வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, June 30, 2016

ஐந்தடக்கல்

குறள்: ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து.

ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்பதே மேற்காணும் திருக்குறளின் அர்த்தமாகும்.

இதேபோல் முயற்சி, தன்னம்பிக்கை, லாபநோக்கு ,வசிய வார்த்தைகள், துணிவு என்ற ஐந்தும் நேர்மை எனும் ஒரு குடைக்குள் இருந்து செயல் படும்போது நமது நோக்கங்கள் நிறைவேறுகின்றன. மேற்காணும் இந்த ஐந்து வார்த்தைகளின்  முதல் எழுத்துக்களை ஒன்றாக்கினால் முதலாவது என்ற வார்த்தை வரும். அதுவே ஒரு தொழில் தொடங்க முதலாவது வேண்டுமே என்பர். இதை உணர்த்துவதே கூர்மாவதாரம் ஆகும்.

துர்வாச முனிவர் கோபத்திற்கும் சாபமிடுவதற்கும் பெயர் பெற்றவர். இவரிடம் பெருமாளின் பிரசாதமான பூ மாலை ஒன்று இருந்தது. அவர் மூவுலக சஞ்சாரி. அவ்வாறு அவர் தேவலோகம் வழியாகச் சென்றபோது, தேவேந்திரன் அவ்வழியே தனது யானை மீதேறி வந்தான். அவனைக் கண்டு மகிழ்ந்த துர்வாசர் தன்னிடம் இருந்த மாலையை அவனுக்கு அளித்தார். அவனோ அதனை வாங்கி, யானையின் மத்தகத்தில் வைத்தான். யானையோ அதைத் தும்பிக்கையால் எடுத்துத் தன் காலில் இட்டு மிதித்தது. துர்வாசருக்கு வந்ததே கோபம். அகந்தையால் நீயும் உன் குழுவினரும் பலமற்றுப் போவீர்கள் என சபித்துவிட்டார்.

துர்வாசர் மிகுந்த தபஸ்வி. அவர் வாக்கு பலிக்கத் தொடங்கியது. தேவர்கள் பலமிழந்தார்கள். அசுரர்கள் பலங்கொண்டு தேவர்களுடன் போரிட்டார்கள். போரில் மடிந்த தேவர்கள், மடிந்தபடியே இருக்க, அசுரர்கள் மாண்டபோது அவர்களது குருவான சுக்கிராச்சாரியார் தனது சஞ்சீவினி மந்திர  வலிமையால் அவர்களை மீண்டெழச் செய்தார். இதனால் தேவர்களின் எண்ணிக்கை குறைய, அசுரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்தப் பிரச்சினையில் இருந்து மீள வேண்டி, பிரம்மா தலைமையினாலான தேவர்கள் மகாவிஷ்ணுவை அணுகினார்கள். அவர் வழியொன்று கூறினார். பாற்கடலைக் கடைந்தால் அமிர்தம் கிடைக்கும்; அதனை தேவர்கள் உண்டால் சாகா வரம் பெற்று வாழலாம் என்றார் மகா விஷ்ணு.

பாற்கடலைக் கடைய வேண்டும் என்றால் அவ்வளவு பெரிய மத்து வேண்டுமே. அதனைச் சுற்றி இழுக்கக் கயிறு வேண்டுமே. பலமற்ற தேவர்களைக் கொண்டு எப்பொழுது கடைந்து முடித்து, எப்பொழுது அமிர்தம் எடுப்பது என்ற பல கேள்விகள் எழுந்தன.

மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற ஆயிரம் தலை கொண்ட பாம்பைக் கயிறாகவும் கொண்டு, வெளி வர இருக்கிற அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி பலமாக உள்ள அசுரர்களையும் சேர்த்துக்கொண்டு பாற்கடலைக் கடையுமாறு கூறினாராம் பெருமாள். பலமற்றுத் தொய்ந்து போயிருந்த தேவேந்திரன் அசுரர்களிடம் சென்று பேசினான். அசுரர்கள் அவனைக் கண்டு எள்ளி நகையாடினார்கள். அதனைப் பொருட்படுத்தாத தேவேந்திரன் அசுரர்களின் பங்களிப்பை வேண்டி நின்றான். சுக்கிராச்சாரியாரின் அறிவுரைப்படி அசுரர்கள் முழுமையான ஒத்துழைப்பைத்தர ஒப்புக் கொண்டனர். ஆனால் மந்தார மலையை கொண்டு சென்று கடலிலே போட்டு வாசுகியையும் கயிராக்கித் தயார் செய்யுங்கள். அப்போது அங்கு வந்த அசுரர்கள் நாகத்தின் வாய்ப்புறப் பகுதியில் நின்று கடைய உதவுகிறோம் என்றார்கள். தேவர்கள் மந்தார மலையைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தார்கள்.

அப்போது பாதியிலேயே மலையைக் கீழே போட்டுவிட அதனடியில் மாட்டிக்கொண்ட தேவர்கள் நசுங்கத் தொடங்கினர். கருடாரூடனான பெருமாள் உடனடியாக அங்கு வந்து, கருடனின் காலினால் மலையைத் தூக்கிக் கடலில் போட்டார். உடனடியாக வாசுகி நாகமும் மலையைச் சுற்றிக்கொண்டது. இரு தரப்பிலும் தேவர்களும், அசுரர்களும் பாற்க்கடலைக் கடையத் தொடங்கினார்கள். கனமான மந்தார மலை மூழ்கத் தொடங்கியது. தேவர்களும் அசுரர்களும் செய்வதறியாது திகைத்தனர். பெருமாள் ஆமையாக மாறி, மலைக்கு அடியில் சென்று தாங்கினார். இதுவே கூர்ம - ஆமை அவதாரம்.

தேவர்களும் அசுரர்களும் கடையத் தொடங்க, வாசுகி தாங்கொண்ண வலியால் விஷம் கக்கியது. உலகோரைக் காப்பதில் விருப்பம் கொண்ட பரமேஸ்வரன் இந்த விஷத்தைத் தான் உண்டு உலகைக் காக்க விரும்பினார். பார்வதி தேவி அனுமதிக்க, விஷத்தைத் துளியும் வீணாக்காமல் உருட்டி எடுத்து விழுங்கினார். அன்னை பார்வதி தன் மணாளன் கழுத்தைப் பிடிக்க, விஷம் சிவனின் கண்டத்தில் (தொண்டை) நின்றுவிட்டது. இதனால் நீலகண்டன் என்ற காரணப் பெயர் பெற்றார் சிவபெருமான். இந்நிகழ்ச்சி நடைபெற்ற நேரம் மாலைப் பொழுது, அதுவே இன்றும் பிரதோஷ காலமாகக் கொண்டாடப்படுகிறது.

தடை நீங்கிய பிறகு கடையத் தொடங்கியவுடன் முதலில் வந்தது காமதேனு என்னும் வேண்டியதையெல்லாம் வழங்கும் பசு. பின்னர் வரிசையாகப் பொன்மயமான ஒளியை உடைய உச்சைசிரவஸ் என்னும் பறக்கும் குதிரை, நான்கு தந்தங்கள் கொண்ட வெண்ணிற யானை ஐராவதம், பஞ்ச தருக்கள், கற்பக மரம், கவுஸ்துப மணிமாலை, மூதேவி, அறுபது கோடி தேவ கன்னியர், மது, மதுவின் அதிதேவதை சுராதேவியுடன் பல பெண்கள், ஆதிலஷ்மி எனப்படும் மகாலஷ்மி, சந்திரன், ஸ்யமந்தமணி என்னும் சிந்தாமணி, கடைசியாக அமிர்த கலசம் ஏந்தி தன்வந்திரி ஆகியோர் வெளிப்பட்டனர். இவை அனைத்தும் வானோருக்கும் உலகோருக்கும் கூர்மாவதாரம் தந்த பரிசு.

ஆனி மாத தேய்பிறை துவாதசி திதியில் (இன்று 01.07.2016)  கூர்ம ஜெயந்தி கொண்டாட படுகிறது.

அனைவருக்கும்  கூர்ம ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Tuesday, June 21, 2016

யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்..

யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்.. 


தினசரி காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசன பயிற்சி செய்யலாம்.

யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம் , அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது.

நீர் ஆகாரமாக  இருந்தால், அருந்திய பின் அரை மணி நேரம் கழிந்த பின்பும், எளிய சிற்றுண்டியாக இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்தும், முழுமையான ஆகாரமாக இருந்தால் நான்கு மணி நேரம் கழித்தும் யோகப்பயிற்சிகளை செய்யவும்.

நமது உடலின் தன்மைக்கு ஏற்பவும், தினசரி பழக்கத்திற்கு ஏற்பவும் ஆரம்ப காலங்களில் குளியல் முறையை பின்பற்ற வேண்டும்.

எப்போதும் குளித்த பின்பு யோகப்பயிற்சிகளை செய்தால் மனம் குதூகலமாக இருக்கும்.

யோகாசனப்பயிற்சிகளை செய்வதற்கு தரைவிரிப்பு சற்று கனமாக இருந்தால், சிலவகை ஆசனங்கள்  செய்யும் பொழுது வழுக்காமல் இருக்கும்.

யோகாசனம், தியானம், மூச்சுப்பயற்சி இவைகளை எப்போதும் கிழக்கு முகம் பார்த்தோ, அல்லது வடக்கு முகம் பார்த்தோ பயிற்சி செய்தல் நல்லது.

பருத்தி துணியாலான உடைகளை அணிவது நல்லது.உடலை மிகவும் இறுக்கி, ஆசனங்கள் செய்யும் பொழுது அழுத்தி வலிப்பதாக இருக்கக்கூடாது. அதுபோலவே உள்ளாடைகள் மிகவும் தொளதொளவென்றும் இருக்கக்கூடாது.

நேரமில்லாமல் வருந்துபவர்கள், காலை நேரத்தில் தியானம்,  மூச்சுப்பயற்சி செய்துவிட்டு, மாலை நேரத்தில் யோகாசனப்பயிற்சியையும் செய்யலாம்.

நீண்ட நேரம் வெயிலில் அலைந்தாலும், நீண்ட நேரம் கண் விழித்திருந்தாலும் , அல்லது நீண்ட பிரயாணங்களில் உடல் களைதிருந்தாலும் இரவில் சரிவர தூக்கம் இல்லாமல் தவித்த நேரத்திலும் யோகாசன உடற்பயிற்சிகளை அன்று செய்யக்கூடாது. ஏனெனில் இந்த நேரத்தில் யோகாசனப் பயிற்சி செய்தால் மேலும் மேலும் உடல் களைப்பும், உடல் வெப்பமும் அதிகரிக்கும்  ஆகவே போதுமான ஓய்விற்கு பின்பு பயிற்சி செய்யவும்.

சைவ உணவுப் பழக்கமே யோகத்திலும், உடல் நலத்திலும் மிகுந்த நன்மையைச் செய்யும். அசைவ உணவு உட்கொள்பவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டே வந்தால்  சில நாட்களில் சைவ உணவின் மகத்துவத்தை உடலின் செயல்பாட்டினால் அறிந்து கொள்வீர்கள், அதற்காக யோகாசனத்தை விட்டு விடாதீர்கள். 

யோகாசனம் செய்த பின்பு கட்டாயம் சவாசனம் என்ற ஓய்வு ஆசனத்தில் குறைந்தது 10 நிமிடங்களாவது  இருக்க வேண்டும். அப்பொழுது தான் உடலின் இரத்த ஓட்டம் சரியான நிலைக்கு வரும். மேலும் வியர்வைகள் சமன்பாட்டிற்கு  வரும். உடல், மனம், சுவாசம் இவைகளில் தெய்வீக காந்த அலைகள் ஊடுருவி பாயும். எனவே சவாசனம் அவசியம் செய்யவும். பணிகளில் களைப்பு அதிகரித்திருந்தாலும்  சவாசனத்தின் மூலம் உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்திகொள்ளலாம்.

யோகப் பயிற்சியை முடித்துக் கொண்டு வியர்வை அடங்கிய பின்னால் தான் குளிக்க வேண்டும்.

யோகாசனப் பயிற்சிக்குப்பின்பு 15 நிமிடங்கள் கழித்து எளிய ஆகாரங்கலையோ, பழச்சாறு, அல்லது உணவு உட்கொள்ளலாம்,

யோகாசனப் பயிற்சி செய்பவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ அவசியம் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்களுக்குள் தலை தேய்த்துக்குளித்தல் நல்லது. இதனால் கபால சூடு தணியும். நீர் கடுப்பு,  வெட்டைச் சூடு இவைகள் உடலை தாக்காது. அதுபோலவே எண்ணெய் தேய்த்துக்குளிக்கும், நாளில் வெயிலில் அலைவதும், கண்விழிப்பதும், குடும்ப சுகம் பெறுவதும் கூடாது.

யோகா பயிற்சி துவங்கும் பொழுது மாதா, பிதா, குரு, தெய்வத்தை பிரார்த்தித்து துவங்கவும். அதுபோலவே யோகப் பயிற்சியை நிறைவு செய்யும்போது சவாசனத்தை முடித்தபின் குரு வணக்கத்தோடு முடித்துக்கொள்ளவும். யோகாவை பதட்டத்துடன் பயிற்சி செய்யாமல், பொறுமையாகவும், விடா முயற்சியுடனும் பயிற்சி செய்து வந்தால் வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம்.

யோகா ஆசனங்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஆகிய அணைத்து தரப்பினரும் பயிற்சி செய்யலாம், ஆனால் உடல் வாகு,வேலையின் தன்மை, உணவு ஒழுக்கம், நோயின் தன்மை இவைகலுற்கேற்ப பயிற்சி செய்வது மிக மிக கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்கள் கருவுற்ற காலங்களிலும், மாதவிடாய் காலங்களிலும், உடல் பயிற்சி இயக்கமான ஆசனங்களை தவிர்த்து, தியானமும்  மூச்சுப்பயிற்சி முறைகளிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நன்கு சவாசனத்தில் ஓய்வு பெற வேண்டும். பகல் உறக்கத்தை தவிர்த்தல் நல்லது.

காலையில் பழவகைகளையும், அல்லது திரவ கஞ்சி போன்றவற்றையும், மதியம் முழு அளவில் உணவினையும், இரவில் பழவகைகள் அல்லது திரவ ஆகாரங்களை யோகா சாதகர்கள் எடுத்துக் கொள்வது மிக நல்லது.

யோகப் பயிற்சியில் அதிக ஆர்வமும் மிக உன்னதமான பல சித்திகளை பெறவும் ஆசைக்கொண்டவர்கள், கட்டாயம் நொறுக்குத்தீனிகளை தவிர்க்கவும். மேலும் தேவையில்லாமல் மூச்சுக் காற்று ( ஆவி) போகும்படி தொனத்தொனவென்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

நன்றி & உதவி : யோகாசனம் இதழ்
   
Print Friendly and PDF

Friday, June 17, 2016

முருகனின் ஆயுதங்கள்

பழைய  அம்மன் தரிசனம் என்னும் ஆன்மீக இதழை படிக்கும் பொழுது கிடைத்த முருகனின் ஆயுதங்கள் பற்றிய கட்டுரை இது.


 "முருகனின் ஆயுதங்கள்" என்பது முருகப் பெருமானின் படைக் கலங்கள் என்று பொருளில் விளங்குவதாகும். சூரன் முதலிய அசுரர்களை வென்று வாகை சூட, கந்தப் பெருமான் கொண்ட பல்வேறு போர்க் கோலங்களில் அவரது கரங்களில் கொண்ட படைக் கலங்களே யுதங்களாக அமைந்து உள்ளன. அப்பெருமானது கரங்களில் திகழும் அனைத்துமே ஆயுதங்கள் அல்ல. உதாரணமாக ஜபமாலை, கமண்டலம், கரும்பு, வில், மலரம்பு, தாமரை, நீலோத்பலம், பூரணகும்பம், சுருவம் முதலானவற்றை வெவ்வேறு வடிவங்களில் காரணகாரியம் கருதி அவரது கரங்களில் ஏந்தியுள்ளார். பன்னிரு கரமுடைய பெருமான் ஆதலால் மற்ற எந்தக் கடவுளருக்கும் இல்லாத வகையில் அதிகமான எண்ணிக்கையில் ஆயுதங்களை உடையவர் இவரே.

முருகப் பெருமானது பல்வேறு வடிவங்களைப் பற்றி விவரிக்கும் குமாரதந்திரம், ஸ்ரீதத்வநிதி, தியான ரத்னாவளி முதலான சிற்ப நூல்களில் அவரது ஆயுதங்களைப் பற்றிய விவரங்களையும் அறிய முடிகிறது. தணிகைப் புராணத்தில் முருகனது வடிவங்களைப் பற்றியும், அகத்தியர் அருள்பெறு படலத்தில் ஆயுதங்களைப் பற்றியும் விவரம் அறிய முடிகிறது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலான நூல்களில் முருகனது படைக் கலங்களைப் பற்றிய விவரங்கள் காணக் கிடக்கின்றன.

இனி கந்தப் பெருமானது படைக் கலங்களைப் பற்றி விரிவாக நோக்குவோம்.

1.வேலாயுதம்
முருகப் பெருமானிடம் அமைந்துள்ள வேலாயுதமே ஞான சக்தியாகும். வெல்லும் தன்மை உடையது, வேல். எல்லா வற்றையும் வெல்வது அறிவாற்றல்.அறிவானது ஆழமும், அகலமும், கூர்மையும் உடையது.

   "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே"

... என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசகர். வேலின் வடிவமும்
இத்தகையதே. முருகனின் ஞானவேலுக்கு 'சக்தி' என்ற பெயரும் உண்டு.

   "சக்திதான் வடிவேதென்னில் தடையிலா ஞானமாகும் என்பது
சிவஞான சித்தியார்வாக்கு".

ஞானமே அஞ்ஞானத்தை வெல்ல வல்லது. ஆதலின் ஆணவம், கன்மம், மாயை எனும் மலங்களாகிய சூரபதுமன், சிங்கமுகன்,  தாருகன் என்னும் அசுரர்களை அழித்தொழித்து "ஞானமயம்" ஆகிய வேலே யாவருக்கும் நலம் புரிந்தது. வேல் வஞ்சர்க்கு  வஞ்சனை செய்யும்; அடியவர்க்கு உதவும்; அது ஐந்தொழில் செய்யும் என்பதையெல்லாம் திருப்புகழில் காட்டுகிறார் அருணகிரியார்.

வேலாயுதத்தை "உடம்பிடித் தெய்வம்" என்று கந்தபுராணம் போற்றும். சக்தி வேலானது ஊறு கூரிய பகுதிகளையுடையதாகவும், தகட்டு வடிவிலும் அமைந்ததாகும் என்பர். இதனை நடுவில் பிடித்து ஏறிவது வழக்கம்.

2. கோழிக் கொடி
முருகனுக்குக் கொடியாக விளங்குவது கோழி. கோழிக்கு சேவல் (குக்குடம்) என்றும் பெயர். சேவலாகிய கோழி ஒளியை விரும்புவது. எனவே அது அறியாமை என்னும் இருளைப் போக்கி மெய்யறிவாகிய  ஒளியைப் பரப்பும் முருகனின் கொடியாக விளங்குவதுபொருத்தமாகும். வைகறையில் கோழி கூவுதல் ஓங்கார மந்திரத்தை ஒளிவடிவில் உலகு க்கு உணர்த்துவது ஆகும். எனவே, கோழியை நாத தத்துவம் என்பர். நாதம் இல்லையேல் நாநிலமே இல்லை. சேவல் நம் உயிர்க்குக் காவல். சிவஞான வடிவாகவே சேவல் விளங்குகின்றது.

முருகன் கோழிக் கொடியேந்தி நம்மை எல்லாம் சிவஞானப் பேரொளி யில் துய்க்கச் செய்து அருளுகின்றார்.

திருச்செங்கோட்டில் முருகப் பெருமான் இடது கரத்தில் சேவலைப் பிடித்துள்ள அரிய அழகுக் கோலம் அருணகிரியார் மனத்தில் என்றும் நீங்காமல் அக்காட்சி வேண்டியே,

   "சென்றே இடங்கள் கந்தா எனும் போது செஞ்சேவல் கொண்டு வரவேணும்"

... என்று செங்கோட்டு வேலவனை வேண்டுவார்.

3. அங்குசம்
இது யானையை அடக்கப் பயன்படுவது. இரும்பாற் செய்யப்பெற்ற வளைந்த மூக்கும், குத்தி அடக்கக் கூடிய ஒரு கூரிய நேரான பகுதியையும் உடையது. நீளமாக கழிகளில் செருகி இருப்பார்கள். திருமுருகாற்றுப்படையில் முருகப்பிரானது கரங்களில் ஒன்றில்  "அங்குசம் கடாவ ஒருகை" என்று நக்கீரர் குறிப்பிடுவார்.

4. பாசம்
பாசம் என்பது பகைவர்களின் கையையும் கால்களையும் கட்டப் பயன்படும். ஒரு கயிறு அல்லது இரண்டு மூன்று கயிறுகள் சேர்ந்து அமைந்ததாகும். எளிதில் அவிழ்க்கும் சுருக்கு முடிச்சு இடப்பட்டு இருக்கும்.

5. வில்
வள்ளிநாயகியை அடைய முருகன் எடுத்த வேடன் கோலத்தில் வில்லும் அம்பும் உண்டு. மூங்கில், சிலை என்னும் மரம் முதலான வளையக்கூடிய நார் மரத்தால் செய்யப்பெறுவது வில். இந்த வில்லானது இரு தலையிலும் தோல் அல்லது நார்க்கயிற்றால் கட்டப் பட்ட நாண் இருக்கும். வில்லை வளைத்து நாணை இறுகக்கட்டி
அதன் நடுவில் அம்பை வைத்து விடுவார்கள். எவ்வளவுக் கெவ்வளவு  வில்லின் வளையும் நாணின் உறுதியும் இழுத்துவிடுபவன் பலமும் இருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு அம்பின் வேகமும், அது தைக்கும் வன்மையும் அதிகரிக்கும். நுனியில் விஷம் தொய்த்து வைப்பதும் உண்டு. அம்பு நுனி பிறைமதி போன்ற அமைப்பிலும் இருக்கும். இதற்குப் பிறையம்பு என்று பெயர்.

6. அம்பு
வில்லை வளைத்து எய்யப் பயன்படக் கூடியது அம்பு. நுனி கூரிய முள் போன்றது. நுனியை ஒரு கழியில் செருகியிருப்பார்கள். நுனி இரும்பால் ஆகியது. அதன் வால் பாகத்தில்  கழுகின் இறகுகளையும் மற்ற பறவை இறகுகளையும் கட்டியிருப்பார்கள். பெரும்பாலும் கழுகு இறகே இதற்குப் பயன்படும். இறகு கட்டுவதால் காற்றை
ஊடுருவி விரைந்து செல்லும்.

7. கத்தி
பகைவரை அடிக்கவும் குத்தவும் பயன்படும் இந்த ஆயுதம் கைப்பிடியுடன் இருக்கும்.

8. கேடயம்
கத்தியின் வெட்டையும், குத்தையும் தடுப்பதற்காகப் பயன்படுத்துவது.பலகையாலும், வலுவுள்ள காட்டெருமை, கடமா நீர்யானை, காண்டா மிருகம் இவற்றின் தோலாலும் தயாரிப்பார்கள். பல வடிவங்களில் சதுரம், நீளச் சதுரம்,வட்டம், முக்கோணம் என்ற அமைப்புகளில் காணப்படுவது.

9. வாள்
இதற்கு கட்டுவாங்கம் என்றும் பெயர். இது நீளமான கத்தியாகும். போரில் பகைவர்களை வெட்டப் பயன்படுவது. இதில் ஒரு முனையுடையதும் இரு முனையுடையதும் உண்டு. குத்துக் கத்தியாகக் கூரிய நுனியை உடையதாக இருக்கும். பழங்கால மன்னர்கள் இடுப்பில் செருகியிருப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.

10. கோடாரி
மரம் பிளக்கப் பயன்படும் கருவி போலப் பகைவரின் உடலைப் பிளக்க இது பயன்படும். இது இரும்பால் ஆகியது. வாய் கூர்மையாகவும் பின்புறம் கனமாகவும் இருக்கும். காம்பில் செருகப்பெற்று இருக்கும். 'பரசு' என்பதும் இதைப்போன்றே இருக்கும். ஆனால், வாய் சற்று வளைந்து கூரியதாக இருக்கும். இதுவும் காம்பில் செருகப் பெற்றிருக்கும். காங்கேய சுப்பிரமண்யர் என்ற வடிவில் 'பரசு' ஆயுதம் உள்ளதாகக் காட்டப்படுகிறது.

11. சூலம்

சிவபிரானுக்குரிய சிறப்பான படைக் கலம் சூலமாகும். இது மூன்று நுனிகளை உடையது. சுரை வரையிலும் எஃகு இரும்பால் செய்யப்பெற்று நீளமான மரக்கம்பில் செருகியிருப்பார்கள்.

12. கதை
'திகிரி' என்ற பெயரை உடைய 'கதை' என்றவுடன் பஞ்சபாண்டவர்களில் பீமனது ஞாபகம்  வரும். அல்லது ஆஞ்சநேயரின் கரத்திலுள்ள கதையும் பிரபலமான ஒன்று.
இதற்கு 'குண்டாந்தடி' என்ற பெயரும் உண்டு. பகைவர்களை அடித்து நொறுக்கப் பயன்படுத்துவது. கையை விட்டு அகலாதபடி காவலாக இருந்து உடையவரை பாதுகாக்கும் அருமையான ஆயுதம்.

13. சங்கம்
(சங்கு) திருமாலுக்கு உரிய விசேஷ ஆயுதம். வெற்றியை அறிவிக்கும். பகைவர்களை இதன் ஒலியை கேட்டதுமே அடங்கி ஒடுங்கச் செய்யும். இதில் பல வடிவங்கள் உள்ளன. திருமாலின் சங்கம் 'பாஞ்ச சன்னியம்' என்று கூறப்படும்.

14. சக்கரம்
இதுவும் விஷ்ணுவுக்குரிய விசேஷ ஆயுதம் ஆகும். இதன் அமைப்பு ஒன்று தேர் உருளை போன்றும் மற்றது வளையம் போன்றும் அமைந்திருக்கும். கும்பகோணம் அருகில் உள்ள அரிசிற்கரை புத்தூர் (அழகாபரத்தூர்) எனும் தேவாரம் பெற்ற திருத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

15. வஜ்ரம்
முருகப் பெருமானுக்குரிய முக்கியப் படைக்கலமான இது ஆயிரம் நுனிகளை உடையது. உறுதியான பொருள் எதுவாயினும் அதனை உடைக்கும் வல்லமை உடையது.

16. தண்டம்
நீளமான கைத்தடி, மரத்தாலானது. 'கந்து' என்ற சொல்லுக்கு 'தண்டாயுதம் கொண்டவன்' என்ற பொருளுண்டு. கந்தசுவாமி வடிவத்தில் பழநியில் தண்டம் ஏந்திக் காட்சியளிக்கிறார். சுவாமிமலை சுவாமிநாதப் பெருமானும் கந்தசுவாமி வடிவமே.

17. உளி (டங்கம்)
மரத்தைச் செதுக்கப்பயன்படும் கருவி. முருகப்பெருமான் எக்காலத்திலும் மக்காத சூரன் என்னும் மரத்தைச் செதுக்கி மயிலும், சேவலுமாக மாற்றினான் அல்லவா? குமார தந்திரத்தில் குறிப்பிடப் பெறும் 'சரவணபவன்' என்ற வடிவத்தில் பன்னிரு
கரங்களில் ஒன்றில் "உளி"யை வைத்துள்ளார்.

18. தோமரம் (உலக்கை)
இந்த ஆயுதம் பகைவர்களைச் சாடப் பயன்படுவது. குமார தந்திரத்தில் குறிப்பிடப்பெறும் 'தாரகாரி' என்று வடிவத்தில் உலக்கையை ஒரு கரத்தில் பிடித்துள்ளார். (சூரபன்மனின் இளைய தம்பி தாரகாசுரனை வதைத்தவன் ஆதலால் முருகப் பெருமானுக்கு 'தாரகாரி' என்று பெயர்).

19. கரும்புவில்
இது கரும்பால் செய்யப் பெற்ற வில். இது சிறப்பாக மன்மதனுக்குரியது. பராசக்தி கையில் தரித்து உள்ள கரும்பானது குறிப்பிடத்தக்கது. யோகியாக இருக்கும் மற்றைய
தெய்வங்களும் போகத்தை உண்டாக்க கரும்புவில் ஏந்தியிருப்பர். ஸ்ரீதத்வநிதியில் குறிப்பிடப் பெறும் 'சௌரபேய சுப்ரமண்ய'ரின் கரங்கள் ஒன்றில் கரும்புவில்லும் மற்றொன்றில் மலரம்பும் கொண்டதாகவும் காட்டுவர்.

20. மலரம்பு (வல்லி)
இதற்கு புஷ்ப பாணம் என்றும் பெயர், தாமரை, அசோகு, மா, முல்லை, நீலம் - என்று ஐந்து பூக்களால் ஆகிய பாணம். (இவற்றை மன்மதன் மக்களிடத்தில் காம நினைப்பூட்ட எய்வான்).

21. மணி
பரநாதத்தை எழுப்பி ஆணவ இருள் அகன்று ஆன்மாக்கள் உய்ய இறைவன் திருக்கரத்தில் வைத்துள்ளார். இதுவும் ஒரு ஞானப்படை.

     "பாடின் படுமணி" இரட்ட ஒரு கை" ... என்கிறார் நக்கீரர். திருமுருகாற்றுப்படையில் சரவணபவன் திருவுருவத்தில் பன்னிரு கரங்களில் ஒன்றில் "மணி" யை ஏந்தியுள்ளார்.

22. ஜபமாலை
இது ருத்ராக்ஷை மாலை. சிருஷ்டித் தொழிலுக்குரிய பிரமனுடையது. முருகப்பெருமான் பிரணவத்திற்குப் பொருள் சொல்ல இயலாத பிரமனைச் சிறையிட்டு அவரது சிருஷ்டித் தொழிலைச் செய்யத் தொடங்கியபோது பிரமனுக்கு உரிய ஜபமாலையையும் கமண்டலத்தையும் கொண்டார். கந்தனுக்குரிய கவின்மிகு கோலங்களில் 'பிரம்மசாஸ்தா' (பிரமனைத் தண்டித்தவர்) என்ற கோலத்தில் இருகரங்களில் ஜபமாலையையும், கமண்டலத்தையும் ஏந்தி இருப்பார்.

23. கமண்டலம்
இதற்கு 'கிண்டி' என்ற பெயரும் உண்டு. இது தண்ணீர் வைத்துள்ள கலம். இது ஒரு மரத்தின் காயால் ஆகியது. அந்தணர்கள் தங்கள் நாட்கடன்களைக் கழிப்பதற்காக இதனை எப்போதும் வைத்து இருப்பார்கள். பிரமனுக்கு உரியது. இதுவும் அட்சமாலையும் யுதங்கள் அல்ல. இதனைக் கொண்டு இன்னாருடைய திருவுருவம் என்றும் அறிய முடியும். தொண்டை நாட்டில் அமைந்துள்ள மிகப் பழமையான திருக்கோயில்களில் முருகப் பெருமான் 'பிரம்மசாஸ்தா' திருக்கோலத்திலேயே காட்சி அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

24. தாமரை
அழகும், இளமையும் கொண்ட வடிவிலே பால சுவாமியாகக் காட்சி அளிக்கும் முருகப்பிரான் வலக்கையில் தாமரை மலர் ஏந்தி இருப்பார். மலர்களில் சிறந்ததும், உயர்ந்ததும் தாமரை மலராகும். இச்சா சக்தியாகிய வள்ளி எம்பெருமாட்டி கையில் தாமரை மலர் ஏந்தியிருப்பாள். திருச்செந்தூர் சுப்ரமணியர் வலது கையில் தாமரைமலர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

25. சுருவம்
இது யாகத்தீயில் நெய்யிடுவதற்குப் பயன்படுவது.
"ஒரு முகம் அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே" ... என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவதற்கு ஏற்ப 'அக்னிஞாத சுப்ரமணியர்' என்ற கோலத்தில் தெய்வீக யாகாக்னியை வளர்ப்பதற்கு ஒரு கரத்தில் சுருவமும், மற்றொரு கரம் ஒன்றில் நெய் (ஆஜ்ய) பாத்திரமும் கொண்டுள்ளார். இவ்வடிவம் இரண்டு முகங்களும், எட்டு கரங்களும் கொண்டுள்ள ஒர் அபூர்வமான அமைப்பாகும்.

'காங்கேய சுப்ரமணியர்' என்ற வடிவில் ஒரு கரத்தில் பூரண கும்பம் ஏந்திய அமைப்பிலுள்ளார். வேதாரண்யம் அருகிலுள்ள கோடிக்கரை என்ற தலத்திலுள்ள 'அமிர்த கரை சுப்ரமணியன்' என்ற கோலத்தில் ஒரு கரத்தில் அமிர்த கலசம் ஏந்தி உள்ளது ஒர் அற்புதமான வடிவமாகும். அப்பெருமானை வழிபட்டு அமுதக் கலசத்தில் உள்ள ஞானத் தேனமுதைப் பெறலாம்.


  Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms