Friday, February 21, 2014

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.


சென்னை (21.02.2014) ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை தமிழக முதலைமைச்சர் திரு ஜெயலலிதா அவர்கள் திறந்து வைக்கிறார்கள்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
உயர்தர மருத்துவ வசதிகள்
ஏழை எளிய மக்களுக்கு, உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளின் உட் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி வருகிறது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத 15 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்திடவும் முதல்அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எய்ம்ஸ்க்கு இணையாக
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, உயர்சிகிச்சை தேவைப்படுகின்ற பல்வேறு நோய்களுக்கும் ஏழை எளிய மக்கள் கட்டணமில்லாமல் தரமான சிறப்பு சிகிச்சை பெறும் வகையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடம், உயர் சிறப்பு மருத்துவமனையாக (மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி) மாற்றி அமைக்கப்படும் என்றும், இந்த மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் விளங்கும் என்றும் முதல்அமைச்சர் ஜெயலலிதா கடந்த 19.8.11 அன்று சட்டசபையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, இந்த கட்டிடத்தை பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றும் பணிகளுக்காக 32 கோடியே 90 லட்சம் ரூபாயும், உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவக் கருவிகள் மற்றும் தளவாடங்கள் வாங்க 110 கோடியே 24 லட்சம் ரூபாயும் தமிழக அரசு வழங்கியுள்ளது.
9 உயர் சிகிச்சை பிரிவு
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 10 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, இதய சிகிச்சைப் பிரிவு, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, கை மற்றும் நுண் அறுவை புனரமைப்பு சிகிச்சைப் பிரிவு, புற்றுநோயியல் பிரிவு, புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் பிரிவு, நரம்பு அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 9 உயர் சிறப்புப் பிரிவுகளோடு, 400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையின் தரைத்தளத்தில் 2 அறுவை அரங்குகள், முதல் தளத்தில் 2, ஐந்தாவது தளத்தில் 6 மற்றும் ஆறாவது தளத்தில் 4 என மொத்தம் 14 அறுவை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் பயன்பாட்டிற்காக, தரைத் தளத்திலிருந்து 6–வது தளம் வரை, சாய்தளப் பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 300 கழிப்பறைகள் தவிர, கூடுதலாக 212 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
சிறப்பு வசதிகள்
இங்குள்ள 17 மின்தூக்கிகள், படுக்கையுடன் கூடிய நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவு, இதய சிகிச்சைப் பிரிவு, தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் உள் நோயாளர் பிரிவு, மயக்க நிலை மீள் பிரிவு, சிறப்புப் பிரிவுகள் மற்றும் பொதுப் பிரிவுகளுக்கு கூடுதல் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மைய ஆய்வகம், ரத்த வங்கி, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், கேத்லேப், மத்திய நுண்கிருமி நீக்குதல் பிரிவு போன்ற உயர் மருத்துவ வசதிகளும், மருத்துவமனையின் தேவைகளுக்காக கூடுதல் மின்சார பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்ட மருத்துவ வாயுக்கள் வைப்பு அறைகள், மத்திய நுண்கிருமி நீக்குதல் பிரிவு, சலவை நிலையம், சேவை துறை போன்ற சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுப் பிரிவுக்கு தேவைப்படும் கட்டில்கள் படுக்கைகள், தீவிர மையத்திற்கான கட்டில்கள் மற்றும் தேவைப்படும் பொருட்களும் வாங்கப்பட்டுள்ளன.
திறந்து வைத்தார்
இம்மருத்துவமனையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை புற ஆதார முறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, தற்போது இந்தப் பணிகளில் 150 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்குள் நோயாளிகள் செல்வதற்கு வசதியாக, மின்கலத்தால் செயல்படும் கார்கள் வாங்கப்பட்டுள்ளன. முழு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மருத்துவமனையின் உட்புறம் 150, வெளிப்புறம் 10 என மொத்தம் 160 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தகவல் தொடர்புக்காக 200 அகத் தொலைபேசி (இன்டர்காம்) வசதிகளும், 500 உள்ளூர் தொலைபேசி இணைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 83 மருத்துவர் பணியிடங்களும், 232 மருத்துவம் சாரா பணியிடங்களும், 20 கோடியே 73 லட்சம் ரூபாய் தொடர் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உயர் கல்வித் தகுதியுடன், பல்லாண்டு பணியாற்றிய அனுபவமிக்க திறன் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு, உயர் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவக் கருவிகள் உதவியுடன், நல்ல காற்றோட்டமான சுகாதாரமான சூழ்நிலையில், உயர்சிகிச்சை அளித்திடும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்அமைச்சர் ஜெயலலிதா 21–ந் தேதியன்று  காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் இதர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில், மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் நோயாளிகளுக்கு உயர் சிறப்பு சிகிச்சை வழங்கிடும் மையமாக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை செயல்படும்.
திருச்சி, திருநெல்வேலி
மேலும், திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விபத்து மற்றும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவு கட்டிடம்; சென்னை மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசினர் தாய்சேய் நல மருத்துவமனையில் 53 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் கட்டிடம்; சென்னை குழந்தைகள் நல நிலையம் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு 18 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 300 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம்;
சென்னை மருத்துவக் கல்லூரியில் 5 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மண்டல மூப்பியல் மருத்துவ மையம்; சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்களுக்காக 2 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடம்; திருநெல்வேலி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்களுக்கு 2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்;
தரம் உயர்த்தப்பட்ட 20 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 14 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்; 100 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 118 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், என 253 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவமனை கட்டடங்களை முதல்அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ரூ.401 கோடி திட்டம்
மேலும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியின் சேவையை முதல்அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். ஆக மொத்தம் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதல்அமைச்சர் ஜெயலலிதாவினால் திறந்தும், தொடக்கியும் வைக்கப்பட்ட பணிகளின் மொத்த மதிப்பு 401 கோடியே 14 லட்சம் ரூபாய் ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பொதுப்பணித் துறைச் செயலாளர் எம்.சாய்குமார், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை சிறப்புப் பணி அலுவலர் டாக்டர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேந்திர ரத்னூ, பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டடம்) ஆர். கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 நன்றி :மாலைமலர்,தினமணி,தினத்தந்தி

2 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

விரிவான விளக்கத்தை பதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...

ஹ ர ணி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அன்புள்ள

வணக்கம். மிக விரிவான தகவல்கள். நன்றிகள்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms