Wednesday, March 22, 2017

எங்கும் நிறைந்தவனே -'உலக தண்ணீர் தினம்’

எங்கும் நிறைந்தவனே -'உலக தண்ணீர் தினம்
நாம் எந்தத் திரவத்தைப் பற்றி நினைத்துப்பார்த்தாலும் அதில் நீர் இருக்கிறது. ரத்தம், மது, பழரசம் என்று எதையெடுத்தாலும் எல்லாமே நீர்தான். அதில் சிறிதளவு மற்ற விஷயங்களும் கலந்து பரவியிருக்கின்றன, அவ்வளவுதான். பெட்ரோலியம், சமையல் எண்ணெய் போன்ற தூய்மையான திரவங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. ஆனால் நீருடன் நாம் கொள்ளும் உறவுக்குப் பக்கத்தில், அவையெல்லாம் வரவே முடியாது.

நீர் என்பது எங்கும் காணப்படுவது, நம்முடன் நெருக்கமானது என்பதாலேயே, அதை ஒரு முக்கியமான விஷயமாகவே நாம் கருதுவதில்லை: தினமும் நாம் அதைக் குடிக்கிறோம், தொடுகிறோம், அதைக் கொண்டு கழுவுகிறோம், துவைக்கிறோம், பொருட்களை ஈரப்பதத்துக்கு உள்ளாக்குகிறோம், உலர வைக்கிறோம், நீரைக் கொதிக்க வைக்கிறோம், உறைய வைக்கிறோம், அதில் நீந்துகிறோம்.

வெவ்வேறு தட்பவெப்ப நிலையையும் அழுத்தத்தையும் கொண்டிருக்கும் நீரின் வெவ்வேறு பரப்புகளைத் தேடி பயணம் செய்ய வைக்கும் இயற்கைச் சூழலைக் கொண்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம். வேறுபட்ட அந்தத் தட்பவெப்பநிலைகளில் நீர் வெகு லாவகமாகத் திடப்பொருளாகவும் திரவமாகவும் வாயுவாகவும் மாறுகிறது (சில சமயங்களில் ஒரே நேரத்தில் மூன்று நிலைகளையும் அடைகிறது).

நீரை ஆராய ஆராய, அது மென்மேலும் புதிரானதாகத்தான் தோன்றுகிறது. நாம் அதிலிருந்து உருவானவர்கள் என்பதால், அதை நாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். நாம் எதனால் உருவாகியிருக்கிறோமோ, அது இப்படிப்பட்ட ஒரு புதிராக இருக்கிறது என்பதே, ஒருவேளை நமக்கு வியப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

நீரைப் பற்றிய பல விஷயங்கள் நமக்கு விநோதமாகத் தோன்றினால், கீழே வரும் விஷயத்தைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?: குளிர்ந்த நீரைவிட வெந்நீர் விரைவாக உறைந்துவிடும். இந்த விசித்திர இயல்புக்கு பெம்பா விளைவு என்று பெயர் (Mpemba effect).

தான்சானியாவைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவன் எராஸ்டோ பி பெம்பா, 1963-ல் வகுப்பறைப் பரிசோதனையின் போது கண்டுபிடித்ததால்தான், அந்த விளைவுக்கு இந்தப் பெயர். 

நீர் இருக்கும் நிலையினை பொருத்தும் அந்த நிலையின் பெயரும் மாறுகிறது.
ஆழ்துளை கிணறு, கிணறு ,குளம் ,குட்டை, ஏரி,ஆறு, அருவி,சுனை,நீருற்று ,கடல்,மழை என அழைக்கப்படுகிறது.

மறைந்த கடல்
1960-ம் ஆண்டு சுமார் 68,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருந்தது ஏரல் ஏரி. இதன் பரப்பளவு கடல்போல் பறந்துவிரிந்து இருந்ததால், இந்த ஏரிக்கு 'ஏரல் கடல்' என்ற பெயரும் உண்டு. இந்த ஏரல் கடலானது மத்திய ஆசியாவைச் சேர்ந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் அமைந்திருந்தது. ஷியர் தர்யா மற்றும் அமு தர்யா என்ற இரண்டு ஆறுகள் இந்த ஏரிக்குத் தண்ணீரை வாரிவழங்கியது. இந்தக் கடலைச் சுற்றி இருந்த சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் என அனைத்தையும் சேர்த்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவு.


மத்திய ஆசியாவில் அதிகான இடங்கள் வறண்ட நிலங்களாகவே இருந்தன. அதனால் இந்தச் சதுப்பு நிலங்களையும், ஏரல் ஏரிக்குத் தண்ணீர்தரும் இரண்டு ஆறுகளையும் தடுத்து பருத்திப் பயிர் செய்ய பயன்படுத்தலாம் என்று சோவியத் யூனியன் சொல்ல... இந்த ஏரியை நம்பியிருந்த நாடுகள் சம்மதம் தெரிவித்தன.
விளைவு அந்த ஏரிக்கு தண்ணீர் தரும் இரண்டு ஆறுகளும் தடுக்கப்பட்டு சிறுசிறு கால்வாய்களாக மாற்றப்பட்டன. மேலும், ஏரியின் நீரையும் விவசாயத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. 1980-ம் ஆண்டில் சுமார் 70 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புகளில் பருத்தியை உற்பத்தி செய்துவந்தனர். அதனால், அந்தப் பகுதிகளில் மக்கள்தொகை எண்ணிக்கை சரசரவென உயர ஆரம்பித்தது. பருத்திச் செடி, தண்ணீரை அளவுக்கு அதிகமாகக் குடித்துவிடும். இருந்தாலும், அனைவரும் செய்த மிகப்பெரிய தவறு ஒன்று இருக்கிறது. பருத்தி உற்பத்தியை மேம்படுத்த ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்ப்படுத்தத் தொடங்கினர். விளைவு, நிலங்கள் அனைத்தும் விஷமேறின. அதனால், தண்ணீரின் அளவும் அதிகமாகத் தேவைப்பட 'ஏரல் ஏரியின்' நீரையும் பயன்படுத்த ஆரம்பித்தனர். 
இதோடு விட்டிருந்தால்கூட 'ஏரல் கடல்' தப்பித்திருக்கும். ஒருபுறம், ரசாயன உரங்களால் நிலத்தை அழித்துக் கொண்டிருந்தனர். மற்றொருபுறம், தொழிற்சாலையிலிருந்து வெளி யேற்றப்பட்ட வேதியியல் கழிவுகள், குப்பைகள் என அனைத்தை யும் கடலில் கொட்டத் தொடங்கிவிட்டனர். இதனால் விவசாய நிலங்களும், 'ஏரல் கடலும்' தனது கனிம வளங்களை முழுமையாக இழக்கத் தொடங்கின. ஏரி தண்ணீர், ரசாயனக் கழிவுகளால் விஷமேறி இருந்ததால்... மீன்களும் இறக்கத்தொடங்கின. அதனால் ஏரியில் மீன்பிடித் தொழிலும் நின்றுபோனது. 1995-ம் ஆண்டுக்குப் பிறகு ஏரல் கடலும், அதனை நம்பியிருந்த விவசாய நிலங்களும் பாலைவனங்களாக மாறத்தொடங்கின. ஏரியில் இருக்கும் விஷம்... காற்றில் கலந்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரம்வரை தாக்கியதால், அந்தப் பகுதி மக்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இன்று அந்தப் பூமியே ஒரு பாலைவனமாக மாறிவிட்டது. ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்த காலத்தில் போக்குவரத்துக்காகவும், மீன்பிடித் தொழிலுக்காகவும் பயன்படுத்தப்பட்ட கப்பல்களும், படகுகளும் தண்ணீர் இல்லாத அந்த ஏரியின் மணலில் புதைந்து இருப்பதை இன்றும் நாம் காண முடியும்.

தண்ணீரைப் பாதுகாக்கத் தெரியாமல் சிறு கால இடைவெளிக்குள் ஒரு கடலையே இந்த உலகம் இழந்திருக்கிறது. வெறும் கடலில் கொட்டப்பட்ட கழிவுகளால் மட்டும் இந்தப் பேரழிவு ஏற்படவில்லை. விவசாயம் செய்வதற்கு ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்தியதும் இந்தக் கடல் அழிந்துபோனதுக்கு மிகப்பெரிய காரணம். இன்று நாமும் அப்படி ஒரு தவற்றைத்தான் செய்துவருகிறோம். விவசாயம் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக நிலங்களில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி, நிலங்களை மட்டும் அல்லாமல் நிலத்தடி நீர், ஆறு மற்றும் ஏரி நீர் அனைத்தையும் அழித்துவருகிறோம். மழை வராமல் இருப்பதற்கும், நீர் வற்றிப்போனதற்கும் இயற்கை மட்டும்தான் காரணமா? மக்களும்தான்  
உலக தண்ணீர் தினம் கொண்டாடுவதன் நோக்கம்

1993ல் முதல் மார்ச் 22 உலக தண்ணீர் தினமாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை கொண்டாடித்தான் வருகிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பலகோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் இன்றுவரை அகலவில்லை.மக்கள் தொகை அதிகரிக்கிறது. அவர்களுக்குத் தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பகுதிகளில் உள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவு கடுமையான நோய்கள்.

முந்தைய காலத்தில் கோடைக்காலம் துவங்கி விட்டால், வீட்டுக்கு வெளியே பானையோ அல்லது ஒரு பாத்திரமோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பர். வழியில் செல்வோர் அந்நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளட்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அவ்வாறு செய்யப்பட்டது.அதுபோன்றதொரு காட்சியை தற்போது நாம் எங்காவது பார்க்க இயலுமா? 

இப்போதும் காண முடிகிறது; வாசலில் குடங்கள் இருக்கின்றன. ஆனால், அவை நீர் நிரம்பியதாக அல்ல. நீரை நிரப்ப எப்போதாவது வரும் குழாய்நீருக்கும், குடிநீர் லாரிக்காகவும் காத்திருக்கும் குடங்கள்தான் அவை.
எனவே நிலத்தடி நீரைப்பாதுகாக்க வேண்டியதும், நீர்ஆதாரங்களை காக்க வேண்டியதும், நீர் மாசுபடாமல் இருக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மனித சமுதாயத்தின் கடமையாகிறது.

இந்த பிரபஞ்சமானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் இல்லையென்றால் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆனால் தொழில் நுட்பயுகத்தில் வாழும் மனிதர்கள் இந்த ஐம்பூதங்களையும் மாசு படுத்துகின்றனர் . வளர்ச்சி என்ற பெயரில் இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் இயற்கையை அழித்து வருகின்றன.

எனவே ஒவ்வொரு ஆண்டும் நீர்வளப் பாதுகாப்பு குறித்த செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து அதனை உலக நீர்நாளில் முன்னெடுப்பதும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் திட்டமாகும்.

இத்திட்டத்தின் படி 2006க்கான உலக நீர் நாள், யுனெஸ்கோவினால் 'நீரும் கலாசாரமும்' என்ற கருப்பொருளில் கடைபிடிக்கப்பட்டது.
2007ல் 'நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளல்' என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளைக கொண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டது. 2008ல் 'சுகாதாரத்திற்கான ஆண்டாகவும்',
2009ல் தண்ணீர் மற்றும் வாய்ப்புக்கள் பகிர்ந்துகொள்ளல்' ஆண்டாக வும், 2010ல் 'தரமான நீர்' என்ற கருப்பொருளை கொண்ட ஆண்டாகவும் கொண்டாடப்பட்டது. 

அதன்பின், 2011ல் நகரங்களுக்கு 'தண்ணீர் நகர்ப்புற மாற்றங்களுக்கு பதிலளித்தல்',
2012ல் 'தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு',
2013ல் 'நீர்நிறுவனம்',
2014ல் 'நீரும் ஆற்றலும்',
2015ல் 'நீரும் நிலையான  மேம்பாடும்',
2016ல் 'சிறந்த நீர் சிறந்த தொழில்கள்' என்பன உள்ளிட்ட கருப்பொருட்களில் ஆண்டுகள் கொண்டாடப்பட்டன.

இந்த 2017ல் 'ஏன் நீரினை வீணாக்க வேண்டும்?' என்ற கருப்பொருள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த 'உலக தண்ணீர் தினத்தில்' (மார்ச்-22) அருகில் இருக்கும், ஆறுகள் மற்றும் ஏரிகளில் இருக்கும் கனிமவளங்கள், கொள்ளைபோகாமல் பாதுகாக்கவும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தி நிலங்களை அழிக்காமல் இருப்பதற்கும் சபதம் எடுப்போம். 

 print this in PDF Print Friendly and PDF

3 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தண்ணீர் பற்றிய விழிப்புணர்வுக்கு மிக்க நன்றி

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமையான பதிவு
நன்றி நண்பரே

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கடல் அழிந்த கதை புதிது .
நல்ல பதிவு .
மிக்க நன்றி உறவே..
வாருங்கள் வேதாவின் வலைக்கும்.
நன்றி.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms