Monday, October 20, 2014

தீபாவளி-தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம்



தீபாவளி பற்றி எழுத நினைத்த போது தினமணியில் 2012 தீபாவளி தீபாவளி மலரில் வந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது.அதில் தீப வழிப்பாட்டை பற்றி இலக்கியங்களில் உள்ள பாடல்கள் மூலம் மேற்கோள் காட்டியிருந்தது அதனை இங்கே பதிவிட்டுள்ளேன். அனைவருக்கும் பயனாக இருக்கும். மற்றும் மக்களின் அனைத்து பண்டிகைகளுக்கும் தனித்துவமும் அதன் மூலம் மனித இனம் ஒற்றுமையாக செயல்ப்படவும் நன்றாக இருக்கும்.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்கி வருகிறது. எனினும், தமிழகத்தில் தீபாவளிக்கு எதிரான பிரசாரம் அவ்வப்போது தலை தூக்குவதுண்டு; வடவர் பண்டிகையான தீபாவளிக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற குரல்கள் அபசுரமாக எழுவதுண்டு.
அவ்வாறு கூறுவோர், தமிழ் இலக்கியத்தில் தீபாவளி குறித்த பதிவுகள் இல்லை என்று கூறுகின்றனர். அவர்கள் வசதியாக ஒன்றை மறந்து விடுகின்றனர். தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் விழா குறித்தும் கூட தமிழ் இலக்கியத்தில் உறுதியான பதிவுகள் இல்லை.
மாறாக, நமது பழந்தமிழ் இலக்கியங்களில் இந்திரவிழா, கார்த்திகை விளக்கு, ஐப்பசி ஓணம் போன்ற பண்டிகைகள் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. காலந்தோறும் மாறித் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் மானிட சமுதாயத்தின் சிறப்பாகவே பண்டிகை மாற்றங்களைக் கருத வேண்டும் என்பது மானுடவியலாளர்களின் கருத்து.
இந்நிலையில், தமிழ் இலக்கியத்தில் திருமால் வழிபாடு, விளக்கு வழிபாடு தொடர்பாக இடம்பெற்றுள்ள சில பதிவுகளை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

ஒளி வழிபாட்டின் துவக்கம்:

தீப வழிபாடு தமிழருக்குப் புதிதல்ல. கௌமாரத்தில் தீப வழிபாடு பேரிடம் வகிக்கிறது. தொல்காப்பியம் முருகனை சேயோன்என்று பாடுகிறது. திருமுருகாற்றுப்படை என்ற தனிநூலே முருகன் பெருமை பேச எழுந்துள்ளது.
சிவனின் நெற்றிக்கண்ணில் உதித்த பாலகனான முருகனை கிருத்திகை நாளில் விளக்கேற்றித் துதிப்பது தமிழர் மரபு. அதன் தொடச்சியாகவே வடலூர் வள்ளலார் சோதி வழிபாட்டை சென்ற நூற்றாண்டில் பிரபலப்படுத்தினார்.
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில், விளக்கு வழிபாட்டைக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.
இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
(நெடுநல்வாடை: 42-43)
இன்றும் தமிழகத்தில் கார்த்திகை தீப வழிபாடு, கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரமும் முழுமதியும் கூடிய நன்னாளில் நடந்து வருகிறது. சங்கம் மருவிய கால இலக்கியமான கண்ணங்கூத்தனாரின் கார் நாற்பது, கார்த்திகை மாத தீப வழிபாட்டுக்கு ஆதாரமாக உள்ளது.
நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் நாள் விளக்கு
(கார்நாற்பது -26)
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியும் கார்த்திகை விளக்கு குறித்து, கார்த்திகை விளக்கு இட்டன்ன கடிகமழ் குவளை பைந்தனர் என்று பாடுகிறது.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர், திருமயிலையில் இறந்த பூம்பாவை என்ற பெண்ணை உயிர்ப்பிக்கப் பாடிய பூம்பாவைப் பதிகமும் கார்த்திகை விளக்கீடு குறித்துப் பேசுகிறது.
கார்த்திகை நாள்விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்!
(திருஞானசம்பந்தர் பூம்பாவை திருப்பதிகம்- திருமுறை: 2-47)

தீபாவளியாக மாறியதா?

தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீப வழிபாடே தீபாவளியாக மாற்றம் பெற்றது என்ற கருத்து உள்ளது. மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோது தற்போதைய தீபாவளியின் வடிவம் உருவானதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் அதற்கு முன்னரே தமிழகத்தில் தீபாவளியின் வடிவம் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன.
பழமையான சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூறில், அமாவாசை நாளில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் குறித்து இடம்பெற்றுள்ளது. அக்காலத்தில் இவ்வழிபாட்டுக்கு தீபாவளிஎன்ற பெயர் இல்லையெனினும், அதையொத்த பண்டிகை கொண்டாடப்பட்டிருப்பது இப்பாடலில் உறுதியாகிறது.
மழைகால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம!
(அகநானூறு – 141ம் பாடல்)
என்று நக்கீரர் பாடுகிறார்.
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்என்பது அமாவாசை நாளையே குறிக்கிறது. இந்தச் செய்யுளில் வரும் பழவிறல் மூதூர் திருவண்ணாமலையைக் குறிப்பதாகவும் கூறுவர். திருவண்ணாமலை தீப வழிபாட்டுக்கு சிறப்புப் பெற்றது. இங்கு ஈசன் சோதி வடிவமாகத் தரிசனம் தருவதாக ஐதீகம்.
கார்த்திகை தீபம் நிகழும் கார்த்திகை மாத பெüர்ணமிக்கும், தீபாவளிப் பண்டிகை வரும் ஐப்பசி மாத அமாவாசைக்கும் இடையே 15 நாட்கள் மட்டுமே வித்யாசம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்.

சமண இலக்கியத்தில் தீபாவளி:

பழமையான சமண இலக்கியமான கல்பசூத்திரம்என்ற பிராகிருத மொழியில் எழுதப்பட்ட நூலில் தீப வழிபாடு குறித்த செய்தி வருகிறது. இதை எழுதியவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்யார் பத்ரபாகு என்ற சமண முனிவர்.
மகாவீரர் என்ற தீப ஒளி மறைந்துவிட்டதால் தீப விளக்கை ஏற்றி வைப்போம் என்று, காசி, கோசல மக்களும், பதினாறு கண அரச மக்களும் தங்கள் வீடுகளின் முன்பு தீபம் ஏற்றி வைத்தனர்என்று எழுதி இருக்கிறார் பத்ரபாகு.
இலக்கியத்தில் தீபாவளிஎன்ற சொல் முதல்முதலாகப் பிரயோகிக்கப்படுவது, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஆச்சார்ய ஜினசேன முனிவரால் இயற்றப்பட்ட ஹரிவம்ச புராணம்என்ற சமண இலக்கியத்தில் தான். அதில் வரும் தீபாவளி காயாஎன்ற வார்த்தையின் பொருள் ஞான ஒளி உடலைவிட்டு நீங்குகிறதுஎன்பதே. இதிலிருந்து உருவானதே தீபாவளி என்ற வார்த்தை என்பது சமண இலக்கிய ஆய்வாளர்களின் கருத்து.
பழந்தமிழகத்தில் சமண மதத்தின் செல்வாக்கு பரவியிருந்ததற்கு ஆதாரப்பூர்வமான பல சான்றுகள் உள்ளன. சிலப்பதிகார நாயகன் கோவலன் கூட சமண சமயத்தவன் தான். எனினும், அக்காலத்தில் மதவேற்றுமையால் மக்கள் பிளவுபட்டிருக்கவில்லை என்பதற்கு சிலப்பதிகாரமே சாட்சியாகத் திகழ்கிறது. சமணர் இல்லங்களில் அனுசரிக்கப்பட்ட வழிபாடு பிற சைவ, வைணவர் இல்லங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.

பழந்தமிழகத்தில் மால் வழிபாடு:

பழந்தமிழகத்தில் மாலவன் வழிபாடு இருந்தமைக்கு பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. மாயோன் மேய காடுறை உலகமும் என்பது தொல்காப்பிய நூற்பா (தொல்- அகம்-5).
திருமால் வழிபடப்படும் நிலப்பகுதியாக முல்லையை தொல்காப்பியர் காட்டுகிறார்.
முதற்பெருங் காப்பியமான சிலப்பதிகாரத்தில் வரும் ஆய்ச்சியர் குரவையில் மாயவனின் அவதார மகிமையைப் பாடி மகிழும் மக்களைக் காண்கிறோம்.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரனும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர்கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!
(சிலப்பதிகாரம்- 17- ஆய்ச்சியர் குரவை- படர்க்கைப் பரவல்)
என்று குரவையிட்டுப் பாடும் ஆய்ச்சியர் மூலம் அக்காலத்தில் நிலவிய மாலவன் வழிபாட்டை அறிகிறோம். திருமால் வழிபாடு வடக்கிலிருந்து வந்து பரவியதல்ல என்பதை பரிபாடலும் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.
ஆகவே, பழந்தமிழகத்திலேயே மாலவன் வழிபாடும் விளக்கு வழிபாடும் இருந்தமைக்கு இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. சைவ, வைணவத்தில் மட்டுமல்லாது சமணத்திலும் தீப வழிபாடு இருந்துள்ளது உறுதியாகத் தெரிகிறது.
சமண மதத்தினர் அனுசரித்த மகாவீரர் மோட்ச தினமும் பழந்தமிழர் அனுசரித்த கார்த்திகை தீபமும் இணைந்து இன்று நாம் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு அடிகோலியிருக்க வாய்ப்புள்ளது. காரணம் எதுவாயினும், சமுதாயத்தைப் பிணைக்கும் சக்தியாக தீபாவளி பண்டிகை விளங்குவது நமக்கெல்லாம் பெருமை அளிப்பது தானே?
நன்றி : - தினமணி தீபாவளி மலர்- 2012


-Arrowsankar

5 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Deepavali brought unity in everyone.

Dinamani says that with relevant examples

Thanks

Anand Sridharan

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல கட்டுரை ,தீபாவளி வாழ்த்துக்கள்

KOOTHIKKA KAMAL said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

good article.I struggled to read and understand the matter.My best wishes

Rathnavel Natarajan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.

vetha (kovaikkavi) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக அருமையான பதிவு.
மிக்க நன்றி ஆய்விற்கு.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
Vetha. lANGATHILAKAM
dENMARK

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms