Friday, July 21, 2017

ஆடிமாதமும் தமிழரும்

மழை தொடங்கிவிட்டது. விளைநிலங்கள் சிலிர்க்கின்றன. சோம்பிக் கிடக்கும் ஆறுகள் புத்துணர்ச்சி கொள்கின்றன. புது வெள்ளம் பாய்கிறது. எங்கும் உற்சாகம் பொங்குகிறது. ஆடி பிறந்துவிட்டது.விளைநிலங்களுக்கான முதல் மழையைக் கொண்டுவரும் மாதம் ஆடி. ஆறுகளில் புது வெள்ளம் பாயும். புதிய விளைச்சலுக்குக் கட்டியம் கூறும். வளமையின் அடையாளமான அந்த வெள்ளப் பெருக்கை மக்கள் படையல் இட்டு வரவேற்கிறார்கள். இந்த வரவேற்பு வைபவம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு.

ஆடி, பருவ மழை தொடங்கும் மாதம். தமிழ்நாட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலம். இந்தப் புதுப்புனல்தான் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக காவிரிச் சமவெளிப் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது.


தைப்பொங்கல். தீபாவளி போன்ற சமய வழிபாட்டுப் பண்டிகையிலிருந்து ஆடிப் பெருக்கு மாறுபட்டது. இப்பண்டிகை ஒரு குடும்பத்திற்குள் அனுசரிக்கப்படுவதல்ல. இது சமூகத் திருவிழா. மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆற்றங்கரைக்குச் சென்று பொங்கிவரும் புது வெள்ளைத்தைக் கண்டு மகிழ்வார்கள். அதற்குப் படையலிடுவார்கள். விளக்குகள் ஏற்றி வந்தனம் செய்வார்கள். புதுப் புனலில் நீராடி பூஜிப்பார்கள். இவை எல்லாம் ஆடிப் பதினெட்டாம் நாள் செய்யப்படுவதால் இது பதினெட்டாம் பெருக்கு என அழைக்கப்படுகிறது.

ஆடி மாதம் இன்றைய தமிழ் மாதக் கணக்கின்படி நான்காம் மாதம். ஆனால் ஒரு காலகட்டத்தில் தை மாதத்தை முதல் மாதமாகக் கொண்டு தமிழ் மாதங்கள் கணக்கிடப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. அதன்படி ஆடி மாதம், முதல் அரையாண்டுக் காலம் முடிந்து அடுத்த அரையாண்டுக் காலத்தின் தொடக்கம். ஆண்டின் தொடக்கமான தைத் திருநாளைப் பொங்கலிட்டு வரவேற்பதுபோல அடுத்த அரையாண்டின் தொடக்கமான ஆடியும் கொண்டாடப்பட்டதுண்டு.

ஆடியில் வழிபாடு
ஆடி தெய்வங்களுக்கான மாதமாகக் கருதப்படுகிறது. ஆடிப் பிறப்பிலிருந்து ஆடி இறுதி வரை ஆடியின் ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. சாஸ்திரங்கள் இதை சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றன.

காவிடி டெல்டாவில் ஆடி பிறந்ததும் ஆரம்பாகிற விஷயங்களில் கோவில் திருவிழாக்களும் ஒன்று. பெரும்பாலும் எல்லா ஊர்களிலுமே ஒரு மாரியம்மன் கோவில் கண்டிப்பாக இருக்கும். மாரியம்மன் கோவிலில் பத்து நாட்கள் திருவிழா நடத்தி பத்தாம் நாள் தீமிதி உற்சவம், அல்லது செடல் உற்சவம் விமரிசையாக நடந்தேறும். கொடியேறி திருவிழா முடியும்வரை ஊரில் இறைச்சிப் புழக்கம் இருக்காது. ஐந்து வயதுக் குழந்தை முதல் எண்பது வயதுப் பெரியவர் வரை எல்லா வயதினரும் தீ மிதிப்பதைக் காண ஆச்சரியமாக இருக்கும். சீர்காழி அருகேயுள்ள மாதானம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி கடைவெள்ளியன்று நடைபெறும் தீமிதித் திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்தும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். அவர்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குழி இறங்குவார்கள். மாரியம்மன் தவிர காளியம்மன், அங்காளம்மன், என்று எல்லா அம்மன் கோவில்களிலும் தவறாமல் திருவிழா நடைபெறும்.

ஆடி மாதம் கிராம தேவதைகளுக்கான மாதம். ஆடி மாதம் கொடைத் திருவிழாவில் அம்மனைக் குளிர்வித்தால்தான் கிராமம் செழிக்கும் என்னும் நம்பிக்கையால் கிராமத் திருவிழாக்கள் பாட்டும் கச்சேரியுமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இத்திருவிழாவை ஒட்டிக் கூழ் ஊற்றும் சடங்கும் நடைபெறுகிறது.

ஒரு காலத்தில் ஆடி பஞ்ச காலமாக இருந்தது. அப்பஞ்சத்தை எதிர்கொள்ள ஊர்கூடி கூழ் ஊற்றிப் பகிர்ந்துண்டிருப்பார்கள் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆடிக்கு முந்தைய சில மாதங்களில் மழையே இருக்காது என்பதால் அப்போது வறட்சி இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அந்தச் சமயத்தில் ஊருக்குக் கூழ் ஊற்றும் பழக்கம் ஆரம்பித்திருக்கலாம். ஆனால் இன்று இது வெறும் சடங்காகக் கடைபிடிக்கப்படுகிறது. புலம் பெயர்ந்த நாடுகளிலும்கூடத் தமிழர்களால் கூழ் ஊற்றும் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதம் கொடைத் திருவிழா கொண்டாட ஒரு காரணம் இருக்கிறது. அம்மாதம் காற்றுக் காலம் என்பதால் அக்காலத்தில் மக்கள் பயணத்தைத் தவிர்த்தார்கள். அதனால் அவர்கள் உள்ளூரிலேயே தங்க நேர்ந்ததால் அக்காலத்தை உள்ளூர்க் கோயில் திருவிழா நடத்துவதற்காகச் செலவிட்டார்கள். அப்படித்தான் ஆடி மாதம் திருவிழா நடத்துவது வழக்கமானது என்கிறது ஒரு சான்று.

கடந்த சில வருடங்களாகவே காவிரியில் தண்ணீர் வராமல் போய்விட்டது. ஆனாலும் மக்கள் பண்டிகையைக் கொண்டாடாமல் விட்டுவிடவில்லை. ஆற்றுக்குள் ஊற்று தோண்டி அதில் தண்ணீர் எடுத்துப் படையலை போட்டுவருகிறார்கள். கிருஷ்ணராயபுரம், முசிறி, குணசீலம், திருப்பாராய்த்துறை, திருச்சி, ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், திரூவளர்ச்சோலை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் என்று எல்லா ஊர்களிலும் ஆற்றில் தண்ணீர் இல்லாவிட்டாலும் மக்கள் கூடி காவிரித்தாயை வணங்கிவிட்டுத்தான் செல்கிறார்கள். கடந்த ஆண்டு மயிலாடுதுறையில் இருக்கும் காவிரி துலாகட்டத்தில் ஆற்றுக்குள் அடிபைப் அடித்து அதில் நீர் பிடித்து காவிரித்தாயை வணங்கினார்கள்.
இந்தப் பதினெட்டு நாளுக்கும் மகாபாரப் போர் நடந்த பதினெட்டு நாளுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. போர் முடிந்து பாவங்களைத் தீர்க்க ஆற்று நீரில் மூழ்கி எழுவதாகவும் ஐதீகம் உண்டு. ஆடி போர்க்களமான மாதம் என்பதால்தான் இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் தரித்திரம் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. தெய்வ காரியங்களுக்கான மாதம் என்பதால் ஆடியில் திருமணச் சடங்குகள் தவிர்க்கப்படுகின்றன. அதுபோல புதுமணத் தம்பதியர் தாம்பத்தியத்தில் ஈடுபதுவதும் தவிர்க்கப்படுகிறது.

தமிழர்கள் புரட்டாசி, மார்கழியிலும் திருமணம் போன்ற சுப காரியங்களை மேற்கொள்வதில்லை. ஆனால் ஆடி மாதத்தில் மற்ற சடங்குகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. திருமாங்கல்யம் பெருக்குதல் என்னும் சடங்கு இம்மாதத்தில்தான் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது தாலி பிரித்துக் கட்டுதல் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலிக் கயிற்றைக் களைந்து புதிய தாலிக் கயிற்றை மாற்றிக்கொள்ளும் சடங்காகும்.

ஆண்டின் மற்ற நாட்களில் பேரிக்காய் என்று ஒன்று இருப்பதையே நினைவில் கொள்ளாத மக்கள் ஆடிப்பெருக்கு தினத்துக்கு மட்டும் எங்கிருந்தாலும் தேடிச்சென்று பேரிக்காயை வாங்கி வந்துவிடுவார்கள். பேரிக்காய் இல்லாமல் படையலே நடக்காது. அன்றோடு பேரிக்காய் கண்ணிலிருந்து காணாமல் போய்விடும். பேரிக்காய் அளவுக்கு முக்கியத்துவம் அவல்பொரிக்கும் உண்டு. மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே ஊறவைத்த அரிசியை எடுத்துக்கொண்டுபோய் அதை வறுத்து அவலாக கொடுக்கும் கடைகளில் நிற்கும். காலையில் போனால் மாலையில்தான் வறுத்தெடுக்க முடியும். அவ்வளவு கூட்டம் அலைமோதும். ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு முன்னேறுவார்கள். தலைக்குமேல் வெய்யில் ஆளைக் கருக்கும். ஆனாலும் அசராமல் அவல் பொரித்து வெற்றிப் பெருமிதத்துடன் திரும்புவார்கள்.

ஆடிப் பெருக்கை ஒட்டி இன்னொரு சுவையான விஷயமும் உண்டு. இந்நாளில் காவிரி ஆறை ஒரு கர்ப்பிணிப் பெண்ணாகப் பாவிக்கும் சடங்கும் வழக்கத்தில் உள்ளது. அதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பிற்குச் செய்யும் புளியோதரை, மாங்காய்ச் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், வெல்ல சாதம் இவை எல்லாவற்றையும் ஆற்றில் படையலிடுகிறார்கள்.

திருவிழாக்களுக்கு மத்தியில் ஆடித் தள்ளுபடி இம்மாதத்தில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. இந்த வியாபாரக் கொண்டாட்டங்கள் தொடங்கிய காலகட்டத்தை அறிய முடியவில்லை. ஆடி மாதம் வியாபாரம் படுமந்தமாக நடக்கும் காலகட்டம். ஏனெனில் இம்மாதத்தில்தான் விவசாயத் தொழில்கள் தொடங்கும். மக்கள் உழவுத் தொழில்களுக்காக முதலீடு செய்வதால் பணத் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். மேலும் இம்மாதத்தில் திருமணச் சடங்கு எதுவும் மேற்கொள்ளப்படாததால் வியாபாரம் மந்தமாகவே இருக்கும். அதைச் சரிக்கட்டவே ஆடி மாதம் தள்ளுபடி தந்து விற்பனையைப் பெருக்க வியாபார நிறுவனங்கள் முனைந்தன. இதுதான் ஆடித் தள்ளுபடியின் பின்னணி.

ஆடிப் பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடிப் பூரம், ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடி அறுதி என ஆடியின் சிறப்பு நீண்டுகொண்டே போகிறது. இம்மாதம் கொண்டுவரும் முதல் மழையின் மண்வாசமும், வானம் பார்த்த பூமியும் பூத்துக் குலுங்கும் வண்ணமும், உழுத நிலத்தில் தூவிய விதைகள் முளைவிடும் காட்சியும் ஆடியை இன்னும் சிறப்பானதாக மாற்றுகின்றன.

இப்படி ஈரமும் பசுமையும் தெய்வீக மணமும் கமழும் ஆடியைக் கொண்டாட ஆடி மாதம் ஒன்று போதாது.

குறிப்பு : எங்கோ படித்தது பிடித்தது பதிவிட்டேன்.

  Print Friendly and PDF

2 கருத்துரைகள்:

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஆடியில் காவிரி கரைபுரணடு ஓடிய நினைவுகள் வருகின்றன
நன்றி நண்பரே

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஆடிப்பெருமைகளிற்கு மகிழ்ச்சி.
வாருங்கள் என்வலைக்கு புதிய இரண்டாவது வலை.
இணைப்பு இதோ...https://kovaikkothai.wordpress.com/

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms