Monday, April 23, 2012

அண்ணா மேம்பாலம்


அண்ணா மேம்பாலம் 

பொதுவாக ரெயில் பாதையின் குறுக்கே அல்லது ஆறுகள், கால்வாய்கள் குறுக்கேதான் மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் முதல் முறையாக மாநகர வீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு மேம்பாலம் அமைக்கப்பட்டது.
 
தமிழகத்தின் தலைநகர் சென்னை நகரில் 1973 ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் இந்த புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட்ரோடு) ஜெமினி சந்திப்பில் இந்த பாலம் அமைக்கப்பட்டது. சென்னை நகரின் அதிகமான வாகன போக்குவரத்து அண்ணாசாலை வழியாகத்தான் நடைபெறுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்தப் பாலத்தைக் கட்ட அப்போது ஆன செலவு ரூ.66 லட்சம்தான். மேம்பாலத்தின் நீளம் 1,250 அடி. அகலம் 48 அடி ஆகும். 21 மாதங்களில் (2 ஆண்டு) கட்டி முடிக்கப்பட்டது. முதலில் இந்த மேம்பாலத்தை ஜெமினி மேம்பாலம் என்றே மக்கள் கூறி வந்தார்கள். முதல் அமைச்சர் கருணாநிதி அதன் திறப்பு விழா பற்றி நிருபர்களிடம் கூறும்போது, "அது ஜெமினி மேம்பாலம் அல்ல. அறிஞர் அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும்" என்று அறிவித்தார்.   அதன்படி அண்ணா மேம்பாலம் திறப்பு விழா 1.7.1973 அன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் சாதிக்பாட்சா தலைமை தாங்க அமைச்சர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். மேம்பாலத்தை முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், சென்னை நகரில் உள்ள பாலங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று அறிவித்தார். அதுபற்றி அவர் கூறியதாவது:-

சென்னை மாநகருக்கு புதிய எழில் ஊட்டும் வகையிலும், போக்குவரத்து வசதிக்கான வாய்ப்பைப் பெருக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் பேரறிஞர் அண்ணா பெயரால் அமைந்துள்ள மேம்பாலத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா அவர்களுடைய பெயரை இந்தப் பாலத்திற்கு ஏன் வைத்தோம் என்பதற்கான காரணத்தைச் சொல்லத் தேவையில்லை.

ஏனென்றால் அண்ணா அவர்களுடைய பெயரை வைத்த பிறகு அதை ஏன் வைக்கவேண்டும் என்று கேள்வி கேட்கிற யாரும் தமிழகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட பாலங்கள் நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுடைய பெயரால்  நம்முடைய சமு தாயத்திற்குப் புத்துணர்ச்சி ஊட்டியவர்களின் பெயரால் இந்திய நாட்டில் பிறந்த தலைவர்களுடைய பெயரால் வழங்கப்பட வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்.

அந்த வகையில்தான் இன்று இந்தப் பாலத்திற்கு அறிஞர் அண்ணா பெயரை நாம் வைத்திருக்கிறோம். இந்தச் சாலையின் பெயர் அண்ணாசாலை; இந்தச் சாலையில்தான் அண்ணா சிலை இருக்கிறது. இந்தச் சாலை முடிந்த பிறகு அங்கேயிருந்து சென்றால் அண்ணா அவர்களுடைய கல்லறை இருக்கிறது. "மர்மலாங்" பாலத்தில் இருந்துதான் அண்ணா சாலை ஆரம்பமாகிறது.

மர்மலாங் என்ற பெயர்கூட ஒரு டச்சுக்காரருடைய பெயர் என்று கேள்விப்பட்டேன். மர்மலாங் பாலத்திற்கு அருகாமையில் உள்ள பல்லாவரத்தில்தான் மறைமலை அடிகளார் வாழ்ந்தார். ஆகவே மர்மலாங் பாலம் உச்சரிப்பதற்கு ஏற்ற வகையில் இனிவரும் காலத்தில் "மறைமலை அடிகளார் பாலம்" என்று மாற்றப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

அடையாறு பாலம் தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெயரால் அழைக்கப்படும். வாலாஜா பாலத்திற்கு "காயிதே மில்லத்" அவர்களுடைய பெயர் வைக்கப்பட்டு, அந்தப்பாலம் காயிதே மில்லத் பாலம் என்று அழைக்கப்படும். காமராஜருடைய சிலைக்கு அருகாமையிலே இருக்கிற வெலிங்டன் பாலம் பெரியார் அவர்களுடைய பெயரால் அழைக்கப்படும்.

அதைப்போல "ஆமில்டன்" பாலத்திற்கு ஏதேதோ பல பெயர்கள் மாற்றப்பட்டதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அந்தப்பாலம் அம்பேத்கார் பாலம் என்று அழைக்கப்படும்.   பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்வார்கள். பெயரில் தமிழ் இருக்கிறது; தமிழ் உணர்வு இருக்கிறது; சமுதாய எழுச்சி இருக்கிறது.

சமுதாயத்திற்காக பாடுபட்டவர்களுக்கு காட்டப்படுகிற நன்றி உணர்வு இருக்கிறது. ஆகவேதான் பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்டால், அது விளக்கத்திற்காகக் கேட்கப்படுகிற கேள்வியே தவிர, கேலிக்காகக் கேட்கப்படுகிற கேள்வி அல்ல என்பதற்கேற்பத்தான் நாங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்."

இவ்வாறு கருணாநிதி கூறினார்.    

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே எஸ்.என். ஐரோட்டில் இரட்டை அடுக்கு மேம்பாலம் இருக்கிறது. "திருவள்ளுவர்" பெயரை தாங்கியுள்ள இந்த மேம்பாலம் ஆசியாவிலேயே ரெயில் பாதையின் குறுக்கே அமைக்கப்பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பை பெற்று விளங்குகிறது.

1969 ம் ஆண்டு அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதியால் இந்த மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 1973 ம் ஆண்டில் ரூ.47 லட்சம் செலவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் மாதம் 13 ந்தேதி கருணாநிதி மேம்பாலத்தை திறந்து வைத்தார். 706 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இப்பாலம் 26 தூண்கள் மேல் நிறுவப்பட்ட சிமெண்டு சிலாபுகளால் ஆனது.

ஒவ்வொரு சிமெண்டு சிலாபும் 31 மீட்டர் நீளமும் 600 டன் எடையும் கொண்டதாகும். இந்த பாலத்தின் முதல் அடுக்கில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள், வண்டிகள் செல்லவும், மேல் அடுக்கில் பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டது. பாலம் கட்டப்பட்டு 27 ஆண்டுகள் கழித்து 2000 வது ஆண்டில் ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் இப்பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக மீண்டும் திறந்து விடப்பட்டது.

1 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
This comment has been removed by the author.
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms