வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, February 13, 2015

நம்பிக்கை (பிப்ரவரி 14 க்கான கதை)


நம்பிக்கை (பிப்ரவரி 14 க்கான கதை)

சூபி ஞானியான ஜுன்னேய்த்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த ஒரு சீடர், ஒரு நாள் காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது, தூரத்தில், ஜுன்னேய்த்தின்  அருகில் முகத்திரை அணிந்த ஒரு இஸ்லாமியப் பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு ஜுன்னேய்த் ஒரு ஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான். அவனைக் கவனித்த ஜுன்னேய்த் அவனை அருகே அழைத்தார். அவன் முகக்குறிப்பை அறிந்த ஜுன்னேய்த் அப்பெண்ணின் முகத்திரையை விலக்கினார்.
அப்பெண் அவரது தாயார். ஜுன்னேய்த் கூறினார்,''நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே? உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய்ய முடியுமா? இங்கே வந்து இந்தப் புட்டியை எடுத்து ருசித்துப்பார்.சுத்தமான தண்ணீர். மது அல்ல. புட்டி மட்டும் மது இருந்த புட்டி.''
சீடன் மன்னிக்கும்படி அவர்காலில் விழுந்தான்.
ஜுன்னேய்த் கூறினார்,''இது மன்னிப்புக்குரிய விஷயம் அல்ல,இது புரிந்து கொள்ளுதளுக்கான விஷயம். உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. நீ பிற சீடர்களைப்போல நடக்க முயற்சிக்கிறாய். கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும். உனது அன்பு ஒரு முயற்சி. உண்மையான அன்பு ஒரு முயற்சியாக இருக்க முடியாது. நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும்.அப்போது அதை எதாலும் அழிக்க முடியாது.''
நன்றி :  ஓஷோவின் கதைகள்
காதலும் ஒர் உணர்வின் நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும். அப்போது அதை யாராலும் எப்போதும் அழிக்க முடியாது. 
இருமன மொழியை மண நாளையாய் அறிவிக்க மவுன மொழியின் அரங்கேற்றம் தான் காதல்.
இலக்கியத் துறையிலிருந்து 
விமர்சனத் தோணி ஓட்டும் 
என் சகோதரர் ஒருவர்... 

காதல் என்பது 
பொய்யா மெய்யா 
என்றுக் கேட்டார், 

ஓ....நல்ல வேளை! 
சரியான நேரத்தில்
உன்னைச் சந்தித்தேன். 

இல்லாவிட்டால் 
தவறான விடையைச் 
சொல்லியிருப்பேன். 

 கவிஞர் மீராவின் “கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்” புத்தகத்திலிருந்து

Print Friendly and PDF

Wednesday, February 11, 2015

கடவுள் கொண்டு வந்த கைப்பெட்டி


கடவுள் கொண்டு வந்த கைப்பெட்டி


மனிதனொருவன் தான் இறக்க போகிறோம் என   உணர்ந்த போது கடவுள் ஒரு கைப்பெட்டியுடன் அவனருகில் வருவதை  கண்டான்.

அவனருகில் வந்த கடவுள் சொன்னார் மனிதனே உனது காலம் முடிந்து விட்டது.என்னுடன் வா

சற்று வியப்படைந்த அவன் என்னது இப்போதா, இவ்வளவு சீக்கிரமாகவா? எனக்கு பல எதிர்காலத் திட்டங்களும்,கடமைகளும் உள்ளன அதை முடித்து விட்டு வருகிறேன்,.. என்றான்.

இல்லை இதுதான் உனது நேரம். வா என்னுடன். என்றார் கடவுள்.

கடவுளின் கையில் கைப்பெட்டியை பார்த்து அவன் கேட்டான் இதில் என்ன இருக்கிறது?

இதில் உனக்குரியது  இருக்கிறது என்றார் கடவுள்.

என்னுடையது என்றால் எனது  சொத்துக்களா?,எனது உடைகளா?  பணமா?,பொருட்களா? என கேள்விக் கேட்டான் அவன்.

அவையெல்லாம் உனதல்ல இந்த பூமிக்குரியவை என்றார் கடவுள்.

உடனே அவன் என் நினைவுக்குரியதா? என்றான்.

நினைவுகள் எல்லாம்  நேரத்துக்குரியது, உனதல்ல.என்றார் கடவுள்.

அப்போ என் திறமைகளா? என கேட்டான் அவன்.

திறமை என்றுமே உன்னுடையது அல்ல, அவை சந்தர்ப்பங்களுக்கும், சூழ்நிலைக்கும் உரியது  என்றார் கடவுள்.  

தளராமல் தொடர்ந்த மனிதன் எனக்குரிய  என் குடும்பமும் என் நண்பர்களும் தந்தவைகளா? என கேட்டான்.

மன்னிக்கவும் உன் குடும்பமும்,உன் நண்பர்களும் உனது வாழ்வின் பாதையில்   வந்தவர்கள். உனக்குரியவர்கள் அல்ல. என்றார் கடவுள்.

அப்போ எனது மனைவியும் மக்களுமா? என்றான் அவன்.

அவர்கள் உன்னுடையவர்கள் அல்ல, உனது அன்பிற்கு உரியவர்கள்’’  கடவுள் என்றார்.

எனது உடலா? என்றான் அவன்.

 உடல் தூசிக்குரியது என்றார் கடவுள்.

எனது உயிரா? என்றான் அவன்.

இல்லை அது எனக்குரியது என்றார் கடவுள்.

மேலும் இந்தா கைப்பெட்டி இதில் உனக்குரியது உள்ளது. எடுத்துக்கொள் என்றார்.

மனிதன் பயந்தவாறே ந்த கைப்பெட்டியை திறந்து பார்த்தான். அது காலியாக இருந்தது. கன்னம் வரை  வழிந்து வந்த கண்ணீருடன், எனக்கென்று ஒன்றுமே கிடையாதா? எனக் கேட்டான் கடவுளிடம்.

கடவுள் அமைதியுடன், ஏன் இல்லை? இந்த வாழ்க்கை உன்னுடையது, இதில் ஒவ்வொரு வினாடியும் உன்னுடையது, உன்னை சுற்றி நடக்கும் நிகழுவுகள் ஒவ்வொன்றும் உன்னுடையது. இதில் எதையும் உன்னால் இயக்கவோ,நிறுத்தவோ முடியாது. இதை நீ அனுபவிக்க மட்டுமே முடியும். அதனால் உனக்கான நேரம் வரை வாழ்க்கையை வாழு, மகிழ்ச்சியுடன் வாழு. மறந்து விடாதே, இங்கே உள்ள மண்ணும்,வீடும்,பணமும், உடைகளும், நீ  பூமியில் வாழத்  தேவையானது   மட்டுமே. எதையும் உனக்குரியதாக எடுத்துக் கொள்ள முடியாது. என்றார்.

மனிதன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கடவுளை பின் தொடர்ந்தான்.

திரு.T.ராதாகிருஷ்ணன் (tradhakrish123@yahoo.com) எனக்கு அனுப்பிய இ-மெயிலின் தமிழாக்கம் இது.



Print Friendly and PDF

Tuesday, February 10, 2015

சொர்க்கம்


கிராமத்தின் ஆற்றோரமாய் குடில் அமைத்து தன் சிஷ்யர்களுடன் தவம் செய்து வந்தார் வான்ஷங் ஞானி. தவத்தினூடே வான்ஷங் தன் சிஷ்யர்கள் மற்றும் அந்த கிராம மக்களுக்கு ஆன்மீக போதனை களையும் தனக்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தான தருமங்களையும்   செய்து வந்தார்.


அதே கிராமத்தின் ஆற்றோரமாய் எதிர் பக்கத்தில் நாத்திகன் ஒருவன் குடிசை கட்டி வாழ்ந்து வந்தான் அவன் வான்ஷங் ஞானி கருத்துக்களுக்கு எதிராக “கடவுள் இல்லை. நமது வினைகளுக்கும், நமது ஏற்றத்தாழ்வுக்கும்  நாமே காரணம், நாமே விடை என அந்த கிராம மக்களுக்கு கூறியும் தன் பிழைப்புக்காக விவசாயமும் செய்து வந்தான். எதிர் எதிராக இவர்களது இருவேறு கருத்துக்களை தினமும் கேட்டுக்கொண்டிருந்த அக்கிராம மக்கள் பலர் வான்ஷங் ஞானியை தரிசித்தும் சிலர் நாத்திகனிடமும் பேசி வந்தனர்.

காலம் கடந்தது.

சொர்க்கத்தின் வாசலில் கடவுளை தரிசிக்க வான்ஷங் ஞானியும் சிஷ்யர்களும் வரிசையில் நின்று இருந்தனர். இவர்களது அடுத்த வரிசையில் நாத்திகன் நின்று இருந்தான்.

அவனை கண்டதும் ஒரு சிஷ்யன் வான்ஷங் ஞானியை பார்த்து, குருவே, கடவுள் இல்லை என்று சொன்ன அந்த நாத்திகனுக்கும் சொர்க்கத்தில் இடமா? என்றான்.

வான்ஷங் ஞானி மெல்ல புன்னகைத்து பின் பதிலளித்தார். நாம் கடவுள் இருக்கிறார் என்பதற்கு பல உதாரணங்களையும், விளக்கங்களையும் அளித்தோம். அவன் கடவுள் இல்லை என்பதற்கு எந்த ஒரு விளக்கமோ அதற்க்கான முயற்சியோ செய்யவில்லை மாறாக கடவுள் என்பதை மறந்து அதனை ஒரு கொள்கையாகவே எடுத்து உயிர் வாழ விவசாயமும் அதன் மூலம் வரும் வருமானத்தை மேலும்மேலும் கூட்ட உழைத்தும் தன்னால் முயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்தும் வந்தான். என்ற வான்ஷங் ஞானி,மேலும் தொடர்ந்து எந்த ஒரு மனிதனுக்கும் கொள்கையில் பிடிப்பும் உழைப்பும் இருந்தால் கடவுள் அவர்களை தன் பக்கத்தில் வைத்துக்கொள்வார் “ என்றார்.

சிஷ்யன் நாத்திகனையும் வணங்கினான்.


Print Friendly and PDF

Friday, February 6, 2015

சறுக்கல் வலி



பசியாய் வந்தவன்

கடையில் வாழைப்பழமொன்றை
காசுக்கொடுத்து வாங்கினான்.
பழம் சாப்பிட்டுப் பாவி
பாதையில் தோலைத் தூக்கி எறிந்தான்.


எடுப்பாய் துடிப்பாய்
மிடுக்காய் வந்தவனொருவன்
இளம்கன்னிகளை கோலமிட்டு
பாதை கவனம் கொள்ளலாமல்
தோல் மேல் கால்வைத்தான்.

தடாலடியாய் வழுக்கி விழுந்தான்.
தட்டித் தடவி எழ முயன்றான்
யாரும் பார்க்கக்கூடாதென்று.
தள்ளி நின்ற பெரிசொன்று
பார்த்து வரக்கூடாதா என்றது.

வலியோடு வான்பார்த்தவனை
மங்களப் பெண்ணொருத்தி
காலை உதறிக்கொளென்றாள்.
ஐயோ பாவமென்று
இச்க் கொட்டினாள் கன்னியொருத்தி.


கல்லூரி காரிகை
இளமை குறும்போடு  
களுக்கென்று குலுங்கினாள்
கண்ணால் ஏளன மொழியிட்டாள்
வழுக்கி விழுந்தவனை பார்த்து.

கன்னியர்களை கண்டக் கோலத்தில்
வாழைப்பழத்தோல் வழுக்கி விழுந்தவன்
வெட்கி சுற்றும்முற்றும் கவனியாது
எடுப்பும் உடுப்பும் சரிசெய்து
அனுதாபத்தை அணிந்து சென்றான்.

நசுங்கி கிடந்த வாழைப்பழத்தோல்
மனிதர்களின் அனுதாபங்கள்
நசுக்கியவனுக்கு மட்டும்தானா?
நசுக்கப்பட்டவனுக்கு கிடையாதா?
வலியுடன் முனகிக்கொண்டது.
Print Friendly and PDF

Wednesday, February 4, 2015

எழுத்து சுதந்திரம் -மாதொருபாகன்


நான் நாவல்களை படித்து கிட்டத்தட்ட சுமார் 30 வருடங்கள் ஆகின்றன.சிறுவயதில் பள்ளிக்கூட புத்தகம் ஆரம்பித்து பத்தாம் வகுப்பு வரை துணைப் பாடல்நூலில் வரும் கதைகளையே அதுநாள் மட்டும் படித்து அறிந்தேன் பின் எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பாதங்கத்துரை,ராஜேஷ்குமார்,ராஜேந்திரகுமார் ஆகியோரின் கதைகள்  என சில வருடங்கள் படித்தேன்.
அதன் பின்னே கதைகள் நாவல்கள் படிக்க அதிக  நாட்டமும்  நேரமும் இல்லை. தவிர்த்தே வந்தேன்.கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பின் நான் வலைப்பூவை ஆரம்பித்தப் பின் ஒருப்பக்க கதைகளையும், ஆன்மீக,அறிவார்ந்த,தத்துவ கதைகளை படிக்க ஆரம்பித்தேன். அதுவும் மஹாபாரதம் முழுமையாக படித்தபின்(ஒரு வருடமாக)  அந்த ஆர்வம் அதிகமானது. மஹாபாரதத்தில் வரும் துணைக் கதைகளை சிலர் சமூகக் கதைகளாக மாற்றி எழுதி இருந்ததை அறிந்தேன்.
அதனை பாக்யா,ஆனந்த் விகடன்,குமுதம்,கல்கி என பல இதழ்களில் நானே கண்க்கூடாக படித்தேன்.ஆனால் அப்படி அவர்கள் மாற்றி சில சமூகக் கண்ணோட்டத்துடன் மாற்றி இன்றைய காலக் கட்டத்திற்கு ஏற்றார்போல் எழுதியதை சில நேரங்களில் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளனர்.(உ-ம் : சிவசங்கரியின் வாடகைத்தாய் கதைப் பற்றிய அவன் அவள் அது கதை.இது சினிமாவாகவும் வந்துள்ளது).


ஆனால் ஜாதி,இனம்,மதம்,மொழி நாடு  சார்ந்த கதைகளை கையாளும்போது எழுத்தாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். 1980களிலும் அதற்கு முந்தைய காலக்கட்டங்களிலும் கதை, கவிதை,கட்டுரை,எழுத்துக்கள் ஒரு வட்டாரத்தில் மட்டுமே பரவியுள்ள அந்த மொழிக்கேற்பவும், அதன் ஆசிரியரின் பரிச்சயத்திற்கும் ஏற்ப கண்டனத்திருக்கும், விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் ஆட்ப்படும். ஆனால் இன்றைக்கு வலைதளம் எனும் மிக பெரிய விஞ்ஞான வளர்ச்சியில் உலகத்தின் எல்லை சுருக்கப்பட்டு எல்லாரும் எல்லாமும் அறிய முடிகிறது.அதனால் கண்டனம்,விமர்சனம்,விவாதம் உடனே நடைபெறுகிறது. (உ-ம் :சினிமாவில் துப்பாக்கி,விஸ்வரூபம்,கத்தி என பட்டியல் நீளும் ) இதற்கு காரணம் ஊடக வளர்ச்சியில் வலைதளத்தின் பங்கின் எதிரொலி. இது நல்லதா கெட்டதா என்ற விவாதம் இப்போது தேவையற்றது.

ஆனால் திரு பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் (ONE PART WOMAN 2013 -மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு : அனிருத்தன் வாசுதேவன்) பதிப்பு வெளியானது 2010-ம்௦ வருடம். அப்போதைய காலக்கட்டத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இன்றைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் அதைத்தொடர்ந்து  அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் விமர்சனம் நடந்துக் கொண்டிருப்பதும்மே இந்த கட்டுரையை நான் எழுத வேண்டியதானது. இனி எந்த நாவலையும்,கட்டுரையும், சிறுகதைகளையும்,கவிதைகளையும் எழுதுவதில்லை எனவும், இனி மாதொருபாகன் மற்றும் அவர் எழுதிய எந்த நாவலையும் வெளியிடவேண்டாம் என்றும், விற்காமல் உள்ள நாவல்களைப் பதிப்பகத்தார் தன்னிடம் கொடுத்தால் உரிய தொகையைக் கொடுத்துவிடுவதாகவும், பெருமாள்முருகன் என்பவன் இறந்துவிட்டதாகவும், தமிழ் ஆசிரியரான பெ. முருகன் மட்டும் இருப்பதாகவும் முகநூலில் தெரிவித்துள்ள பிறகும் நடந்துக் கொண்டிருக்கிறது.(இதனால் நான் மாதொருபாகன் நாவலை முழுவதையும் படித்தேன்)


இதன் தாக்கம் என்னவென்றால் இனி ஒவ்வொரு எழுத்தாளனும் ஜாதி,இனம்,மதம்,மொழி நாடு  சார்ந்த கதைகளையோ, கட்டுரைகளை எழுதும்போது அதன் வீரியமும், கருத்துக்கும், உணர்வுக்கும் உட்பட்டே எழுத வேண்டும். இல்லையெனில் நம்மை நாமே சிதைத்துக்கொள்ளும் மனநோய்க்கு ஆளாவோம். இது  எந்த  எழுத்து சுதந்திரத்தையும் என்றும் பறிக்காது.



Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms