு என் மனைவியிடம் உத்தரவு பெற்று சரி நீங்க நீராடிவிட்டு  வாங்க போலாம் என்றேன்.

அவர் கிளம்பியதும் என் மூத்த மகன் டிக்கேட் கேன்சல் செய்ய தன் மொபைலை கிளுக்க ஆரம்பித்தான்.


முதல் நாள் தேரோட்டத்தில் அ/கு அபிமுகேஸ்வரர்
தேரோட்டத்தின் போது பக்தர்களுக்கு விசிறி வீசும் பெரியவர்
முன்நாள் இரவில் காமாட்சி வீதியுலா
கனிமுத்துவும் அவர் துணைவியும் மணி ஒன்பதரைக்கு வந்து சேர்ந்தார்கள் சகலை வீட்டில் கனிமுத்துவும் அவர் துணைவி மற்றும் நாங்கள் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு எல்லாரிடமும் ப்ரியாவிடைப்பெற்று நடையாய் விஸ்வநாதன் வீதி வடக்கு முனைக்கு வந்தோம்.ஆட்டோ பிடித்து கார் நிறுத்தி வைத்த செட்டிமண்டபம் வந்தோம். கனிமுத்துவின் காரில் அனைவரும் அமர்ந்து கொள்ள சென்னை நோக்கி மீண்டும் கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்க கனிமுத்து காரை திருப்பினார்.மணி பத்து ஐம்பது என எனது செல்போன் காட்டியது

நீண்ட நேர தூரப்பயணத்திற்கு பிறகு கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள புதுப்பட்டினத்தில்  அடுப்பாங்கரை எனும் உணவகத்தின் முன் கார் நிறுத்தி நானும் கனிமுத்துவும் தேநீர் அருந்திவிட்டு சிறிது ஆசுவாசத்திற்கு பிறகு மீண்டும் பயணித்து திருவான்மியூர் வந்தடைந்தோம். கனிமுத்துவும் அவரது துணைவியாரிடமும் நன்றி கலந்த வணக்கத்துடன் விடைபெற்றோம். மணி அதிகாலை மூன்றையாகியது.

PDF ஆக டவுன்லோட் செய்ய / மெயிலாக அனுப்ப கிளிக் செய்யவும் Print Friendly and PDF

பயணமும் நீராடலும் பாகம்-01

வரவேற்பு முகமாய் என் மனைவி புன்னைகையுடன் என்னை வரவேற்றாள். சீக்கிரம் போய் குளிச்சுட்டு வாங்கஎன மாலை 3 மணிக்கே அன்பு கட்டளையிட்டாள் . நான் என் மனைவி மற்றும் இருமகன்கள் உள்பட கும்பகோணம் மகாமக தீர்த்தவாரி திருவிழா செல்வதற்காக சனிகிழமையன்று (20.02.2016) தயாரானோம். ஆளுக்கொரு சுமையாக நான்கு பைகள் என எங்கள் அனைவருக்கும் தேவையான உடை, கொறிக்க கொஞ்சமாய் நொறுக்குத்தீனி மற்றும் பல இத்யாதிகளுடன் நேற்றிரவு முதலாய் தயாராக இருந்தது. ஐந்தாவதாக ஒரு கட்டைப்பிடி  பையில் தண்ணீர் பாட்டில்கள், தீர்த்தம் பிடிக்க ஐந்து லிட்டர் கேன் ஒன்று,(என் தெருவிலுள்ள பிள்ளையார் கோயிலுக்காக) இரவு உணவு,கை துடைக்க ஒரு டவல் மற்றும் போன் சார்ஜர்கள்,பவர் பேங்குகள் உடன் இப்போது தயாராகி இருந்தது.


கோயம்பேடு பஸ் நிறுத்ததிலிருந்து மாலை 4.35க்கு தமிழ்நாடு விரைவு பேருந்து கிளம்பி எங்கள் திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்ததிற்கு வர மாலை 5.35க்கு ஆகும் என கணக்கிட்டு (முன்பதிவு செய்த சீட்டில் உள்ளபடி) ஐந்து மணியளவில் குடும்ப சகிதாமாய் பஸ் நிறுத்ததில் வந்து நின்றோம். பஸ் நிறுத்ததில் மேற்கிலிருந்து மாலை சூரியனின் வெயில் சுட சற்று  வேர்த்து நின்றோம். பாண்டிச்சேரி, சிதம்பரம்,மயிலாடுதுறை நாகப்பட்டினம் செல்லும் பேருந்துக்கள் மட்டும் விரைவாய் வந்து எங்களை கொஞ்சம் நோகடித்தது.நேரம்  5.35-ஐ கடந்தது. ஆனால் எங்கள் பேருந்து மட்டும் வரவில்லை. எங்களது சின்ன மகன் மட்டும் கொஞ்சம் சலித்துக்கொண்டே இருந்தான்.

நான் என் மனைவியிடம் நான் அப்பவே சொன்னேன் நம் காரிலேயே கிளம்பியிருந்தால் இந்நேரம் பாண்டி தாண்டி இருக்கலாம் என்றேன். உடனே என் மனைவி ஒரு மாறுதலுக்கு பஸ்லே போலாம்னு தானே பஸ் புக் பண்ணோம் கொஞ்சம் பொறுமையா இருங்க என என்னை அதட்டியது போலே எங்களது  சின்ன மகனை தேற்றினாள். மணி ஆறு ஆனது. என் மூத்த மகன் எஸ்.இ.டீ.சி(SETC) மட்டும் சொன்ன நேரத்துலே வந்ததா சரித்திரமே இல்லே என அவன் பங்களிப்பில் கருத்துரையிட்டான்.

மணி 6-05 ஐ தாண்டியது.வாகன நெரிசலில் தவழ்ந்து எங்கள் 307E அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து வந்தது வேகமாக பேருந்துக்குள் ஏறி பைகளை எங்களது இருக்கைகளுக்கு மேல்தட்டில் பைகளை பத்திரப்படுத்தி எங்களது இருக்கைகளில் அமர்ந்தோம்.என் மனைவியின் கால்கீழே கட்டைப்பிடி  பையை பத்திரப்படுத்திக் கொண்டாள். பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் நகர்ந்துக் கொண்டு இருந்தது.

சிறிது தூர ஓட்டத்திற்கு பிறகு அரசு அங்கீகாரம் பெற்ற பயணவழி உணவகம் ஹோட்டல் கவுரி கூவத்தூர் என்ற பெயர் பலகையுடன் வரவேற்ற சிறிய உணவகத்தின் முன் எங்கள் பேருந்து நின்றது. மணி எட்டானது.என் குடும்பம் மற்றும் வேறு  இரு குடும்பங்கள் தவிர மற்ற சக பயணிகள் கீழே இறங்கினர். என் மனைவி கட்டைப்பிடி  பையை எடுத்து கட்டிக்கொண்டு வந்த இட்லி, தக்காளி சட்னி பொட்டலம் ஆளுக்கொன்றாய் கொடுத்தாள்.எங்களை போலவே அந்த இருகுடும்பங்களும் உணவை பரிமாறி சாப்பிட ஆரம்பித்தனர். இரவு உணவு முடிந்தது மீண்டும் பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்தது.

வழியில் மைத்துனரின் அலைபேசி விசாரிப்பு மாமா எங்கே இருக்கீங்க.சகலைகளின் அலைபேசி அழைப்பு என எங்களை சுறுசுறுப்பாகியது. என் அலைபேசி, என் மனைவியின் அலைபேசி, என் மகன்களின் அலைபேசி என எல்லாமே மாறிமாறி சுறுசுறுப் பாக்க  வளைவு,பள்ளம்,குலுங்கல்,வாகன இரைச்சல் என இருக்க அல்ட்ரா டீலக்ஸ் மட்டும்  மெல்லமாய்  கடந்துக்கொண்டிருந்தது. பாண்டிச்சேரி,கடலூர்,சிதம்பரம்,வைத்தீஸ்வரன் கோயில்,மயிலாடு துறை, ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர் என கடந்து கும்பகோணத்திற்கு ஐந்து கிலோமீட்டர் முன்னேயே அசூர் எனும் ஊரில் மகாமக விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த   தற்காலிக சென்னை மார்க்க பேருந்து நிலையத்தில் எங்களை இறக்கியது. 1992-ல் மகாமகத்திற்க்கு நான் என் அம்மா,அப்பா மற்றும் என் மனைவியுடன் வந்திருந்தேன். அப்போது என் மனைவி கருவுற்று இருந்தாள். சென்னை மார்க்க பேருந்துகள் கொரநாட்டு கருப்பூரோடு பேருந்துகள் நிறுத்தப்பட்டது. 2004-ல் கும்பகோண புதுபேருந்து நிலையத்தோடு பேருந்துகள் நிறுத்தப்பட்டது. 

இருள் சூழ தீடீர் கடைகளின் வெளிச்சம்,வாகன இரைச்சல்,சென்னை செல்லும் பேருந்தின் அழைப்பு, நிறைய போலீஸ்,கொஞ்சம் ஊர் தெரிய நாங்கள் கும்பகோணம் அடைய மாற்று வாகனத்தை எதிர்பார்க்க அருகில் வந்து நின்றது மூன்றுசக்கர வாகனம். கட்டண பேரம் எதுவும் பயனில்லை. நாங்கள் ஏறி கொண்டோம். நால் ரோடு,செட்டி மண்டபம்,மடத்து தெரு.நாகேஷ்வரன் வீதி என கடக்க வழி எங்கும் தற்காலிக ஸ்டிக்கர்கள் மகாமக குளக்கரைக்கு  வழிகாட்டி கொண்டிருந்தது. தென்னிந்திய கும்ப மேளா மகாமக தீர்த்தவாரிக்கு வருகை தரும் பக்தகோடிகளை கும்பகோண நகராட்சி வரவேற்கிறது எனும் பதாகைகள் எங்கும் வரவேற்றது. தற்காலிக மே ஐ எல்ப் யூ எனும் காவல் உதவி மைய பூத்க்கள், காக்கிசட்டைகளின் வயர்லஸ் கரகர ஒலி , மகாமக குளத்திற்கு செல்லும் வழி எனும் அட்டைகள், பக்தர்களின் நடைவேகம், ஆங்காங்கே பிளாஸ்டிக் குளியல் மக்,கேன் என சிறு நடைபாதை வியாபாரிகளின் வியாபார அழைப்பு,டீக்கடையில் வானொலி பாடல்கள்.கொஞ்சம் பக்தி பாடல்களின் ஒலி,ஆட்டோக்களின் வேகம் என கும்பகோணம் தாறுமாறாக முழித்துக்கொண்டு இருக்க, அவர வர்களின் குறி நீராட மகாமக குளத்திற்க்கு செல்ல,ஒருவழி பாதை ஆரவாரமாக இருந்தது..

எங்கள் ஆட்டோவும் பெரிய கடை தெருவின் ஒர் இடத்தில் நிற்க நாங்கள் இறங்கி எங்கள் பயண முடிச்சுகளுடன் மகாமக குள வழிப் பாதையில்  காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள  என் சகலைகளின் வீட்டை நோக்கி நடந்தோம்.அடைந்தோம்.  மணி அதிகாலை இரண்டாகியது.

கொஞ்சம் தூங்கி எழுந்த போது மணி ஏழாகி இருந்தது.குளித்து முடித்து வெளியே வந்த போது தெருவில் தாரைத் தாரையாக மக்கள் மகாமக குளம் நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தனர்.

மகாமகக் குளம் சுத்தப் படுத்தியபோது

போலீஸ் மைக்கில் அன்பு பக்தகோடிகளே தள்ளாமல் ஓடாமல் மெல்ல செல்லும் படி காவல்த்துறை கேட்டுக்கொள்கிறது என்று ஒலித்துக் கொண்டிருந்தது. பெண்கள் முந்தானைகளால் கழுத்தை சுற்றி நகைகளை மறைத்துக் கொள்ளவும், குழந்தைகளை கைப்பிடித்து கூட்டிக் கொண்டு செல்லவும், வயதானவர்களை முன்னே விட்டு பின்னே பாதுகாப்போடு செல்லவும் என ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பக்த கோடிகளை வேண்டிக் கேட்டுக்கொண்டே இருந்தது. காவல் துறை மிக்க பாங்குடன் பொதுமக்களை எச்சரித்தும் பாதுகாத்தும் வழிகாட்டியும் இருபத்திநான்கு மணி நேரமும் பணியாற்றிக் கொண்டிருந்தது மிக்க சிறப்பாக இருந்தது.எங்கு நோக்கிலும் மக்கள் வெள்ளம். வயதானவர்கள்,இளையவர்கள் குழந்தைகள் என மக்கள் வெள்ளம் வந்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு தெருவிலும் ஒரு இரும்பு கதவுகளை பொருத்தி அதற்கு எண்களை இட்டு கேட் நம்பரை வைத்து அங்கிருக்கும் போலீசாரை கண்ட்ரோல் ரூமிலுருந்து அதிகாரிகள் செயல்ப்பட வைத்தனர்.கதவுகளை மூடியும் தடுத்து நிறுத்தியும் மக்களை கட்டுப்படுத்தி அனுப்பிக் கொண்டே இருந்தனர். கதவுகள் இல்லாத இடங்களில் கயிற்றால் தடுத்தும் மக்களை மகாமக குளத்திற்கு அனுப்பிக்கொண்டே இருந்தனர். மகாமக குளத்திற்கு அருகேயும் மற்றும் சில வீதிகளிலும் இலவச மருத்துவ முகாம்கள் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து இருந்தது.அதுவும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் இலவச தற்காப்பு மருந்துக்களுடன் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.

நான்,என்மனைவி,என் இருமகன்கள், சகலை திரு.ரமேஷ், மைத்துனன் திரு.சுரேஷ்,இன்னொரு சகலை திரு .ரவியின் மகன்  பிரசன்னா என ஏழு பேரும் மகாமக குளத்தில் நீராட  புறப்பட்டோம்.

மகாமகக்குளத்தில் பக்தர்கள்
மகாமக குளத்தில் கிழக்கில் இருந்து பக்தர்கள் இறங்கி நீராடிக்கொண்டே மேற்கு திசையில் வெளியே அனுப்பி வைக்கப்பட்டு கொண்டே இருந்தனர். குளத்தின் உள்ளேயும் போலீஸ் மக்களை சூழ்ந்து அவர்களை கட்டுப்படுத்தி எந்தவொரு தொந்தரவுமின்றி நீராட விட்டனர்.

20 தீர்த்தங்கள் - 1.நவகன்யா தீர்த்தம், 2. இந்திர தீர்த்தம், 3.அக்னிதீர்த்தம், 4.யம தீர்த்தம், 5.நிருதி தீர்த்தம், 6.வருணதேவ தீர்த்தம், 7.வாயு தீர்த்தம், 8.பிரம்ம தீர்த்தம், 9.குபேர தீர்த்தம், 10. ஈசான தீர்த்தம், 11.மத்யே 66 கோடி தீர்த்தம், 12.கங்கா தீர்த்தம், 14.நர்மதா தீர்த்தம், 15. ஸரஸ்வதீ தீர்த்தம், 16.கோதாவரி தீர்த்தம், 17.காவேரி தீர்த்தம், 18.கன்யா தீர்த்தம், 19.பாலேஷ் (ஷீரநதி) தீர்த்தம், 20. ஸரயூநதி தீர்த்தம் என்று தீர்த்த கிணறுகளின் மேல் பதாகையில்  பெயர்கள் எழுதப்பட்டு இருந்தது. தீர்த்த கிணறு களின் மேல் நீரை பீய்ச்ச்சடிக்கும் குழாய் பொருத்தப்பட்டு அது கிணறை சுற்றி நீராடும் பக்தர்களின் மேல் நீரை பீய்ச்ச்சடித்துக் கொண்டிருந்தது.
என் சகலையின் வீட்டு மொட்டைமாடியிலிருந்து எடுத்த போட்டோ.
வடமேற்கு மூலையில் காவிரியிலிருந்து நீர் வர வைக்கப்பட்டு தென் கிழக்கில் நீர் வெளியேற்றி குளத்தின் நீரை சுத்தமாக பராமரித்துள்ளனர். நாங்களும் 20 தீர்த்த  கிணறுகளிலும் உற்சாகமாக   நீராடிவிட்டு மேற்கு குளக்கரையில் படி ஏறி தெற்கு அரசலாறு நோக்கி புறப்பட்டோம்.

காவிரி ஆறு  தஞ்சை மாவட்டத்தினுள்  நுழையும் பொழுது குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ,அரசலாறு என்று ஐந்து கிளை ஆறுகளாக பிரிகிறது. இவற்றுள் அரசலாறு அரி சொல் ஆறு என்பதன் மருவமே அரசலாறு ஆகும். இது  மகாமக குளத்தின் தெற்கே உள்ளது.இந்த அரசலாறுக்கு அருகில் உள்ள அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் காவல்துறை காவலர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சில காவலர்களும் அரசலாறில் குளித்துக் கொண்டிருந்தார்கள். 2004-ல் மகாமகத்தின் போது நான் என் மகன் மூத்தவன் பரத்,ஆறு வயது இளைய மகன் சரத் மற்றும் என் மைத்துனர் திரு.சுரேஷ் மற்றும் என் சகலையின் அப்பா திரு.சேதுராமன் மற்றும் என் சகலை ரவியின் மகன் பிரசன்னா மட்டும் அரசலாரில் குளிக்க வந்தோம். திரு.சேதுராமன் அவர்கள் ஆற்றில் நீந்தியதையும்,எங்களை உற்ச்சகமூட்டியதையும் சகலை திரு ரமேஷிடம் (என் சகலைகள் ரவியும் ரமேஷும் சகோதரர்கள்) நினைவுகூர்ந்தேன்.

திரு.சேதுராமன் அவர்கள் 2014 –ல்அமராகிவிட்டார்.ஒரு மனிதனின் நட்பும் உறவும் அவனின் மறைவுக்கு பின்னரே மேலும் பசுமையாய் இருக்கிறது. நாங்களும் அரசலாறில் அரைமணி நேரம் குளித்துவிட்டு இனிய நினைவுகளோடு எல்லோரும் வீட்டுக்கு திரும்பினோம்.

அன்று மாலை நாலரை மணிக்கு மேல் மீண்டும் நீராட பொற்றாமரைக் குளத்திற்கு சென்றோம். இது கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகிலுள்ளது. மகாமக குளம் போன்றே பொற்றாமரைக் குளத்திலும் ஒரு கரையிலுருந்து இறங்கி நீராடி மறுகரையில் வெளியேறி காவிரிக்கு கிளம்பினோம்.
 
பொற்றாமரைக் குளம்
காவிரிப்படித்துறை சக்கரப்பாணி திருகோயிலுக்கு அருகில் இருப்பதால் அதை சக்கரப்படித்துறை என்றே அழைக்கப்படுகிறது.காவிரியில் பாதுகாப்பு ஏற்பாடு மிக தீவிரமாக இருந்தது. கரையிலிருந்து இருபது அடி தூரம்வரை கயிறால் தடுப்புகளை வைத்து ஒரு எல்லையமைத்து அதன் அருகிலேயே நான்குஅடிக்கொரு காவலரும் பக்கத்தில் ரப்பர் மிதவை படகொன்றும் நிறுத்தப்பட்டு இருந்தது. மைக்கில் காவலர் ஒருவர் பக்தர்களை எச்சரித்து வழியனுப்பிக் கொண்டிருந்தார். நாங்களும் காவிரியில் மூன்றுமுறை மூழ்கி குளித்துவிட்டு கரையேறினோம். மேலக்காவேரி படித்துறை வழியாக வர சிலர் வீபூதி கொடுக்க எங்கள் எல்லார் நெற்றியும் வெள்ளையாகியது.

இவ்வளவு பெரிய அரிதான விழாவில் அன்னதானம் மட்டும் நடை பெறாதது எனக்கு குறையாகவே இருந்தது.எங்கோ ஒரு மூலையில் ஒரு சிலர் மனமுவந்து  சிறிது அன்னதானம் செய்துக்கொண்டு இருந்தனர்.அரசியல் இயக்கங்கள், மடங்கள், தொழில் அதிபர்கள், பெரிய தர்மஸ்தாபனங்கள் என எதுவுமே அன்னதானம் செய்யாமல் இருந்தது கொஞ்சம் நெருடலாகவே இருந்தது.  ஏழை மக்கள் தங்கள் பயண முடிச்சுக்களுடன் தண்ணீருக்கும் சாப்பாடுக்கும் கஷ்டப்படுவதை கண்ணால் காண முடிந்தது.அதனால்  மறுநாள் தீர்த்தவாரி திருவிழாவின் போது அன்னதானம் செய்ய உச்சிபிள்ளையார் கோயில் அருகே உள்ள நண்பர் திரு.சீனிவாசனிடம் அன்னதானம் செய்ய பணத்தை கொடுத்தேன்.
ஆட்டோ ஒன்றிலேறி நாகேஸ்வரன் வீதிமுனை வரை வந்திறங்கி முராரி ஸ்வீட் கடையில் பஜ்ஜியும் காபியும் சாப்பிட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு நடைபாதையில் வேடிக்கை பார்த்துக்கொண்டே திரும்பினோம்.
 
நீராட காத்திருக்கும் பக்தர்கள்
வீட்டில் ஈர ஆடைகளை மாற்றிக்கொண்டு  வெளியில் வராந்தாவில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் எல்லோரும் பேசிக்கொண்டும் வீதியில் மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டும் நேரம் கழித்தோம் ஆனால் நீராட வரும் பக்தர்களின் கூட்டம் மட்டும் குறையவேயில்லை.
-தொடரும்,...........

PDF ஆக டவுன்லோட் செய்ய / மெயிலாக அனுப்ப கிளிக் செய்யவும் Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms