Saturday, December 20, 2014

ரஷ்ய குழந்தைக்கு இதயம் கொடுத்த பெங்களூரு குழந்தை!


சென்னை,19, December 2014: பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த 2 வயது குழந்தையின் இதயம் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்த‌ப்பட்டது. ஒரு குழந்தையின் இதயத்தை இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை அடையாறு போர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் கடந்த 30 நாட்களாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இரண்டரை வயது ஆண் குழந்தை ஒன்று, இதயம் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தது. இம்மருத்துவமனை சார்பில் தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று திட்ட அலுவலகத்தில் இதயம் தேவை என்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், பெங்களூருவில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் தம்பதியின் 1 வயது 10 மாதம் ஆன ஆண் குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழே விழுந்தது. படுகாயம் அடைந்த குழந்தை அங்குள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் க‌டந்த வியாழக்கிழமை அந்த குழந்தை மூளைச்சாவு அடைந்தது. எனவே, குழந்தையின் பெற்றோர் உறுப்புதானம் செய்வதாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர். இது குறித்து சென்னை மருத்துவமனைக்கு தென் மண்டல உடலுறுப்பு மாற்று ஒருங் கிணைப்பு குழு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1 வயது 10 மாதமான பெங்களூரு குழந்தையின் இதயத்தை சென்னையில் உள்ள இரண்டரை வயது குழந்தைக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. இதனையடுத்து சென்னை மருத்துவமனையில் இருந்து இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு நேற்று அதிகாலை பெங்களூரு விரைந்தது. பெங்களூரு எம்ஜி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை மூலம் மூளைச்சாவு அடைந்த குழந்தையின் இதயத்தை எடுத்தனர். அதனை இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான திரவம் நிறைந்த குளிர்சாதன பெட்டிக்குள் பாதுகாப்பாக‌ வைத்தனர்.
பறந்த இதயம்: மருத்துவமனையில் இருந்து பெங்களூரு பழைய விமான நிலையம் 2.5 கி.மீ. தொலைவில் உள்ளது. எனவே இதயத்தை எடுத்துச் செல்லும் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க கிரீன் காரிடர் முறை அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இதயம் விமான நிலையத்துக்கு விரைவாக எடுத்து வரப்பட்டது.  அங்கிருந்து தனி விமானம் மூலமாக இதயம் சென்னை விமான நிலையத்திற்கு பகல் 2 மணி அளவில் வந்தடைந்தது.

தயாராக இருந்த ஆம்புலன்ஸ்சில் இதயத்துடன் மருத்துவர்கள் ஏறினர். சென்னையிலும் போக்குவரத்து போலீசார் கிரீன் காரிடர் முறையை ஏற்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து அடையாரில் உள்ள‌ தனியார் மருத்துவமனைக்கு 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சென்றடைந்தது. மொத்தத்தில் பெங்களூரு மருத்துவமனையில் பெறப்பட்ட இதயம் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சென்னையை வெற்றிகரமாக அடைந்தது. 

மருத்துவமனையில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் சுமார் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து இரண்டரை வயது குழந்தைக்கு பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட இதயத்தை வெற்றிகரமாக பொருத்தினர்.

பாதுகாப்பாக கொண்டுவரப் பட்ட இதயத்தை குழந்தைக்கு பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இரண்டரை வயது குழந்தைக்கு உடலுறுப்பு தானம் மூலம் கிடைத்த இதயத்தை பொருத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை' என்று போர்ட்டிஸ் மலர் மருத்துவமனையின் இயக்குநர் அரிஷ் மணியன் கூறியுள்ளார். குழந்தையின் இதய துடிப்பு சீராக இருப்பதாகவும் அவர் கூறினர்.

கல்லீரல் தானம் :மூளைச் சாவு அடைந்த குழந்தையின் கல்லீரல், மைசூருவைச் சேர்ந்த கல்லீரல் தேவைப்பட்ட 2வயது குழந்தைக்கு தானமாக அளிக்கப்பட்டது . பெங்களூருவில் உயிரிழந்த இந்திய குழந்தையின் இதயம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் இனி ரஷ்யாவில் துடிக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms