வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Tuesday, July 31, 2012

எல்லாரும் நம் நண்பரே!


எல்லாரும் நம் நண்பரே!

இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, "அஸ்ஸலாமு அலைக்கும்' என வணக்கம் சொல்வார்கள். 

இதன் பொருள், "அல்லாஹ்வின் அருள் உங்கள் மீது உண்டாகட்டும்' என்பதாகும்.

உலகம் பகை என்ற கட்டடத்தைப் பலமாகக் கட்டிக் கொண்டிருக்கிறது.
ஒருவரது முன்னேற்றம், மற்றொருவருக்கு சகிக்கவில்லை. இதன் காரணமாக, போட்டி, பொறாமை அதிகரித்து விட்டது. இதை தவிர்க்க வேண்டும் என்கிறது இஸ்லாம். "அஸ்ஸலாமு அலைக்கும்' சொல்வது தான் இதற்கு ஒரே தீர்வு. ஆம்! பகை உணர்வுடன் நடந்து கொள்ளும் ஒருவரை பார்க்கும் போதெல்லாம் ஒருவர், தொடர்ந்து "அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவரது மனம் மாறி விடும். அவர் பகையை மனதில் நினைக்காமல், அல்லாஹ்வின் அருளை நமக்காக வேண்டுகிறாரே என்ற எண்ணத்தில், நண்பராகி விடுவார். பகைவரையும் நண்பராக்கும் வார்த்தையே "அஸ்ஸலாமு அலைக்கும்'.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதுபற்றி கூறும் போது, "ஸலாத்தின் மூலம் இம்மை மறுமை நன்மைகளைக் காணலாம். மக்களிடையே அன்பு பரவும். எதிரிகள் தங்கள் பகையை மறந்து இணைவார்கள்,'' என்கிறார்கள்.

ஒருவர் நபிகளாரிடம், "இஸ்லாத்தில் சிறந்தது எது ?' என கேட்டார்.அதற்கு நாயகம், "பசித்தவருக்கு உணவளிப்பதும், தெரிந்தவராயினும், தெரியாதவராயினும் ஸலாம் சொல்வதும் ஆகும்," என்றார்கள்.

நபி ஆதம் (அலை) அவர்களுக்கும், அவர்களது உம்மத்தினர்களுக்கும் அல்லாஹ் இதை கடமையாக்கி  இருக்கிறான். நபி ஆதம் (அலை) அவர்களுக்கு, ஸலாம் சொல்லும் முறையையும் கற்றுக் கொடுத்துள்ளான். இதிலிருந்து ஸலாத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.


ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.. 
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்  கண்ணதாசன் 


Thursday, July 19, 2012

இந்தித் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார்



ராஜேஷ் கன்னா 
(Rajesh Khanna) இயற்பெயர் : ஜதின் கன்னா,
டிசம்பர் 29, 1942 - ஜூலை 18,2012
1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். இதுவரை 163 இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார்; இவற்றில் 22 திரைப்படங்களில் இரண்டு நாயகர்களி்ல் ஒருவராக நடித்துள்ளார்.மூன்று முறை பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ள இவரது பெயர் பதினான்கு முறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிலிம்பேர் வாழ்நாள் சாதனை விருது இவருக்கு 2005இல் வழங்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்து புகழேணியின் உச்சக்கட்டத்திற்கு சென்ற இவரே இந்தித் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார்  என அறியப்படுகிறார்.
இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக ஆராதனா, அமர்பிரேம், ஆனந்த், கத்தி பதங், ராஸ், பகாரோங் கே சப்னே, இத்தெஃபாக், சச்சா ஜூதா, ராஜா ராணி, பவார்ச்சி ஆகியன அமைந்தன.

இயக்குனர் பாரதிராஜா தனது சிவப்பு ரோஜாக்கள் படத்தை இந்தியில் 'ரெட்ரோஸ்' என்ற பெயரில் ராஜேஷ்கன்னாவை கதாநாயகனாக நடிக்க வைத்து எடுத்தார். அவர் சிறந்த நடிகருக்கான விருதுகளை பல தடவை பெற்றுள்ளார்.

ராஜேஷ்கன்னா நடிகை டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு டுவிங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

 

அரசியல் மற்றும் பொது வாழ்வு 

ராஜேஷ் கன்னா இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் 1992இல் நடந்த இடைத்தேர்தலில் புது தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1996ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு தக்க வைத்துக் கொண்டார். தொடர்ந்து தனது இறுதிக்காலம்  வரை காங்கிரசின் அரசியல் செயல்பாட்டில் பங்கெடுத்து வந்தார்.
கன்னாவும் அவரது வெளிநாட்டு நண்பர்களும் சீரடியில் பக்தர்கள் தங்கி வழிபட தங்குவிடுதிகளைக் கட்டத் திட்டமிட்டனர்.
உடல்நலம்
ஜூன், 2012இல் கன்னாவின் உடல்நலம் மோசமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாயின. 2012 ஜூன் 23 அன்று சில உடல்நலக்கேடுகளுக்காக மும்பை யிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பிய கன்னா மறுநாள், ஜூலை 18, 2012 அன்று சிகிட்சை பலனின்றி காலமானார்.

Monday, July 16, 2012

உன்னிடம் தோற்று போகிறேன்


அம்மா 



ஒவ்வொரு முறையும்
உன்னிடம் தோற்று போகிறேன் 
காலையில் எழுந்தவுடன்
கண்ணாடியில் முகம் பார்ப்பதற்கு முன்னே 
உன்னிடம் தோற்று போகிறேன்.
குளிப்பதற்கு தண்ணீரை தொடுவதற்கு  முன்னே    
உன்னிடம் தோற்று போகிறேன்.
உடையுடுத்தி சாமி கும்பிட பூஜையறை செல்வதற்கு முன்னே   
உன்னிடம் தோற்று போகிறேன்.
காலை உணவை வாய்க்கு கொண்டு போகும் முன்னே    
உன்னிடம் தோற்று போகிறேன்.
இனி எப்பொழுது உன்னை வெல்ல போகிறேன்.
நாள் முழுக்க தோற்றாலும்
தோற்ற அனுபவம் வருத்தம்  தந்ததில்லை
மாறாக உன்னை மறவாத வெற்றியினை தந்திருக்கிறது.  

Friday, July 13, 2012

மரவியாபாரியும் எமனும்



ஒருமுறை எமலோகத்தில் வாழ் நாள் முடிந்து வந்த மரவியாபாரிக்காக   எமன் அவன் செய்த பாவ புண்ணிய கணக்கை சித்ர குப்தனிடம்  விசாரித்தார் ."அந்த மரவியாபாரி எந்த பாவங்களையும் செய்ய வில்லை இருப்பினும் அவனுக்கு தண்டனை தர வேண்டும் பிரபு" என சித்ர குப்தன் கூறினான்.
மரவியாபாரி உடனே மறுத்து எனக்கு எதற்கு  தண்டனை  என கேட்டான். 
சித்ர குப்தன் எமனிடம், “பிரபு இம்மரவியாபாரி பல மரங்களை வெட்டி உள்ளான். அதனால் இவன் வாழ்ந்த இடத்தில மழை இல்லாமல் பயிர்களும்,விலங்குகளும் மனிதர்களும் வாடினார். அதை தவிர வேறு ஒரு பாவமும் செய்ய வில்லை. எனவே இவனுக்கு தக்க தண்டனை தருமாறு கேட்டு கொள்கிறேன் பிரபு என முடித்தான்.


மரவியாபாரி மறுத்தான். மரம் வெட்டுவது எனது தொழில் அதுவும் குலத்தொழில் இதையே  எனது முன்னோர்களும் செய்தனர் அதையே நானும் செய்தேன் அது எப்படி பாவமாகும்? எனது தந்தை கூட இத்தொழிலையே செய்தார்.எனது தந்தை செய்ததையே நானும் செய்தேன் அவருக்கு மட்டும் சொர்க்கமும் எனக்கு மட்டும் தண்டனையா? “என மரவியாபாரி கோபமுற்றான் .
சித்ர குப்தன் குறுக்கிட்டார்மரவியாபாரியே நீ சொல்வது அனைத்தும் உண்மையே ஆனால் உனது தந்தை ஒரு மரம் வெட்டினால் இரண்டு மரம் வைத்து வளர்த்தார்.நீயோ அந்த  இரண்டு மரத்தினையும் வெட்டினாய். எனவே பிரபு, இம்மர வியாபாரிக்கு இனி தாங்களே தக்க ஒரு தண்டனையை தர வேண்டும் என எமனிடம் சிபாரிசு செய்தார் .  
எமன் தண்டனையை அறிவித்தார்.
மரவியாபாரியே நீ பாவங்கள் ஒன்றும் செய்யாமல் உனது தொழிலையே செய்தாலும் உன்னால் இப்பூமியும், விலங்கும்,மரசெடிக்கொடிகளும் மழை இல்லாமல் அவதிப்பட்டதால்  நீ மூன்று ஜென்மங்களில்  மீண்டும் பிறக்க உத்தரவிடுகிறேன். முதல் ஜென்மத்தில்   மரசெடிக்கொடிகளின் விதைகளை தூவும் பறவையாகவும் இரண்டாம்  ஜென்மத்தில் அவ்விதைகளை பயிராக்க உழும் எருதுகளாகவும் மூன்றாம் ஜென்மத்தில் மரம் வளர்க்க வேண்டும் எல்லா மனிதர்களிடமும் அறிவுறுத்தியும்  நாளொன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று செடிகளை நட்டு வளர்க்கும் மனிதனாகவும் பிறக்க வேண்டும் என்பதே நான் உனக்கு அளிக்கும் தண்டனையாகும்.


குசும்பு குடுமியாண்டி :  இக்கதையை நான் ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.நன்றாக இருக்கிறது ஆனால் இக்கதைக்கும் நடிகர் விவேக்கும் என்னவோ தொடர்பு இருப்பதாகவே  தோணுது 

Print Friendly and PDF

மணல் மேட்டு சாமியார்



ஒரு கிராமத்தில் உள்ள  மக்கள்  ஒன்று கூடி ஆற்றை கடந்து எங்கேயோ செல்ல குழுக்களாக தயாராகி கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஆற்றின் கரையருகில் மரத்தின் கீழ் அமர்திருந்த அவ்வூர் கிராம சாமியார் அக்குழுவிலிருந்து ஒருவரை அழைத்து எல்லோரும் எங்கே செல்கிறீர்கள் என கேட்டார் .

அவன் உடனே அவசரவசரமாக  ஆற்றின் நடுவிலுள்ள மணல் மேட்டில் ஒரு சக்தி வாய்ந்த சாமியார் ஒருவர் பிரார்த்தனை செய்துக்கொண்டிருக்கிறார் அவரோடு சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்ய போகிறோம்  என்று கூறி மிக வேகமாய்  தயாராகி  கொண்டிருந்த  குழுவில் கலந்தான்.  

கிராமத்து சாமியாருக்கு தன்னை  விட சக்தி  வாய்ந்தவனா என்று  ஒரு பக்கம் பொறாமையும் மறுப்பக்கம் மணல் மேட்டு சாமியாரை பார்க்க வேண்டுமென்கிற ஆர்வமும் அதிகமானது.

சாமியாரும் பரிசலில்  ஆற்றை கடந்து  மணல் மேட்டை வந்தடைந்தார். கிராம மக்களும் வந்தடைந்தனர்.

அங்கு சாமியார் ஒருவன் "இறைவா, நான் ஒருவன் மற்றும் எனது மக்களின் பிரார்த்தனை நிறைவேற அருள்புரிய வேண்டும் என மீண்டும் மீண்டும் கூறி பிரார்த்தித்து கொண்டிருந்தான்.
கிராம சாமியார் இதனை கண்டதும் கொல்லென்று சிரித்து மணல் மேட்டு சாமியாரை பார்த்து எந்த மந்திரமும் உனக்கு தெரியாதா? பின் எப்படி? உன் பிரார்த்தனை நிறைவேறும். வேண்டுமானால் என்னிடம் கேட்டு தெரிந்துக்கொள்.என்று கூறி விட்டு கிராம சாமியார் நின்றார்.
ஆயினும் மணல் மேட்டு சாமியார் தனது பழைய மந்திரமான  "இறைவா, நான் ஒருவன் மற்றும் எனது மக்களின் பிரார்த்தனை நிறைவேற அருள்புரிய வேண்டும் என கூறி மீண்டும் பிரார்த்தனையைதொடர்ந்தான்.


கிராமத்து சாமியாருக்கு ஒருமாதிரியாக ஆகிவிட்டது . தன்னை அவன் ஒன்றும் பொருட்படுத்தவே இல்லை என்று அறிந்துக்கொண்ட கிராமத்து சாமியார் கிராமத்துக்கு   செல்ல ஆற்றங்கரைக்கு புறப்பட்டார். 

பரிசலில் அமர்ந்து ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த பொழுது "கொஞ்சம் நில்லுங்கள் என குரல் கேட்டது.

கிராமத்து சாமியார் திரும்பி பார்க்க மணல் மேட்டு சாமியார் ஆற்றின் மேல் நடந்து வந்து பரிசலின் அருகில் நின்று "அய்யா நீங்கள் ஏதோ மந்திரமொன்றை தெரியும் என்று கூறினீர்கள் அதனை கூறினால் அதனையும் சேர்த்து பிரார்த்தனை செய்வேன் என்றார்.

கிராமத்து சாமியார் அதிசயத்து இதோ அந்த மந்திரம் இனி நீங்கள்நாங்கள் இருவர் மற்றும் எனது மக்களின் பிரார்த்தனை நிறைவேற அருள்புரிய வேண்டும் என கூறி பிரார்த்தனை செய்யுங்கள் என கூறினார் . பரிசலை மணல்மேட்டை நோக்கி செலுத்துமாறு பரிசல்க்காரனிடம்  கிராம சாமியார் வேண்டுகோளிட்டார் .

Arrow Sankar
Print Friendly and PDF

Saturday, July 7, 2012

வான்மீகி ஷேத்ரம் எனும் திருவான்மியூர்


திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்  சென்னை - புதுச்சேரிகிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தல வரலாறு: கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார். தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார். அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார். அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார். சூரியனும், சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை.
ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம். வான்மீகி ருனிவரும் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில் தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாக புராண செய்திகள் கூறுகின்றன. அகத்திய முனிவருக்காக ஒரு முறையும், வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார். இந்த வன்னி மரத்தடியில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாள் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

கோவில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு கிழக்கில் 7 நிலை இராஜகோபுரம், அதையடுத்து 5 நிலை இரண்டாவது கோபுரம் மற்றும் மேற்கில் ஒரு 5 நிலை கோபுரம் அமைந்துள்ளன. மேற்கு கோபுரம் மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருப்பதால் இந்த வாயில் பிரதானமாக உள்ளது. கிழக்கிலுள்ள இராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான திறந்த வெளியும் வலது புறத்தில் தியாகராஜ மண்டபமும் இடது புறத்தில் கோவில் தீர்த்தமும் உள்ளது. நேரே சென்று 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் கிழக்கு வெளிப் பிரகாரம் அடையலாம். அதில் வலது புறம் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகை, முருகன் சந்நிதிகளுன் காணப்படுகின்றன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. இவற்றையடுத்து உள்ள சிறிய வாயில் வழியாக இறைவன் மருந்தீஸ்வரர் கருவறையை அடையலாம். மருந்தீஸ்வரர் கருவறைக்குள் செல்வதற்கு தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தியாகராஜர் மண்டபத்தின் வழியாக உள்ள தெற்கு வாயில் வழியாகவும் வர வசதி உள்ளது. கருவறையில் மூலவர் மருந்தீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் மேற்கு நோக்கி காட்சி கொடுக்கிறார்.

பால்வண்ண நாதர், மருந்தீஸ்வர் ஆகிய பெயர்களால் இத்தலத்து ஈசன் அழைக்கப் பெறுவதற்குக் காரணங்கள் உள்ளன. ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், "நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய்" என்று சாபமிட்டார். தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க, "வான்மியூரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும்" என்று கூறினார். அதன்படியே செய்து ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு. பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் பால்வண்ண நாதர் என்று பெயர் பெற்றார். அதுபோலவே, இத்தலத்திற்கு வந்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அதைப் போக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளினார். அதன் காரணமாகவே மருந்தீஸ்வரர், ஔஷதநாதர் (ஔஷதம்- மருந்து) என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார்.
மேற்கில் உள்ள சிறிய வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் கருவறை உட்பிரகாரம் மேற்குச் சுற்றில் கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் செல்வ முத்துக்குமாரசாமி சந்நிதிகளும், வலதுபுறம் விநாயகர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவையும் உள்ளன. வடக்குச் சுற்றில் உற்சவ மூர்த்திகள் மண்டபம், அடுத்து நடராஜர் சந்நிதியும் அதையடுத்து 108 சிவலிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளதையும் காணலாம். வடக்குச் சுற்றின் முடிவில் தெற்கு நோக்கிய காலபைரவர் சந்நிதி உள்ளது. கிழக்குச் சுற்றில் வரிசையாக உள்ள கேதாரீஸ்வரர், இராமநாதேஸ்வரர், சுந்தரேஸ்வரர், அருணாசலேஸ்வரர் மற்றும் ஜம்புகேஸ்வரர் சந்நிதிகளைக் காணலாம். தெற்குச் சுற்றில் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகள் உள்ளன.
கருவறை சுவற்றின் வெளிப்புறம் வடக்கில் பிரம்மா, துர்க்கை, கிழக்கில் மஹாவிஷ்ணு, தெற்கில் தட்சிணாமூர்த்தி, கணபதி ஆகியோர் கோஷ்ட மூர்த்தங்களாக அழகுடன் காட்சி தருகின்றனர்.
 திருவான்மியூர் பெயர் காரணம் 
இருண்ட காடு. யாரும் தனிவழியே போவதற்கு பயம் கொள்வர். இரண்டு பெரிய நகரங்களுக்கு நடுவில் இந்த காடு இருந்ததால் பலருக்கு இதன் வழியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரும் கூட்டம் கூட்டமாக பாதுகாப்புடன் தான் இதன் வழியே செல்வர்.
வணிகர் கூட்டம் அடிக்கடி இந்த வழியே செல்வதால் வழிப்பறி செய்யும் ஒரு கூட்டம் இந்த காட்டில் கூடாரம் இட்டு வாழ ஆரம்பித்து விட்டது. எத்தனைப் பாதுகாப்புடன் வந்தால் தான் என்ன, இந்த கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டால் அவ்வளவுதான். தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் என்று ஆகிவிடும்.
அந்த கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன் ஒருவன் இருந்தான். பெரிய குடும்பி. அவன் கொள்ளையடிப்பதில் மிக சமர்த்தன் என்பதால் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர்.
சில நேரம் அவன் தனியாகக் கூட வழிப்பறி செய்ய கிளம்பிவிடுவான். என்ன செய்ய? பெரிய குடும்பம்காப்பாற்ற வேண்டாமா? மனைவியர்களும் குழந்தைகளும் உறவுகளும் அவன் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளனர்? அவனுக்காக தன் உயிரையும் கொடுக்க முன்வருவார்களே? அவர்களைக் காப்பது தன் கடமையல்லவா? என்று அடிக்கடி எண்ணிக்கொள்வான் அந்த தலைவன்.
ஒரு தடவை அப்படி அவன் தனியே கொள்ளையடிக்கச் சென்றபோது அவனிடம் மாட்டிக்கொண்டார் ஒரு முனிவர். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டும்நாராயண, நாராயணஎன்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார். இவன் அவர் எதிரில் போய் எமன் போல் நின்றதும் அவர் நடுநடுங்கி இவனைப் பார்த்துயாரப்பா நீ. உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் யாராய் இருந்தால் உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும்என்றான்.
முனிவருக்கு அவன் கொள்ளைக்காரன் என்பது அப்போதுதான் புரிந்தது. ‘அப்பா. நீ செய்வது மகா பாவம் அல்லவா? இப்படி வருபவர் செல்பவர்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தால் யமன் உன் உயிரைக் கொள்ளையடித்துச் செல்ல வரும் போது உனக்கு நரகம் தானே கிடைக்கும். இது பாவம்என்று பலவாறாக அறிவுரை சொன்னார் அந்த முனிவர். கேட்பானா இவன். ‘தேவையில்லாமல் பேசி என் நேரத்தை வீணாக்காதே. என் மனைவி மக்கள் உறவு எல்லோரும் இன்று நான் என்ன கொண்டு வரப்போகிறேன் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பர். நீர் சீக்கிரம் உம்மிடம் இருப்பதைக் கொடுத்தால் உயிர் பிழைக்கலாம். இல்லை இங்கேயே செத்துப் போக உம்மை தயார் செய்து கொள்ளும்என்று கடூரமாகச் சொன்னான்.
இதற்குள் முனிவருக்கு கொஞ்சம் தைரியம் வந்து விட்டது. இவன் நின்று பேசுகிறான். பேசிப் பேசி இவன் மனதை நல்வழிக்கு திருப்பிவிடலாம் என்று அவன் மேல் கருணை கொண்டு மேலும் பேச ஆரம்பித்தார்.
அப்பாநான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குத் பதில் சொன்ன பிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொள்ளைக்கொண்டு போகலாம்
சீக்கிரம் கேட்டுத் தொலையும்
நீ யாருக்காக இந்த கொடுமையான கொள்ளையும் கொலையும் செய்கிறாய்? ‘
வேறு யாருக்காக. என் மனைவி மக்கள் இவர்களுக்காகத்தான். அவர்கள் தானே என் எல்லா சுக துக்கங்களிலும் என்னுடன் இருக்கிறார்கள். எனக்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள்.’
உன் எல்லா சுகங்களிலும் பங்கு கொள்கிறார்கள். சரி. உனக்காக தங்கள் உயிரைத்தருவதாக எப்போதாவது சொல்லி இருக்கிறார்களா? இல்லை உன் பாவங்களில் தான் அவர்கள் பங்கேற்பார்களா? சொல்.’
என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். அவர்கள் வாய் திறந்து எனக்காக உயிரைக் கொடுப்பதாய் சொன்னதில்லைதான். ஆனால் என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு கொஞ்சம் நஞ்சம் இல்லை. முற்றும் துறந்தவரான உமக்கு அதெல்லாம் புரியாது‘.
அது இருக்கட்டும் அப்பா. உன் பாவங்களில் அவர்கள் பங்கு கொள்வார்களா? அதனை முதலில் கேட்டுப்பார்‘.
அதிலென்ன சந்தேகம். நான் கொள்ளையடித்துக் கொண்டு வருவதைப் பங்கு கொள்ளும் அவர்கள் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள்‘.
அதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டாயா?’
இல்லை. அதற்குத் தேவையும் இல்லை‘.
அது அவசியம் தேவை. அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்கிறேன் நான். நீ அதை இல்லையென்று நிரூபிக்க முடியுமா?’
ஆகா முனிவரே! தப்பித்துப் போக முயல்கிறீரா? இதெல்லாம் என்னிடம் முடியாது‘.
இல்லையப்பா. நீ வேண்டுமானால் என்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போ. போய் அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்.’
கொள்ளையர் தலைவன் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து அந்த முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான்.
திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் அவன். ஓடி வந்தவன் முனிவரின் காலில் விழுந்துசுவாமி, நீங்கள் சொன்னது சரிதான்என்று கண்கலங்கிய படியே முனிவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான்.
என்னப்பா நடந்தது‘.
சுவாமி. நீங்கள் சொன்ன படி நான் போய் என் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய்எங்களை காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லைஎன்று கூறிவிட்டார்கள்
அவர்கள் சொன்னதில் தவறில்லையே. மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல் வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை‘.
ஆமாம் சுவாமி. அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும்
நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே
சுவாமி. என்ன நாமம் அது?’
ராம நாமம்
என் வாயில் நுழையவில்லையே சுவாமி
கவலையில்லை. இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன?’
இதுவா சுவாமி. இது மரா மரம்‘.
நீ இந்த மரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. அது போதும்‘.
ஆகட்டும் சுவாமி. நீங்கள் யார் என்று இன்னும் சொல்லவில்லையே
என் பெயர் நாரதன். திரிலோக சஞ்சாரி என்றும் சொல்வார்கள்‘.
நல்லது சுவாமி. நீங்கள் சொன்ன படியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்என்று வணங்கி நின்றான்.
நாரதரும் தன் வழியே சென்றார்.
அவர் போனபின் அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்துமரா மரா மராஎன்று ஜபிக்க ஆரம்பித்தான். அதுராம ராம ராமஎன்று ஒலித்தது.
நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. அந்த ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான்.
அவர் தவம் முடிந்த பின் புற்றிலிருந்து வெளியே வந்தார். புற்றிலிருந்து வந்ததால்வால்மீகிஎன்று அழைக்கப் பட்டார். பின்னர் இராமாயணம் எழுதி அழியா புகழ் பெற்றார் அந்த கொள்ளையர் தலைவனாய் இருந்து நாரதரின் கருணையால் நல்வழியில் திருப்பி விடப்பட்ட வால்மீகி முனிவர்.
வால்மீகி முனிவரின் பெயரினாலே திருவால்மீகியூர்  என்று  அழைத்து திருவான்மியூர் என்று  அழைக்கப்படுகிறது .

நன்றி : திருவான்மியூர் கோவில் வரலாறு -திரு. ராஜகோபால் & வலைப்பதிவுகள் 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms