Tuesday, February 7, 2017

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 06.02.2017

காளி தேவியின் அருள் பெற்ற விக்கிரமாதித்த மகாராஜா, ‘நாடாறு மாதம்.. காடாறு மாதம்..என்ற கோட்பாட்டின்படி நாட்டை ஆண்டதாக புராண வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. உஜ்ஜையினி பட்டணத்தை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த விக்கிரமாதித்தன், தனது புத்தி கூர்மையாலும், விவேகத்துடன் கூடிய வீரத்தாலும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து வெற்றி அடைந்தார் என்பதனை வேதாளம் கதை உள்பட பல்வேறு கதைகளின் மூலம் நாம் அறிய முடியும். 

இத்தகைய பெருமைக்குரிய விக்கிரமாதித்த மகாராஜா காலத்தில் இருந்துதான் தொடங்குகிறது, சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தல புராண வரலாறு. காடாறு மாதம் ஆண்ட கால கட்டத்தில் விக்கிரமாதித்தனால் உருவாக்கி வழிபாடு செய்யப்பட்ட கோவில் தான், திருச்சி மாவட்டம் கண்ணனூரில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில். இதுவே சமயபுரம் மாரியம்மனின் மூல கோவில் ஆகும். காலப்போக்கில் எடுத்து கட்டப்பட்டதே தற்போதுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் என்பது வரலாற்றுப் பதிவுகள். இப்போது நாம் வழிபட்டு வரும் சமயபுரம் மாரியம்மன் கோவில் 17–ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் காலத்தில், ஒரு போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.


தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது என்ற பெருமைக்குரியது இந்த ஆலயம். தமிழகத்தில் உள்ள கோவில்களில் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு அடுத்த படியாக, அதிக உண்டியல் வருமானம் வருகிற ஆலயமாகவும் சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்கிறது. இங்கு வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து, உலக உயிரினங்களை காத்து அருள்பாலித்து வரும் அம்பாளின் அழகு தெய்வீகமானது. எட்டு கரங்களுடனும், கழுத்தில் தலை மாலை அணிந்து, சர்ப்பக்கொடியுடன், ஐந்து அசுரர்களின் தலைகளை தன் காலால் மிதித்தபடி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் சமய புரத்து அம்மனின் அழகைக் கண்டு தரிசித்தால் மன அமைதி உண்டாகும். மேலும் மனம் ஒருமுகப்பட்டு மனம் தூய்மை பெறும்.

எல்லா சக்திகளுக்கும் ஆதாரமான ஆதிபராசக்தியாக இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, மகமாயி என்ற இன்னொரு பெயரும் உண்டு. முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற அசுரன், ஈஸ்வரனை நினைத்து கடுந்தவம் செய்தான். அதன் பலனாக அவனுக்கு சிவபெருமான் பல வரங்களை அளித்தார். அதனால் ஏற்பட்ட ஆணவத்தால் மகிஷாசூரன், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். அவனது துன்பத்தை தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும், அன்னை ஆதிபராசக்தியிடம் போய் முறையிட்டனர். அம்பாளும் அவர்களின் வேண்டுதலுக்கு மனமிரங்கி, அஷ்டபுஜத்துடன் துர்க்கை சொரூபமாக சிங்கத்தின் மீது அமர்ந்து சென்று சூரனை வதம் செய்தாள். அன்னை, அசுரனை வதம் செய்த திருநாளைத்தான் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

மகிஷாசூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் அன்னையானவள் தவம் செய்ய எண்ணினாள். அதன்படி சோழ வள நாட்டின் தலைநகர் திருச்சிக்கு நேர் வடக்கே காவிரி வடகரை (கொள்ளிடம்) பகுதிக்கு வந்தாள். அங்குள்ள வேம்பு காட்டில் கவுமாரி என்று பெயர் பூண்டு, சிவந்த மேனியாளக மஞ்சள் ஆடை தரிசித்து, உடல் முழுவதும் வாசனை புஷ்பங்களால் மலை போல் குவித்தபடி உண்ணா நோன்பிருந்தாள். இவ்வாறு பல ஆண்டு காலம் செய்த தவத்தின் பயனாக அன்னை சாந்த சொரூபிணியாக, சர்வ ரட்சகியாக மாறி மாரியம்மன் என்ற பெயர் பெற்றாள். இதுவே சமயபுரம் மாரியம்மனின் வரலாறு.








இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான், சமய புரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வரும் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்தியம் படைக்க மாட்டார்கள். இளநீர், பானகம், நீர் மோர், கரும்புச் சாறு உள்ளிட்ட பானங்களே அன்னையின் ஆகாரம். இதற்கு பச்சை பட்டினி விரதம் எனப் பெயர். பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் அம்பாள் பூச்சொரிதல் கண்டருள்வார். இதனைத் தொடர்ந்து நடைபெறும் சித்திரை தேரோட்டம் மிகவும் பிரசித்திப் பெற்றது. தேர்த் திருவிழாவின்போது லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி, முடி காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை செலுத்துதல், அக்னி சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். தைப்பூசத்தின்போது அம்பாள் வடகாவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருள்வதுடன், தனது அண்ணன் ரங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாகும்.

கிராமப்புற தோற்றத்தில் இருந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருப்பணி வேலைகள் அரசு ஒதுக்கிய பல கோடி நிதி மற்றும் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வந்தன. கோவிலின் அனைத்து பிரகாரங்கள் எல்லாம் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்கு வசதியாக புதுப்பிக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் இலவசமாக தங்குவதற்காக நவீன வசதிகளுடன் மண்டபங்கள், கட்டணம் செலுத்தி தங்குவதற்கான விடுதி அறைகள் கட்டப்பட்டு உள்ளன. முடி காணிக்கை மண்டபம் குளியல் அறை வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.

கிழக்குவாசல் ஏழு நிலை ராஜகோபுரம் தவிர மற்ற 3 கோபுரங்களும் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அம்பாள் கர்ப்பக்கிரகத்தில் சுதை வேலைப்பாடுகள் அதன் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யப்பட்டு உள்ளன. மொத்தத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்தர்களின் வசதிக்காக புதுப்பொலிவு பெற்று பிப்ரவரி 6–ந்தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. ஆயிரம் கண்ணுடையாள், சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற பெருமைகளுக்குரிய சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் மூலமாக அம்மன் அருள் பெறுவோம்.
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவில் வளாகத்தில், காலையில் புனித நீராடி அம்மனை வழிபட்டு சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். எனவே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தங்கி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில், அம்பாளுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் தெளிக்கப்பட்டால் அம்மை நோய் விரைவில் குணமடையும் என்பதும் பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது. வெளிமாநில பக்தர்கள் மட்டும் இன்றி, வெளிநாட்டு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளும் அம்பாளின் அருள்பெற இந்தக் கோவிலுக்கு வருகை தருகிறார்கள். Print Friendly and PDF

2 கருத்துரைகள்:

ப.கந்தசாமி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நம்பினோரைக் கைவிடாத சமயபுரத்து அம்மனை வழிபடுவோம்.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமை நல்ல பதிவு.
மிக்க நன்றி.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms