இரட்டை நகரங்களான நெல்லையையும், பாளையங்கோட்டையும் பிரித்து இடையில் ஓடுகிறது தாமிரபரணி ஆறு. வற்றாத ஜீவநதி என வர்ணிக்கப்படும் தாமிரபரணியில், முன்பு ஏப்ரல், மே மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பரிசல் மூலமாகவே ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை. பரிசல் பயணத்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதால், வசதியானவர்கள் மட்டுமே பத்திரமாக ஆற்றைக் கடக்க முடியும். மற்றவர்கள் நீந்தியே ஆற்றைக் கடந்தனர். வயதானவர்கள், குழந்தைகள் ஆற்றைக் கடக்கும்போது, தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடிக்கடி உயிர்ப்பலிகளும் நிகழ்ந்தன.
நெல்லை டவுனில் மட்டுமே வணிக நிறுவனங்கள் செயல்பட்டதால், படகுத்துறை மூலமாகவே உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இதற்காக படகுத்துறையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்....