Tuesday, January 28, 2014

பாம்பன் பாலம் (Pamban Bridge)


பாக் நீரிணையில் (Palk Strait)  இந்தியாவின்  தமிழ்நாட்டில்   அமைந்துள்ள  பெரு நிலப் பரப்பையும்  இராமேசுவரத்தையும்  இணைக்கும் ஒரு கொடுங்கைப்  ( Cantilever Bridge) பாலம். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (முதலில் பாந்திரா-வொர்லி கடற்பாலம்) ஆகும். இப்பெயரில் தரைப்பாலம்தொடருந்துப் பாலம் (RAILWAY BRIDGE) இரண்டும் அழைக்கப்பட்டாலும், பொதுவாக தொடருந்துப் பாலத்தையே குறிப்பிடுவர்.

இரண்டு ஏற்ற ஓடுபாதைகளைக் கொண்ட தரைப்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.
பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதன் கட்டுமானம் 1913 ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டணப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.
கப்பல் கடக்கும்போது பாலம் திறக்கப்படும் காட்சி

ரெயில் பாலத்தில் கடக்கும் காட்சி


பாலம் கட்ட தேவையான 18,000 டன் சல்லிகல் 270 கி.மீ. தொலைவிலிருத்தும், மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது. இதனை கட்ட சிமென்ட்  5000 டன்இரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.
தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 ஆகத்து 12 இல் புதுப்பித்தத. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு கொண்டாடப் பட விருக்கிறது.
பாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப் பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றன. அத்துடன் இப்பகுதிகடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும் பகுதியுமாகும் 1964 ல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.


தினந்தந்தியில் Jan 29 ,2014 லில் வந்த பாம்பன் பால நூற்றாண்டு விழா செய்தி:
பாம்பன் ரெயில் பால நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வலியுறுத்துவேன் என்று கூறினார். பாம்பன் ரெயில் பாலத்தின் நூற்றாண்டு விழா நேற்று (28.01.2014) நடந்தது.இதில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கார் மூலம் மண்டபம் வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் நந்தகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து மண்டபத்தில் இருந்து தனி ரெயில் மூலம் பாம்பன் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்தார். ரெயில்வே பொது மேலாளர் ராஜேஷ் மிஸ்ரா அவரை வரவேற்று அழைத்து சென்றார். நிகழ்ச்சிக்கு பாம்பன் ஊராட்சி தலைவர் பேட்ரிக் முன்னிலை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஜே.கே.ரித்திஷ், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், விஞ்ஞானி ராஜன் ஆகியோர் பேசினர்.

 பின்னர் விழாவை தொடங்கி வைத்து டாக்டர் அப்துல் கலாம் பேசியதாவது:– பாம்பன் என்னுடைய வாழ்வில் ஓர் அங்கம். இங்கு சுற்றத்தார்கள் வாழ்ந்தார்கள். இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். ராமேசுவரம் எனது சொந்த ஊர், உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நூற்றாண்டு விழாவிற்க்காக வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பாலம் 


நூற்றாண்டு விழா காணும் இந்த பாம்பன் பாலத்தில் இன்று பயணம் செய்தேன். பூமி சூரியனை சுற்றி வருவதற்கு ஓராண்டாகிறது. இந்த பாலம் கட்டப்பட்ட பிறகு 100 முறை சுற்றி வந்துள்ளது. இந்திய ரெயில்வே நூறாண்டு காலம் இந்த பாலத்தை பாதுகாத்து மேம்படுத்தி உள்ளது. ராமேசுவரம் தீவை இந்தியாவுடன் இணைப்பது இந்த பாலம்.

நான் இன்று ரெயிலில் வந்தபோது மேலே வானம், கீழே கடல். இந்த காட்சி என்னை பரவசப்படுத்தியது. பாலத்திற்குள் ரெயில் நுழைந்து வந்தபோது தென்றல் காற்று வீசி ரீங்காரமிட்டது என் மனதை கவர்ந்துள்ளது.மனித மனங்களை இணைப்பது போல பாம்பன் பாலம் இந்தியாவையும், இந்த தீவையும் இணைத்து நூறாண்டாகிறது. இப்பாலம் கட்டிய பின்பு இங்கிருந்து தனுஷ்கோடி சென்று அங்கிருந்து இலங்கைக்கு செல்ல வழியாக அமைந்தது. பாலம் தொழில்நுட்பத்தோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களை, மதங்களை, மனிதத்தை இணைப்பது போல இந்த தீவை இணைத்தது கோடிக்கணக்கான மக்களின் மனதை நெகிழச்செய்துள்ளது. இது இன்னும் பல கோடி ஆண்டு நீடித்து நிலைக்க வேண்டும். இந்தியாவில் கடல் மீது போடப்பட்ட பாலம் இதுதான். 1914ல் இப்பாலம் போடப்பட்ட பின்னர் தான் வர்த்தகம், சுற்றுலா மேம்பட்டுள்ளது. எனது தகப்பனாரும் இந்த பாலத்தில் பயணம் செய்துள்ளார். 97 வயதான என் அண்ணனும் இதில் பயணம் செய்துள்ளார். நானும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் போது இந்த பாலத்தில் பலமுறை பயணித்துள்ளேன்.

உலகிலேயே துருப்பிடிப்பதில் 2ம் இடம் வகிக்கும் இந்த பகுதியில் அமைந்துள்ள இப்பாலத்தை நல்ல முறையில் பராமரித்து வருவதற்கு தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உறக்கத்தில் வருவதில்லை கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. கனவாக இருந்தது நனவாக நடந்து வருகிறது. ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரெயில் இயக்கவும், அதற்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டவும் வலியுறுத்துவேன். இது கண்டிப்பாக நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அவர் பேசும்போது நான் விளக்காக இருப்பேன், நான் படகாக இருப்பேன், நான் ஏணியாக இருப்பேன், அடுத்தவரை துன்புறுத்த மாட்டேன், மனநிறைவோடு வாழ்வேன் என்று கூறி அதனை பொதுமக்கள் அனைவரும் திரும்ப கூறும்படி கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து கல்வெட்டை திறந்து வைத்தார். ரெயில்வே கோட்ட மேலாளர் .கே.ரஸ்தோகி நன்றி கூறினார். பின்னர் டாக்டர் அப்துல் கலாம் ராமேசுவரம் புறப்பட்டு சென்றார். பொந்தம்புளி அருகே ரூ.25 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கூடுதல் கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.

முன்னதாக அவரை ராமேசுவரம் நகரசபை தலைவர் அர்ச்சுணன் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். விழாவில் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ, பாம்பன் முன்னாள் ஊராட்சி தலைவர் முகமது அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

4 கருத்துரைகள்:

Uma Maheswari said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Pala naal asai yenakul irukiradhu angu sendru vara vendrum yendru.. :)

G.M Balasubramaniam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சில நாட்களுக்கு முன் கப்பல் இடித்து பாலம் சிறிது சேதமடந்து பின் சரிசெய்யப்பட்டது என்று படித்த நினைவு.

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நேரில் பார்த்து பிரமித்திருக்கின்றேன்.
செய்திகள் அருமை நன்றி ஐயா

BHARKAVI MAMI said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றாக இருக்கிறது

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms